கப்ர் பிளந்த அதிசய வரலாறு ஓர் விளக்கப் பார்வை.

அல்-ஹாவி லில் பதாவாவில் இமாம் ஜலாலுத்தீன் சுயூதி ரஹிமஹுல்லாஹ் பதிந்ததாக வரும் பெருமானாரின் கப்ர் பிளந்த அதிசய வரலாறு ஓர் விளக்கப் பார்வை.

உத்தம நபியவர்களின் கப்ர் பிளந்ததாகவும் கைகள் வெளியே வந்து அஹ்மத் அர்ரிபாயி நாயகம் முஸாபஹா செய்து முத்தமிட்டதாகவும் பரவும் செய்தி ஆதாரமற்ற கட்டுக்கதைகளில் ஒன்றாகும் என்பது ஏலவே நிறூபனமானதாகும். 

இல்லை எனக்கூறி அது உண்மைதான் என நிறூபிக்க முற்படும் எம் உறவுகள் இந்த சம்பவம் இமாம் ஜலாலுத்தீன் சுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அல்-ஹாவி லில் பதாவா எனும் நூலில் இடம்பெற்றுள்ளது என்றும் அதுதான் எங்கள் ஆதாரம் என்றும் இக் கட்டுக்கதையை நிறுவ முற்பட்டுள்ளனர்.

இதற்க்கு விளக்கம் தருமாறு எம் உறவுகள் வேண்டிக் கொண்டதற்கிணங்க... 

இமாம் ஜலாலுத்தீன் சுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது அல்-ஹாவி லில் பதாவா எனும் கிரந்தத்தில் இந்த செய்தியை 2ஆம் பாகம் 314 ஆம் பக்கத்தில் பதிந்திருப்பது உண்மைதான் ஆனால் அதனை என்னவென்று பதிந்துள்ளார்கள் என்பதனை மக்களுக்கு அரபு வாசகத்தோடும் பக்க இலக்கங்கங்களோடும் வாசித்துக் காட்டினால் உண்மை வெளிப்பட்டுவிடுமோ  என்று அஞ்சி வெறுமனே இமாம் சுயூதியின் அல்-ஹாவி லில் பதாவாவில் இச்சம்பவம் வருகின்றது என்று மொட்டையாக ஒரு மெளலவி நேற்று பேசியிருந்ததை கேட்டேன். 

ஆனால் உண்மையில் இமாம் சுயூதி அவர்கள் தனது கிரந்தத்தில் இச்சம்பவத்தை   ஆரம்பிக்கும் போதே இப்படி ஆரம்பிக்கின்றார் 
وفي بعض المجاميع... 
அதாவது "சில கதைப்புத்தகங்களில்(தொகுப்புக்களில்) வந்துள்ளது" எனக் கூறியே இச் சம்பவத்தை பதிந்துள்ளார்கள். 

(கிதாபின் Screen shot கீழே சிவப்பு நிற அடையாளமிடப்பட்டுள்ளது) 

இந்த சம்பவத்திற்க்கு எந்தவொரு ஸஹீஹான அறிவிப்பாளர் வரிசையையோ அல்லது இச்சம்பவத்திற்க்கு நேரடி சாட்ச்சிகளையோ இமாம் அவர்கள் அந்த கிரந்தத்தில் குறிப்பிடவில்லை.

(வேறு பல கிரந்தங்களிலும் இதே நிலைதான்) அவைகளில் இதைவிட சற்று கூடுதலாக ரிபாயி நாயகம் ஸலாம் சொன்னதாகவும் கப்ரில் இருந்து பெருமானார் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பதில் சொன்னதாகவும் அதனை மஸ்ஜிதுந்நபவியில் இருந்த அனைவரும் செவியுற்றதாகவும் கூட இட்டுக்கட்டி எழுதிவைக்கப்பட்டுள்ளது. 

ஒருவர் கேள்விப்பட்டதை தனது கிரந்தத்தில் பதிந்தால் அது ஆதாரமாகுமா? இப்படியா மார்க்கத்தை புறிவது? இப்படி கண்டது கேட்டதையெல்லாம் ஏற்றால் ஸஹீஹான வரலாறுகளும் பாதுகாக்கப்பட்டிருக்காது, ஹதீஸ் கலையும் உறுவாகி இருக்காது ஸஹீஹ், ழயீப், மவ்லூஃ என்று ஹதீஸ்களும் தரம்பிறிக்கப்பட்டிருக்காது.

எனவே முதலில் செய்தி ஆதாரமானதா என்பதனை உறுதிப்படுத்துமாரே குர்ஆனும் கட்டளையிடுகின்றது. 
 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ  بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا.....
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். 
(அல்குர்ஆன் : 49:6)

இமாம் அஹ்மத் அர்ரிபாயி 06ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இமாம் சுயூதி ரஹிமஹுல்லாஹ் 09 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இருவருக்குமிடையில் 03 நூற்றாண்டுகள் இவ்வளவு பெரிய இடைவெளி இருக்க இமாம் சுயூதி ரஹிமஹுல்லாஹ் இச்சம்பவத்தை நேரடியாக காணவும் இல்லை அதுமாத்திரமன்றி அவராகவே தான் கதைப்புத்தகங்களில் இருந்துதான் இதனை எடுத்தேன் எனும் பொழுது நீங்கள் எப்படி இதனை வஹியைப் போல் நம்பினீர்கள் என்பதுதான் எனக்கு புரியவில்லை எனதன்புத் தோழர்களே! 

உத்தம நபியின் மீதே இவ்வளவு பெரிய பொய்யா? 
عن المغيرة بن شعبة : سَمِعْتُ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ يقولُ: إنَّ كَذِبًا عَلَيَّ ليسَ كَكَذِبٍ علَى أَحَدٍ، مَن كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ... 
முகீரத் இப்னு ஸுஃபா அறிவிக்கிறார்கள் :- நபியவர்கள் கூற நான் கேட்டேன்:- " என் மீது பொய் கூறுவது வேறு எவர் மீதும் பொய் கூறுவதைப் போன்றாகாது, யார் என் மீது வேண்டுமென்றே பொய் கூறுவானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்."(நூல் - புஹாரி:- இலக்கம்:- 1291)

ஹஜ்ஜுக்கு சென்று நபிகளாரின் ரவ்ழா ஷரிபிற்க்கு சென்று இவ்வளவு பெரிய அற்புதத்தை நிகழ்த்திய ரிபாயி நாயகத்தோடு கூட நின்ற ஒருவர் கூடவா இதனை பார்க்கவில்லை? ஆனால் 90ஆயிறத்திற்க்கும் அதிகமான மக்கள் இதனை பார்த்ததாகவும் சில கிரந்தங்களில் எழுதப்பட்டுள்ளது. இப்படி ஒரு சம்பவம் உண்மையில் நடந்திருந்தால் பல்லாயிரம் மக்கள் பார்த்திருந்தால் அந்த செய்தி ஸனதோடு எவ்வளவு அழகான முறையில்  பாதுகாக்கப்பட்டிருக்கும்.

அதிலும் கூடுதலாக அந்த ஹஜ்ஜாஜிகளோடு அப்துல் காதர் ஜீலானியும், இன்னும் பல மகான்களும் இருந்ததாகவும் கூட எழுதப்பட்டுள்ளது. அவ்லியாக்களின் அரசர்  முஹ்யித்தீன் ஆண்டவர் கூடவா இதற்க்கு ஷஹாதத்து சொல்லவில்லை? எல்லாமே இட்டுக்கட்டப்பட்ட பொய்  என பல கோணங்களில் அறிஞர்களால் தெளிவூட்டப்பட்டுள்ளது வேண்டுமானால் கேளுங்கள் அந்த மறுப்புரை கிதாபுகளை தருகின்றோம் நடுநிலையோடு படித்துப் பாருங்கள்.

