சர்வதேச பிறையை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக இமாம் அல்பானி (ரஹி) அவர்களின் வழிகாட்டல்

-ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)

பிறை பார்த்தலில் சர்வதேச பிறையை ஆதரித்தவர்களில் இந்நூற்றாண்டின் மாபெரும் ஹதீஸ்துறை அறிஞரான அல்லாமா நாஸிருத்தீன் (றஹ்) அவர்கள் முக்கியமானவர். 

ஆயினும் முஸ்லிம் தேசங்கள் யாவும் ஒன்றிணைந்து உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே தலைமைத்துவத்தின் கீழ் வரும் வரை அந்தந்த நாட்டவர்கள் பிறை பார்த்து செயற்பட வேண்டும் என்பதையும் ஒரே நாட்டுக்குள் பல குழுக்களாக பிரிந்து செயற்படக்கூடாது என்பதையும் அவர் தனது பல்வேறு நூல்களில் வலியுறுத்துகிறார்:

1. "இஸ்லாமிய நாடுகளெல்லாம் ஒன்றிணையும் வரை ஒவ்வொரு நாட்டு மக்களும் அந்தந்த நாட்டவரோடு இணைந்தே நோன்பு நோற்க வேண்டும். ஒரு நாட்டு மக்களில் சிலர் நோன்பு நோற்கும் போது மற்றும் சிலர் அவர்களிலிருந்து பிரிந்து, முந்தி அல்லது பிந்தி நோன்பு நோற்ற வேறு நாட்டவரோடு இணைந்து நோன்பு நோற்பது கூடாது"

நூல்: 'தமாமுல் மின்னஹ்' , பக்:398-399.

2. "....ஒரு நாட்டு மக்களில் சிலர் தமது நாட்டவரோடு நோன்பு நோற்க, மற்றும் சிலரோ பிற நாட்டவரோடு இணைந்து நோன்பு நோற்பது கூடாது. (ஒரே நாட்டினுள்) பாரியதொரு குழப்ப நிலை ஏற்படுவதை தடுப்பதே இதன் நோக்கமாகும்".

நூல்: 'ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அஸ்ஸஹீஹா', 6/254

3. "நீங்கள் நோன்பு நோற்கும் நாள்தான் நோன்பாகும்; நீங்கள் பெருநாள் கொண்டாடும் நாள்தான் பெருநாளாகும்" என்ற ஹதீஸை   ஆதாரபூர்வமானதென ஹதீஸ் ஆய்வு முறையியலை பயன்படுத்தி தனது நூலில் நிறுவிவிட்டு, இது தொடர்பில் சில முற்கால அறிஞர்களின் கருத்துகளை அல்பானி (றஹ்) பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறார்கள் :

"இமாம் திர்மிதி (றஹ்) அவர்கள் இந்த ஹதீஸின் குறிப்புரையில் குறிப்பிடும் போது, 'பெரும்பான்மை மக்களுடனும் கூட்டமைப்புடனும் இணைந்தே நோன்பும் பெருநாளும் அனுஷ்டிக்க வேண்டும் என்பதே மேற்படி ஹதீஸின் கருத்தாகும்' என்று கூறுகிறார்.

இமாம் ஸன்ஆனி (றஹ்) அவர்கள் குறிப்பிடும் போது 'பிறை பார்த்ததன்  மூலம் பெருநாளை அறிந்துகொண்ட தனிநபர் கூட மக்களோடு இணைந்தே பெருநாள்கொண்டாடுவார்' என்று கூறுகிறார்.

இமாம் அபுல் ஹஸன் அஸ்ஸின்தீ (றஹ்) அவர்கள் கூறும் போது 'பிறை பற்றிய தீர்மானம் மேற்கொள்வதில் தனிநபர்களுக்கு அதிகாரம் இல்லை. தலைமைத்துவத்திற்கும் கூட்டமைப்பிற்குமே அதிகாரம் உண்டு. ஒருவர் பிறை கண்டு அதை தலைவர் நிராகரித்துவிட்டால் அவரும் மக்களுடன் இணைந்து அவர்களையே பின்பற்ற வேண்டும்' என்று கூறுகிறார்.

