ரமழான் மாதத்திற்காக ஷஃபானில் சில உபதேசங்கள்

தொகுப்பு: றஸீன் அக்பர் மதனி
அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக.

பலவிதமான பாக்கியங்கள் பெற்ற ரமழான் மாதத்தை ஒவ்வொரு முஸ்லிமும் நபியவர்கள் காட்டித்தந்த விதத்தில்; பயன்படுத்துவதினூடான அதன் ழுமுமையான பயனை பெற்றுக் கொள்ளலாம். அந்த அடிப்படையில் ஷஃபான் மாதத்தை சிறப்பாக பயன்படுத்துவதினூடகவே அந்த பாக்கியத்தை அடைந்து கொள்ளலாம். எனவே, இந்த ஷஃபான் மாதத்தை ரமழானுக்காக வேண்டி எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சில விடயங்களைப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்

1- அல்லாஹுத்தஆலாவிடம் அதிகமதிகம் பிரார்த்திக்க வேண்டும் : 
ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘யார் ரமழானில் நம்பிக்கையுடனும் , நன்மையை எதிர் பார்த்தவர்களாகவும் நின்று வணங்குகிறார்களோ அவர்களின் முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.’ (புஹாரி, முஸ்லிம்)

மேலும் கூறினார்கள் : ‘யார் லைலதுல் கத்ர் இரவில் நம்பிக்கையுடனும் , நன்மையை எதிர் பார்த்தவர்களாகவும் நின்று வணங்குகிறார்களோ அவர்களின் முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.’ (புஹாரி, முஸ்லிம்)

இந்த லைலதுல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கின்றது.

எனவே, நம்வாழ்வில் நம்மை அறிந்தும் அறியாமலும் எத்தனையோ பாவங்களை நாம் செய்திருப்போம். ஆதலால் இந்த ரமழானை அடைந்து அதிலே நின்று வணங்குவதுடன் அதிலே லைலதுல் கத்ர் இரவை அடைந்து எம்பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக ஆகுவதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

2- அதிகமான நல்ல விடயங்களை செய்ய உறுதிபூண்டுதல் : 
ஏனெனில், இதுதான் நம் வாழ்வில் சந்திக்கக் கூடிய இறுதி ரமழானாக இருக்கலாம். எனவே, அதிலே அல்லாஹ்வுக்கு விருப்பமான, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த நல்ல விடயங்களை அதிகமதிகம் செய்ய உறுதியான எண்ணத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.

3- தூய மன்னிப்பை அல்லாஹ்விடம் வேண்டுதல்: 
மனிதர்களைப் பொருத்தவரைவில் அவர்கள் அடிப்படையிலே பாவங்கள் செய்யக்கூடியவர்கள். இதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : ‘ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே, அவர்களில் சிறந்தவர்கள் யாரென்றால் பாவமன்னிப்பு கேட்பவர்களே’ (இப்னுமாஜா-4251)

நாம் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலைமையில் அவனிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவன் எங்கள் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.

அல்லாஹுத்தஆலா தன்திருமறையில் பின்வருமாறு கூறுகிறான் : ‘இன்னும், எவர் பாவத்தைச் சம்பாதிக்கின்றாரோ அவர் அதனைச் சம்பாதிப்பதெல்லாம் நிச்சயமாகத் தனக்குக் கேடாகவே (தான்). இன்னும், அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிகிறவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.’ (அந்நிஸா:111)

‘விசுவாசிகளே! கலப்பற்ற தவ்பாவாக அல்லாஹ்வின்பால் நீங்கள் தவ்பாச் செய்யுங்கள். (அவ்வாறு நீங்கள் செய்தால் தன்னுடைய) நபியையும், அவருடன் விசுவாசங் கொண்ட வர்களையும் அல்லாஹ் இழிவுபடுத்தாத நாளில், உங்கள் இரட்சகன் உங்கள் பாவங்களை உங்களை விட்டும் போக்கி (மன்னித்து)ச் சுவனத்திலும் உங்களை பிரவேசிக்கச் செய்யப்போதுமானவன்.’ (அத்தஹ்ரீம்:08)

எனவே, நாம் அல்லாஹ்விடம் கலப்படமற்ற தூய முறையில் எமது பாவங்களுக்கான மன்னிப்பை வேண்டுவோம். ஏனெனில், முன்-பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் அவர்களே அதிகமாக பாவமன்னிப்பு வேண்டுபவர்களாக இருந்தார்கள்.

