அம்மார் (ரழி) யை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும் என்ற ஹதீஸின் விளக்கம்

கேள்வி:

புஹாரியில் உள்ள “பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்” என்ற ஹதீஸ் மூலமாக முஆவியா ரழியல்லாஹு‌அன்ஹு அவர்கள் காஃபிர் என்பதற்கு தெளிவான ஆதாரம்‌ என்று ராபிழா(ஷிஆ)க்களின் சிலர் கூறுகின்றனர்.இந்த தவறான வாதத்திற்கு இணையத்தில் பதில்கள் ஏதும் இல்லை. தயவுசெய்து இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தவும்

பதில்:

முதலில் நபித்தோழர்கள் விஷயத்தில்
நபியவர்களுடன் தோழமை கொள்வதற்கு அல்லாஹ் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதால் அவர்கள் மீது நல்லெண்ணம் கொள்வது முஸ்லிம்கள் மீது கட்டாய கடமையாகும். அவர்கள் சிறந்த நபியின் சிறந்த தோழர்கள் ஆவார்கள். அவர்களைப் புகழ்வது நமது கடமை. யார் அவர்களை விமர்சிக்கிறாரோ அவனின் மார்க்கத்தில் சந்தேகப்பட வேண்டும்.

அபூ ஸுர்ஆ அர்ராஸி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்களில் ஒருவரை எவராவது விமர்சிப்பதை நீங்கள் கண்டால், அவர் ஒரு வழிகெட்டவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அதற்கான காரணம் நமது பார்வையில் நபி ﷺ அவர்கள் உண்மையானவர், அல்குர்ஆனும் உண்மையானது.

அல்குர்ஆனையும்,ஸுன்னாவையும் எங்களுக்கு எத்திவைத்தவர்கள் நபியவர்களின் தோழர்கள் தான்.

குர்ஆனையும் ஸுன்னாவையும் பொய்யாக்கவே எங்கள் சாட்சிகளான(நபித் தோழர்களை) விமர்சிக்க அவர்கள் விரும்புகிறார்கள் . நபித் தோழர்களை விமர்சிப்பவர்கள் தான் உண்மையில் விமர்சிக்கப்படத் தகுதியானவர்கள். அவர்கள் வழிகேடர்கள் என்று கூறியுள்ளார்கள்.

பார்க்க:இமாம் ஹதீப் அல்பஹ்தாதிக்குறிய “அல்கிபாயா பீ இல்மிர் ரிவாயா ” பக்கம் 49

இரண்டாவதாக;

நபி ﷺ அவர்களின் தோழர்கள்  தாங்கள் குர்ஆன் சுன்னாவை புரிந்துகொண்ட அடிப்படையிலும் தங்களின் இஜ்திஹாதின் அடிப்படையில், தாங்கள் சத்தியத்தில் இருப்பதாக முடிவெடுத்ததால் அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். இதனால் தான் அவர்களுக்கு தாம் செய்தது தவறு என்று தெரிந்தவுடன் அவர்கள் சண்டையிட்டதை நினைத்து வருத்தப்பட்டார்கள்.

வருத்தப்படுவது பாவமீட்சியாகும்(தவ்பா). பாவமீட்சி முன்செய்த தவறுகளை அழிக்கும்.

குறிப்பாக நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களுக்குப் பின் மனிதகுலத்தில் சிறந்த மற்றும் அந்தஸ்தில் உயர்ந்தவர்களான நபித்தோழர்கள் விஷயத்தில் இந்த கருத்தே மிகவும் ஏற்றமானது.

வதந்திகளையும், பொய்யான கருத்துக்களையும் பரப்பி அதன்மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தவர்களால் தான் இந்த சண்டை ஏற்பட்டது என்பதை இந்த விடயத்தை முறையாக ஆராயும் எவரும் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

இந்தச் சண்டையின் போது பல ஸஹாபாக்கள் மக்களிடையே சமாதானத்தைத் தேடியே சென்றனர். சண்டையிடுவது அவர்களுக்கு மிகவும் வெறுப்பாக இருந்தது. ஆனால் அல்லாஹ் என்ன நாடினானோ அதுதான் நடந்தது.

