அத்தியாயம் - 93
வழங்கியவர் - அஷ்ஷேய்க் கலாநிதி ML முபாரக் மதனி
இந்த சூரா அருளப்பட்டதற்கான பின்னணி:
ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் இப்னி சுஃப்யான்(ரழி) கூறினார் ;
(ஒருமுறை) நபி(ﷺ) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது 'ஓர்இரவு' அல்லது 'இரண்டு இரவுகள்' அவர்கள் (இரவுத் தொழுகைக்காகக் கூட) எழவில்லை. அப்போது ஒரு பெண் (அபூலஹபின் மனைவி உம்மு ஜமீல் என்று சில ரிவாயத்துகளில் சொல்லப்படுகிறது), நபி(ﷺ) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டதாகவே கருதுகிறேன். (எனவேதான் ஓரிரு இரவுகளாக உம்மை அவன் நெருங்கவில்லை)' என்று கூறினாள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், 'முற்பகலின் மீது சத்தியமாக! மேலும், இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை' எனும் (திருக்குர்ஆன் 93:1-3ஆகிய) வசனங்களை அருளினான். (ஸஹீஹ்) புகாரி : 4983.
இந்த சூராவில் அல்லாஹ் பலவற்றின் மீது சத்தியம் செய்கிறான்.
சத்தியம் என்பது ஒரு விஷயத்தை உறுதிப்படுத்துவதற்காக வேண்டி செய்யப்படும் ஒன்றாகும்.
அடியார்கள் சத்தியம் செய்வதற்கு அனுமதி இருக்கிறது, அவர்கள் சத்தியம் செய்தால் அந்த சத்தியத்தை அவர்கள் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும், அப்படி அவர்கள் அதை முறித்து விட்டால் அவர்கள் அதற்காக குற்றப் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْۤ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَ فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِيْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِيْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِيْرُ رَقَبَةٍ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ ذٰ لِكَ كَفَّارَةُ اَيْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ وَاحْفَظُوْۤا اَيْمَانَكُمْ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான். அல்குர்ஆன் : 5:89
பொய்யாக சத்தியம் செய்வது என்பது பெரும் பாவம் ஆகும்.
அதேபோல், நாம் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் ஒருவனின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்.
அல்லாஹ் அல்லாதவர்கள் மீது அல்லது அல்லாஹ்வின் படைப்புகள் மீது சத்தியம் செய்யும்போது, அதை உலமாக்கள் ஷிர்க்குல் அஸ்கர் (சிரிய வகையான இணைவைத்தல்) என்று குறிப்பிடுகிறார்கள்.
உதாரணமாக - தலையின் மீது அல்லது குழந்தையின் மீது சத்தியம் செய்வது.
அதே நேரத்தில், அவர்கள் சத்தியம் செய்கிற விஷயத்திற்கு தெய்வீகத் தன்மை இருக்கிறது என்று அவர் நம்பினால், அவர் ஷிர்குல் அக்பரை (பெரிய ஷிர்க்) செய்கிறார்.
உதாரணமாக - சூஃபிகள் முஹைதீன் அப்துல் காதர் ஜீலானி அவர்களுக்கு அல்லாஹ்வுக்கு இருக்கக்கூடிய சில தன்மைகள் இருப்பதாக நம்புகிறார்கள், எங்கிருந்தும் 'யா முஹய்த்தீன்' என்று அழைத்தாலும் அவர் உதவி செய்வார் என்று நம்புவது பெரிய வகை ஷிர்க் ஆகும்.
ஆனால், அல்லாஹ் அவன் விரும்பியவற்றின் மீது சத்தியம் செய்வான், அல்லாஹ் செய்கின்ற எதைப் பற்றியும் கேள்வி கேட்கின்ற உரிமை அடியார்களுக்கு கிடையாது என்பது ஒரு முக்கியமான விதி ஆகும்.
அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்து இருக்கிறான், அது அவனுடைய விருப்பமாகும்.
ஆனால் நாம் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது கூடாது, ஏனென்றால் அதை நபி (ﷺ) தடுத்திருக்கிறார்கள்.
சூராத்துல் ளுஹா பொருள் விளக்கம்:
முதலாவது வசனம்:
وَالضُّحٰىۙ
முற்பகல் மீது சத்தியமாக
இவ்வசனத்தில் அல்லாஹ் ளுஹா நேரத்தின் மீது சத்தியம் செய்கிறான்.
