இறைநேசர்களிடம் இரட்சிப்பு தேடுதல்!

இறைநேசர்களிடமும் வலியுல்லாக்களிடமும் இரட்சிப்பு, உதவி தேடலாமா?
அல்லாஹ் கூறுகிறான்: –
உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது¢ அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் – அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்-குர்ஆன் 10:106-107)
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்றீர்களே அத்தகையோர் உணவளிக்க சக்திபெற மாட்டார்கள் ஆகவே, (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ் இடமே தேடுங்கள் அவ(ன் ஒருவ)னையே வணங்குங்கள் அவனுக்கு நன்றியும் செலுத்துங்கள் அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.(அல்-குர்ஆன் 29:17)
மேலும், அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிக வழி கெட்டவன் யார்? அவர்களோ, இவர்களுடைய அழைப்பைப் பற்றி மறந்தவர்களாக உள்ளனர் மேலும், மனிதர்கள் (மறுமை நாளுக்காக) ஒன்று திரட்டப்பட்டால், (வணங்கப்பட்டவர்களான) அவர்கள் இவர்களுக்கு விரோதிகளாக இருப்பர் இவர்கள் வணங்கிக் கொண்டிருந்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவர். (46:5,6)
(உங்களுடைய தெய்வங்கள் சிறந்தவையா) அல்லது கடுந்துன்பத்திற்குள்ளாக்கப்-பட்டவனுக்கு – அவனை இவன் அழைத்தால் – (அவனுக்குப்) பதிலளித்து, மேலும், (அவனுடைய) அத்துன்பத்தை நீக்கி, பூமியில் உங்களை(த் தன்னுடைய) பிரதிநிதிகளாகவும் ஆக்கியவ(ன் சிறந்தவ)னா? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கிறானா? (27:62)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் இரட்சிப்பு தேடலாமா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் ஒரு நயவஞ்சகன் விசுவாசிகளை துன்புறுத்துபவனாக இருந்தான். அப்போது (நபித்தோழர்களான) அவர்களில் சிலர் சிலரை நோக்கி, எங்களுடன் வாருங்கள்! இந்த நயவஞ்சகனி(ன் தீமையி)லிருந்து அல்லாஹ்வின் தூதரிடம் இரட்சிக்கத் தேடுவோம் எனக் கூறினார்கள். (இதைச் செவியுற்ற) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், என்னிடம் இரட்சிப்புக் கோரலாகாது இரட்சிப்புத் தேடப்படுவதெல்லாம் அல்லாஹ்வைக் கொண்டு தான்எனக் கூறினார்கள். (நூல்: தப்ரானீ)
மேற்கண்ட வசனங்கள் மற்றும் நபிமொழியிலிருந்து பெறும் படிப்பினைகள்:-
1. அல்லாஹ்வையன்றி மற்றவர்களை உதவிக்காக அழைப்பது பெரிய ஷிர்க்காகும் என்ற உண்மையை (10:106) என்ற மேற்கண்ட வசனம் விவரிக்கின்றது.
2.ஒரு நல்ல மனிதர் மற்றவர்களின் திருப்திக்காக அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பாராயின் அவர் அக்கிரமக்காரர்களில் ஒருவராக ஆகிவிடுவார்.
3. ஒருவருக்கு அல்லாஹ் ஒரு தீங்கை நாடினால் அதை அவன் தான் நீக்க முடியுமேயன்றி வேறெவராலும் முடியாது. அதற்காக வேறொருவரை அழைப்பது எந்தப் பயனையும் தராது. மாறாக, அது குப்ஃரான (இறை நிராகரிப்பான) செயலாகி விடும் என்ற விளக்கத்தைத் தான் (10:107) என்ற வசனம் தெளிவுபடுத்துகிறது.
4. உணவு, வசதிகளை அல்லாஹ்விடமே கோர வேண்டும். அவ்வாறே சொர்க்கத்தையும் அவனிடமே கோரவேண்டும்.
5. அல்லாஹ்வையன்றி மற்றவர்களை அழைப்பவனை விட வழிகெட்டவன் யாருமில்லை.
6. அவ்விதமே மற்றவர்களை அழைத்தாலும் அவர்கள் இவர்களின் அழைப்பை அறியக் கூட மாட்டார்கள்.
7. இப்படி அழைப்பது அழைக்கப்படுபவரை வணங்கப்படுபவராகக் கணிக்கப்படும்.
8. அழைக்கப்படுபவர் அழைப்பு எனும் இவ்வணக்கத்தை மறுத்து விடுவார்.
9. மேற்கூறப்பட்ட செயல் மனிதனை வழிகெடுத்து விடும். இந்த விளக்கத்தைத்தான் மேற்கண்ட 46:5,6 வசனங்கள் தெளிவு செய்கின்றன.
10. கஷ்டமான காலத்தில் கஷ்டத்தை நீக்க அல்லாஹ் ஒருவனால் தான் முடியும் என இணை வைத்துக் கொண்டிருந்தோரும் விளங்கியிருந்தனர். அதனால் கஷ்ட காலத்தில் கஷ்டத்தை நீக்க அல்லாஹ்வையே அவர்கள் அழைத்து வந்தனர்.
11) ஆனால் இக்கால முஸ்லிம்களோ கஷ்ட காலத்திலும் அல்லாஹ்வை விட்டு விட்டு நபிமார்களிடமும், அவ்லியாக்களிடமும் சென்று கஷ்டத்தை நீக்க வேண்டுகின்றனர். அவ்வாறே, கஷ்டத்தை நீக்க ஷிர்க்கான நேர்ச்சை போன்ற பல காரியங்களை செய்கின்றனர். இவற்றை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும். கஷ்டகாலத்தில் அல்லாஹ் ஒருவன்தான் கஷ்டத்தை நீக்கி வைப்பான் என்ற உண்மையை மனதில் கொண்டு அவனையே அழைக்க வேண்டும்.
أحدث أقدم