மூன்றாவது

மதீனாவின் பள்ளிவாசல் கட்டப்பட்ட செய்தியைக் கூறும்போது ‘நாங்கள் ஒவ்வொரு செங்கல்லாகச் சுமப்பவர்களாக இருந்தோம். (ஆனால்) அம்மார்(ரழியல்லாஹு அன்ஹு) இரண்டிரண்டு செங்கற்களாகச் சுமக்கலானார். அதைக் கண்ட நபி(ﷺ) அவர்கள் அம்மார் ரழியல்லாஹு அன்ஹூ அவர்களின் மேனியில் படிந்த மண்ணைத் தட்டிவிட்டு ‘பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார்.ஆனால் அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்.’ என்று கூறினார்கள்.

அதற்கு அம்மார்(ரழியல்லாஹு அன்ஹு) ‘அந்தக் குழப்பங்களை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறினார்கள்.
ஸஹிஹுல் புஹாரி : 447

இந்த ஹதீஸில்

“சுவர்க்கத்திற்கு அழைப்பார்” என்பது சுவனத்தில் நுழைய காரணியாக இருக்கும் கலிபா(மூஃமின்களின் தலைவர், இஸ்லாமிய ஆட்சியாளர்)விற்கு கீழ்ப்படிதல் என்பதன் பக்கம் அழைப்பதாகும்.

‘நரகத்திற்கு அழைப்பார்கள்” என்பது அதில்(நரகத்தில்) நுழைய காரணமாக இருக்கும் கலிபாவிற்கு எதிராக கிளர்ச்சி செய்தல், மாறுசெய்தல் என்பதாகும்.

ஆனால் யாரொருவர் இஜ்திஹாத்(ஆய்வு) மூலமாக சத்தியத்தை அடைய முயற்சி செய்து அதை அடையவில்லயோ அவர் மன்னிக்கப்படுபவர் ஆவார்.

அல்ஹாஃபில் இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸ் நபித்துவத்தின் உண்மைக்கான அடையாளங்களில் ஒன்றாகும், நபி (ﷺ) அவர்கள் ‘அம்மார் வரம்பு மீறிய கூட்டத்தால் கொல்லப்படுவார் என்று கூறினார்கள். மேலும் அம்மார் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்களை ஷாம் தேச மக்கள் ஸிஃப்ஃபீன் போரில் (அவர் அலி (ரழியல்லாஹுஅன்ஹு) மற்றும் ஈராக் வாசிகளுடன் இருந்தபோது) கொலை செய்தார்கள்.

ஆனால் அப்போதைய சூழலில் ஆட்சிக்கு முஆவியாவை(ரழியல்லாஹு அன்ஹு) விட அலி( ரழியல்லாஹு அன்ஹு) அவர்களே மிகத் தகுதியானவராக இருந்தார்கள்.

இங்கு முஆவியா ரழியல்லாஹு அன்ஹு-வின் தோழர்கள் வரம்பு மீறியவர்கள் என்று வர்ணிக்கப்படுவது அவர்கள் காஃபிர்கள் என்பதைக் குறிப்பதில்லை, ஏனெனில் ஷியா மற்றும் பிற வழிகெட்ட பிரிவுகளின் அறியாமையை பின்பற்றுபவர்களே இவ்வாறு கூற முயல்கிறனர்.

உண்மையில் அவர்கள் தாம் சத்தியத்தை அடையவேண்டும் என்ற அடிப்படையில் தான் சண்டையிட்டார்கள். ஆனால் சத்தியத்தை அடைய முயற்சிக்கும் அனைவரும் அதை அடைவதில்லை. சத்தியத்தை அடைய முயற்சித்து அதை அடைந்தவருக்கு இரு கூலியும். அதை அடையாதவருக்கு ஒரு கூலியும் உண்டு. ஆனால் அவர்கள் குற்றவாளிகள் கிடையாது.

இந்த ஹதீஸில் “அத்துமீறிய கூட்டம் உன்னை கொலை செய்வார்கள்” என்ற வார்ததைக்கு பிறகு, “அல்லாஹ் அவர்களுக்கு மறுமை நாளில் அவனின் பரிந்துரையை வழங்க மாட்டான்” என்ற வார்த்தைகளை கூடுதலாக சிலர் சேர்த்துள்ளார்கள்.

அவர்கள் அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறாத கூற்றைக்கூறி அவ்விருவர் மீதும் இட்டுக்கட்டியவர்கள் ஆவார்.