ளுஹா நேரம் என்பது சூரியன் உதித்து, சூரிய வெளிச்சம் பரவி இருக்கக்கூடிய, மக்கள் பரபரப்பாக வேலைகளில் ஈடுபடக்கூடிய அந்த நேரத்தை குறிக்கும், முற்பகல் என்றும் கூறலாம்.
இரண்டாவது வசனம்:
وَالَّيْلِ اِذَا سَجٰىۙ
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக
وَالَّيْلِ - இரவின் மீது சத்தியமாக
اِذَا سَجٰىۙ - நிசப்தமாகும்போது
இருழால் மூடி கொள்ளக்கூடிய இரவின் மீது சத்தியமாக கூறுகிறான்.
குர்ஆனுடைய உயர்ந்த நிலையை காட்டக் கூடிய முறையில், இங்கே அல்லாஹ் முதலில் வெளிச்சம் பரவக்கூடிய அந்த முற்பகல் மீது சத்தியம் செய்கிறான் பிறகு மக்கள் ஓய்வெடுப்பதற்காக அடங்கக்கூடிய அந்த இரவின் மீது சத்தியம் செய்கிறான்.
இவை இரண்டும் முக்கியமான நேரங்கள் என்பதையும் இதன் மூலம் அல்லாஹ் நமக்கு உணர்த்துகிறான்.
மூன்றாவது வசனம்:
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰى
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
مَا وَدَّعَكَ -
உம்மைக் கை விடவுமில்லை;
رَبُّكَ - உம்முடைய இறைவன்
وَمَا قَلٰى -
அவன் வெறுக்கவுமில்லை.
அபூலஹபின் மனைவி சாபம் இட்டு கூறியது உன்னுடைய ஷைத்தான் உம்மை கைவிட்டு விட்டான் என்று அவள் அல்லாஹ்வை ஷைத்தான் என்று கூறினாள், நஅஊதுபில்லாஹி மின்ஹா
இதற்கான பதிலைத்தான் அல்லாஹ் இவ்வசனத்தை கூறுகிறான்.
அல்லாஹ் எப்பவும் உன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான், எப்பவும் என்னுடன் இருக்கிறான், உன்னை நேசிக்கிறான், உமக்கு உதவியாக இருக்கிறான், நீ பயப்பட வேண்டாம் என்பதை அல்லாஹ் நபி (ﷺ) அவர்களுக்கு உணர்த்துகிறான்.
நான்காவது வசனம்:
وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰى
மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
وَلَـلْاٰخِرَةُ -
மேலும் மறுமைதான்
خَيْرٌ -
மிகச்சிறந்தது
لَّكَ - உமக்கு
مِنَ الْاُوْلٰى -
இம்மையை விட
ஆரம்பத்தை விட இறுதி நிலை உனக்கு சிறந்ததாகும் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்.
இவ்வசனத்திற்கு தஃப்ஸீர் ஆசிரியர்கள் இரண்டு கருத்துக்களை கூறுகிறார்கள் ;
ஆரம்ப காலத்தில் குறைஷி மக்கள் நபி (ﷺ) அவர்களை இழிவாக நடத்தினார்கள், அவர்களுடைய தலைக்கே விலை பேசினார்கள், ஆனால் பிற்பட்ட காலத்தில் அல்லாஹ் நபி (ﷺ) அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்து நிறைய வெற்றிகளை கொடுத்தான், இஸ்லாத்தையும் நபி (ﷺ) அவர்களையும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தினான், இப்படியான ஆரம்பத்தை விட இறுதி சிறந்ததான நிலை என்பது ஒரு கருத்தாக கூறப்படுகிறது.
மற்றொரு கருத்து, உலகத்தைவிட மறுமை உனக்கு சிறந்தது
இது நபி (ﷺ) அவர்களுக்கு மட்டும் அல்லமல் உலக மக்கள் அனைவருக்குமே கூறப்படுகிற கருத்தாக இருக்கிறது.
அல்லாஹ், நபி (ﷺ) அவர்களுக்கு தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரு வாய்ப்பைக் கொடுத்தான்.
