கேள்வி: உம்ராவுக்கு போகும் நோக்கில் சவூதியிலுள்ள ஒரு விமான நிலையத்தில் வெளிநாட்டிலுள்ள தனது கணவரை சந்திப்பதற்காக ஒரு பெண் தனது சிறிய குழந்தையுடன் மஹ்ரமில்லாமல் பிரயாணம் செய்வதன் மார்க்க சட்டம் என்ன?
பதில்: அஷ்ஷைக் உஸ்மான் அல்கமீஸ் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு பதிலளிக்கிறார்கள்:
"ஆகாது, ஒரு பெண் மஹ்ரமான ஒருவரில்லாமல் பிரயாணம் செய்ய முடியாது, இன்றைய நாட்களில் மக்கள் இவ்விடயத்தில் அதிகமாக பொடுபோக்காக இருப்பது கவையளிக்கிறது. விமானத்தில் பயணிக்கும் போது கூடவே பல பெண்கள் அவர்களது மஹ்ரமான ஆண்களுடன், அல்லது மஹ்ரமானவர்கள் இன்றி பயணித்தாலும் எண்ணிக்கை எவ்வளவானாலும் அனுமதியளிக்கப்பட்டதல்ல. இது அல்லாஹ்வின் ஷரீஆவுக்கு மாற்றமான விடயமாகும்.
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டுள்ள ஒரு பெண் மஹ்ரமான ஆண் அல்லது கணவன் இன்றி பிரயாணம் செய்வது ஹலாலாக மாட்டாது." ஆதலால் ஒரு பெண் மஹ்ரமல்லாதவர்களுடன் அல்லது தனிமையில் பிரயாணம் செய்ய முடியாது. இது பாரிய பாரதூரமான விடயம். எவ்வித ஆபத்தும் இல்லாவிடினும் இவ்வாறு பிரயாணம் செய்வது கூடாது. இது மார்க்கம் -சாதாரண விடயமல்ல-
பெண்கள் மார்க்கத்தை கடைப்பிடிப்பதோடு நாம் அவர்களை இவ்வாறு பிரயாணம் செய்வதை தடுக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வை பயப்பட வேண்டும். இதில் ஒரு விடயத்தை விதிவிலக்களிக்க முடியும் "ஒரு பெண் தன கணவருடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்தாள், அங்கே கணவன் மரணித்துவிட்டார் இச்சந்தர்ப்பத்தில் தனது நாட்டுக்கு மஹ்ரமில்லாமல் திரும்பி வர முடியும் -எந்த மஹ்ரமானவரும் அழைத்து வர இல்லாத போது-, ஆனால் கணவன் வெளிநாட்டில் மரணித்தால் மனைவி மஹ்ரமில்லாமல் அவரை பார்க்க செல்ல முடியாது, அம்மனைவி மெய்நிகர் காணொளி வாயிலாக கணவரை காண்பது போதுமானது.
அல்லது வெளிநாட்டிலுள்ள கணவரை பார்ப்பதற்காக நீ-பெண்- உனது மஹ்ரமான சகோதரன், தந்தையின் உற்ற சகோதரர்கள் அல்லது தாயின் உற்ற சகோதரர்கள் யாரேனும் ஒருவருடன் உனது செலவில் அல்லது உனது கணவரின் செலவில் அவர்களுக்கான பயணச் சீட்டை ஏற்பாடு செய்தும் செல்ல முடியும். எது எவ்வாறாயினும் மிக முக்கியமான கருப்பொருள் யாதெனில் எப்பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணம் செய்ய முடியாது.
பிரயாண காலத்தில் அப்பெண்ணுடன் மஹ்ரமான ஒருவர் கட்டாயம் இருப்பது தான் முக்கியம். அப்பெண்ணை உரிய பாதுகாப்பான இடத்துக்கு அவர் கொண்டு சேர்த்துவிட்டால் அவரது கடமை நீங்கிவிடும், பிரயாணமும் முடிந்துவிடும். பாதுகாப்பில்லாத இடத்தில் அப்பெண் இருந்தால் குறித்த மஹ்ரமானவர் உடன் இருப்பது அவசியமாகும்.
தகவல்: தற்காலத்து அஸதுஸ் ஸுன்னா என்றழைக்கப்படும் அஷ்ஷைக் உஸ்மான் அல்கமீஸ் ஹபிழஹுல்லாஹ் அவர்களது இணைக்கப்பட்டுள்ள காணொளி
தமிழாக்கம்: Azhan Haneefa