அப்துல்அஸீஸ் ஆலு ஷேக் 1943 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி மக்காவில் பிறந்தார். அவருக்கு எட்டு வயதாக இருந்தபோது அவரது தந்தை காலமானார். அவரது தந்தையின் மரணத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் முஹம்மது பின் சினான் என்பவரிடம் குர்ஆனை மனனம் செய்தார்.
அப்துல்அஸீஸ் ஆலு ஷேக் சிறுவயதிலேயே தந்தையை இழந்து அனாதையாகி, குர்ஆனை மனனம் செய்தார். இருபது வயதிலேயே அவருக்கு கண்பார்வை பறிபோனது. அவர் சவூதி அரேபியாவின் முன்னாள் தலைமை முஃப்தி முஹம்மது பின் இப்ராஹிம் ஆலு ஷேக்கிடம் ஷரீஆ சட்டங்களை கற்றார். தனது வாழ்க்கையை கற்பித்தல், பல்கலைக்கழகங்களின் மார்க்க குழுக்களில் உறுப்பினராக இருப்பதன் மூலம் தொடங்கினார். அவர் ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மஸ்ஜிதின் ("பெரிய மஸ்ஜித்") கதீப்புமாவார். மேலும், அவர் நம்ரா மஸ்ஜித்தின் மிகவும் பிரபலமான கதீப்களில் ஒருவர். ஃபத்வாக்கள், அகீதா, ஹலால் மற்றும் ஹராம் சட்டங்கள் உட்பட பல ஷரீஆ சட்டப் புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சந்தர்ப்பங்களில் அவர் அளித்த ஃபத்வாக்கள் தொகுக்கப்பட்டு, புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
அப்துல்அஸீஸ் ஆலு ஷேக், ஆறு ஆண்டுகளாக சவூதி அரேபியாவின் முஃப்தி முஹம்மது பின் இப்ராஹிம் ஆலு ஷேக்கிடம் "கிதாப் அல்-தவ்ஹீத்", "அல்-உசூல் அல்-சலாதா" மற்றும் "அல்-அர்பயீன் அல்-நவவியா" ஆகியவற்றைக் கற்றார். சவூதி அரேபியாவின் முன்னாள் முஃப்தி அப்துல்அஸீஸ் பின் பாஸ் அவர்களிடமிருந்து ஷரீஆ கல்வியை கற்றார். மேலும், அப்துல்அஸீஸ் பின் சலே அல்-முர்ஷித் என்பவரிடமிருந்து இலக்கணம், ஷரீஆ கல்வி மற்றும் தவ்ஹீத் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.
அப்துல்அஸீஸ் அல்-ஷத்ரி என்பவரிடமிருந்து "உம்தத் அல்-அஹ்காம்" மற்றும் "சாத் அல்-முஸ்தன்கா" ஆகிய நூல்களைப் கற்றார். ரியாத்தில் உள்ள இமாம் அல்-தாவா கல்வி நிறுவனத்தில் தனது படிப்பைத் தொடங்கினார். அதன் பிறகு, இமாம் முஹம்மது பின் சவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்துக்குரிய ஷரீஆ பீடத்தில் சேர்ந்து, 1964-1965 கல்வியாண்டில் அரபி மற்றும் ஷரீஆ துறையில்பட்டம் பெற்றார்.
1965 ஆம் ஆண்டில், அப்துல்அஸீஸ் ஆலு ஷேக் ரியாத்தில் உள்ள இமாம் அல்-தாவா கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். எட்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். பின்னர், 1979 இல் இமாம் முஹம்மது பின் சவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்துக்குரிய ரியாத்தில் உள்ள ஷரீஆ பீடத்தின் உதவிப் பேராசிரியராகவும், 1980 இல் இணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். கூடுதலாக, ரியாத்தில் உள்ள உயர் நீதித்துறை நிறுவனத்திலும் கற்பித்தல் பணியை மேற்கொண்டார். அவர் சவூதி பல்கலைக்கழகங்களின் பல கல்வி/ அறிவு சார் குழுக்களில் உறுப்பினராக திகழ்ந்தார்.
1969 ஆம் ஆண்டில் முஹம்மது பின் இப்ராஹிம் வபாத்தான பிறகு, அப்துல்அஸீஸ் ஆலு ஷேக் ரியாத்தில் உள்ள ஷேக் முஹம்மது பின் இப்ராஹிம் மஸ்ஜித்தில் இமாமத் மற்றும் குத்பா (பிரசங்கம்) பொறுப்பை ஏற்றார். அடுத்த ஆண்டு ஷேக் அப்துல்லா பின் அப்துல் லத்தீஃப் மஸ்ஜித்தில் வெள்ளிக்கிழமை குத்பா பொறுப்பை ஏற்றார். பின்னர், இமாம் துர்கி பின் அப்துல்லா மஸ்ஜித்தின் இமாமாகப் பொறுப்பேற்றார். சொற்பொழிவுகள், விரிவுரைகள் மற்றும் வானொலி மற்றும் தொலைக்காட்சி மார்க்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று பெரும் பங்களிப்பைச் செய்தார்.
1982 ஆம் ஆண்டில், அவர் அரஃபாத்தில் உள்ள நம்ரா மஸ்ஜித்தின் இமாம் மற்றும் குத்பா செய்வதற்கு நியமிக்கப்பட்டார். 1987 இல், அவர் மூத்த அறிஞர்கள் குழுவில் உறுப்பினரானார். 1991 இல், அவர் நிரந்தர ஆய்வுக் குழு மற்றும் ஃபத்வா குழுவில் முழு நேர உறுப்பினரானார்.
1995 ஆம் ஆண்டில், அவர் சவூதி அரேபியாவின் தலைமை முஃப்தியின் துணைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், முன்னாள் முஃப்தி அப்துல்அஸீஸ் பின் பாஸ் இறந்த பிறகு, 1999 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி, அவர் சவூதி அரேபியாவின் தலைமை முஃப்தியாகவும், மூத்த அறிஞர்கள் குழுவின் தலைவராகவும், ஃபத்வா வழங்கும் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
ஷெய்க் அவர்கள் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் (செப்டம்பர் 23, 2025) தனது 82வது வயதில் மரணமடைந்தார்கள். இது உம்மத்திற்கு ஒரு பேரிழப்பாகும். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.