நபி (ﷺ) அவர்கள் உரையாற்றும்போது கூறினார்கள் "ஒரு அடியானுக்கு அல்லாஹ் ஒரு பெரும் வாய்ப்பை கொடுக்கிறான், நீ விரும்பினால் இந்த உலகத்தில் அல்லாஹ் நாடுகிற காலம் முழுக்க வாழலாம், நீ விரும்பினால் மவுத் ஆகி, அல்லாஹ்விடத்தில் போய்விடலாம்" என்று அல்லாஹ் அந்த அடியாரிடம் தேர்வு சுதந்திரத்தை கொடுத்தபோது, அந்த அடியான் அல்லாஹ்விடத்தில் செல்வதை தேர்வு செய்து கொண்டார், என்று சொல்லும்போது அந்த மஜ்லிஸில் அபூபக்ர்(ரழி) அவர்கள் கடுமையாக அழ ஆரம்பித்து விட்டார்கள்.
மற்ற மக்கள் அவரைப் பார்த்து ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டபோது அபூபக்ர் (ரழி), நபி (ﷺ) அவர்கள் இங்கே குறிப்பிடுவது அவர்களைத்தான் என்று கூறினார்கள்.
மறுமை வாழ்க்கைதான் சிறந்தது என்பதை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்
وَالْاٰخِرَةُ خَيْرٌ وَّ اَبْقٰى
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். அல்குர்ஆன் : 87:17
இவ்வுலகத்தில் நாம் சில காலம் மட்டுமே வாழப் போகிறோம், இங்கு வாழுகின்ற சில காலமும் நமக்கு கிடைக்கிற அனைத்துமே நமக்கு சோதனை மட்டும்தான்.
இவ்வுலகில் ஒரு மனிதன் நல்லதை கொண்டும் கெட்டதை கொண்டு சோதிக்கப்படுவான்,
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் : 67:2
நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள், உலகம் முஃமினுக்கு சிறைச்சாலை, காபிஃருக்கு சொர்க்கம் ஆகும்.
ஒரு முஃமின் இந்த உலகத்தில் சோதனைக்கு மத்தியில்தான் வாழ்வான்.
உமர் (ரழி) அவர்கள் உபை இப்னு கஅப் (ரழி) அவர்களிடத்தில் தக்வா என்றால் என்ன என்று கேட்டார்கள், அதற்கு உபை (ரழி) அவர்கள் கூறினார்கள், 'நீங்கள் கற்களும் முற்களும் நிறைந்த ஒரு பாதையில் நடந்து சென்றிருக்கிறீர்களா' என்று கேட்டார்கள்,
அப்படி நடந்து சென்றால் நீங்கள் எப்படி செல்வீர்கள் என்று உமர் (ரழி) அவர்களிடம் கேட்டார்கள், காலில் கற்கள் குத்திவிடாமலும், என்னுடைய ஆடைகளை முட்கள் தைத்து விடாமலும் மிகக் கவனமாக நான் நடப்பேன் " என்று உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்
உடனே உபை (ரழி) அவர்கள் இதுதான் தக்வா என்று கூறினார்கள்.
இவ்வுலகத்தில் பாவங்கள் ஜாஹிலிய்யத்துகள் அனைத்தும் இருக்கும், அதற்கு நடுவில் ஒரு முஃமின் கத்தியில் நடப்பதைப் போன்று நடந்து செல்லவார்கள் ஏனென்றால் அவர்கள் மறுமையை தான் விரும்பினார்கள்
எனவேதான், நபி (ﷺ) அவர்கள் காலத்தில் முஃமின்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போராடி வீர மரணம் அடைவதற்கு போட்டி போட்டார்கள், காரணம் வேகமாக சொர்கத்திற்கு போகலாம் என்பதற்காக
ஆனால், இன்றைக்கு நம்முடைய நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது, நம்முடைய மக்கள் அனைவருக்கும் உலகம்தான் சிறந்ததாக இருக்கிறது, உலகத்தின் மீதுள்ள ஆசை தான் அதிகமாக இன்றைக்கு காணப்படுகிறது.
ஆனால் நபி (ﷺ) அவர்கள் அவருடைய கடைசி நேரத்தில் மறுமை வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார்கள், ஏனென்றால் அவர்கள் மறுமை வாழ்க்கைதான் சிறந்தது என்பதை நம்பினார்கள்.
