சமூகப் பொறுப்பாளர்கள் மக்களை கஷ்டப்படுத்தினால்...

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தாம் செவிமடுத்ததாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: "இறைவா! யார் எனது சமுதாயத்தின் ஏதேனும் ஒரு விடயத்தை பொறுப்பெடுத்து (நியமனம் பெற்று), அவர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்குகிறாரோ, அவருக்கு நீ கஷ்டத்தை கொடுப்பாயாக! யார் எனது சமுதாயத்தின் ஏதேனும் ஒரு விடயத்தை பொறுப்பெடுத்து (நியமனம் பெற்று), அவர்களோடு (அவ்விடயத்தில்) மென்மையாக  நடந்துகொள்வாரோ, அவருடன் நீ மென்மையாக நடப்பாயாக!"

நூல்: முஸ்லிம் (1828)

படிப்பினைகள்:

1. மக்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள ஊர் தலைவர், நகரபிதா, ஆளுனர், பிரதேச சபை பணிப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், நாட்டு தலைவர் உட்பட பாடசாலை, மத்ரஸா, நிறுவனங்கள் ஏனைய நிர்வாக தலைவர்கள் யாராக இருப்பினும் குறித்த பதவிகளை, பொறுப்புகளை வைத்துக்கொண்டு மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்த முனைந்தால் அல்லாஹ் அவர்கள் மீது இவ்வுலகிலும் மறுவுலகிலும் கஷ்டத்தை ஏற்படுத்துவான். 

2. யாரெல்லாம் பொறுப்புகளிலிருந்து மக்களோடு மென்மையாகவும், மிருதுவாகவும் நடக்கின்றன்றனரோ அல்லாஹ்வும் அவர்களுடன் அவ்வாறு ஈருலகிலும் நடந்துகொள்வான்.

3. மக்களது உரிமைகளை பறித்தல், இருக்கின்ற சலுகைகளை கடினமாக்கி கஷ்டத்துக்குள்ளாக்குதல், அனாவசியமாக இழுத்தடித்து பொய் தவணைகள் கூறி ஏமாற்றி சீரழித்தல், உரித்தான தரப்பினரது சேவைகளை கருத்திற்கொள்ளாது செல்வாக்குள்ள மக்களது தேவைகளை மாத்திரம் நிறைவுசெய்து கொடுத்தல், சேவைகள் செய்யும் போது இலஞ்சம் பெறுதல், தமது சொந்த வேலைகள் நிறைவுறும் வரை பொதுமக்களை தேவையின்றி நீண்ட நேரம் எதிர்பார்க்க வைத்தல், தேவை நிமித்தம் பொறுப்பாளர்களை சந்திக்க வந்த மக்களது சேவைகளை செய்து கொடுக்காது கால தாமதமாக்கி திருப்பியனுப்புதல், மக்களது கோரிக்கைகளை அவர்கள் முன்னிலையில் இன்முகத்தோடு பெற்றுவிட்டு பின்னர் குப்பைத்தொட்டியில் வீசுதல் போன்ற இன்னோரன்ன விடயங்களில் மக்களுக்கு கஷ்டம் கொடுப்போர் நபியவர்களது சாபத்திற்கு உரியவர்களாக ஆகிவிடுவர்.

4. மக்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களோடு நல்லமுறையில் நடந்துகொள்வது கட்டாயம் வேண்டப்படும் விடயமாகும்.

5. பொறுப்பாளர்கள், அவர்களது பொறுப்புகள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படவுள்ளதால் பொறுப்புகளை முறையாக சரிவர நிறைவேற்றுவது கடமையாகும். 

6. இறைவன் கடினப் போக்கை வெறுத்து மென்மையாக கையாள்வதையே விரும்புகிறான்

அல்லாஹ் நன்கறிந்தவன்!


- Azhan Haneefa 

Previous Post Next Post