மேலும் பல இமாம்களின், ஸாலிஹீன்களின் வரலாறுகளை துள்ளியமாக இவ்வுலகறியச் செய்த "ஸியரு அஃலாமின் நுபலா" என்ற பிரபல்யமிக்க  கிரந்தத்தின்  வரலாற்றாசிரியர் இமாம் தஃகபி ரஹிமஹுல்லாஹ், "பிதாயா வந்நிஹாயா" வின் ஆசிரியர் இமாம் இப்னு கதீர் ரஹிமஹுல்லாஹ், "வபயாதுல் அஃயான் வஅன்பாயி அப்னாயிஸ் ஸமான்" என்ற நூலில் ஆசிரியர் அஹ்மத் இப்னு ஹில்லிகான் ரஹிமஹுமுல்லாஹ் போன்ற வறலாற்று விற்ப்பன்னர்கள்  ஏன் இந்த அஹ்மத் ரிபாயி யின் இச் சம்பவத்தை தங்கள் பிரசித்திபெற்ற கிரந்தங்களில் பதியவில்லை? காரணம் அது இட்டுக்கட்டப்பட்ட ஆதாரமற்றது என்பதனாலேயாகும். 

இதுவொன்றே இது கட்டுக்கதை என்பதற்கு போதுமான சான்றாகும். 

அதுமட்டுமன்றி ஷரீஅத்தின் அறிவை சரியாக புறிந்த ஒருவர், குர்ஆனை நன்கு புறிந்த ஒருவர் பின்வரும் வசனத்தின் அடிப்படையிலேயே இச்சம்பவம் பொய் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்

وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏
“அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
(அல்குர்ஆன் : 23:100)

மரணித்தவர்களுக்கும் உலகிலுள்ளவர்களுக்கும் இடையில் பர்ஸஃக் எனும் திரையிடப்பட்டுள்ளது எனும் போது பர்ஸஃஹுடைய வாழ்க்கையில் கண்ணியமாக வாழ்ந்துகொண்டிருக்கும் நபியவர்கள் இப்படி கப்ரை பிளந்துகொண்டு  வருவார்கள் என்பதற்க்கு என்ன ஆதாரம் உண்டு குர்ஆன் ஹதீஸில்? இது போன்று ஒரு சம்பவத்தையாவது ஸஹீஹான ஹதீஸ்களில் காட்ட முடியுமா இவர்களால் முடியவே முடியாது. கார்ட்டூன்களில்தான் அல்லது இந்துக்களின் நம்பிக்கைகளில் தான் இப்படியான கதைகளை காட்ச்சிகளை பார்க்கலாம் நஊதுபில்லாஹி மின்ஹா. 

ரிபாயி நாயகத்துக்கே முடியும் என்றிருந்தால் அல்லாஹ்வே நேரடியாக ஷஹாதத் அழித்த மிகப்பெரும் அவ்லியாக்கள் உத்தம ஸஹாபாக்களுக்கு ஏன் இப்படி ஒரு அற்புதம் கராமத்து நடக்கவில்லை? ரிபாயி நாயகத்தை விட தரம் தாழ்ந்தவர்களா உத்தம ஸஹாபக்கள்? கொஞ்சம் சிந்தியுங்கள்! 

எனவே ஒன்றில் இது ஒரு கதை இப்படி நடந்திருக்கலாம் அல்லாஹு அஃலம் இது எங்கள் நம்பிக்கை என்று சொல்லிவிட்டு வேண்டுமென்றால் போங்கள் பரவாயில்லை ஆனால் இதனை வஹியைப் போல படம் காட்டி ஒருவரை அவ்லியாவாக்க முற்படுவது வாசல் இல்லாமல் கோலம் போட்டவனின் கதையை போன்றதாகும். 

இதுபோல் பல கிரந்தங்களில் இதை விட விநோதமான பல ஆதாரமற்ற செய்திகள் பதியப்பட்டுள்ளது அப்போ அவைகள் எல்லாம் ஆதாரமாகிவிடுமா? அவர்களையும் அவ்லியாக்களாக்கிவிடுவோமா?

