"மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒரு மனிதர், தாம் பொருளீட்டியது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) வழியிலா; அல்லது அனுமதிக்கப்படாத (ஹராமான) வழியிலா என்பது குறித்துப் பொருட்படுத்தமாட்டார். "
(அல்-புகாரி, ஹதீஸ்: 2083)
இந்த ஹதீஸ் மிகவும் ஆழமான கருத்தையும் மிகுந்த எச்சரிக்கையையும் கொண்டதாகும்.
பாடங்கள் மற்றும் படிப்பினைகள்:
1. ஹலால்-ஹராம் உணர்வின் அழிவு
இது ஒரு சமூகத்துக்கு ஏற்படும் மிகப்பெரிய அபாயம். ஹலால் மற்றும் ஹராம் என்ற முரண்பாடுகள் மனிதனின் மனதில் இடம் பெறாமல் போனால், அவன் தன்மையிலேயே அழிவு ஏற்படும்.
2. இது நிதியின் தூய்மை, வாழ்வின் நேர்மை ஆகிய அனைத்திலும் தாக்கம் ஏற்படுத்தும்.
3. தொழில் மற்றும் வருமானத்தில் எச்சரிக்கையும் கவனமும் அவசியம்
இஸ்லாம் சம்பாதிப்பதில் மட்டும் அல்ல; எப்படி சம்பாதிக்கிறோம் என்பதிலும் கவனம் செலுத்துகிறது.
4.ஹலாலான சம்பாத்தியமே ஈமான் கொண்ட ஒருவரின் அழகிய அடையாளமாகும்.
5. மனிதன் வருமானத்தை மட்டுமே நோக்கமாக கருதும் காலம் வரும் என்ற முன் அறிவிப்பு இந்த ஹதீஸில் உள்ளது.
6. நபி (ﷺ) அவர்கள் வாழ்ந்த அந்த காலத்தில் இப்படி ஒரு எச்சரிக்கை இருந்தது என்றால், இன்று நாம் வாழும் காலம் எம்மாத்திரம் ?
7. சிலர் சம்பாதிக்கும் போது வட்டி , பொய் சொல்லி பொருளை விற்பது , அளவை நிறுவையில் மோசடி, ஏமாற்றி அடுத்தவரின் பொருளை அபகரிப்பது, பொது சொத்தில் கையாடல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.
8.ஒரு முஃமினின் உண்மையான உணர்வு தனது வருமானம் ஹலாலா என்பதை கவனித்து, ஹராமில் புகுந்துவிடாமலிருப்பதின் மூலம் அவன் தனது உணவிற்கும் , குடும்பத்தாருக்கும் ஹலாலை மட்டுமே கொண்டு வர முயல்வான்.
9. ஹராமான சம்பாத்தியத்தின் விளைவாக பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது. பாவங்கள் பெருகும், வீட்டில் பறக்கத் இல்லாமல் ஆகும், ஆரோக்கியம், வியாபாரம் , வாகனம் , இவற்றில் இதன் பாதிப்பை தெளிவாக உணர முடியும்.
10. ஹராமான சம்பாத்தியத்தினால் தன்னை மட்டுமல்ல தன குடும்பத்தையும், முழு சமூகத்தையும் பாதிக்கும்.
11. இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கம். அது வாழ்வின் ஒவ்வொரு பகுதிக்குமான வழிகாட்டலை வழங்குகிறது. ஹலால் மற்றும் ஹராம் குறித்த நுட்பமான அறிவும், உணர்வும், நம்பிக்கையும் ஒவ்வொரு முஸ்லிமும் பெற்றிருக்க வேண்டியது. அந்த உணர்வை இழந்த சமூகம் நாசத்திற்கு தள்ளப்படும் என்பது நபியின் எச்சரிக்கை.
12. நமது வருமானம் ஹலாலா? ஹரமா? என்பதை சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம் .
s. யாஸிர் ஃபிர்தௌசி
ஜம்இய்யத்துத் தஃவா அல் - ஜுபைல்
சவூதி அரேபியா