உண்மைதான் நிம்மதி; பொய்மை ஐயம் (மனக்குழப்பம்) ஆகும்

بسم الله الرحمن الرحیم

ஹசன் பின் அலீ (رضی الله عنه) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள், "உனக்குச் சந்தேகமாக உள்ளதை விட்டுவிட்டு, சந்தேகமில்லாததைக் கைக்கொள். ஏனெனில், உண்மைதான் நிம்மதி; பொய்மை ஐயம் (மனக்குழப்பம்) ஆகும்" என்று கூறிவந்தார்கள்.

ஆதாரம்: முஸ்னது அஹ்மத் - 1630

ஒரு விஷயத்தில், அல்லது ஒன்றைப் பற்றிய முடிவில் உறுதி ஏற்படாமல் சந்தேகம் நிலவுமானால், அதைக் கைவிட்டுவிட வேண்டும். சந்தேகமின்றி உறுதியாக என்ன தெரியுமோ அதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்று ஹலாலா? அல்லது ஹராமா? என்ற ஐயம் எழுமானால், அதைக் கைவிட்டுவிட வேண்டியதுதான். ஹலால் என உறுதியாகத் தெரிகின்ற வேறொன்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறே, தொழுகையில் மூன்று ரக்அத் தொழுதோமோ? அல்லது நான்கு தொழுதோமோ என ஒருவருக்குச் சந்தேகம் ஏற்படின், உறுதியானது எதுவோ அதையே - அதாவது குறைவானதையே கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது மூன்று என முடிவு செய்து தொழுகையைத் தொடர வேண்டும். ஏனெனில், நான்கில் தான் அவருக்குச் சந்தேகமே தவிர, மூன்றில் அல்ல. அவ்வாறே, தொழுகைக்கு இடையே காற்று பிரிந்ததா, இல்லையா என ஒருவருக்கு ஐயம் ஏற்பட்டால், உறுதியானது எதுவோ அதையே முடிவாகக் கொள்ள வேண்டும். அதாவது தொழுகையைத் தொடங்கும்போது அங்கத்தூய்மை (உளூ) உடன்தானே தொடங்கினார்! சந்தேகம் இடையில் வந்ததுதானே! இடையில் வந்த ஐயத்தைக் கைவிட்டுவிட வேண்டும். 'உளூ'வுடன் தொழுகையை ஆரம்பித்தததைக் கருத்தில் கொண்டு தொழுகையைத் தொடர வேண்டும்.

ஆடையில் அசுத்தம் பட்டுவிட்டது. ஆனால், அது ஆடையின் எந்தப் பகுதியில் பட்டது என்பதில் ஐயம். ஒரு பகுதியைக் கழுவினால், அசுத்தம் பட்டது வேறு பகுதியாக இருந்துவிட்டால்...? எனவே, அந்த ஆடையையே தவிர்த்துவிட்டு, வேறொரு ஆடையை அணிந்து தொழ வேண்டியதுதான். இதன்மூலம், மனதை அரிக்கும் சந்தேகம் அகன்று, மனஅமைதி ஏற்பட வழி பிறக்கும். மனஅமைதியைத் தருவதுதான் உண்மையாக இருக்க முடியும். குழப்பத்தைத் தருவது பொய்யாகவே இருக்கும்.

[நூல்: துஹ்ஃபத்துல் அஹ்வதீ, ஷர்ஹு ரியாளிஸ் ஸாலிஹீன்]
Previous Post Next Post