பெருந்தன்மையோடு நடந்துகொள்வது

بسم الله الرحمن الرحیم

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

நீ பெருந்தன்மையோடு நடந்துகொள்; உன்னிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளப்படும்.

இதை இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அப்துல்லாஹ் பின் அஹ்மத் (رحمه الله) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த ஹதீஸை) என் தந்தை தம் கைப்பட எழுதிய ஏட்டில் நான் கண்டேன்.

ஆதாரம்: முஸ்னது அஹமத் - 2122

பிறருடைய குற்றங்குறைகளைப் பெரிதுபடுத்தாமலும், விட்டுக்கொடுத்தும், தாராளமாகவும் நடந்துகொள்ளும் உயர்ந்த மனப்பாங்கிற்கே 'பெருந்தன்மை' அல்லது 'தாராளமனம்' 'Generosity' எனப்படும். அரபியில் முசாமஹத், அல்லது 'முசாஹலத்' என்பர். கடமையில்லாத ஒன்றை மனமுவந்து செய்வதே 'சமாஹத்' எனப்படுகிறது.

சக மனிதர்களிடம் பெருந்தன்மையோடும் விட்டுக்கொடுத்தும் ஒருவர் நடந்துக் கொண்டால், அதைப் போன்றே அவரிடம் அவருடைய இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நடந்துகொள்வான்.

ஆதாரம்: அல் ஃபத்ஹுர் ரப்பானீ

"விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை" என்பார்கள். "தனக்குக் கிடைக்க வேண்டிய பயன், சாதகமான நிலை போன்றவற்றைப் பிறர் அனுபவிக்கவோ பெறவோ விட்டுவிடுதல்" என்பதே 'விட்டுக் கொடுப்பது' என்பதன் பொருளாகும்.

பெருந்தன்மைக்கும் ஏமாறுவதற்கும் வித்தியாசம் உண்டு. நம்பி மோசம்போவது, அல்லது கவனக் குறைவாக இருப்பதே ஏமாறுதல் ஆகும். ஓர் இறைநம்பிக்கையாளர் பெருந்தன்மையாளராக இருப்பார். ஏமாளியாக இருக்கமாட்டார்.
أحدث أقدم