ஒருவரை எழுப்பிவிட்டு அமர வேண்டாம்

“உங்களில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டுப் பிறகு அந்த இடத்தில் அமரவேண்டாம்.” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

பார்க்க: ஸஹீஹ் முஸ்லிம் (4390)

ஒருவர் அமர்ந்திருக்கக்கூடிய இருக்கையிலிருந்து அவரை எழுப்பிவிட்டு நாம் அதில் அமர்வதையோ அல்லது மற்றொருவரை அமர வைப்பதையோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். 

அன்றாடம் நாம் கலந்துகொள்ள நேரிடும் அவைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படக்கூடிய ஒருவர் வரும்போது, ஏற்கனவே அமர்ந்துள்ள எவரேனும் ஒருவரை எழுப்பிவிட்டு வந்தவரை அமரச் செய்வதைக் கண்டிருப்போம். குறிப்பாக, சிறுவர்கள் அமர்ந்திருப்பார்களேயானால் அவர்களை வலுக்கட்டயாமாக எழுப்பிவிட்டு குறித்தவர் அமர்வார் அல்லது மற்றோருவரை அமரச் செய்வார். 

இச்செயலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிப்புடன் தடைசெய்திருக்கிறார்கள். சிறுவனாக இருந்தாலும், வாலிபனாக இருந்தாலும், வயோதிபராக இருந்தாலும், குறித்த இருக்கையில் அமர்ந்தவருடைய தேவை முடியும்வரை அவருக்கே அவ்விருக்கை மீது பூரண உரிமையிருக்கிறது; அவராக மனமுவந்து இருக்கையைத் தருவாரானால் அமர்ந்துகொள்ளலாமே ஒழிய, நாமாக அமர்ந்திருப்பவரை எழுப்பி அசௌகரியப்படுத்துவதனூடாக அவருக்கு அநீதி இழைத்துவிடக்கூடாது. 

அதேநேரம், அமர்ந்திருப்பவர்களும் முடிந்தவரை நகர்ந்து வரக்கூடியவர் அமர்ந்துகொள்ளும் வகையில் இடம்கொடுக்க வேண்டும் என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். 

பார்க்க: ஸஹீஹ் முஸ்லிம் (4390)

மற்றுமொரு ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்: 

"உங்களில் ஒருவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டுத் திரும்பி வந்தால், அவரே அந்த இடத்திற்கு உரியவர் ஆவார்..” 

பார்க்க:  ஸஹீஹ் முஸ்லிம் (4394)

அதாவது, ஒருவர் தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து நகர்ந்து சென்றுவிட்டு, மீண்டும் அவ்விடம் வந்தால் அவர் அந்த இருக்கையில் அமர்வதற்கு உரிமையுடையவர் என்பதாகவே நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒருவர் நகர்ந்துசென்ற இருக்கையில் நாம் அமர்ந்திருக்கின்றபோது, அவர் மீண்டும் அவ்விடம் வந்தால் கண்ணியமாக அவ்விருக்கையை அவர் அமர்வதற்காகக் கொடுத்துவிட வேண்டும். 

நபிகளாருடைய இச்செய்திகள் பற்றி இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, அமர்ந்திருப்பவரை எழுப்பிவிட்டு அமரும் அல்லது அமரச்செய்யும் காரியம் ஹராமானது என்றே புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்கள் 

பார்க்க: அல்-முஃப்ஹிம் (5/509)

இருவர் அமர்ந்திருக்கின்றபோது அவர்களுடைய அனுமதியின்றிப்போய் குறுக்கிட்டு அமர்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். 

”ஒன்றாக அமர்ந்திருக்கும் இருவருடையே அவர்களுடைய அனுமதியின்றி அமரக்கூடாது“ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

பார்க்க: திர்மிதி (2752)

அன்றாட வாழ்வில் நாம் நேரிடும் இத்தகைய சூழ்நிலைகளின்போது இங்கிதமாக நடப்பதனூடாக சபை ஒழுங்கைப் பேணுவோமாக!

- எம். எஸ். எம். ரஸ்மி 
أحدث أقدم