சூரா அல் ஹதீதின் ஆரம்ப பகுதி

குர்’ஆனிலேயே மிகவும் சுவாரஸ்யமான சூராக்களில் ஒன்று சூரத்துல் ஹதீத், குர்’ஆனின் 57ஆவது சூரா. இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அல்லாஹ் (சுபஹ்) தன்னை அறிமுகப்படுத்துவது போல, தன்னைப்பற்றி, தன்னுடைய பெயர்கள் மற்றும் தன்மைகளைப் பற்றி பேசுவது தான்.

பல சிறு சூராக்களைப் போல், முஸ்லிம் அல்லாதவர்களை எண்ணி இறங்கிய சூரா என்றால் புரிந்து கொள்ளலாம்.. ஆனால், இந்த சூரா, நபி (ஸல்) அவர்களுடைய வாழ்வின் பிற்பகுதியில், ஏற்கனவே நிறைய முஸ்லிம்கள் இருக்கும் மதினாவுக்கு அவர்கள் ஹிஜ்ரத் செய்து வந்த பிறகு இறங்கியது.
இந்த சூரா, விசுவாசிகளுக்குக் கூட சில சமயங்களில் நினைவூட்டல் தேவைப்படுகிறது என்பதை காட்டுகிறது. விசுவாசிகளுக்கு கூட அவர்கள் வாழ்வில் சிரமமான நிலைகளில், ஈமான் குறையக் கூடும். இந்த சூரா, அவர்கள் யாரை வணங்குகிறார்கள், அவர்களுடைய கவனம் யார் பக்கம் திரும்ப வேண்டும், என்பதை நினைவூட்டுகிறது.

வாழ்க்கைப் பயணத்தில், சில சமயம், எளிதாக அல்லாஹ்வை மறந்து, நம் வாழ்வின் இறுதியான நோக்கம் என்ன, அல்லாஹ்விடம் தான் நாம் போய் சேர வேண்டும் என்பதில் கவனமில்லாமல் போய் விடக்கூடும். இந்த சூரா எல்லா நினைவுகளையும் மீட்டுத்தருகிறது. இது அல்லாஹ்வின் மீது நமக்குள்ள நம்பிக்கையை புதுப்பிக்கிறது! இன் ஷா அல்லாஹ், இந்த சிறு கட்டுரையில் இச்சூராவின் முதல் 6 வசன்ங்களைப் பார்ப்போம்.

1 வானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன – அவன் (யாவரையும்) மிகைத்தோன்; ஞானம் மிக்கவன்.

அல்லாஹ் (சுபஹ்) பிரபஞ்சம் முழுதும், விலங்குகள், பறவைகள், இன்னும் மற்ற எல்லா படைப்புகளும் எப்படி அல்லாஹ்வை வணங்குகின்றன என்று தொடங்குகிறான். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருக்கின்றன. அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன் என்பதை, புகழுதல் உறுதிப்படுத்துகின்றன

அல்லாஹ் தான் எல்லா குறைகளை விட்டும் தூய்மையானவன் என்பதை நமக்கு நினைவூட்டுகிறான், மேலும், வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா படைப்புகளும் அதற்கு சாட்சியளிக்கின்றன. படைப்புகள் அனைத்தும் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன, ஏனென்றால், அது தான் அவர்கள் படைப்பின் நோக்கம்.

அல்லாஹ்வை வணங்குவதன் நோக்கத்தை நாம் நிறைவேற்றுகிறோமா? அவன் தான் யார் – யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன் என்பதை நமக்கு நினைவூட்டுகிறான். அவன் ஆற்றல் மிகுந்தவன், முடிவெடுப்பதில் ஞானம் மிக்கவன். அவன் கண்ணியம் நிறைந்த, யாவரையும் மிகைத்தவன், அவனுடைய முடிவுகளை எடுப்பதிலும், விதிப்பதிலும் அவன் ஞானமிக்கவனாக இருக்கிறான். நடப்பவை அனைத்தும் அவனுடைய ஞானத்தில் ஒரு பகுதி தான்.

2 வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அவனே உயிர்ப்பிக்கிறான்; மரிக்கும் படியும் செய்கிறான் – மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

அவன் விசுவாசிகளுக்கு தான் யாரென்பதை மேலும் நினைவூட்டுகிறான். அல்லாஹ் யாரென்பதை மனிதர்களாகிய நாம் பார்க்கத் தவறி விடுகிறோம் போல் தோன்றுகிறது. அவன் எல்லா படைப்புகளாலும் புகழப்படுகிறான், அவன் யாவையும் மிகைத்தவன், ஞானம் மிகுந்தவன், என்பதையெல்லாம் குறிப்பிட்டு விட்டு, அவன் வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி அதிகாரம் அவனிடமே உள்ளது என்பதை நமக்கு நினைவூட்டுகிறான். நாம் எதனால் நம் வழியைத் தொலைத்து, அல்லாஹ்வை விட்டு விலகி, அதனால் ஈமான் தாழ்வாகி இருக்கிறோமோ, அது உண்மையில் அவனுடைய கைகளில் தான் இருக்கிறது.

அவன் வாழ்வையும், மரணத்தையும் தருகிறான். அவன் நமக்கு வாழ்வளித்திருக்கிறான், அதை எடுத்துக் கொள்வதற்கு அவனுக்கு சக்தியுள்ளது. அவன் இறந்து கிடக்கும் பூமிக்கு உயிரளிக்கிறான். அவனால் இறந்து கிடக்கும் இதயங்களுக்கும் உயிரளிக்க முடியும். செயல்படுவதற்கு, மரணம் தான் ஒரு சக்தி வாய்ந்த நினைவூட்டல். அல்லாஹ் அவன் தான் மரணமடையச் செய்பவன், இவ்வாழ்வி நிரந்தரமானதல்ல என்பதை நினைவூட்டுகிறான். மேலும், அவனுக்கு எல்லாவற்றின் மீதும் ஆற்றல் உள்ளது. அவன் நாடியதெல்லாம் நடக்கும். அல்லாஹ் நம் பக்கத்தில் இல்லாவிட்டால் நம் நிலை எப்படி இருக்கும்?

