சகோதர முஸ்லிமைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல்

“முஸ்லிம் ஒருவர் (உடல் நலிவுற்ற) தம் சகோதர முஸ்லிமைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தால், அவர் (திரும்பி வரும் வரை) சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

நூல்: (ஸஹீஹ் முஸ்லிம்)

நபிகளாருடைய மேற்குறித்த ஹதீஸின்படி, நோய்வாய்ப்பட்ட ஒருவரை நலம் விசாரிப்பதென்பது சுவர்க்கத்தின் கனிகளைப் பறிக்கும் வகையான நன்மைகளை ஈட்டித்தரக்கூடியதொரு பெறுமதியுயர்ந்த நற்காரியமாகும்.  இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய மிக முக்கியமான ஸுன்னாக்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

நோய் என்பது ஒரு மனிதனை முழுவதுமாக முடக்கி, அவனுடைய இயல்புநிலையை மொத்தமாக மாற்றிவிடக்கூடியது. சிறியதாக ஒரு நோய் ஏற்பட்டு விட்டாலும்கூட அது ஒரு மனிதன் இருந்த நிலை மற்றும் அவனுடைய குடும்ப நிலை, சூழவுள்ளவர்களின் நிலை என அனைத்தையும் முற்றிலுமாகத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு, உளரீதியாகவும் அவன் மற்றும் அவனைச் சூழவுள்ளவர்களும்கூட பலவீனமடைந்து போகும் அளவிற்கு அதன் தாக்கம் பூதாகரமானதாய் இருக்கும். 

நோயினால் பாதிப்படைந்தவர்களுக்கு உளரீதியான ஆதரவு அவசியப்படுகிறது; அவர்களைச் சந்தித்து நோய் விரைவில் பூரண குணமடைந்துவிடும் எனத் தன்னம்பிக்கையூட்டும் இன்சொற்களை மொழிய வேண்டும்.  அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரக்கூடிய சோதனைகளை நாம் பொறுமையோடு எதிர்கொள்வதனூடாகக் கிடைக்கும் அனுகூலங்களைப் பற்றி எடுத்துக்கூறுவதென்பது எந்தவொரு இன்னலின்போதும் ஒருவரை உளரீதியாகப் பலப்படுத்தி அந்தப் பிரச்சினையைப் பாதி தீர்ப்பதற்கு உதவி செய்வதாகும். உள்ளம் வலுவடைந்தாலே நோய்க்கு மருத்துவம் பார்ப்பதும் எளிதாகி விடும். 

மற்றுமொரு ஹதீஸில் நோயாளியை நலம் விசாரிப்பதென்பது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளுள் ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

 பார்க்க: (புஹாரி மற்றும் முஸ்லிம்)

ஆக, நோயாளியை நலம் விசாரிக்கும் இந்த உயரிய செயலை அல்லாஹ்வுக்காகச் செய்கிறோம் என்ற தூய எண்ணத்தோடு செய்வதனூடாக மாத்திரமே உயரிய நன்மைகளை அடைந்துகொள்ள முடியும். அதுவன்றி, ‘தெரிந்தவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். நலம் விசாரிக்கச் செல்லாவிட்டால் சங்கடமாகிப்போய்விடுமே!’ என்ற மனநிலையோடு சென்றால் அதற்குரிய நற்பலன் கிடைக்காது. ஆகவே, இவ்விடயத்தில் கரிசனையுடனும், கவனிப்புடனும் நடந்துகொள்வது அவசியம். 

எமது உறவினர்கள், அண்டை அயலவர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்களென நாமறிந்த யாரேனும் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால். அவர்களைப் போய் நலம் விசாரித்து, அவர்களுடைய தேகாரோக்கியம் மேம்படுவதற்கு எம்மால் முடிந்த உதவியுபகாரங்களையும் செய்து கொடுப்பதற்கு விரைந்து செயற்படுவோமாக!

எம். எஸ். எம். ரஸ்மி
أحدث أقدم