بسم الله الرحمن الرحیم
பிறருக்கு உபதேசம் செய்வதற்கு முன்:
ஒருவர் இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்களிடம் வந்து, "இப்னு அப்பாஸ் அவர்களே! நான் (மக்களுக்கு) நன்மையை ஏவி, தீமையில் இருந்து (அவர்களைத்) தடுக்க விரும்புகிறேன்" என்று கூறினார். அதற்கு அவர்கள், "நீர் அதற்குத் தகுதி பெற்றுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "(தகுதி பெற்றிருப்பதாகக்) கருதுகிறேன்" என்று கூறினார்.
அதற்கு அவர்கள் அந்த மனிதரிடம், "அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள மூன்று வசனங்களின் மூலம் இழிவடைவதை நீர் அஞ்சவில்லையாயின் அவ்வாறு செய்து கொள்ளலாம்" என்று கூறினார்கள். "அந்த வசனங்கள் யாவை?" என அவர் கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள்:
"உங்களை மறந்துவிட்டு, நன்மை செய்யுமாறு ஏவுகிறீர்களா?" (2:44) எனும் அல்லாஹ்வின் கூற்று முதலாம் வசனமாகும். "இதை (மனத்தில்) நன்கு பதித்துக்கொண்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இல்லை' என்று பதிலளித்துவிட்டு, 'இரண்டாம் வசனம் என்ன?' என்று கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள், "நீங்கள் செய்யாதவற்றை நீங்கள் சொல்வது அல்லாஹ்விடம் மிகுந்த கோபத்திற்குரியது ஆகும்" (61:2,3) எனும் அவல்லாஹ்வின் கூற்றாகும். "இதை (மனத்தில்) நன்கு பதித்துக்கொண்டீரா" என்று கேட்டார்கள். அதற்கும் அவர் 'இல்லை' எனக் கூறிவிட்டு, 'மூன்றாம் வசனம் என்ன? என்று கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள், "உங்களுக்கு நான் எதைத் தடை செய்தேனோ அதையே நான் செய்து, உங்களிடமிருந்து வேறுபட நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரை சீர்திருத்தம் செய்வதையே நான் விரும்புகின்றேன்" என்று நல்லடியார் ஷுஐப் (علیه السلام) அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கும் வசனம் (11:88) ஆகும். இதை (மனத்தில்) நன்கு பதித்துக்கொண்டீரா? என்று கேட்டார்கள். அதற்கும் அவர், 'இல்லை' என்றே கூறினார். அப்படியானால், "உன்னிலிருந்தே (சீர்திருத்தப் பணியைத்) தொடங்கு" என்று அந்த மனிதரிடம் இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள் கூறினார்கள்.
இப்ராஹீம் அந்நகஈ (رحمه الله) அவர்கள் கூறினார்கள்:
(மேற்கண்ட) மூன்று இறைவசனங்கள் இருக்கின்ற காரணத்தால் (பிறருக்கு) உபதேசம் செய்வதை நான் விரும்பவில்லை.
ஆதாரம்: தஃப்சீர் இப்னு கஸீர்