நிம்மதியாக, எவ்விதச் சலனமுமின்றி, சுவர்க்கம் நுழைவதற்கு 4 காரியங்களைச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்:
1. ஸலாத்தைப் பரப்புதல்
அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவது மிக உயரிய நற்பண்புகளுள் ஒன்று. பாதையோரம் வழிப்போக்கனாகப் பயணிக்கும் போது அறிந்தவர்கள் அறியாதவர்களென அனைவருக்கும் ஸலாத்தை எத்தி வைக்கும் பண்பை எமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பெண்களைப் பொறுத்தளவில் கணவன், பிள்ளைகள் உட்படக் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தினசரி சந்திக்கக்கூடிய சக பெண்களை ஸலாம் கூறி விளிக்கலாம்.
ஸலாத்தைப் பரப்புவது பரஸ்பரம் நட்புறவையும், புரிந்துணர்வையும் வலுப்படுத்த உதவும்.
2. பசித்தவருக்கு உணவளித்தல்
ஏழை அல்லது பசியாளி ஒருவருக்கு உணவூட்டிப் பசியாற்றுவதென்பது தர்மங்களுள் மிக உயர்ந்தது, நல்லுள்ளத்தின் பிரதிபலிப்பு. தூய எண்ணத்துடன் செய்யும் பட்சத்தில் அல்லாஹ்விடத்தில் மிக உயரிய வெகுமானமுடையது.
உணவுத் தேவையுடையவர்களைத் தேடியறிந்து அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு எம்மாலானவற்றைச் செய்தல் வேண்டும்.
3. இரத்த உறவுடன் சேர்ந்து வாழ்தல்
இரத்த உறவுகளுடன் சேர்ந்து வாழ்வதென்பது நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்திய ஒரு காரியம். இரத்த உறவானது எமது தெரிவினூடாக எய்தப்பெறுவதல்ல; மாறாக, அது இறைவனாகவே ஏற்படுத்தித் தருவது. அதனால்தான் இன்னுமொரு நபிமொழியில், இரத்த உறவைத் துண்டித்து வாழ்பவன் சுவனம் நுழையமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆகவே, இரத்த உறவை சரிவர பேணிக்கொள்வது மிகவும் அவசியம்.
4. இரவுத் தொழுகை
அல்லாஹ்வின்பால் அதிகமதிகம் நெருங்குவதற்கான ஊடகம்தான் இரவுத் தொழுகை.
முழு ஊரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்ற வேளை, தூக்கத்தைத் தியாகம் செய்துவிட்டு எழுந்து நின்று இறைவனைத் தொழுவதென்பது மகத்துவமானது; நன்றியுணர்வை வெளிப்படுத்துவதன் அடையாளமும்கூட.
அதிலும் குறிப்பாகத் தஹஜ்ஜுத் நேரம் அல்லாஹ்வே கீழ்வானத்திற்கு இறங்கி வந்து அவனிடம் கேட்பவர்களுக்குக் கொடுக்கத் தயாராக இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுரைத்தார்கள்.
அந்த நேரம் கேட்கப்பட்டும் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் கிடையாது.
இதனால்தான் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் 'தஹஜ்ஜுத் நேரம் கேட்கப்படும் பிரார்த்தனை குறி தவறாமல் எய்யப்பட்ட அம்பு போன்றது' எனக் கூறினார்கள்.
ஆகவே, எமது தேவைகளை இறைவனிடம் கேட்டு இறைஞ்சுவதற்கும், பாவமன்னிப்பை நோக்கி விரைவதற்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த ஹதீஸ் திர்மிதியில் பதிவாகியுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பிய இக்காரியங்களை முடிந்தளவு எமது மரணம் வரை செய்து வருவதனூடாக நிலையான மறுமை வாழ்வில் சாந்தமாகவும், அமைதியாகவும் சுவர்க்கம் நுழையும் பாக்கியத்தைப் பெற்றிடுவோமாக!
- எம். எஸ். எம். ரஸ்மி