குழந்தைகளிடம் பழிவாங்கும் எண்ணத்தை வளர்த்து விடாதீர்கள்

சிறு குழந்தைகளிடம் பழிவாங்கும் எண்ணத்தையும் அதன் மூலம் திருப்தியடையும் பண்பையும் வளர்த்து விடாதீர்கள். நம்மை அறியாமலே இது மலிந்துவிட்டது. நம்மில் யாரும் 'இதனுள் இவ்வளவு இருக்கிறதா!' என்று யோசிப்பதில்லை. 

பொறுங்கள் புரியும்.

குழந்தைகள் கீழ் விழுந்துவிட்டாலோ எதிலும் முட்டிவிட்டாலோ இடித்துக் கொண்டாலோ அல்லது யாராவது தெரியாமல் இடித்துக் காயப்படுத்திவிட்டாலோ, உடனே நாம் செய்வது, அந்தச் சுவரையும் தரையையும் மண்ணையும் கல்லையும் ஆட்களையும் அடிப்பது அல்லது அடிப்பது போன்று பாவனை செய்வது. இதைக் கண்டு அந்தக் குழந்தை திருப்தியடைந்து அழுகையை நிறுத்திவிடும் என்ற எண்ணம்தான். குழந்தையும் அதேபோல் நிறுத்திவிடுகிறது. 

ஆனால், நாம் எதை ஊட்டுகிறோம் என்ற கேள்விதான் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. பழிவாங்கி அதனைக் கொண்டு மகிழ்வடையும் குணத்தை நம்மை அறியாமலே திணித்துக் கொண்டிருக்கிறோம். 

இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நடக்குமாயின் "இனி பண்ண மாட்டாங்க... தெரியாம பண்ணிட்டாங்க... மன்னிச்சு விட்டுரலாம்... இவங்கள நம்ம மன்னிச்சா அல்லாஹ் நம்மல மன்னிப்பான்..." என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி குழந்தைகளை ஆற்றுப்படுத்த வேண்டும். 

சிறு சம்பவங்கள் ஏற்படுத்தும் மாற்றம் அளப்பரியதாக இருக்கும்.

-muhayyuddeen
Previous Post Next Post