நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் தமக்கு விரும்பு வதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார்"
பார்க்க: ஸஹீஹுல் புஹாரி (13)
தமக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்ப வேண்டியது ஒரு முஸ்லிமின் அடிப்படைப் பண்பாகும்.
சாமான்ய மனிதர்களாக நாமெல்லோரும் மகிழ்ச்சி நிறைந்த, துன்பங்கள் களைந்த வாழ்க்கை வாழ்வதையே விரும்புவோம்.
ஒரு முஸ்லிமாக நாம் நமக்கு இவற்றை விரும்புவது போலவே பிறக்கும் உளப்பூர்வமாக விரும்ப வேண்டும். அதுவரையில் நாம் என்னதான் ஈமான் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டாலும், உண்மையாக ஈமான் கொண்டவர்களாக ஆக மாட்டோம்.
எந்தவொரு காரியத்தை நாம் செய்வதாக இருந்தாலும், இதனால் பிற சகோதரனுக்கு இடையூறு வருமா, அவனை அல்லது அவனைச் சூழவுள்ளவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடுமா எனப் பிரக்ஞையோடு சிந்தித்தே செய்ய வேண்டும்.
எமக்கும், எமது குடும்பத்தாருக்கும் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நலன் நாடிச் செயலாற்றுகிறோமோ, அதேபோல பிறருக்கும் நலன் நாடிச் செயலாற்ற வேண்டும்.
தவிரவும், நாம் பிறருக்காக ஏதேனும் ஒரு பொருளைக் கொடுக்க விரும்புகிறோமென்றாலும், நாம் ஒதுக்கக்கூடிய அல்லது எமக்கு வேண்டாதது எனப் புறந்தள்ளக்கூடியவற்றைக் கொடுக்காமல், எமக்கு மிகவும் விருப்பமாயிருக்கக்கூடிய, எமக்குப் பிடித்த பொருளையே கொடுக்க வேண்டும்; இப்பழக்கத்தை எமக்குள் ஆழமாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இறைவன் நம்மனைவரையும் எப்பொழுதும் பிறர் நலன் பேணக்கூடிய சிந்தையுடனேயே வாழ்ந்து மரணிக்கச் செய்வானாக!
- எம். எஸ். எம். ரஸ்மி