“அவர் அவர்களை சுவர்க்கத்திற்கு அழைப்பார், அவர்கள் அவரை நரகத்திற்கு அழைப்பார்கள்” என்ற வார்த்தைகளைப் பொறுத்தவரை, ‘அம்மாரும் அவரது தோழர்களும் சிரியாவில் உள்ள மக்களை நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் அழைத்தனர். ஆனால் அதே நேரத்தில் சிரியா மக்கள் அதிகாரத்திற்கு அதிக உரிமையுள்ளவரிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பினர்.அதற்கு அதிக தகுதியுடைய ஒருவரிடமிருந்து, மக்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். முஸ்லிம்களின் நிலங்களின் ஒவ்வொரு பகுதியும் அதன் சொந்த (தனித்த)ஆட்சியாளரைக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்காக இருந்தது. ஆனால் இது உம்மத்தின் பிளவிற்கும் ஒற்றுமையின்மைக்கும் வழிவகுக்கும். சிரியா மக்கள் இதனை நாடவில்லை என்றாலும் அவர்களின் முடிவு அதைதான் உண்டாக்கும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

பார்க்க:அல்பிதாயா வன்னிஹாயா (4/538)

அல்-ஹாஃபில் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“அம்மார் அவர்கள் அலியுடன் இருந்தபோது ஸிஃப்ஃபீன் யுத்தத்தில் கொல்லப்பட்டார், மேலும் அவரைக் கொன்றவர்கள் முஆவியா தரப்பில் இருந்தவர்கள். ஆனால் அவர்கள் தரப்பில் சில (சுவனத்திற்கு நன்மாராயம் சொல்லப்பட்ட) ஸஹாபாக்கள் இருந்தனர். எனவே அவர்கள்(அனைவரும்) நரகத்திற்கு அழைக்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?”

இதற்குப் பதில்,

தாங்கள் சுவர்க்கத்திற்கு அழைக்கிறோம் என்று அவர்கள் எண்ணியதால் மேலும் அவர்களின் செயல் இஜ்திஹாத் அடிப்படையில் அமைந்ததால், அவர்கள் சிறந்ததாகக் கருதியதைப் பின்பற்றுவதில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை.

மக்களை சொர்க்கத்திற்கு அழைப்பதன் அர்த்தம் என்னவென்றால்,

அதற்கு வழிவகுக்க கூடிய, செயலான ஆட்சியாளருக்குக் கீழ்ப்படித்தலை நோக்கி அவர்களை அழைப்பதாகும்.

அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அடிபணியுமாறு அவர்களை அழைத்த அம்மாரின் நிலைப்பாடு இதுதான்.

அந்த நேரத்தில் கீழ்ப்படிய தகுதியான ஆட்சியாளர் அலி (ரழியல்லாஹு அன்ஹு) தான்.

ஆனால் முஆவியா ரழியல்லாஹு அன்ஹுஅவர்களும் அவருடன் இருப்பவர்களும் அதைத் தவிர வேறொன்றுக்கு மக்களை அழைத்தார்கள்.

ஆனால் அது(தவறாக இருந்தாலும்) அவர்களின் விளக்கத்(இஜ்திஹாத்)தின் அடிப்படையில் அவர்கள் அடைந்த தவறான முடிவுக்கு அவர்கள் மன்னிக்கப்படுகிறார்கள்.

பத்ஹுல் பாரி (1/542) மற்றும் மஜ்மூவுல் ஃபதாவா இமாம் இப்னு தைமிய்யா (4/437)

அதே நேரத்தில் சத்தியத்தை அடைய முயற்சித்து தவறிழைத்தவருக்கும் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துபவருக்கும் மத்தியில் வித்தியாசம் உள்ளது.

அல்லாஹுத் தஆலா தனது திருமறையில் கூறுகின்றான்

முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.
(அல்குர்ஆன் : 49:9)

இவ்வசனம் முஃமின்களுக்கு மத்தியில் சண்டை ஏற்படக்கூடும் என்பதை அறிவிக்கின்றது. ஒரு கூட்டம் மற்ற கூட்டத்தை (போரில்)கொலை செய்ததால் ஈமான் அவர்களை விட்டு நீங்கிவிட மாட்டாது(என்பதை அறியலாம்).

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
(அல்குர்ஆன் : 49:10)

இவ்வசனத்தில் அவர்களுக்கு மத்தியில் சண்டை நிகழ்ந்தாலும் அவர்களை ‘சகோதரர்கள்’ என்று அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். மேலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்யும்படியும் ஏவியுள்ளான்.

இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

அவர்கள் ஒருவருக்கொருவர் தமக்குள் சண்டையிட்டு அத்துமீறல் செய்தாலும், அவர்கள் இன்னும் இறை விசுவாசிகளாகவும் சகோதரர்களாகவும் இருக்கிறார்கள்.மேலும் அவர்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்தும்படி‌ அல்லாஹ் கட்டளையிடுகிறான்.ஆனால் அதற்குப் பிறகு அவர்களில் ஒருவர் வரம்பு மீறினால், வரம்பு மீறிய குழுவுடன் சண்டையிட வேண்டும்.

