ஜக்காத் கொடுப்பவர்கள் யார்?

 ஜகாத் கொடுப்பது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதாகும்!

“இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்” (அல்-குர்ஆன் 2:110)

தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்! இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்! அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்! நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்! அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்” (அல்-குர்ஆன் 73:20)

ஜக்காத் கொடுத்தால் இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது!

“யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 2:277)

மறுமையை நம்பாதவர்களே ஜக்காத் கொடுக்க மாட்டார்கள்!

” இணை வைப்போருக்குக் கேடுதான்’ என்று (நபியே!) நீர் கூறும். அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள்! மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!”(அல்-குர்ஆன் 41:7)

மறுமையை உறுதியாக நம்புபவர் தான் ஜக்காத் கொடுப்பார்கள்! 

“(அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்! இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்! அன்றியும், அவர்கள் மறுமை வாழ்வின் மீது திட நம்பிக்கை கொள்வார்கள்” (அல்-குர்ஆன் 27:3)

“அவர்கள் (எத்தகையோரென்றால்) தொழுகையை நிலை நாட்டுவார்கள்! ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்! இன்னும் அவர்கள் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள்” (அல்-குர்ஆன் 31:4)

ஜக்காத் கொடுப்பவர்கள் தான் மார்க்கத்தில் சகோதரர்கள் ஆவார்கள்!

“ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே! நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்” (அல்-குர்ஆன் 9:11)

தங்கம் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவர்களுக்கான தண்டணைகள்!

” எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) ‘இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்’ (என்று கூறப்படும்)” (அல்-குர்ஆன் 9:35)

கழுத்தில் போடப்படும் அரிகண்டம்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : “யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய புதையல்” என்று கூறும்” இதைக் கூறிவிட்டு,

‘அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.” என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

ஜக்காத் கொடுப்பவர்கள் கல்வியில் உறுதியுடையோரும், இறை நம்பிக்கையுடையோரும் ஆவார்கள்!

“எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்! இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும், அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் – அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்” (அல்-குர்ஆன் 4:162)

ஜக்காத் கொடுப்பவர்களே மஸ்ஜிதுகளை நிர்வகிக்க தகுதியுடையோராவார்கள்!

“அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் – இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்” (அல்-குர்ஆன் 9:18)

ஜக்காத் கொடுத்தால் கிருபை செய்யப்படுவீர்கள்!

“(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்! மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்” (அல்-குர்ஆன் 24:56)

அல்லாஹ்விடத்தில் பெருகும் செல்வம்!

“(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்” (அல்-குர்ஆன் 30:39)

ஜக்காத் யாருக்கு கொடுக்க வேண்டும்?

“(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்” (அல்-குர்ஆன் 9:60 )

أحدث أقدم