இங்கு கூறப்பட்ட இரண்டு கருத்துக்களும் முரண்படாததால் நாம் இரண்டையும் ஏற்றுக் கொள்ளலாம்.
ஐந்தாவது வசனம்:
وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰى
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
وَلَسَوْفَ - விரைவில்
يُعْطِيْكَ - உனக்குத் தருவான்
رَبُّكَ - உன்னுடைய ரப்பு
فَتَرْضٰى - நீ பொருந்திக் கொள்வாய்
இப்படியான ஆறுதலை அல்லாஹ் நபி (ﷺ) அவர்களுக்கு மக்காவில் கூறுகிறான்.
நபி (ﷺ) அவர்கள் ஒரு தூதராக இருந்தாலும் அவரும் ஒரு மனிதர் தான், அவருக்கும் மனக்கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன, அவர்களுக்காகத்தான் அல்லாஹ் கூறினான்.
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا
(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்! அல்குர்ஆன் : 18:6
அதிகமான கொடுமைகளை சந்தித்துக் கொண்டிருந்த போது தான் அல்லாஹ் இவ்வசனத்தின் மூலம் நபி (ﷺ) அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறான்
இவ்வசனத்தின் மூலம் நபி (ﷺ) அவர்களுக்கு பின்னால் கிடைக்கப் போகிற வெற்றிகளையும், சிறப்புகள் மற்றும் பாக்கியங்களையும் மறைமுகமாக கூறுகிறான்.
நபி (ﷺ) அவர்களுக்கு இவ்வுலகிலும் (அதிகமான கணிமத்து பொருட்கள்) மறுமையிலும் (அல்லாஹ்வுடைய உற்ற நண்பர் என்ற பதவி, மகாம் மஹ்மூது, அர்ஷின் கீழ் பரிந்துரை செய்வதற்கான பாக்கியம், கவ்ஸர் தடாகம், ஜன்னத்தில் முதலாவது நுழையக்கூடிய பாக்கியம்) போன்ற பல சிறப்புகளை அல்லாஹ் கொடுத்தான்.
ஆறாவது வசனம்:
اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
اَلَمْ يَجِدْكَ -
உம்மை அவன் காணவில்லையா
يَتِيْمًا -
அநாதையாக
فَاٰوٰى -
ஆகவே ஆதரித்தான்
நபி (ﷺ) அவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே அவர்களுடைய தந்தை இறந்து நபி (ﷺ) அநாதை ஆகிவிட்டார்கள், பிறகு பிறந்த சில ஆண்டுகளில் தாயும் மறைந்து விட்டார், ஆனால் அல்லாஹ் அவர்களை கைவிடவில்லை.
நபி (ﷺ) அவர்களுடைய வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்பை அல்லாஹ் கொடுத்தான்
அவர்களுடைய பாட்டனார் மற்றும் சிறிய தந்தையின் மூலம் கவுரமாக தான் அவர்கள் வளர்க்கப்பட்டார்கள், என்பதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
ஏழாவது வசனம்:
وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
وَوَجَدَكَ -
இன்னும் உம்மை கண்டான்
ضَآ لًّا -
வழியற்றவராக
فَهَدٰى -
ஆகவே அவன் நேர்வழியில் செலுத்தினான்.
நபி (ﷺ) அவர்களுடைய 40 வயது வரை அவர்களுக்கு சரியான வழி தெரியவில்லை.
ஷிர்க் மற்றும் அந்த சமயத்தில் காணப்பட்ட மோசமான பாவங்கள் எதிலும் அவர் ஈடுபடாமல் அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்தான்.
ஆனால் அவர்களுக்கு ஈமான் மற்றும் வேதம் என்றால் என்ன என்று தெரியவில்லை என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்:
وَكَذٰلِكَ اَوْحَيْنَاۤ اِلَيْكَ رُوْحًا مِّنْ اَمْرِنَا مَا كُنْتَ تَدْرِىْ مَا الْكِتٰبُ وَلَا الْاِيْمَانُ
(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - அல்குர்ஆன் : 42:52
எனவேதான், ஜிப்ரீல் (அலை) நபி (ﷺ) அவர்களுக்கு முதலில் வஹீ கொண்டு வந்தபோது அவர்களுக்கு அது வஹீ என்றும் தெரியவில்லை.
