قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
(நபியே! மனிதர்களிடம்,) நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்துவிடுவான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
[அல்குர்ஆன் 3:31]
விளக்கக் குறிப்புகள்:
அல்லாஹ்வை நேசிப்பது கட்டாயக் கடமை, அதற்குரிய அடையாளம், அதனால் விளையும் பயன் ஆகியவற்றை இந்த ஆயத் உள்ளடக்கியுள்ளது.
தாம் அல்லாஹ்வை நேசிப்பதாக சொல்பவர்களின் உண்மை தன்மையை பரீட்சித்துப் பார்க்க கூடியதாக இந்த ஆயத் இருக்கிறது.
அல்லாஹ்வை ஒருவர் நேசிப்பதற்குரிய அடையாளம் அவர் அவன் அனுப்பிய தூதரைப் பின்பற்றுவதாகும்.
அல்லாஹ்வை நேசிப்பதாகக் கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களைப் பின்பற்றாமல் இருப்பவர் உண்மையில் அல்லாஹ்வை நேசித்தவராக இருக்க முடியாது.
ஒரு வாதத்திற்கு அவரிடம் அல்லாஹ்வின் மீது நேசம் இருந்தாலும் கூட, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களைப் பின்பற்றாமல் இருப்பதால் அந்த நேசம் அவருக்குப் பயனளிக்காது.
அல்லாஹ் தனது தூதர் ﷺ அவர்களைப் பின்பற்றுபவர்களையே நேசிப்பான். நபி ﷺ அவர்களை நீங்கள் பின்பற்றாவிட்டால் அல்லாஹ் உங்களை நேசிக்க மாட்டான்.
ஒரு இறைநேசனுக்குரிய அடையாளம் - அதாவது அல்லாஹ் ஒருவனை நேசிக்கிறான் என்பதற்கான அடையாளம் அவன் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதாகும்.
எந்த அளவுக்கு ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களைப் பின்பற்றுகிறாரோ அந்த அளவுக்கு அல்லாஹ் அவரை நேசிக்கின்றான்; அவருடைய பாவங்களையும் மன்னிக்கின்றான்.
நாம் அல்லாஹ்வை நேசிக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதைவிட, அல்லாஹ் எங்களை நேசிக்கிறானா? என்பதே மிக முக்கியமானது.
தங்களை அஹ்லுல் குர்ஆன் / குர்ஆனிகள் என்று அழைத்துக் கொள்ளும் குர்ஆன் மட்டும் போதுமானது; நபி ﷺ அவர்களின் ஸுன்னஹ் அவசியமில்லை என்று வாதிடும் வழி தவறியவர்களுக்கு இந்த ஆயத் மறுப்பாக அமைந்துள்ளது. அந்த நம்பிக்கை ஒருவரை வெளியேற்றிவிடும். அவர்கள் அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் நேசிப்பது உண்மையாக இருந்தால் நபி ﷺ அவர்களைப் பின்பற்றி இருப்பார்கள்.
பார்க்க:
- تفسير ابن كثير
- تفسير السعدي
அன்பார்ந்த முஸ்லிம்களே நபி ﷺ அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் நேசத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது?
அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைக் கற்பது
அதனை வாழ்க்கையில் எடுத்து நடப்பது
அதன் பக்கம் மற்றவர்களை அழைப்பது
மேற்படி விடயங்களில் ஏற்படும் துன்பங்களை சகித்துக் கொள்வது
குறிப்பாக
நபி ﷺ அவர்களின் ஸீறஹ்வை - வரலாற்றைப் படிப்பது,
அவர்களின் பண்பாடுகளைப் பரப்புவது,
மங்கிப்போன அவர்களின் ஸுன்னஹ்களை உயிர்ப்பிப்பது,
வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் நபி ﷺ அவர்களின் வழிமுறையைக் கடைபிடிக்க முயற்சிப்பவர்களுக்கு ஒத்துழைப்பது,
நபி ﷺ அவர்களைப் பற்றி ஒரு செய்தி சொல்லப்பட்டால் அது ஆதாரபூர்வமானது தானா என்பதை அறிவுள்ளவர்களிடம் கேட்டு உறுதி செய்து கொள்வது. அவர்களின் பெயரில் பரப்பப்படும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையோ அல்லது உறுதி செய்யப்படாத செய்திகளையோ பரப்பாமல் இருப்பது.
முஹம்மத் ﷺ அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நாம் ஏற்றுக் கொள்வதன் அர்த்தம் யாதெனில்:
அவர்கள் சொன்னது என உறுதி செய்யப்பட்ட அனைத்தையும் உண்மை என நம்பவேண்டும். அது எமது புத்திக்கும் விருப்பத்திற்கும் மாற்றமாக இருந்தாலும் சரியே.
அவர்களுடைய கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும்.
அவர்கள் தடுத்ததில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் மார்க்கமாக வழிகாட்டிய முறையில் அல்லாமல் வேறு முறைகளில் அல்லாஹ்வை வணங்கக் கூடாது.
ஸுன்னஹ் அகாடமி:
Sunnah Academy:
facebook.com/Sunnah.Acad
instagram.com/sunnah_academy
youtube.com/@Sunnah_academ
Telegram:
t.me/sunnah_academy
WhatsApp:
chat.whatsapp.com/E1aiTCVMAzL9u1N1vGRKdp