“மக்கள்” என்ற சொல்லுக்கு குர்’ஆன் பயன்படுத்தும் 4 பொதுவான பெயர்கள்

அல்லாஹ் ﷻ நமக்கு குர்’ஆனை வழிகாட்டியாகவும், ஒரு அருளாகவும் தந்திருக்கிறான். அவன் நாம் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று மட்டும் சொல்லவில்லை, மாறாக பல நல்ல மற்றும் கெட்ட உதாரணங்களை நபிமார்கள் மற்றும் தவறிழைத்தவர்கள் வாழ்விலிருந்து நமக்கு சொல்லியிருக்கிறான். அவன் ﷻ சில தனிப்பட்ட குணங்களைக் கொண்ட குழுவினருக்கு சிறப்பு பெயர்களைக் கொடுத்திருக்கிறான். இதோ, மிகச்சிறந்த நான்கு உதாரணங்கள்:

1. அந்நாஸ்
அல்லாஹ் ﷻ எல்லா வகையான மக்களையும், எல்லா நிலைகளிலும், கருப்பு அல்லது வெளுப்பு, உயரம் அல்லது குட்டை, விசுவாசிகள் அல்லது நிராகரிப்பாளர்கள் அனைவரையும் இப்பெயரைக்கொண்டு அழைக்கிறான். உண்மையில், இது தான் அல்லாஹ் குர்’ஆனில் மக்களை அழைக்கும் முதல் அழைப்பில் இதைத்தான் பயன்படுத்தியுள்ளான்:

மனிதர்களே (யா அய்யுஹன்னாஸ்)! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.. [அல் குர்’ஆன், 2:21]

2. அல் காஃபிரூன்/அல்லஸீன கஃபரூ

நம்மில் பலருக்கும் காஃபிர் என்றால் யார் என்பதில் குழப்பம் உள்ளது. குர்’ஆனில் அது ‘முஸ்லிமல்லாதவர்கள்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை. அல்லாஹ் ﷻ கூறுகிறான்:
நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.. (அல் குர்’ஆன் 2:6)
அவர்கள் என்றுமே நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்றால், நபி ﷺ ஏன் அவர்களை இஸ்லாத்திற்கு அழைக்கும்படி கூறினார்கள்? ஏனென்றால், முஸ்லிமல்லாதவர்களுக்கிடையே, வருங்கால முஸ்லிம்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய மனங்களில் நம்பிக்கையின் விதைகள் உள்ளன. அவை வளர்வதற்கு சிறிது நீர் மட்டும் தேவைப்படுகிறது. இன்னும், வழிகாட்டுதலை அடைய முடியாத ‘நிராகரிப்பவர்கள்’ என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர்களும் இருக்கிறார்கள். ஆனால், நம்மால் உண்மையிலேயே யார் எப்படிப்பட்டவர் என்று புரிந்து கொள்ள முடியாது. அல்லாஹ் மட்டுமே அவர்கள் உள்ளங்களில் இருப்பதை அறிவான்.

3. உலுல் அல்பாப்

அல்லாஹ் ﷻ நம்முடைய அறிவைப் பயன்படுத்தும்படி உற்சாகப்படுத்துகிறான். கண்மூடித்தனமாக பின்பற்றுவதை ஆதரிக்கவில்லை. மற்ற மார்க்கங்களைப் போல் இஸ்லாம் வெறும் ஊகங்களின் அடிப்படையில் நிறுவப்பட்டதல்ல. நம் கண்களை மூடிக்கொண்டு நம்முடைய உணர்வுகளையே வழிகாட்டியாக பயன்படுத்த தேவையில்லை. மாறாக, குர்’ஆனில் மீண்டும், மீண்டும் நாம் அறிவுள்ளவர்களாக மாற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: ‘நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு (உளுள் அல்பாப்) திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.’. (அல் குர்’ஆன் 3:190)

நம்மைப் படைத்தவனின் இருப்பையும், அவனுடைய தன்மைகளையும் சுட்டிக்காட்டும் எண்ணற்ற அத்தாட்சிகளைப் பார்த்து, சாத்தியமான ஓரே முடிவை அடைவதற்கு வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்திக்கும்படி ’ (அல் குர்’ஆன் 3:191), கட்டளையிடப்பட்டுள்ளோம்.:

“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” . (அல் குர்’ஆன் 3:191)

4. அல் முத்தகூன்

நம்முடைய அறிவை பயன்படுத்தி, இஸ்லாம் தான் சத்தியமானது, அது மட்டுமே உண்மையான மார்க்கம், குர்’ஆன் உண்மையிலேயே அல்லாஹ்வுடைய பேச்சு, என்ற முடிவுக்கு வந்து விட்டோமென்றால், அதன் பிறகு, அது விதித்திருக்கும் வரம்புகளையும், நற்செய்திகளையும், எச்சரிக்கைகளையும் பற்றி கேள்வி கேட்பது மடமை. இப்போது, அல் முத்தகூன் ஆவதற்கான நேரம்.

அவர்கள்:
1. மறைவானவற்றை நம்புவார்கள்
2. தொழுகையை நிலைநாட்டுவார்கள்
3. அல்லாஹ் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து செலவு செய்வார்கள்
4. முஹம்மது நபி (ﷺ ) அவர்களுக்கு அருளப்பட்டதை நம்புவார்கள்
5. அதற்கு முன்னால் அருளப்பட்டவற்றையும் நம்புவார்கள்
6. மேலும், மறுமையைப் பற்றி அவர்கள் உறுதியாக நம்புவார்கள்
7. அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த வழிகாட்டுதலின் மேல் இருப்பார்கள்
8. மேலும் அவர்கள் தான் வெற்றியாளர்கள் (அல் குர்’ஆன் 2:3-5)
أحدث أقدم