எட்டாவது வசனம்:
وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰى
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
وَوَجَدَكَ -
இன்னும் உம்மை கண்டான்
عَآٮِٕلًا -
வறியவராக
فَاَغْنٰى -
ஆகவே செல்வந்தராக்கினான்
நபி (ﷺ) அவர்கள் வறுமையில் இருப்பதைக் கண்டு, அவர்களை தேவையில்லாதவராக்கினான்
நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள், "செல்வம் என்பது அதிகமான சொத்துக்கள் இருப்பது அல்ல, உண்மையான செல்வம் என்பது போதுமென்ற மனம்"
இப்படியான போதும் என்ற மனதை அல்லாஹ் நமக்கு தர வேண்டும் என்றுதான் நாம் அதிகமாக துஆ செய்ய வேண்டும், அதிலே நாம் திருப்தி அடைந்தால் அதைவிட சந்தோஷமான வாழ்க்கை வேறு எதுவும் இல்லை.
கதீஜா (ரழி) அவர்களின் வியாபாரம் மூலமும், மனைவியாக ஆன பிறகும் அல்லாஹ், நபி (ﷺ) அவர்களுக்கு நிறைய செல்வத்தை தந்தான், இவை அனைத்துக்கும் மேலாக அவர்களுக்கு கிடைத்ததில் அவர்கள் திருப்தி அடைந்தார்கள்
ஒருநாள் நபி (ﷺ) அவர்கள் தூங்கி எழுந்து வெளியே வந்தார்கள் அப்போது அவர்களுடைய மேனியில் ஈச்ச ஓலையின் அடையாளங்கள் இருந்தன, அதைப் பார்த்து உமர் (ரழி) அவர்கள் அழுது விட்டு கேட்கிறார்கள் "யா ரசூலல்லாஹ் ! ரோம் மற்றும் பாரசீக நாட்டு மன்னர்கள் தங்கத் தட்டில் சாப்பிட்டு, பஞ்சு மெத்தையில் படுக்கும் போது, அல்லாஹ்வுடைய தூதரும் நாட்டின் அதிபதியான நீங்கள் இப்படி பாயில் படுக்கலாமா ?? உங்களுக்கு ஒரு பஞ்சு மெத்தை நாங்கள் செய்து தருகிறோம், என்று கூறிய போது நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
'எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன உறவு, இந்த உலகத்தில் நான் என்னை எப்படி பார்க்கிறேன் என்றால், ஒரு நீண்ட பயணம் செய்யக்கூடிய ஒரு பிரயாணி ஒரு மர நிழலில் ஓய்வு எடுப்பதுபோல் நான் இந்த உலகத்தை பார்க்கிறேன்' என்று கூறினார்கள்.
எனவே, சிறிது இருந்தாலும் போதும் என்ற மனதோடு நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்பதை இவ்வசனம் நமக்கு உணர்த்துகிறது.
ஒன்பதாவது வசனம்:
فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْ
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
فَاَمَّا - ஆக
الْيَتِيْم- அநாதையை
فَلَا تَقْهَرْ -
கடிந்து கொள்ளாதீர்.
அநாதைகள் யார் என்றால், தந்தையை இழந்த சுமார் 14, 15 வயதிற்கு உட்பட்ட எல்லா குழந்தைகளும் ஆவார்கள்.
அப்படிப்பட்ட அநாதை குழந்தைகளை கவனிப்பது மிகப்பெரிய கடமையாகும்.
நபி (ﷺ) அவர்கள் அநாதை குழந்தைகளை கண்டால், அவர்களை கட்டி அனைத்து தலையில் தடவி கொடுத்து சந்தோஷம் அடைவார்கள்.
நபி (ﷺ) அவர்கள் அநாதை குழந்தைகளை பராமரிக்கக் கூறி ஸஹாபாக்களை தூண்டுவார்கள்,
நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள், "அநாதை குழந்தைகளை பராமரிப்பவர்களும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று இரண்டு விரல்களை சேர்த்து காட்டிக் கூறினார்கள் "
பத்தாவது வசனம்:
وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنْهَرْ
யாசிப்போரை விரட்டாதீர்.