மேற்படி கருத்தையே ஆஇஷா (றழி) அவர்களின் பின்வரும் சம்பவமும் உறுதிப்படுத்துகிறது :

ஒரு தடவை மஸ்ரூக் (றஹ்) அவர்கள், தான் கண்ட பிறையின் அடிப்படையில் தனக்கு ஹஜ்ஜுப் பெருநாளாக அமைந்த தினத்தில் அரபா நோன்பு நோற்பதற்கு மறுத்த போது ஆஇஷா (றழி) அவர்கள் மஸ்ரூக் அவர்களிடம் அவர் பார்த்த பிறையை கணக்கெடுக்க வேண்டாமென்றும் மக்கள் கூட்டமைப்பை பின்பற்றி அத் தினத்தை அரபா தினமாக கருதி நோன்பு நோற்குமாறும் கூறியதோடு, 'மக்கள்  எத்தினத்தில் நோன்புப் பெருநாள் கொண்டாடுகிறார்களோ அதுவே நோன்புப் பெருநாள்; எத்தினத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடுகிறார்களோ அதுவே ஹஜ் பெருநாள்' என்றும் கூறினார்கள்.

இமாம் அல்பானி (றஹ்) அவர்கள் தொடர்ந்து குறிப்பிடுகிறார்கள் :

'இந்நிலைப்பாடே மகத்துவமிகு இம்மார்க்கம் மிக அதிகமாக வலியுறுத்தும் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் அடைந்துகொள்வதற்கும் சமூகத்தில் பிரிவினைகளை தடுப்பதற்குமான சிறந்த வழிமுறையாக அமையும்.

நோன்பு, தொழுகை, பெருநாள் போன்ற கூட்டு வணக்கங்களில் தனிநபர்களின் கருத்து கணக்கிலெடுக்கப்படமாட்டாது, 
அவரது பார்வையில் அக்கருத்து சரியானதாக தோன்றினாலும் சரியே...

ஸஹாபாக்கள் மத்தியில் பல கருத்து வேற்றுமைகள் கொண்டவர்கள் இருந்தார்கள். மனைவியை தொட்டால் வுழு முறியும் என்ற கருத்தில் சிலரும் முறியாது என்ற நிலைப்பாட்டில் சிலரும் இருந்தார்கள்; பயணத்தில் முழுமையாக தொழ வேண்டும் என்பவர்களும் இருந்தார்கள்; சுருக்கித் தொழவேண்டும் என்பவர்களும் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் அனைவரும் ஒரு இமாமைப் பின்பற்றி கூட்டாக தொழுவதற்கு இந்த கருத்துவேற்றுமைகள் தடையாக இருக்கவில்லை. சில விடயங்களில் கருத்து வேற்றுமைகொள்வதை விட மார்க்கத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்குவது மிக மோசமானது என்பதை அவர்கள் புரிந்துவைத்திருந்தார்கள். 

உஸ்மான் (றழி) அவர்கள் மினாவிலே நான்கு றக்அத் தொழுகையை சுருக்காமல் முழுமையாக தொழுதார்கள். இதை ஆட்சேபித்த இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் 'நான் நபியவர்களுடனும் அபூபக்ர், உமர் (றழி) ஆகியோருடனும் மினாவிலே இரண்டு றக்அத்களாக சுருக்கியே தொழுதிருக்கிறேன்' என்று கூறி விட்டு உஸ்மான் (றழி) அவர்களுடன் நான்கு றக்அத்துகளே தொழுதார்கள். அப்போது அவர்களிடம் 'உஸ்மான் (றழி) அவர்களின் செயலை ஆட்சேபித்துவிட்டு அவரைப் பின்பற்றி நான்கு றக்அத் தொழுதீர்களே?' என்று கேட்கப்பட்ட போது இப்னு மஸ்ஊத் அவர்கள் 'கருத்து முரண்பட்டு பிரிவது மிகக்கெட்டதாகும்' என்று கூறினார்கள் (அபூதாவூத்). இதே போன்றதொரு சம்பவம் அபூதர் (றழி) அவர்கள் மூலமாகவும் ஆதாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது (அஹ்மத்).