ஆனால் ஆரம்பத்திலிருந்தே சண்டையிடுவதைக் கட்டளையிடவில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:

ஹவாரிஜ்களை முஸ்லிம்களின் இரு குழுவினர்களில் சத்தியத்துக்கு நெருக்கமானவர்கள் கொலை செய்வார்கள்.

இந்த அடிப்படையில் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அவருடன் இருந்தவர்களுமே அவர்களை கொலை செய்தார்கள்.

அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை விட சத்தியத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்தக் கூற்று அறிவிக்கின்றது.

அதே நேரத்தில் இரண்டு குழுக்களும் இறைவிசுவாசிகளாக இருந்தனர் என்பதையும் இதன் மூலம் அறியலாம்.

மஜ்மூஉல் பதாவா (25/ 305-306)

அபூ ஸஃத் அல்ஹுத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக நெருக்கத்திலிருக்கும் பிரிவினர் அவர்களைக் கொன்றொழிப்பார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 1928.

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்.

(இந்த ஹதீஸில் இருந்து) சண்டை செய்யும் இரு கூட்டத்தினரான, அலி ரலியல்லாஹு அன்ஹுவும் அவருடைய தோழர்கள் மற்றும் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அவரின் தோழர்கள் ஆகிய இரு குழுவும் சத்தியத்தில் இருந்தார்கள். அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களின் தோழர்களும் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அவரின் தோழர்களை விட சத்தியத்திற்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தனர் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது.

மஜ்மூஉல் பதாவா ( 4 / 467 ) ,(4/437-438)

சுருக்கமாக கூறுகையில்,

“அவரை அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர்” என்ற வார்த்தை அவர்கள் காபிர் என்பதற்கு அடையாளம் கிடையாது. அல்லாஹ் பாதுகாப்பானாக எவர்கள் இப்படி கூறுகிறார்களோ அது அவர்களின் மடமையின் வெளிப்பாடாகும்.

“வட்டி சாப்பிடுபவர் நரகத்தில் இருப்பார்”, “அனாதையின் சொத்தை சாப்பிடுபவர் நரகத்தில் இருப்பார்” என்று எச்சரித்து வந்துள்ள ஹதீஸ்கள் போன்ற ஒரு ஹதீஸாகும். இச்செயலை செய்பவர் காபிர் என்பது கிடையாது. மாறாக இச்செயல் ஹராமாகும் இச்செயலை செய்பவர் பெரும் பாவியாவார்

“அவரை அவர்கள் நரகத்துக்கு அழைக்கிறார்கள்” என்ற கூற்று ஹவாரிஜ்களைக் குறிக்கும் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

இப்னு பத்தால் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

“அவர் அவர்களை சுவனத்துக்கு அழைக்கிறார் அவர்களே அவரே நரகத்துக்கு அழைக்கின்றார்கள்” என்ற வார்த்தை ஹவாரிஜ்களை குறிக்கின்றது.ஏனெனில் அவர்களை ஒன்றுபடுவதற்கு தான் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்மார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அவர்களிடம் அனுப்பினார்கள்.

ஸஹாபாக்கள் எவருக்கும் இந்த ஹதீஸ் பொருந்தாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் தூதரின் தோழர்கள் மற்றும் அவர்களுக்கு பல சிறப்புகள் உள்ளன.

அல்லாஹ் கூறுகின்றான்

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்.
(அல்குர்ஆன் : 3:110)

விரிவுரையாளர்கள் கூறுகின்றார்கள்:

இவ்வசனம் அல்லாஹ்வின் தூதரின் தோழர்களை குறிக்கின்றது .சமுதாயம் ஒற்றுமைப்படுவதற்காக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஹவாரிஜ்களிடம் அனுப்பினார்கள் என்பதில் இருந்து இது விளங்கும்.

ஷரஹ் ஸஹிஹுல் புகாரி (2/ 98-99)

[அல்லாஹ் அனைத்து விதமான பித்னாக்களில் இருந்தும் நம்மை பாதுகாப்பானாக]

அல்லாஹ் மிக அறிந்தவன்.


மூலம்: islamqa.info

மொழிபெயர்ப்பு:அஹ்ஸன் அல்கமி (ஆசிரியர் மர்கஸு அல்கமா)
Previous Post Next Post