இலக்கை அடையாவிட்டாலும் அதை நோக்கிப் பயணிப்பதே எமது கடமை

நபியவர்களும் ஸஹாபாக்களும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த பின்னர் ஒரு சில ஸஹாபாக்களே மக்காவில் தொடர்ந்தும் தங்கியிருந்தனர், அவர்களின் நோயும், முதுமையையும், இப்புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்கு அவர்களுக்குத்  தடையாக இருந்தன. அவர்களில் ஒருவர்தான்:

"ழமுரஃ.இப்னு ஜுன்துப் (ரழி)"

பிரயாணக் கஷ்டத்தையும், பாலைவனத்தின் உஷ்னத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தால் அவர் தொடர்ந்தும் அதிருப்தியுடன் மக்காவிலேயே தங்கியிருக்கத் தீர்மானித்தார்.
என்றாலும் இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் வாழ்வதை சகிக்க முடியாமையினால், தனது முதுமையையும் நோயையும் மறந்து பிரயாணக் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு ஹிஜ்ரத் செய்ய முடிவு செய்தார்.
மதீனாவை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தார், செல்லும் பாதையில் அவரது நோய் அதிகரித்து ஆரம்பித்த பயணத்தை தன்னால் பூரணப்படுத்த முடியாது என்பதை அறிந்து கொண்டார் உடனே தனது ஒரு கையை மறு கையில் வைத்து இரண்டு உறுதிமொழிகளை வழங்கினார்கள் 
முதலாவது உறுதிமொழி: யா அல்லாஹ் இது உனக்கான எனது உறுதிமொழியாகும் 
இரண்டாவது உறுதிமொழி: யா அல்லாஹ் இது உனது தூதருக்கான எனது உறுதிமொழியாகும்.
பின்னர் அந்த இடத்திலேயே அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று மரணத்தைத் தழுவினார்.
உடனே, வானவர் ஜிப்ரீல் ழமுரஃ (ரழி) அவர்களுக்கு நடந்த விடயத்தை நபியவர்களுக்கு அறிவித்தார், அல்லாஹ் அவரைப் பற்றிய குர்ஆனிய வசனத்தை இறக்கினான்:

"யார் அல்லாஹ்விற்காகவும்  அவனது தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்யக்கூடியவராகத் தனது வீட்டை விட்டு வெளியேறி அவரை மரணம் அடைந்து கொண்டால் அவரது கூலி அல்லாஹ்விடம் உறுதியாகிவிட்டது, மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் ஆகிவிட்டான்" (அந் நிஸா: 100)

நபியவர்கள் மதீனாவில் ஸஹாபாக்களை ஒன்றுதிரட்டி ழமுரஃ (ரழி) அவர்களின் செய்தியை அவர்களுக்குக் கூறிவிட்டு தனது பிரபல்யமான ஹதீஸை அவர்களுக்குக் கூறினார்கள். அந்த ஹதீஸ் தான் புகாரியிலும் அல் அர்பஊனன் நவவிய்யாவிலும் முதலாவது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது:

"எண்ணங்களைக் கொண்டே அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஒவ்வொருவருக்கும் அவரவர் நாடியதே கிடைக்கும், யாருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்விற்காகவும் அவனது தூதருக்காகவும் என்றமையுமோ அவரது ஹிஜ்ரத் அல்லாஹ்விற்காகவும் அவனது தூதருக்காகவும் என்றமைந்ததாகும், யாருடைய ஹிஜ்ரத் உலகிற்காக அதை அடைவதற்காக அல்லது ஒரு பெண்ணை மணந்துகொள்வதற்காக என அமைந்திருந்ததோ, அவரது ஹிஜ்ரத் எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டதோ அந்த நோக்கத்திற்க்காக மேற்கொள்ளப்பட்டதாகவே அமைந்துவிடும்"

எனவே, ஆரம்பித்த ஹிஜ்ரத் பயணத்தை புரணப்படுத்த முடியாமல் போனாலும், எவராலும் அடைய முடியாத சிறப்பை ழமுரஃ (ரழி) அவர்கள் அடைந்து கொண்டார்கள் அவரது விடயத்தில் குர்ஆனும் ஸுன்னாவும் இறங்கியது.

ஆகவே, அல்லாஹ்வை நோக்கிய பயணம் மிக நீளமானது, அதன் இறுதியை நீ அடையவேண்டும் என்ற அவசியம் கிடையாது, ஆனால், நீ மரணிக்கும் போது அப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதே முக்கியமானது.

அல்லாஹ்விற்காக செயல்படுவது என்பது அதன் இலக்கை நீ அடைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது, என்றாலும் உனது எண்ணம் அல்லாஹ்விற்காக என்றிருந்து அவனை நோக்கிய பயணத்தில் நீ செயல்பட்டுக்கொண்டும் பயணித்துக் கொண்டும் இருக்கும் நிலையில் நீ மரணத்தைத் தழுவினாலும் அது உனக்குப் போதுமானதே! 

எனவே, அல்லாஹ்வை நோக்கிய உங்களது பயணத்தைப் பேணிக்கொள்ளுங்கள், உள்ளங்கள் பலவீனமானவை, குழப்பங்கள் உங்களைக் காவுகொள்ளக் கூடியவை 

யா அல்லாஹ்! உனக்குக் கட்டுப்படுவதன் பால் எமது உள்ளங்களைப் பயணிக்கச் செய்வாயாக! எம்மையும் எமது குழந்தைகளையும் எமது சந்ததியினரையும் வெளிப்படையான மற்றும் மறைமுகமான குழப்பங்களிலிருந்து பாதுகாப்பாயாக! 
எமது செயல்களை உனக்காக என்ற தூய எண்ணத்துடன் செய்த செயல்களாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்களாகவும் அவற்றை ஆக்கி அருள் புரிவாயாக!

அஷ்ஷெய்க் ஹசன் பாரிஸ் (மதனி)
أحدث أقدم