தமது கருத்து நிலைப்பாட்டுக்கு மாற்றமாக சில மஸ்ஜித்களின் இமாம்கள் தொழுகை நடத்துகிறார்கள் என்பதற்காக அவர்களை பின்பற்றி தொழாமல் பிரிந்து நிற்பவர்களும்,  முஸ்லிம்களின் கூட்டமைப்பை விட்டொதுங்கி, அவ்வாறு ஒதுங்குவது பற்றி சற்றும் பொருட்படுத்தாமல்,  தனித்து நோன்பு நோற்று தனித்து பெருநாள் கொண்டாடுவோரும் மேற்படி ஸஹாபாக்களின் செயற்பாடுகளையும் அவர்களது மார்க்க அறிவின் விசாலத்தையும் புரிந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறார்கள். மார்க்கம் பற்றிய தமது  அறியாமைக்கும் ஏமாற்றத்திற்கும் சிறந்த தீர்வை ஸஹாபாக்களின் நடைமுறைகளில் கண்டு அவர்கள் தெளிவடைந்துவிட்டால் தமது சகோதர முஸ்லிம்களுடன் இணைந்திருப்பதற்கு பின்னிற்கமாட்டார்கள்"

நூல் : 'ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அஸ்ஸஹீஹா', 1/443-445


குறிப்பு: சுருக்க குறிப்புகள் :
-----------------------------
1. கருத்து வேற்றுமை உள்ள விடயங்களில் சமூகத்தை விட்டு பிரிவது, மாற்றுக் கருத்தாளர்களையும் வழிகேடர்களாக சித்தரிப்பது ஹவாரிஜ்களின் பண்பாகும்.

2. ஒருகாலத்தில் சர்வதேசப் பிறை மட்டுமே சரியானது, மற்றதெல்லாம் வழிகேடு என்று தீர்ப்பு வழங்கியவர்கள் இன்று அதை இஜ்திஹாத் சார்ந்த விடயம் என்று ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. இன் ஷா அல்லாஹ் காலப் போக்கில் பிறை விடயத்தில் ஒரு தலைவருக்கோ, பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சபைக்கோ கட்டுப்பட வேண்டுமென்ற மார்க்க சட்டமும் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனாலும் இக் கருத்தை ஏற்று ஜீரணிப்பதற்கு இன்னும் காலம் எடுக்கலாம்.

3. முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இலங்கையில் கலீபா/இமாம்/ஹாகிம் என்பன போன்ற ஏற்பாடுகள் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மாற்று ஏற்பாடுகள் குறித்து சிந்திக்கவேண்டும். இவ்வேளையில்தான் பல மார்க்க விடயங்களுக்காக மிகப் பெரும்பான்மை முஸ்லிம்களால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரபூர்வ அமைப்பாக இருப்பது ஜம்இய்யதுல் உலமா ஆகும். பிறை கொமிட்டியில் ஜம்இய்யதுல் உலமாவின் பிரசன்னமும் பங்களிப்பும் மிக அதிகமானது என்பது விடயமறிந்தோருக்கு நன்கு தெரியும்.

4. பிறை பார்த்த சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளவோ, அல்லது மார்க்க ரீதியான அல்லது விஞ்ஞானபூர்வமான காரணங்களின் அடிப்படையில் மறுக்கவும் பிறைக் குழுவுக்கு மார்க்க ரீதியான அதிகாரம் உண்டு. தக்க காரணங்களோடு பிறை சாட்சியம் மறுக்கப்பட்டால் அதற்குக் கட்டுப்பட வேண்டியது பொது மக்களின் கடமை. 

6. பிறைக் குழு வேண்டுமென்று பிழை செய்திருந்தால் அல்லாஹ்விடம் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். அதை விடுத்து பிறை குழுவினர் மனோ இச்சைப்படி செயற்பட்டார்கள் என்று பல நூறு மைல்களுக்கப்பால் இருந்துகொண்டு ஒருவர் உள்ளத்தை பிளந்து பார்த்தது போன்று கூற முடியாது. 

5. பிறை விடயத்தில் தனிநபர்கள் சட்டத்தை கையிலெடுக்கவோ, எதேச்சதிகாரமாக பிரகடனம் செய்யவோ முடியாது.

6. பிறைக்குழுவிடம் தவறுகள் காணப்பட்டால் அவற்றை திருத்தி சிறப்பாக செயற்பட முயற்சிக்க வேண்டும். சிறு தவறுகளை காரணம் காட்டி அவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டுப்பாட்டை முழுமையாக நீக்கிக்கொள்வது கூடாது.
Previous Post Next Post