-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை
நபி (ஸல்) அவர்களை ஒவ்வொரு வணக்கத்திற்கும் முன் மாதிரியாக அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். எந்த எந்த அமல்களை எப்படி செய்ய வேண் டும் என்பதை நபியவர்களின் முன்மாதிரியிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். அதனால்தான் “அந்த தூதரிடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
அதே போல “அந்த தூதர் எதைக் கொண்டு வந்தாரோ அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், எவற்றை விட்டும் தவிர்ந்து கொள்ளும்படி ஏவினாரோ அவற்றை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். தொழுகையைப் பற்றி நபியவர்கள் கூறும் போது “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்” என்றார்கள்.
அதேபோல ஹஜ்ஜைப் பற்றி குறிப்பிடும்போது “என்னை எவ்வாறு ஹஜ் செய்ய கண்டீர்களோ, அவ்வாரே ஹஜ் செய்யுங்கள் என்றார்கள்.” இப்படி ஒவ்வொரு அமலுக்கும் முன் மாதிரியாக நடைமுறைப் படுத்திக் காட்டியுள்ளார்கள்.
பர்ளான தொழுகைகளை கூட்டாக (ஜமாத்தாக) பள்ளியில் நபியவர்கள் தொழுது காட்டினார்கள். ஆனால் சுன்னத்தான எல்லா தொழுகைகளையும் பள்ளிக்கு வெளியில் மைதானத்தில் நடைமுறைப் படுத்தியுள்ளார்கள்.
பர்ளான தொழுகையுடைய முன், பின் சுன்னத்துகளை வீட்டிலே நபியவர்கள் தொழுதுள்ளார்கள். அதே போல மழை வேண்டி தொழுகை, ஜனாஸா தொழுகை, இவைகளை பள்ளிக்கு வெளியே மைதானத்திலே தொழ வைத்த செய்திகளை நாம் ஹதீஸ்களிலே தாராளமாக காணலாம்.
மஸ்ஜிதுன் நபவியில் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் ஏனைய பள்ளிகளில் ஆயிரம் ரக்அத்துகள் தொழுவதற்கு சமனாகும். அதையும் விட்டு விட்டு நபியவர்கள் மைதானத்திற்கு வந்தார்கள் என்றால் இந்த இடத்தில் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.?
நபியவர்கள் ஒரு விடயத்தைக் நமக்கு காட்டித் தருகிறார்கள் என்றால் அதற்கு யாரும் மாற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் என்ன தண்டனை என்பதை கவனியுங்கள்.
“அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு (மார்க்க) விடயத்தில் தீர்ப்பு சொன்னதற்கு பிறகு அதில் மாற்றம் கொள்வதற்கு முஃமினான ஆணுக்கும் அதிகாரம் கிடையாது முஃமினான பெண்ணுக்கும் அதிகாரம் கிடையாது. அவ்வாறு யார் அதற்கு மாறு செய்கிறார்கரோ அவர் தெளிவான வழிகேட்டிலே உள்ளார்.” (33 : 36)
நபியவர்கள் இப்படிதான் செய்ய வேண்டும் என்று வழிக் காட்டியதற்கு பிறகு அந்த விடயத்தில் யாரும் மாறு செய்ய முடியாது. அப்படி மாறு செய்தால் அவர்கள் வழிகேடர்கள் என்பதை குர்ஆன் எச்சரிக்கிறது.
அதே போல
“அவர்களின் முகங்கள் நரகத்திலே புரட்டப்படும் போது நாங்கள் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? அல்லாஹ்வுடைய தூதருக்கு கட்டுப் பட்டிருக்கக் கூடாதா? என்று புலம்புவார்கள். மேலும் “எங்கள் இறைவா ! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும், நாங்கள் கட்டுப் பட்டோம். அவர்கள் எங்களை வழிக் கெடுத்து விட்டனர். என்று கூறு வார்கள். (33:66, 67)
எனவே கண்ணியத்திற்குரிய உலமாக்களே! பள்ளி நிர்வாகிகளே! பொது மக்களே! பெருநாள் தொழுகை எங்கு தொழ வேண்டும் என்ற வழி முறையை தெளிவாக நமக்கு காட்டித் தந்துள்ளபோது, நாம் ஏன் அதற்கு மாறு செய்ய வேண்டும்? நபியவர்கள் பெருநாள் தொழுகையை எங்கு தொழுதார்கள் என்ற ஹதீஸ்களை கவனியுங்கள்.
