மரணித்தவர்களின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லலாமா?

மரணித்தவர்களின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லலாமா? இதுகுறித்து மார்க்கத்தின் நிலைபாடு என்ன?

ஒரு மனிதன் எந்த இடத்தில் மரணித்தானோ அந்த இடத்திலேயே தாமதிக்காமல் விரைவாக அடக்கம் செய்ய வேண்டும். தகுந்த காரணங்கள் இருந்தாலே தவிர அந்த ஊரில் இருந்து வேறு ஊருக்கு கொண்டு செல்லக்கூடாது. 

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய காலத்திலும் சஹாபாக்களுடைய காலத்திலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது. 
இமாம் அவ்ஸாயி (ரஹிமஹுல்லாஹ் ) , இமாம் இப்னுல் முன்திர் (ரஹிமஹுல்லாஹ் ) ஆகியோரும் இந்த கொள்கை உடையவர்களாக இருந்தார்கள். என இமாம் இப்னுல் குதாமா (ரஹிமஹுல்லாஹ் ) தனது அல் முக்னியில் குறிப்பிடுகிறார்கள் . ( 2 / 193 – 194 ) 

இதற்கான ஆதாரங்கள் 
1 . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் ஜனாஸாவை விரைவுப்படுத்துங்கள் அது நல்ல ஜனாஸாவாக இருந்தால் அதை நன்மையின் பக்கம் நீங்கள் முற்படுத்துகின்றீர்கள் அது வேறொன்றாக இருந்தால் ( நல்ல ஜனாஸாவாக இல்லை என்றால்) உங்கள் பிடரிகளை விட்டும் ஒரு தீயதை விரைவாக கீழே வைக்கின்றீர்கள்.
   
அதாரம் : புகாரி 1315, முஸ்லிம் 944, அபூதாவூத் 3181, திர்மிதீ 1015
 2. அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் சகோதரர் வாதில் ஹபஷா என்ற இடத்தில் மரணம் அடைந்ததும் அவரை அங்கிருந்து மதினா கொண்டு வந்தார்கள் எங்களை துக்கம் அடையச் செய்யவே இவ்வாறு நடந்து கொண்டீர்கள் அவர் மரணித்த இடத்திலேயே அடக்கம் செய்யப்படுவதை விரும்பினேன் என அன்னை அவர்கள் கூறினார்கள் . 
ஆதாரம் : பைஹகீ ஃபிஸ்ஸுனன் அல் குப்ரா  4/57 

மேலே கூறப்பட்ட இரண்டு ஆதாரங்களின்  அடிப்படையில் ஒரு மனிதன் எந்த இடத்தில் மரணித்தானோ அந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும். 

தான் இறந்து விட்டால் தன்னை இந்த இடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்று ஒருவர் வஸியத் செய்துவிட்டு இறந்தாலும்  அந்த வஸியத்தை நிறைவேற்றக்கூடாது ஏனெனில் ஒரு மையத்தை இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வது ஹராமாகும் என அதிகமான மார்க்க அறிஞர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.என்று இமாம் நவவி  (ரஹிமஹுல்லாஹ்)  தமது அத்கார் என்னும் நூலில் கூறியுள்ளார்கள். 

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்
s. யாஸிர் ஃபிர்தௌஸி 
இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் 
சவூதி அரேபியா .
أحدث أقدم