அர் ரஹ்மான், அர் ரஹீம் என்பதன் விளக்கம்


بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

الرَّحْمَٰنِ الرَّحِيمِ

இம்மையில் அனைவருக்கும் அருள் புரியக்கூடியவன்.  மறுமையில் முஃமீன்களுக்கு மட்டும் அன்பு செலுத்தக் கூடியவன்.

இந்த வசனத்திற்கான விளக்கத்தை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்துள்ள அறிவிப்பை இமாம் அபூ ஜஅபர் முஹம்மது இப்னு ஜரீர் அத்தபரீ (றஹிமஹுல்லாஹ்) அவரது தப்ஸீர் தபரியில் ஸஹீஹான ஸனதுடன் பதிவு செய்துள்ளார்கள்.

ரஹ்மான் என்பது உலகில் அனைவருக்கும் அருள் புரியக்கூடியவன் என்பதாகும். ரஹீம் என்பது மறுமையில் முஃமீன்களுக்கு மாத்திரம் நிலையாக அன்பு காட்டி அருள் புரியக்கூடியவன் என்பதாகும்.

அர் ரஹ்மான்:

சூரதுல் பாத்திஹாவின் இவ்வசனம், நமக்கு பல அம்சங்களைக் கற்றுத் தருகிறது.  இவ்வுலகில் பலவகையான மனிதர்கள் இருக்கின்றனர்.  அதாவது, அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்து நடக்கின்ற அடியார்கள், அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற நிராகரிப்பாளர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு துரோகம் இழைக்கின்றவர்கள், மார்க்கத்தை பக்தியோடு பின்பற்றுகின்ற அடியார்கள் ஆகிய அனைவருக்கும் உலகில் அல்லாஹ் அருள் செய்கின்றான்.

செல்வம், அந்தஸ்து, பதவிகள் போன்ற அனைத்தையும், முஃமீன்கள் என்று, நிராகரிப்பவர்கள் என்று பாா்க்காமல், அனைவருக்கும் அல்லாஹ் அவனது நாட்டப்படி வழங்கி இருக்கின்றான்.  அவ்வாறு அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்த பின்னும், மனிதர்கள் தங்களிடம் இருப்பதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வதில்லை. இதன் காரணம், மனிதர்கள் இரட்சகனின் அருளுக்கு நன்றி கெட்டவா்களாக இருக்கின்றனா். அவ்வாறு மனிதர்கள் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே, ஒவ்வொரு தொழுகையிலும் அல் பாத்திஹாவை ஓதும் போது தன்னை ரஹ்மான் என்றும், ரஹீ்ம் என்றும் மீண்டும் மீண்டும் அல்லாஹ் நினைவுபடுத்துகின்றான். 

நாம் உலகில் ஒன்றின் மீது ஆசை வைத்திருக்கும் நிலையில், அது நமக்குக் கிடைக்காத போது, அதற்குக் காரணம் இரட்சகன் நமக்கு அருள் புரியாததுதான் எனக் கருதுவது மடமையாகும்.  நாம், நம் இரட்சகனிடம் கேட்பவைகள் நமக்குக் கிடைக்கவில்லை என்றால், அதுவும் அல்லாஹ் நமக்கு அளித்த அருளே ஆகும். அவனே தனது அடியார்களில், எவருக்கு எது தகுதியானது என்பதை மிகவும் அறிந்தவன்.  நிச்சயமாக மனிதர்களின் உண்மை நிலையை அல்லாஹ் மட்டுமே அறிந்தவனாக இருக்கிறான். அல்லாஹ் தன் அடியார்களில் அவரவரின் தகுதியை அறிந்து, அவரவருக்குரிய அளவுகோளுடன் வழங்குவது தன் அடியார்கள் மீது அல்லாஹ் புரிந்துள்ள பெரும் அருளாகும்.

நாம் கேட்பதை எல்லாம் அல்லாஹ் கொடுத்துவிட்டால், அதனால் நாம் அழிந்து போவதற்கும் இடமிருக்கிறது. எனவேதான், எமது தகுதிக்கேற்ப அவனது நீதியான அளவுகோலுடன் அவன் கொடுக்கின்றான்.  இது அல்லாஹ் உலகில் அனைவருக்கும் புரிகின்ற அருளாகும்.

அர் ரஹீம்:

அல்லாஹு ஸுப்ஹானஹுவ தஆலா மறுமையில் அவனது அருளை முஃமின்களுக்கு மட்டுமே கொடுக்கின்றான். முஃமின்களுக்கு சுவனத்தில் அவர்களின் உள்ளம் விரும்புவது எல்லாம் கிடைக்கும்.  இந்நிலையான அருளை அல்லாஹ் தன் அடியார்களில் யாரெல்லாம் இவ்வுலகில் அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்து வாழ்ந்து, அவனது மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தார்களோ அத்தகையோர்களுக்கே கொடுக்கின்றான்.  உலகில் அல்லாஹ் மீதான நம்பிக்கையை தங்கள் உள்ளங்களில் பதிந்து, அதன் அடிப்படையில் வாழ்ந்தவர்கள், மறுமையில் நிலையான அருளைப் பெற்றுக் கொள்வாா்கள்.

அந்த ரஹீம் மறுமையில் நமக்குக் கொடுக்கின்ற அருட்கொடைகளை நாம் அனுபவிக்க வேண்டுமானால் இவ்வுலக வாழ்வில் அதற்குத் தகுதியான அடியார்களாக நாம் வாழ வேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

-அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹபிழஹுல்லாஹ்
أحدث أقدم