அல்குர்ஆனில் அல்லாஹ், பல நபிமார்களின் வரலாறுகளைக் படிப்பினைக்காகக் குறிப்பிடுகின்றான். அவற்றில் ஸுலைமான் நபியின் வரலாறும் ஒன்று. ஸுலைமான் நபியின் வரலாற்றில் ஒரு பகுதியை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
இப்பகுதியில் பல படிப்பினைகள் உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு:
அல்லாஹ் அல்லாதவர்களிடம் இருக்கும் ஆற்றல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடைகளாகும். அதற்கு எப்போதும் நன்றியுடையவர்களாக சொல்லிலும் செயலிலும் இருக்க வேண்டும்.
சிறப்பான ஆற்றல்களைப் பெற்றவர்கள் அதை வைத்து ஆணவம் கொள்ளக் கூடாது.
பணம், பதவி, பட்டங்கள்; உண்மையை அறியவும், ஏற்கவும் தடையாக இருக்க கூடாது.
எந்தச் செய்தியையும் உறுதிப்படுத்தாமல் ஏற்கக் கூடாது.
ஒரு விடயத்தைச் செய்யுமுன் மற்றவர்களுடன் குறிப்பாக தகுதியானவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தலை வீக்கத்துடன் நடக்கக் கூடாது.
எல்லோரிடமும் எல்லா ஆளுமைகளும் இல்லை. பல ஆளுமைகள் உள்ளவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால், எல்லா ஆளுமைகளின் பலமும், பலாபலனும் கிடைக்கும்.
அல்லாஹ் ஒருவனை வணங்கத் தூண்டும் அழைப்புப் பணிக்கு தன் ஆற்றல்களைப் பயன்படுத்த வேண்டும். .
இப்போது கதையைப் படித்துப் பாருங்கள், இன்னும் பல படிப்பினைகள் கிடைக்கும் ......
ஸுலைமான் நபி:
ஸுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் பல ஆற்றல்களை அருளியிருந்தான். உலகில் யாருக்கும் கொடுக்காத ஆட்சி அதிகாரம், அல்லாஹ்வின் படைப்புக்களில் மனிதன், ஜின், பறவைகள், காற்று, எறும்பு போன்ற பலதையும் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தல் என்பவன அவற்றில் முக்கியமானவை. (21:78-79), (27:16-19)
ஹுத் ஹுத் பறவை:
அல்லாஹ், ஸுலைமான் நபிக்கு பறவைகளை வசப்படுத்திக் கொடுத்ததுடன் அவை பேசும் மொழியைப் புரியும் ஆற்றலையும் கொடுத்திருந்தான்.
தண்ணீர் இருக்கும் இடங்களை தேடல், நாடு மற்றும் மக்களின் செய்திகளை அறிதல் போன்ற பல்வேறு தேவைக்காக அவர் அதை பயன்படுத்தினார், அப்பறவைகளில் ஹுத் ஹுத் என்ற பறவையும் இருந்தது.
ஒரு நாள் ஹுது ஹுதுப் பறவையைக் காணவில்லை. அது ஸுலைமான் (அலை) அவர்களிடம் அனுமதி பெற்றுப் போகவுவில்லை. என்னவாயிற்றோ அல்லது காணமல் போய்விட்டதோ?” என்று தேடினார்.
காணாமல் போனதற்கு தெளிவான, சரியான காரணம் இல்லாவிட்டால் அதைக் கடுமையான வேதனை செய்ய வேண்டும் அல்லது அறுத்து விடவேண்டும் என கூறிக் கொண்டிருந்தார். (27: 20-21)
பல்கீஸ் ராணி:
காணாமல் போன ஹுது ஹுதுப் பறவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் திரும்பி வந்தது. ஸுலைமான் (அலை) அதனிடம் இது வரை காணாமல் போனதற்கான காரணத்தைக் கேட்டார்.
அப்போது, எமன் தேசத்தில் உள்ள சபஃ நாட்டை ஆண்டு வந்த ராணி பல்கிஸின் கதையை பின்வருமாறு கூறியது:
“ஸபஃ” நாட்டிலிருந்து தாங்கள் அறியாத ஒரு உறுதியான செய்தியை நான் அறிந்து வந்துள்ளேன்.
அத்தேசத்தவர்களை ஒரு பெண் ஆட்சி செய்கிறாள். அவளுக்கு தேவையான வளங்களும், மகத்தான ஒரு சிம்மாசனமும் உண்டு.
