அல்லாஹுத்தஆலா கூறுகிறான்:
"நிச்சயமாகப் பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி கணக்கின்றி முழுமையாக வழங்கப்படும்." [அத்-துமர்: 10]
அல்லாமா இப்னு பத்தால் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்விடம் பொறுமையாளர்களில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள்:
அல்லாஹ்வின் தடை செய்யப்பட்ட காரியங்களைத் தவிர்ந்து பொறுமையாக இருப்பவர்கள்.
அல்லாஹ்வை வழிப்படுவதில் பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள்.
யார் இவ்வாறு செய்கிறார்களோ, அவர் அல்லாஹ்வின் தூய மற்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களில் ஒருவர் ஆவார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பின்வரும் கூற்றை நீங்கள் கவனிக்கவில்லையா?:
'பொறுமையைக் காட்டிலும் சிறந்ததும் விசாலமானதுமான எந்தக் கொடையும் உங்களுக்கு வழங்கப்படவில்லை.'"
-ஷரஹ் ஸஹீஹ் அல்-புகாரி
ஹஃபித் இப்னு ரஜப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
"சிறந்த வகையான பொறுமைகளில் ஒன்று நோன்பாகும். ஏனெனில், அது மூன்று வகையான பொறுமைகளையும் உள்ளடக்கியுள்ளது:
அல்லாஹ்வை வழிப்படுவதில் பொறுமை.
அல்லாஹ்வின் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளும் பொறுமை; ஏனெனில், அடியான் தன் இச்சைகளை அல்லாஹ்வுக்காக விட்டுவிடுகிறான்.
நோன்பாளிக்கு ஏற்படும் பசி மற்றும், தாகம் போன்ற வேதனையான விதிகளின் மீதான பொறுமை."
_ஜாமிஉல் உலூம் வல்-ஹிகம்