بسم الله الرحمن الرحیم
باب من أحب البسط فی الرزق
அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதை அல்லது தமது வாழ்நாள் நீட்டிக்கப்படுவதை விரும்பினால் அவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (رضی الله عنه)
ஆதாரம்: ஸஹீஹ் புகாரீ - 2067
முஸ்னது அஹ்மதின் 13309 ஆவது ஹதீஸில் 'உறவைப் பேணி வாழட்டும்' என்பதற்கு முன் "தம் தாய் தந்தைக்கு நன்மை புரியட்டும்" என்றும் காணப்படுகிறது. இதிலிருந்து வாழ்வாதாரம் விசாலமாக்கப்பட வேண்டும்; வாழ்நாள் நீட்டிக்கப்பட வேண்டும் என விரும்பலாம் என அறிய முடிகிறது. (நீண்ட நாள் வாழ, உழைத்துப் பொருளீட்ட வேண்டிய அவசியமும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது).
ஆதாரம்: ஃபத்ஹுல் பாரீ
ஒருவரது வாழ்நாள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட பிறகு, உறவைப் பேணி வாழ்வதால் எப்படி வாழ்நாள் நீட்டிக்கப்படும் என்று சிலர் எண்ணலாம். இதற்கு வளக்கமாவது: "ஒருவரது ஆயுள் 60 ஆண்டுகளாகும். அவர் உறவைப் பேணி வாழ்ந்தால் 40 ஆண்டுகள் அதிகரிக்கப்படும்" என விதியில் எழுதப்பட்டிருக்கும். அவர் உறவைப் பேணுவாரா இல்லையா என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். அதன்படி அவரது முடிவு அமையும். இதையே அல்லாஹ், "அதில் (பதிவேட்டில்) தான் நாடியதை அல்லாஹ் அழிப்பான்; (தான் நாடியதை) அப்படியே வைப்பான் (13:39) என்று குர்ஆனில் கூறுகின்றான். அல்லது வாழ்நாளில் அதிகப்படுத்துவது என்றால், அதில் வளத்தை ஏற்படுத்துவது என்று பொருளாகும். அதாவது, அதிகமான ஆண்டுகளில் ஆற்றுகின்ற சாதனைகளை அவர் தமது குறைந்த வாழ்நாளில் ஆற்றுவார்.
ஆதாரம்: அல் மின்ஹாஜ்
ஃபத்ஹுல் பாரீயில் பின்வருமாறு இதற்கு விளக்கமளி்கப்பட்டுள்ளது: அதாவது, வாழ்நாளில் பயனுள்ள வகையில் செலவிட்டுக் குறைந்த வயதில் நிறைய நன்மைகளைத் தேடிக்கொள்வதற்கான வாய்ப்பு வசதிகள் கிடைக்கும். பயனளிக்கும் கல்வி, நிலையான தர்மம், நல்ல தலைமுறை ஆகியவற்றை அவர் பெறுவார். அதனால் அவர் இறந்துவிட்டாலும் அவரது பெயரும் புகழும் இறக்காது.
ஆதாரம்: ஃபத்ஹுல் பாரீ
நீண்ட காலம் அவரது புகழ் நிலைப்பதால் நீண்ட காலம் வாழ்ந்தவர் போன்று கருதப்படுகிறார்.