وَاَمَّا - ஆக
السَّآٮِٕلَ - யாசிப்போரை
فَلَا تَنْهَرْ - விரட்டாதீர்
உமக்கு அல்லாஹ் இவ்வளவு நிஃமத்துகளை தந்திருக்கிறான். அதனால் கேட்டு வருகிறவர்கள் நீ விரட்டி விடாதே என்று கூறுகிறான்.
கேட்டு வருகிறவர்கள் இரண்டு வகைப்படுவார்கள் ;
1. கைநீட்டி உதவி கேட்டு வருகிறவர்கள்
2. மார்க்க விளக்கம் மற்றும் கல்வியை கேட்டு வருகிறார்கள்
இவர்களில் யாரையும் நீ விரட்டி விடாதே என்று கூறுகிறான்
நபி (ﷺ) அவர்கள் மற்றவர்களுக்கு உதவுகிற விஷயத்தில் வேகமாக வீசும் புயல் காற்றை விட வேகமாக இருந்தார்கள், கேட்டு வருகிறவர்கள் யாரையும் வெறும் கையில் அனுப்ப மாட்டார்கள்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் சொல்லக்கூடிய ஒரு சம்பவம், "ஒரு பெண்மணி இரண்டு பெண் குழந்தைகளுடன் அவர் வீட்டுக்கு வந்து, பசியோடு இருக்கிறோம் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்கள், நானும் வீட்டினுள் தேடி பார்த்தேன், எதுவும் இல்லை, இருந்தது இரண்டே இரண்டு பேரீச்சம் பழங்கள் மட்டும் தான், அந்த இரண்டு பேரீச்சம் பழத்தையும் அந்த பெண்மணியிடம் கொடுத்தேன், அந்த பெண்மணி அதில் ஒன்றை இரண்டாக உடைத்து இரண்டு குழந்தைகளுக்கும் ஆளுக்கு பாதி கொடுத்து விட்டு மற்றொன்றை அவள் சாப்பிடுவதற்காக வைத்திருந்தால், பிள்ளைகள் பசியினால் வேக வேகமாக அந்த பாதி பேரீச்சம்பழத்தை சாப்பிட்டுவிட்டு தாயின் முகத்தை பார்த்த போது அந்த தாய் தனக்கு வைத்திருந்த பேரிச்சம் பழத்தையும் இரண்டாக உடைத்து அதையும் குழந்தைகளுக்கு கொடுத்தார்".
இதைக் கேட்ட நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள் "ஒருவருக்கு இரண்டு பெண் குழந்தைகளை கொடுத்து அல்லாஹ் சோதித்து அவர்கள் பொறுமையாக இருந்தால் அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்" என்று கூறினார்கள்
எனவே, கேட்டு வருகிறார்களுக்கு நாம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும், அவர்களை வெறும் கையோடு அனுப்புவது நல்ல பழக்கம் கிடையாது.
உலக விஷயமாக இருந்தாலும் அல்லது மார்க்க விஷயமாக இருந்தாலும் நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
பதினோராவது வசனம்:
وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
وَاَمَّا - ஆக
بِنِعْمَةِ - அருட்கொடையைப்
رَبِّكَ -
உம்முடைய இறைவனின்
فَحَدِّثْ -
அறிவித்துக் கொண்டிருப்பீராக.
அல்லாஹ் நமக்குக் கொடுத்த நியமத்துகள் அனைத்தையும் பெருமை இல்லாமல் மற்றவர்களிடம் நாம் சொல்ல வேண்டும்.
நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள், "ஒரு அடியானுக்கு அல்லாஹ் நியமத்களை வழங்கினால், அதனுடைய அடையாளங்களை அவனிடத்தில் பார்க்க விரும்புகிறான்"
அல்லாஹ் கொடுத்த நியாமத்துகளை நாம் அனுபவிக்கவும் வேண்டும், மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லவும் வேண்டும், நன்றிக் காகவேண்டி பெருமைக்காக அல்ல.
எனவே, சூரத்துல் ளுஹா என்ற அத்தியாயம் அல்குர்ஆனில் மற்றும் ஒரு மிக முக்கியமான அத்தியாயமாகும், இதில் சொல்லப்பட்ட செய்திகளை நாம் கவனத்தில் எடுத்து அவற்றை நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்க நாம் எல்லோரும் முயற்சி செய்யவேண்டும், அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக.