அற்புதங்கள்: அல்லாஹ்வின் பெண் ஒட்டகம்

அல்லாஹ் (சுபஹ்) பல நபிமார்களின் சரித்திரங்களையும், அவர்களுடைய சமுதாயத்தினர் பற்றியும் குர்’ஆனில் குறிப்பிடுகிறான். நூஹ் (அலை) அவர்கள் போன்ற சில நபிமார்களை அல்லாஹ் தெளிவான பேச்சுடன் அனுப்பினான். நபி மூஸா (அலை) போன்ற மற்றவர்களை பல அற்புதங்களுடன் அனுப்பினான். குர்’ஆனிலுள்ள சுவாரஸ்யமான பல கதைகளில், பல படிப்பினைகள் இருந்தாலும், அதிகமாக அறியப்படாததும், சொல்லப்படாததும், இறைதூதர் சாலிஹ் (அலை) அவர்கள், அவர்களுடைய மக்களான ஸமூத் மற்றும் அல்லாஹ்வின் பெண் ஒட்டகம் பற்றி வரலாறு தான்.

சாலிஹ் (அலை) ஸமூத் சமுதாயத்தினருக்கு அனுப்பப்பட்டார்:

ஸமூத் சமுதாயத்தினருக்கு பலமும், அறிவாற்றலும் அருளப்பட்டிருந்தது. மலைகளைக் குடைந்து கட்டிடங்கள் அமைத்தனர். மற்ற மக்களிடம் அடக்குமுறையும், அதிகாரம் செய்பவர்களாகவும் இருந்தார்கள். இவற்றையெல்லாம் விட, அவர்களுக்கு அல்லாஹ் அருளியிருந்தவற்றிற்கு நன்றி இல்லாதவர்களாக, தீவிரமாக சிலை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அல்லாஹ் (சுபஹ்), அவனுடைய அளவற்ற கருணை மற்றும் அன்பினால், அவர்களிடமிருந்தே ஒரு நபி – சாலிஹ் (அலை) அவர்களை அனுப்பினான். அவர், தன் மக்களை அல்லாஹ்வை மட்டுமே வணங்கும்படி அழைத்தார். அவர் கூறினார், “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.” [அல் குர்’ஆன் 11:61]

அவர் தன் மக்களை அழைத்து, அவர்களைப் படைத்ததில் அல்லாஹ்வுடைய அருளைக் கூறி, அல்லாஹ்வுடைய கருணையை என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான் என்று கூறி அவர்களுக்கு நினைவூட்டிகிறார். இருப்பினும், ஸமூத் மக்கள் அவரைக் கேலி செய்ததோடு, அவருடைய அறிவைச் சந்தேகித்தார்கள்!

‘….அவர்கள், “ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்” என்று கூறினார்கள். ‘ [அல் குர்’ஆன் 11:62]

ஸமூத் மக்கள் ஒரு அற்புதத்தைக் காட்டும்படி கேட்கிறார்கள்:

ஸமூத் மக்கள், தங்கள் சுகவாழ்வைத் துறக்க மனமில்லாமல், அவர்கள் அறிந்திருந்த விதத்திலேயே தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து வாழ நினைத்தார்கள். சிலை வணக்கத்தில் ஈடுபட்டு, அவர்களுடைய பல வெற்றிகளுக்கு காரணம் தாங்கள் வணங்கும் சிலைகளே என எண்ணினார்கள். மேலும், அவர்கள் சாலிஹ் (அலை) அவர்களுக்கு பேய் பிடித்திருக்கிறது, மன நோய் என எண்ணினார்கள். இருப்பினும், சிலர் சாலிஹ் (அலை) அவர்களுடைய செய்தியில் ஆர்வம் ஏற்பட்டாலும், ஒரு புது மார்க்கம் தங்களுக்கு சவாலாக இருப்பதை விரும்பவில்லை, அதை வேரோடு ஒழித்து விட விரும்பினார்கள்.

ஒரு நாள் சாலிஹ் (அலை) மக்களை அழைத்து, அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி, அவனை உணர்ந்து அவன் மேல் நம்பிக்கை வைக்கும்படி கூறினார்கள். மக்கள், அவருக்கு ஒரு வித்தியாசமான சவாலை அளித்தார்கள்: “உம்முடைய இறைவனிடம், பத்து மாத கருவை சுமந்த, உயரமான, கவர்ச்சியான ஒரு பெண் ஒட்டகத்தை செய்து, பாறையிலிருந்து அதை வெளியேற்றி எங்களுக்காக தரும்படி கேளுங்கள்.” என கேட்டார்கள்.
சாலிஹ் (அலை) பதில் கூறினார்கள்: “இப்போது பாருங்கள்! நீங்கள் கேட்டதை, நீங்கள் எப்படி வர்ணித்தீர்களோ, அதே போல் அல்லாஹ் அனுப்பி விட்டால், நான் எதைக் கொண்டு உங்களிடம் வந்திருக்கிறேனோ அதன் மீது நம்பிக்கை கொண்டு, நான் கொண்டு வந்துள்ள செய்தியின் மீது விசுவாசம் கொள்வீர்களா?”

அவர்கள் “ஆம்” என பதில் கூறினார்கள். [‘நபிமார்களின் கதைகள்’, இப்னு கஸீர்]

சாலிஹ் (அலை) உண்மையிலேயே தன்னுடைய மக்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என விரும்பினார்கள். அவர்களுடைய நலம் நாடி, அவர் இறைஞ்சி, மீண்டும், மீண்டும் அல்லாஹ்விடம், 10 மாத கர்ப்பிணியான ஒட்டகத்தை மலையிலிருந்து அனுப்பும்படி மன்றாடுகிறார். இறுதியில், இதோ, பாறையைப் பிளந்து கொண்டு ஒரு ஒட்டகத்தை அல்லாஹ் அருள்கிறான்!

ஒட்டகத்திற்கு உரிமைகள் இருந்தன; அதே போல், குர்’ஆனுக்கும் உண்டு:

அறிஞர்கள், அந்த ஒட்டகத்தின் பல குணங்களை குறிப்பிடுகிறார்கள். அது தரும் பால் ஆயிரக்கணக்கான மக்கள் அருந்தும் அளவு இருந்தது. இருப்பினும், அது கிணற்றிலிருந்து ஒரு நாள் நீர் அருந்தும். மக்கள் அனைவரும் அடுத்த நாள் அருந்துவார்கள். அது அதிகமான அருள்வளத்துடன் வந்தது, ஆனால் அதன் நிபந்தனைகளும் இருந்தன. அதே போல். குர்’ஆன் ஒரு அருள்வளமிக்க புத்தகம், அது இறந்து கிடந்த நம் இதயங்களுக்கு உயிர் அளித்தது. இருப்பினும், அதற்கு சில நிபந்தனைகளும் உள்ளன. அவ்வேதத்தில் உள்ளவற்றிற்கு நாம் கீழ்ப்படிய வேண்டும், அவ்வேதத்திற்கும் அதிலுள்ள கட்டளைகளுக்கும் அவைகளுக்குரிய உரிமைகளை நாம் தர வேண்டும்.

ஒட்டகத்தைக் கொலை செய்தல்:

இருந்தாலும், ஸமூத் மக்கள் கவரப்படவில்லை. அவர்கள் அந்த ஒட்டகத்தை வெறுத்தார்கள் – காரணம், சிலர், அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்பதற்காக மட்டும், சிலர், மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதை விரும்பாததால், சிலர் அந்த ஒட்டகம் அவர்களுடைய வாழ்வை தங்கள் விருப்பப்படி வாழ முடியாமல் ‘கட்டுப்படுத்துவதாக’ நினைத்ததால். அதே போல், நாம் குர்’ஆன் நம்மை நாம் விரும்பியபடி வாழ விடாமல் ‘கட்டுப்படுத்துகிறது’ என எண்ணுகிறோம். அல்லாஹ்விடமிருந்து வரும் அருட்கொடை பொறுப்புகளுடன் தான் வரும். குர்’ஆன் ஒரு பொறுப்புடன் வந்தது, நாம் அதை ஏற்றுக் கொண்டால் நாம் வெகுமதியைப் பெறுவோம். நாம் அதை எடுத்துக் கொள்ள விரும்பாவிட்டால், நமக்கு தண்டனை கிடைக்கும். அதே போல, ஸமூது மக்கள் அந்த ஒட்டகத்தை தங்கள் வாழ்விலிருந்து ஒழிக்க நினைத்து அதை கொன்று விட்டார்கள். அதன் பிறகு அவர்கள் மீது அல்லாஹ் கடுமையான வேதனையை இறக்கினான். இது நமக்கு ஒரு எச்சரிக்கை – நாம் குர்’ஆனின் மீது திருப்தி இல்லாமல், அதை நம் வாழ்விலிருந்து விலக்க முயற்சித்தால், நாம் இம்மையிலும், மறுமையிலும் அழிவை விரும்பி செல்கிறோம்.
أحدث أقدم