மேலும், அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன் என்று கூறியதுடன் அதற்கான காரணம், அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டிய நியாயம் என்பவற்றையும் ஹுத் ஹுத் கூறியது. (27: 23-24)
தகவலை உறுதிப்படுத்தல்:
நீ கூறுவது உண்மையா அல்லது பொய்யா என நாம் விரைவில் ஆய்ந்து அறிந்துகொள்வோம் என ஸுலைமான் (அலை) அவர்கள் ஹுத் ஹுதுவிடம் எச்சரிக்கையுடன் கூறினார். (27:27)
பல்கீஸ் ராணிக்கு சுலைமான் நபியின் கடிதம்:
ஸபஃ நாட்டு அரசிக்கு ஸுலைமான் (அலை) அவர்கள் இஸ்லாமிய அழைப்பை ஏந்திய ஒரு கடிதத்தை எழுதி ஹுத் ஹுத் பறவையிடம் கொடுத்து பின்வருவாறு கூறினார்கள்:
என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு சென்று அவர்களிடம் போட்டு விடு. பின்னர் அவர்களை விட்டுப் விலகி, அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கவும். (என்று கூறினார்).
ஹுத் ஹுத் பறவையும் கடிதத்தைக் கொண்டு சென்று அரசியின் மாளிகையில் போட்டது. (27:28)
பல்கிஸ் ராணியின் நிதானமான பேச்சும் நடத்தையும்:
ஹுத் ஹுத் பறவை கொண்டு வந்து போட்ட கடிதம் பல்கிஸ் ராணியின் கையில் கிடைத்தது. அதை அவர் பிரித்துப் படித்து விட்டு உடனடியாக தம் அரசவைக் கூட்டத்தைக் கூட்டினார்.
ஸுலைமான் நபியின் சொற் சுருக்கமும் பொருட் செரிவும் நிறைந்த கடிதம் தொடர்பாக அவர்களுடன் ஆலோசித்தார்.
பல்கிஸ் ராணி, தனது அரசவைப் பிரதானிகளைப் பார்த்து கூறினார்:
அரசவைப் பிரமுகர்களே! மிக கண்ணியம் நிறைந்த கடிதம் ஒன்று என்னிடம் போடப்பட்டுள்ளது. அது ஸுலைமான் என்பவரிடமிருந்து வந்துள்ளது. அது “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” எனத் தொடங்கப்பட்டுள்ளது.
எனக்கு எதிராக நீங்கள் ஆணவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள். (அல்லாஹுக்கு பணிந்து) முஸ்லிம்களாய் என்னிடம் வாருங்கள் எனும் விடயமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
சமுதாயத் தலைவர்களே! என்னுடைய இந்த விவகாரத்தில் நீங்கள் எனக்கு நல்லதொரு ஆலோசனையை வழங்க வேண்டும், உங்கள் கருத்தரியாமல் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறினார். (27:29-32)
போருக்குத் தூண்டும் பொறுப்பற்ற அரசவை உறுப்பினர்கள்:
பல்கிஸ் ராணி அரசவையில் இருந்த அமைச்சர்கள் பலர் ஒன்றிணைந்து “நாம் பலசாலிகளாகவும், கடுமையாகப் போரிடக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம் என்று கூறி, போர் செய்வதே சிறந்தது போல் ஆலோசனை கூறினர்.
இதற்கு மேல் இறுதி முடிவெடுப்பது உங்கள் பொறுப்பு. என்ன ஆணையிடுவது என்பதைத் தாங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்!” என்றனர். (27:33)
பல்கீஸ் ராணியின் பொறுப்புணர்வுடனான பதில்:
பல்கீஸ் ராணி மிகவும் புத்திசாலி. அமைச்சர்களின் கதையைக் கேட்டு எடுத்தவுடன் படை அனுப்புவதைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. மாறாக முதலில் சுலைமான் (அலை) அவர்களின் படை வலிமையை தெரிந்துகொள்ள விரும்பினார். அதனால் அமைச்சர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்:
அரசர்கள் ஏதேனும் ஒரு நாட்டில் புகுந்தால் அதனை அழித்து விடுவார்கள். மேலும், அங்கு கண்ணியத்துடன் வாழ்பவர்களைக் கேவலப்படுத்தி விடுவார்கள்.
நான் படையனுப்புவதற்குப் பதிலாக ஸுலைமானுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பப் போகின்றேன். என்னுடைய தூதுவர்கள் அங்கு சென்று சூழலை அவதானித்து என்ன செய்தியுடன் திரும்பி வருகின்றார்கள் என்பதைப் பார்க்கலாம்” என்று அமைச்சர்களிடம் கூறினார். அவ்வாறே பரிசுப் பொருட்களுடன் தன் தூதுவர்களையும் அனுப்பினார். (27:34-35)
பல்கிஸ் ராணியின் அன்பளிப்பும் ஸுலைமான் நபியின் மதிநுட்பமும்:
பல்கிஸ் ராணியின் தூதுவர்கள் பரிசுப் பொருட்களுடன் வந்துள்ளதை அறிந்த ஸுலைமான் நபி, ராணி தனது படைப்பலத்தைப் பற்றி அறிய தனது ஆட்களை அனுப்பியுள்ளார் என்பதை உடன் உணர்ந்து கொண்டார். பின்னர் பல்கீஸின் தூதுவர்களிடம் பின்வருமாறு கூறினார்:
நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்ய நினைக்கிறீர்களா? அல்லாஹ் உங்களுக்கு கொடுத்திருப்பதை விட சிறந்ததை எனக்குக் கொடுத்துள்ளான். எனவே உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்களே மகிழ்ச்சியடையுங்கள் என்றார். (27:36)
ஸுலைமான் நபியின் சாம்ராஜ்யத்தின் செல்வம், சிறப்புப் பற்றியும் படை பலத்தைப் பார்த்தும் பிரமித்துப் போய் நின்ற பல்கிஸின் தூதுவர்களிடம் ஸுலைமான் நபி மேலும் கூறினார்:
நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத பலமுள்ள பெரும் படையுடன் வந்து அவர்களை சிறுமைப்படுத்தி, இழிந்தவர்களாக அவ்வூரிலிருந்து வெளியேற்றி விடுவோம், என்று நீங்கள் திரும்பிச் சென்று அவர்களிடம் சொல்லுங்கள் என்று கூறினார். (27:37)
பல்கிஸ் ராணியின் முடிவு:
பல்கிஸ் ராணி தூதுவர்கள் ஸபஃ நாட்டிற்கு வந்த பிறகு, அவர்கள் ராணியிடம் விரைந்தனர். தங்கள் நாடு நெருக்கடியில் இருப்பதாக அவளிடம் கூறினார்கள், ஸுலைமான் நபி எம்மால் எதிர்கொள்ள இயலாத அளவு படை வலிமையுடன் இருக்கின்றார் என்பதை அவளிடம் எடுத்துச் சொன்னதுடன், ஸுலைமான் நபியை நேரில் கண்டு அவரை ஏற்றுக்கொள்வதே சிறந்தது என்று அவளுக்கு புரிய வைக்க அவர்கள் முனைந்தனர்.
இறுதியில் பல்கிஸ் ராணி ஸுலைமான் நபியை நேரில் காண தயாராகி ஸுலைமான் நபியின் ராஜ்யத்தை நோக்கி பயணத்தை தொடங்கினாள்.
ஸுலைமான் நபியின் திட்டம்:
ஒரு நாள், ஸுலைமான் நபி தனது அரசவையில் தனது மக்கள், அமைச்சர்கள், இராணுவத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் மத்தியில் அமர்ந்து பல்கிஸைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தார்.
பல்கிஸ் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றாள் என்பதும், அவள் பயத்தால் உந்தப்பட்டிருக்கின்றாள், உண்மை மீதான ஆர்வத்தினாலோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையிலோ அவள் வரவில்லை என்பது அவருக்குத் தெரியும்.
எனவே அவளுக்கு தன் பலத்தையும் அல்லாஹ்வின் ஆற்றலையும் அதனூடாக அல்லாஹ்வைப் பற்றிய உண்மையையும் உணர்த்த வேண்டும் என அவர் விரும்பினார்.
பல்கிஸ் ராணியின் சிம்மாசனம்:
அப்போது ஸுலைமான் நபியின் உளவுத் துறையினர் பல்கிஸ் ராணியின் சிம்மாசனம் பற்றிக் கூறினார். அது ஸபஃ இராச்சியத்தின் மிக அற்புதமான அதிசயங்களில் ஒன்று, அது தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினங்களால் ஆனது, மேலும் சிம்மாசனமும் அது இருக்கும் அறையும் கைவினைத்திறன் மிக்க வேலைப்பாடுகளால் ஆன கலையின் அற்புத அடையாளங்கள் எனவும், சிம்மாசனம் காவலர்களின் பார்வையிலிருந்து ஒரு கணமும் விலகாமல் கடும் பாதுகாப்புடன் காக்கப்படுகின்றது என்றும் கூறினார்.
பல்கிஸ் ராணி தன் சபைக்கு வருவதற்கு முன் அவளின் சிம்மாசனத்தை தன் சபைக்கு கொண்டு வரவேண்டும். அதில் அவளை அமரச் செய்ய வேண்டும் என அரசரும் நபியுமான ஸுலைமான் (அலை) விரும்பினார்.
சிம்மாசனம் இருக்கும் ஸபஃ நாட்டுக்கு பலஸ்தீனில் இருந்து நடந்து போய் வர நான்கு மாதங்கள் வேண்டும்.
தன் அரசவையில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி: பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன், உங்களில் யார் அவளுடைய சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர்?” என்று கேட்டார்.
ஜின்களில் மிகவும் பலம் பொருந்திய இஃப்ரீத் என்ற ஜின் “நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனும், நம்பிக்கைக்கு உரியவனும் என்று கூறியது”
இறைவேதம் பற்றிய அறிவு பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; அதற்கு ஸுலைமான் நபி அனுமதி வழங்கியதும், சொன்னவாறே சிம்மாசனம் ஸுலைமான் நபிக்கு முன்னால் கொண்டு வந்து வைக்கப்பட்டது.
அதைக் கண்டதும் ஸுலைமான் நபி: இது என்னுடைய இறைவனின் அருட்கொடை என அல்லாஹ்வைப் புகழ்ந்ததுடன். இந்த அருட்கொடைகள் நான் இறைவனுக்கு நன்றியுடன் இருக்கின்றேனா இல்லையா எனப் பார்க்க அவன் வைக்கும் சோதனை எனவும் கூறினார்.
பல்கிஸ் வரும்போது அவளின் அறிவாளுமையை பரிசோதிப்பதற்காக, அவள் தன் சிம்மாசனத்தை அடையாளம் கண்டு கொள்கின்றாளா இல்லையா என சோதிக்க நாடி அவளின் சிம்மாசனத்தில் ஸுலைமான் நபி, சில மாற்றங்களை செய்ய உத்தரவிட்டார். (27:38-41)
மேலும், பல்கிஸை வரவேற்பதற்காக கடலில் ஒரு அற்புதமான இடத்தைத் தேர்ந்தெடுத்து தரை மிகவும் திடமான, விலைமதிப்பற்ற பளிங்குக் கற்களால் ஆன ஒரு அழகான அரண்மனையைக் கட்ட உத்தரவிட்டார்.
பல்கிஸ் ராணி, ஸுலைமான் (அலை) அவர்களின் அரச மாளிகைக்கு வருகை தரல்:
பல்கிஸ் ராணி, ஸுலைமான் நபியின் மாளிகையை நெருங்கினாள். அவள் அங்கு வந்த பொழுது அவளுக்கு முன்னே அங்கு கொண்டுவரப்பட்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவளின் சிம்மாசனத்தைக் காட்டி இது “உன்னுடைய அரியாசனம் போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்: “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது” என்று கூறினாள். இதிலிருந்து அவளின் அறிவுப் புலமை வெளிப்பட்டது.
பின்னர் அவளிடம் மாளிகைக்குள் பிரவேசிக்குமாறு சொல்லப்பட்டது.
அப்போது அவள் அம் மாளிகையின் தரையைப் பார்த்து அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணி தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத் தன் இரு கெண்டைக் கால்களுக்கு மேல் உயர்த்தினாள்.
இதைக் கண்ணுற்ற ஸுலைமான் (அலை) இது பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகை என்று கூறினார்.
இறுதியில் பல்கிஸ் இஸ்லாத்தை ஏற்றார்:
எல்லாவற்றையும் அவதானித்த பல்கிஸ் பின்வருமாறு கூறினாள்:
“இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள். (27:42-44)
இறுதியில் ஸுலைமான் (அலை) தன் வளங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்தி, ஒரு தேசத்தின் ராணிக்கு உண்மையை உணரவைக்க எடுத்த முயற்சியில் அல்லாஹ்வின் உதவியால் வெற்றிபெற்றார்.
துணை நின்றவை:
அல்குர்ஆன்
https://www.alukah.net/sharia/0/58767/
https://almunajjid.com/courses/
lessons/132
https://mawdoo3.com
ஆக்கம்: அபூ இமான் ஸஹ்வி