மூன்று குணாதிசயங்கள்


-உஸ்தாத் SM.இஸ்மாயீல் நத்வி

அல்லாஹ்  திருக்குர்ஆனில் பல இடங்களில்  இறை தூதர்களை பற்றி  விளக்கி இருக்கின்றான் அதில் நபிமார்களான மூஸாவும் இப்ராஹீம் அலைஹிமுஸ்ஸலாமும் மிக அதிகமானவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திருக்குர்ஆனில் 100 கும் அதிகமாக ,

அடுத்ததாக நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் 60 கும் அதிகமாக பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இறைத்தூதர்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதுத்துவத்தை முழுமையான முறையில் எற்றி வைத்திருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் ஒரு சிலரின் வாழ்க்கை நமக்கு படிப்பினையாக அமையும் என்ற அடிப்படையில் அல்லாஹ் சில இறைத்தூதர்களை பற்றி அதிகமாக கூறுவது வழக்கம்.

اِنَّ اِبْرٰهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِيْفًا وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَۙ‏
நிச்சயமாக இப்ராஹீம் அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடக்கும் நேரானதொரு வழிகாட்டியாக இருந்தாரேயன்றி  (இறைவனுக்கு) இணை வைத்து வணங்குபவர்களில் அவரும் (ஒருவராக) இருக்கவில்லை.
(அல்குர்ஆன் : 16:120)

மேல் காணும் இறைவனத்தில் அல்லாஹ் நபியவர்களை பற்றி கூறும் பொழுது அவர் நேரானதொரு வழிகாட்டியாக இருந்தார்கள் என்று குறிப்பிடுகிறான்
இந்த கருத்தை அரபு மொழியில் 
"உம்மா - أمة " ،சமூகம் என்ற கருத்தில் உள்ள ஒரு பதத்தை பயன்படுத்தி இருக்கிறான்.

நேரான வழிகாட்டியாக இருப்பவர் தான் ஒரு சமூகத்தை வழிநடத்துபவர் என்ற ஆழமான கருத்தை நமக்கு இந்த வசனம் தருகிறது .

தஃப்ஸீர் தபரி, இப்னு கஸீர் போன்ற புத்தகங்களில் "நலதை போதிப்பவர்", என்ற கருத்தும் வந்திருக்கிறது,

ஒரு முஸ்லிம் என்பவர் தொழுகை, நோன்பு, ஜகாத், ஸதகா போன்ற இபாதாதுகளில் மட்டும் கவனம் செலுத்துபவர் அல்ல சமூகத்திற்கு நல்லதை போதிப்பவர் நேரான வழியை காட்டுபவர் என்ற சமூகவியல் சிந்தனையும் ஓர் இபாதத்  என்பதை நாம் புரிந்து கொள்கிறோம் அல்லவா !!!

Social Activist  - الناشط الاجتماعي  - சமூக ஆர்வலர் என்பவர் முஸ்லிமாக கூட இருப்பாரா என்ற ஆச்சரியமான கேள்வி இனி தேவை இல்லை !!!

இறை நம்பிக்கையாளர் - முஃமின் என்றால் அவர் சமூக சிந்தனை உடையவராக இருப்பார் என்பதுதான் இந்த வசனம் நமக்கு உணர்த்துகிறது.

இந்த வசனத்தில் நபி அவர்களுக்கு அல்லாஹ் மூன்று விதமான சிறப்பு குணாதிசயங்களை குறிப்பிடுகிறான்.

1-உம்மா - (நேரானதொரு வழிகாட்டி)
2-கானிதன் லில்லாஹ்- (அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடப்பவர்)
3-ஹனீஃபன்-(இணைகற்பிக்காத ஏகத்துவாதி )

இந்த மூன்று குணாதிசயங்களை பின்னிருந்து பார்த்தால் நமக்கு ஒரு அற்புதமான தகவல் கிடைக்கும் அது என்ன?

இறை கொள்கையில் ஷிர்க்கு -இணை கற்பித்தல் இல்லாமல் ஏகத்துவ சிந்தனை உடையவராகவும் , இறைவனுக்கு அஞ்சி நடக்கக்கூடிய தக்குவாவை பின்பற்றுவராகவும் இருந்து பிறருக்கு நேரானதொரு  வழிகாட்டியாக இருப்பவரே இறைத்தூதர் .

இறைத்தூதரின் பாதையில் பயணிக்கும் இறை அழைப்பு பணி செய்யும் ஆலிம்களும் , தாயிகளும் இந்த மூன்று குணாதிசயங்கள் நம்மிடத்தில் இருக்கின்றனவா என்று  சீர் தூக்கி பார்க்க வேண்டும்.

இன்று ஷிர்க்கு பித்அத்தை நாம் கண்டித்தால் சிலர் முகம் சுளிக்கின்றனர் (!!!) இதை இந்த நேரத்தில் தான் சொல்ல வேண்டுமா ? இது இப்பொழுது சொல்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது ? என்ன பல கேள்விகளை மார்க்கத்தை முறையாக விளங்கியவர்களும் கேட்கிறார்கள் , ஆனால்  திருக்குர்ஆனில் இணை கற்பித்தலை தவிர்ப்பவரே இறை நம்பிக்கையாளர் அவரே இறையச்சம் உடையவர் அவரே பிறருக்கு பயன் அளிக்க முடியும் என்று கூறி இருப்பதை மறந்து விடுகின்றனர்.

மார்க்கத்தில் இணை கற்பித்தல் என்பது  எந்த அளவுக்கு ஆபத்தானதோ இறை கோபத்தை பெற்று தருமோ அது ஏகத்துவதற்கு முற்றிலும் மாற்றமான ஒன்றோ அதேபோன்றுதான் மார்க்கத்தில் இல்லாத விடயங்களை மார்க்கமா சொல்வதும் மிகவும் அபாயகரமானது இதைப்பற்றி பல நபி மொழிகளில் நாம் தெளிவாக காணலாம்

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறியதாக சொல்கிறார்கள் "யார் மார்க்கத்தில் நூதனமான விடயங்களை ஏற்படுத்துவாரோ அது மறுக்கப்பட வேண்டியது ",

நூல்-  முஸ்லிம் & புஹாரி

ஆக இணைகற்பித்தலை அனாச்சாரங்களை கண்டிப்பதும், விமர்சிப்பதும் காலத்தின் கட்டாயத் தேவை ,அதை இறை அச்சம் உடையவர்களும், சமூக அக்கறை கொண்டவர்களான இறைத்தூதர்கள் பணி, அந்த உயர்ந்த பணியை ஏன் நாம் உரக்கச்  சொல்லக் கூடாது !!!
Previous Post Next Post