இதனைப்பற்றி இப்னு உமர் (றழி) அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அமர்வில் (மஜ்லிஸில்) நூறு தடவைகள் ‘ரப்பிஃ பிர்லீ வதுப் அலய்ய இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம்’ என்று கூறுவதை நாங்கள் எண்ணுவதாக இருந்தால் எண்ணக்கூடியவர்களாக இருந்தோம். (அபூதாவூத் – 1518)

மேலும், அல்லாஹுத்தஆலா தன்னிடம் பாவமன்னிப்பு கேட்கும் அடியானை அதிகம் விரும்புகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) அன்ஹு அவர்கள் கூறினார்கள். இதற்கு ஒரு சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உதாரணமாக கூறினார்கள் :

‘ஒரு மனிதன் பாலைவனத்தில் தன் ஒட்டகத்துடன் பயணித்துக் கொண்டிருக்கும் வேலையில் ஒரு இடத்தில் இழைப்பாருவதற்காக ஒதுங்கி உறங்குகிறான். பின்னர் அவன் கண்விழித்து பார்க்கின்றபோது அவனது கட்டுச்சாதணங்களுடன் ஒட்டகத்தை காணவில்லை. எனவே, அவன் அதனை தேடலானால் அதனால் அவன் மிகவும் (கலப்படைந்து) தாகம் ஏற்பட்டுவிட்டது, பின்னர், அவன் உறங்கிய இடத்திற்கு திரும்பிச் சென்று மீண்டும் உறங்கினான். சிறிது நேரத்தின்பின் கண்விழித்து பார்க்கையில் அவனது ஒட்டகம் கட்டுச்சாதணங்களுடன் அவன் முன் காட்சியளிக்கின்றது. இதன் மூலம் ஏற்பட்ட மகிழ்சியின் காரணமாக (தன்னையறியாமலே) யா அல்லாஹ்! நீ தான் என்னுடைய அடிமை நான் உனது (ரப்பு) எஜமான் என்று மாற்றி கூறிவிட்டான். அல்லாஹ்வோ இந்த மனிதனை விட மிகமிக அதிகமாக தன்னுடைய முஃமினான அடியான் ஒருவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கேட்கும்போது சந்தோஷமடைகிறான்.’ (முஸ்லிம்)

எனவே, நாம் இந்த ஷஃபான் மாதத்தில் அல்லாஹ்விடம் பாவங்களை மன்னிக்கக்கோரி, ரமழான் மாதத்தை பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியார்களாக நுழைவோம்.

4- ஐவேளைத் தொழுகைகளை ஆரம்பத் தக்பீருடன் கூட்டாக (ஜமாஅத்தாக)த் தொழுவதை பேணுதலாக்கிக் கொள்வோம் :

அல்லாஹுத்தஆலா தன்திருமறையில் பின்வருமாறு கூறுகிறான் : ‘(ஐவேளைத்) தொழுகைகளையும், (குறிப்பாக அஸர் தொழுகையாகிய) நடுத் தொழுகையையும் (விடாமல் தொழுது) பேணிக்கொள்ளுங்கள். மேலும், (தொழுகையில்) அல்லாஹ்வுக்கு (ப் பயந்து) பணிந்தவர்களாக நில்லுங்கள்.’ (அல்பகரா: 238)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் : ‘நிச்சயமாக தொழுகை என்பது முஃமீன்களின் மீது நேரம் குறிப்பிடப்பட்ட கடமையாக இருக்கின்றது.’ (அந்நிஸா : 103)