3 அவன் ஆரம்பமானவன்; அவனே இறுதியானவன்; அவன் மேலானவன்; அவன் அந்தரங்கமானவன்; மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.

வேறெதுவும் இல்லாமல் இருந்தபோது, அவன் தான் முதலில் இருந்தவன், அவன் தான், படைப்புகள் அனைத்தும் அழிந்த பின்னும் இருக்கப்போகும் இறுதியானவனும் கூட. அதே போல், நம் வாழ்வில் நாம் எது செய்வதாக இருந்தாலும், அவன் தான் முதன்மையானவனாக இருக்க வேண்டும். அதன் மூலம், நாம் இறக்கும் போது, அவன் தான் இறுதியில் நம் மனதிலும், உதடுகளிலும் இருப்பான். நம் செயல்கள் அனைத்திலும் அல்லாஹ்வை முதலில் கொண்டு வருவது நம்முடைய கடமை, அதனால், இறுதியானவனான அவன் நம்முடைய இறுதி இருப்பிடம் சுவனம் என்பதை உறுதியாக்குவான்.!

இருக்கும் இடத்தாலும், அந்தஸ்த்தினாலும் அவனே மேலானவன். அவனுக்கு மேலால் அதிகாரமிக்கோர் யாருமில்லை. அவன் அந்தரங்கமானவன், மறுமையில் கூட தான் நாடிய அளவே தன்னை முஃமீன்களுக்கு வெளிப்படுத்திக் காண்பிப்பான், அவனுடைய அந்தரங்கங்களை முழுமையாக யாராலும் அறிந்திட முடியாது, அந்தரங்கத்திலும் அவன் பரிசுத்தமானவன், அவனுடைய அந்தரங்கள் அனைத்தும் சங்கையானவை கண்ணியமிக்கவை, இவ்வுலகில் சோதனைக்காக அவனைப் பார்ப்பதிலிருந்து  நாம் மறைக்கப்பட்டுள்ளோம், அவனை நாம் இவ்வுலகில் காண முடியாது. ஆனால், அவன் மறைவாக இருப்பதால், நாம் விரும்பியதெல்லாம் செய்யலாம் என்பது அர்த்தமல்ல, ஏனென்றால், அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்!

4 அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் – அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.

அவன் எல்லாவற்றையும் படைத்தான். நாம் பார்ப்பவற்றை, நாம் பார்க்காதவை அவனுடைய கைகளில் உள்ளன. அவன் தன்னை அர்ஷில் அமைத்துக் கொண்டான். சக்தி, ஆட்சி, அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. பூமிக்குள் என்ன நுழைகிறது என்பதையும், என்ன செயல்கள் நம்மால் செய்யப்படுகின்றன என்பதையும், பூமியிலிருந்து வெளியாகுபவற்றையும் அவன் நன்கறிவான்.

நமக்கு என்ன நடக்கிறது என்பதையும் அவன் அறிவான். நாம் எங்கிருந்தபோதிலும் அவன் நம்முடன் இருக்கிறான், நாம் செய்வதையும் பார்க்கிறான். இது ஒரு ஊக்கம் தரக்கூடிய வசனம் மட்டுமல்ல, அச்சமூட்டக்கூடியதும் ஆகும். நாம் செய்யும் எல்லா பாவங்களையும், நம்முடைய குறைகள் அனைத்தையும் அவன் அறிகிறான் என்பது அச்சமூட்டக்கூடியதாக இருக்கிறது. நம்முடைய எல்லா முயற்சிகளிலும் நமக்கு உதவியளிக்க அவன் இருக்கிறான் என்பது ஊக்கம் தருகிறது. யாரும் பார்க்காவிட்டாலும், நாம் எத்தனை முயற்சி எடுக்கிறோம் என்பதை அவன் அறிவான்.

5 வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்.

எல்லாவற்றின் கட்டுப்பாடும் அவன் கைகளில் உள்ளது என்பதை அவன் மீண்டும் நினைவூட்டுகிறான். இறுதியில் அனைத்தும் அவனிடமே மீண்டு வருகின்றன. நாமும் அவனிடம் தான் திரும்ப வேண்டும். அந்த பயணத்தில் நாம் எதை எடுத்துக் கொண்டு செல்லப் போகிறோம்?

6 அவனே இரவைப் பகலில் புகுத்துகின்றான்; இன்னும் பகலை இரவில் புகுத்துகின்றான் – அவன் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் நன்கறிந்தவன்.

அவன் இரவையும், பகலையும் மாறி, மாறி வரச் செய்கிறான். நாம் மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும், ஏராளமான தவறுகள் செய்திருந்தாலும், இன் ஷா அல்லாஹ், நாம் அதை மாற்ற முடியும். அவனால், இரவை பகலாக மாற்ற முடியும்போது, நம் உள்ளத்தின் நிலையையும் மாற்ற முடியும். ஏனென்றால், ஒவ்வொரு இதயத்திலும் என்ன இருக்கிறது என்பதை மிகச் சரியாக அவன் அறிந்துள்ளான்.

இந்த மிக அழகிய முன்னுரைக்குப் பின், அவன் ஒரு கட்டளை இடுகிறான். அதனுடன் நாம் இந்த கட்டுரையை முடிக்கிறோம்.

“நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்; ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது.” (அல் குர்’ஆன் 57:7)
Previous Post Next Post