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப் பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு மக்களுடன் சேர்ந்து “தக்பீர்” கூறுவார்கள் (முஸ்லிம்-1614)
தொழும் திடலுக்கு ஆண்களையும், திருமணம் முடித்த பெண்களையும், கன்னிப் பெண்களையும், மாதவிடாய்ப் பெண்களையும், செல்லும்படி ஏவியுள்ளார்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும், ஒரே நேரத்தில் தொழுகை நடத்தியுள்ளார்கள். ஆண்களுக்கு தனியாக ஒரு முறையும், பெண்களுக்கு தனியாக ஒரு முறையும் நபியவர்கள் தொழ வைக்கவில்லை என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். தொழும்போது மாதவிடாய் பெண்கள் தள்ளி ஒதுங்கிக் கொள்வார்கள். தொழுகை முடிந்த உடன் உபதேசத்தைக் கேட்பதற்கு ஏனைய பெண்களோடு இருந்து கொள்வார்கள். இந்தப் பெருநாள் தொழுகை திடலில்தான் தொழ வைக்கப்பட வேண்டும் என்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் என்னவென்றால் மாத விடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வர முடியாது?
அதே போல பின் வரும் ஹதீஸை யும் கவனித்தால் இன்னும் மேலதிக மான தெளிவுகள் கிடைக்கும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்றோ அல்லது நோன்புப் பெருநாள் அன்றோ புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத் கள் (மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்பும் எதையும் (கூடுதலாகத்) தொழவில்லை. அதற்கு பின்பும் எதையும் (கூடுதலாகத்) தொழவில்லை. பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க, பெண்கள் பகுதிக்கு வந்து (அறிவுரை வழங்கினார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு அவர்களைப் பணித்தார்கள். உடனே பெண்கள் தம் காதணிகளையும் (கழுத்தில் அணிந் திருந்த) நறுமண மாலைகளையும் (கழற்றி பிலால் (ரலி) அவர்களின் கையிலிருந்த துணியில்) போட்டனர் (முஸ்லிம் 1616)
இந்த ஹதீஸின் படி பள்ளிக்கு சென்றால் பள்ளி காணிக்கையான தஹிய்யதுல் மஸ்ஜித் இரண்டு ரக் அத்துகள் தொழ வேண்டும். தொழாமல் உட்காரக் கூடாது. எனவே இதுவும் ஒரு வழிக் காட்டலாகும். பெருநாள் தொழுகைக்கு முன்னாலோ, பின்னாலோ, எந்த தொழுகையும் கிடையாது.
அப்படியானால் மைதானத்தில் தொழுதால் தான் அது சாத்தியமாகும். நாங்கள் நபியை நேசிக்கிறோம், நபியின் சுன்னாவை பின்பற்றுகிறோம் என்று சொல்லக் கூடியவர்கள் ஏன் இந்த சுன்னாவை புறக்கணிக்க வேண்டும்? பள்ளியில் இடம் போதாமையினால்தான் நபியவர்கள் திடலில் தொழுதார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இது தனது அறியாமையின் காரணமாக கூறுகிறார்கள்.
நபியவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும், ஒரே நேரத்தில் தான் ஐவேளை தொழுகைகளையும் ஜமாத்துடன் தொழுது வந்தனர். அப்போது மட்டும் பள்ளி தாராளமாக இடம் இருந்தது, ஆனால் பெருநாள் தொழுகைக்கு மட்டும் இடம் போதாமல் போய் விட்டதா? எனவே நாமாக தவறான காரணத்தைக் கூறி சரியான சுன்னாவை புறக்கணித்த குற்றத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. நபியவர்கள் காட்டிய வழியில் நமது பெருநாள் தொழுகையை நடைமுறைப் படுத்தி இறை பொருத்தத்தை பெறுவோமாக.!