5- ஐவேளைத் தொழுகைகளுக்கு முன் – பின் இருக்கின்ற சுன்னத்துத்தொழுகைகளை பேணித்தொழுதல் :

நாம் உலகில் நமக்கென்று சிறியதொரு வீடொன்றை கட்டவேண்டும் என்றால் வாழ்நாளில் அதிகமான நாட்களை செலவளிக்க வேண்டியர்வகளாக இருக்கின்றோம். அதற்காக முதலில் அதற்குரிய காணியொன்றை வாங்கி, பிறகு அதிலே வீட்டுக்குரிய வரைபடைத்தை வரைந்து, பின்னர் வீடுகட்டுமானப்பணிகளை ஆரம்பித்து அதனை நிறைவு செய்கின்ற போது எமது வயதோ 60ஐயும் தாண்டிச் சென்றிருக்கும்.

ஆனால், ஐவேளைத் தொழுகைகளுக்கு முன் – பின் இருக்கின்ற சுன்னத்துத் தொழுகைகளை பேணித்தொழுவதினூடாக எந்தவித சிறமமுமின்றி நாளை மறுமையில் சுவனத்தில் வீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உம்மு ஹபீபா (றழி) அன்ஹா அவர்கள் கூறினார்கள் : ‘ஒரு முஸ்லிமான அடியான் ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகைகளைத் தவிர கூடுதலாகப் பன்னிரெண்டு ரக்ஆத்துக்கள் தொழுதால் அவருக்காக அல்லாஹ் சொர்கத்தில் ஓரு வீட்டை கட்டுகிறான் அல்லது அவருக்காகச் சொர்க்கத்தில் ஓரு வீடு கட்டப்படுகிறது.’ (முஸ்லிம் – 1321)

அந்த பன்னிரெண்டு ரக்ஆத்துக்களாக : சுபஹ் தொழுகைக்கு முன் 02 ரக்ஆத்துக்கள், லுஹர் தொழுகைக்கு முன் 04 மற்றும் பின் 02 ரக்ஆத்துக்கள் , மஃரிப் தொழுகையின் பின் 02 ரக்ஆத்துக்கள், இஷா தொழுகையின் பின் 02 ரக்ஆத்துக்கள் என்று மொத்தமாக 12 ரக்ஆத்துக்கள்.

6- இம்மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்றல் : 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இம்மாதத்தில் அதிகமாக நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். இதனை ஆயிஷா (றழி) அன்ஹா அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் ‘நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும்.’ (புஹாரி, முஸ்லிம்)

மேலும், இம்மாதத்தில் அல்லாஹ்வின்பால் அமல்கள் எடுத்துக்காட்டப்படுகிறது. எனவே தான் நோன்பு நோற்ற நிலையில் தமது அமல்கள் எடுத்துக்காட்டப்படுவதை விரும்புவதாக நபியவர்கள் கூறியதாக உஸாமதிப்னு ஸைத் (றழி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : ‘அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள்.’ (அந்நஸாஈ)

எனவே, இம்மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்க முடியாவிட்டாலும் ஆகக்குறைந்தது தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகிய ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றல் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது திங்கள்-வியாழன் நாட்களில் நோன்பு நோற்றல் அல்லது மாதத்தில் மூன்று நாட்கள் அதாவது பிறை 13, 14, 15 ஆம் நாட்களில் நோன்பு நோற்றல்.

7- அல்குர்ஆனை அதிகமாக ஓதுதல் : 
ரமழான் மாதம் என்பது அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதமாகும். எனவே அம்மாதத்தில் அல்குர்ஆனுடனான தொடர்பை அதிகப்படுத்திக் கொள்வதற்காக வேண்டி இந்த ஷஃபான் மாதத்தை பயன்படுத்திக்கொள்ளல்.

ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்குர்ஆன் ஓதுவதின சிறப்பைப் பற்றிக்கூறும் போது இவ்வாறு கூறினார்கள் : ‘நீங்கள் அல்குர்ஆனை ஓதுங்கள், அது நாளை மறுமை நாளையில் அதனை ஓதியவருக்கு (ஷபாஅத்) பரிந்துரை செய்யக்கூடியதாக இருக்கும்.’ (முஸ்லிம்)

8- மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டிய கடன் தொகைகளை கொடுத்துவிடுதல் :

கடன் பிரச்சினை என்பது ஒருவரின் சந்தோஷத்தை இழக்கடிக்கச் செய்துவிடும். ஏனெனில், ஒருவரின் உள்ளம் எப்பொழுதும் கடனை நிறைவேற்ற வேண்டும் என்ற சிந்தனையிலேயே இருப்பதால் எந்த விடயத்தையும் சிறப்பாக செய்யக்கூடிய மனப்பாங்கு குறைவாக காணப்படும். ஆதலால் ரமழானை சிறப்பாக பயன்படுத்த சற்று சிரமமாக இருக்கும்.

எனவே, ஒவ்வொருவரும் தன்மீது மற்றவர்களுக்கு செலுத்த வேண்டிய கடன்களை இம்மாதத்திலேயே செலுத்திவிடுவதினூடாக உள்ளம் கவலைகளைவிட்டு சற்று ஓவ்வுபெறுகிறது. இதனால் ரழமானை சிறப்பாக பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் அமைகிறது.

9- சந்தர்ப்ப துஆக்களை உள்ளத்திற்கு எடுத்து நாவினால் ஓதிவருதல்: 
ஓவ்வொரு முஸ்லிமும் தன் அன்றாட வாழ்வில் அறிந்திருக்க வேண்டிய ஆதாரபூர்வமான சந்தர்ப்ப துஆக்களை அதன் சிறப்புகள் அறிந்து உள்ளத்திற்கு எடுத்து நாவினால் அச்சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப ஓதிவருதல்.

உதாரணமாக : ஐவேளைத் தொழுகைகளுக்கு பின் ஓதவேண்டியவைகள், காலை – மாலையில் ஓதவேண்டியவைகள், தூங்கச் செல்லும் முன் மற்றும் தூங்கி எழுந்ததும் ஓதவேண்டியவைகள், வீட்டைவிட்டு வெளியேறும் போது மற்றும் உள்நுழையும் போது ஓதவேண்டியவைகள் போன்ற இன்னும் எத்தனையோ சந்தர்ப்ப துஆக்களை அச்சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப ஓதிவருதல்.

குறிப்பு : மேற்கூறப்பட்ட விடயங்கள் ஷஃபான் மாதத்தில் மாத்திரம் செய்யக்கூடிய விடயங்கள் அல்ல மாறாக இவைகள் அனைத்தும் எம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய விடயங்களாகும். எனவே, இவைகளை எம்வாழ்வில் தொடர்ந்து கடைபிடிப்பதுடன் ஷஃபானிலும் செய்தினூடாக ரமழானை உற்சாகமாகவும் உள அமைதியுடனும் அடையலாம். அத்துடன் ரமழானை பிரயோசமுள்ளதாக பயன்படுத்தலாம். இன்ஷா அல்லாஹ்

யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே!

நாம் ரமழானை அடைந்து அதன் பகல் பொழுதுகளில் நோன்பை பூரணமாக பிடிக்கக்கூடியவர்களாகவும், அதன் இரவுகளை நின்று வணங்கக்கூடியவர்களாகவும், ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலதுல் கத்ர் இரவில் அமல்கள் செய்யக்கூடியவர்களாகவும், ரமழான் நிறைவடைகின்றபோது பாவங்கள் மன்னிக்கப்பட்ட பாக்கியம் பெற்ற அடியார்களாகவும் வல்லவன் அல்லாஹுத்தஆலா நம் அனைவரையும் ஆக்கியருள் புரிவானாக!

Previous Post Next Post