எனவே அல்-குர்ஆனிலும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் அவ்லியாக்கள் என்று கூறப்பட்டவர்கள் மட்டுமே அஹ்லுஸ்ஸுன்னா க்களின் ஸலப் அகீதாவில் உண்மையான அவ்லியாக்கள் அவர்களுக்கு நிகழ்ந்த ஆதாரபூர்வமான கராமத்துக்கள் மட்டுமே ஒரு முஃமினால் ஏற்க்க முடியுமானவை அதுவல்லாமல் நுபுவத்திற்க்கு பிறகு ஒருவரை அவ்லியா என்றோ மகான் என்றோ கூறுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை. வேண்டுமானால் உலகில் வாழ்ந்த நல்ல மனிதர் என்று கூறிவிட்டு போகலாம் அவ்வளவுதான். 

அஷ்ஷெய்க் அல்லாமா இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் அஹ்மத் அர்ரிபாயி என்பவர் ஹஜ்ஜுக்கு சென்ற வேளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ததாகவும் அப்பொழுது நபியவர்களின் கைகள் கப்ரை பிளந்து வெளிவந்ததாகவும் அக்கைகளை அஹ்மத் அர்ரிபாயி முத்தமிட்டதாகவும் ஒரு கதை சொல்லப்படுகின்றதே இதன் உண்மைத் தன்மை என்ன என வினவப்பட்ட போது? 
இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அளித்த பதில் :-  இந்தக் கதை பொய்யானது, அடிப்படையற்றது, ஆதாரங்களற்றது என்றும்  மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மரணத்தின் பின்னர் யாருக்கும் தனது கைகளை நீட்டியதோ, எந்த மனிதர்களோடும் பேசியதோ இல்லை என்றும் தனது பத்வாவில் குறிப்பிட்டுள்ளார்கள். ஹதீஸ்களில் வந்திருப்பதெல்லாம் நபியவர்களுக்கு யாராவது ஸலாம் சொன்னாலோ, ஸலவாத்து கூறினாலோ அதனை மலக்குமார்கள் ஊடாக அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எடுத்து காண்பிக்கின்றான் அதற்க்கு நபியவர்கள் பதிலும் அளிக்கின்றார்கள் ஆனால் அதனை உலகில் உள்ள எவராலும் செவியேற்க முடியாது மேலும் இது அடிப்படையற்ற கட்டுக்கதை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

(குறிப்பு:- இந்த கட்டுக்கதை குறித்து பல அறிஞர்கள் பேசியுள்ளார்கள் தேவை ஏற்படின் பதிவிடுகிறேன்)

இமாமுனா அல்லாமா இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பத்வாவின் அறபு மூலம் கீழே காணலாம். 
من فتاوى الشيخ ابن باز رحمه الله تعالى 
هذه الحكاية باطلة، هذه الحكاية باطلة، وخرافة، لا أصل لها، ولا أساس لها، ولم يمد النبي ﷺ يده بعد الموت لأحد من الناس، ولا كلم أحدًا من الناس -عليه الصلاة والسلام-، وإنما جاء في الحديث: ما من أحد يسلم علي إلا رد الله علي روحي، حتى أرد عليه السلام وليس فيه أنه يسمع الرد، وإنما الرسول ﷺ يرد على من سلم عليه، إما مشافهةً، وإما بواسطة الملائكة، كما في الحديث الآخر: إن لله ملائكة سياحين، يبلغوني عن أمتي السلام وهو ﷺ حين يرد السلام ليس معناه أنه يسمعه المسلم، بل يرد السلام، إما مطلقًا، وإما بواسطة الملائكة الذين يبلغونه السلام -عليه الصلاة والسلام-، وفي الحديث الآخر: صلوا علي، فإن صلاتكم تبلغني حيث كنتم وفي اللفظ الآخر: فإن تسليمكم يبلغني أين كنتم أما أنه مد يده لأحدٍ من الناس؛ فهذا شيء لا أصل له، بل هو باطل، نعم.

المقدم: جزاكم الله خيرًا.

எனவே நடுநிலையோடு சிந்தித்து ஆதாரமானதை ஏற்று கட்டுக்கதைகளையும் ஷரீஅத்திற்க்கு முரணாணவைகளையும் புரக்கணியுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்திடுவான். 

ஜே.எம். சாபித் (ஷரயி, ரியாதி) B.A(Hons)-KSA
வளவாளர், தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி, அக்கரைப்பற்று.
أحدث أقدم