கல்வி குறித்து ஸலபுகளின் கூற்றுக்கள்

بسم الله الرحمن الرحیم

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:

கற்றோரும் கல்லாதோரும் சமமாவார்களா? என்று (நபியே!) நீர் கூறுவீராக!அறிவுடையோர் மட்டுமே அறிவுரை பெறுவர்.

[அல் குர்ஆன், 39:9]


1. நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கவாசிகளில் சிலர் நரகவாசிகளில் சிலரை எட்டிப் பார்ப்பர். அப்போது, அந்தச் சொர்க்கவாசிகள் (நரகவாசிகளிடம்), "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலமாகவே நாங்கள் சொர்க்கத்திற்குச் சென்றுள்ளோம். (அவ்வாறிருக்க,) நீங்கள் நரகத்தில் நுழைந்ததற்குக் காரணம் என்ன?" என்று கேட்பர்.

அதற்கு அவர்கள், "நாங்கள் (எல்லாருக்கும்) சொல்லிக்கொண்டுதான் இருந்தோம். ஆனால், நாங்கள் செயல்படவில்லை" என்று கூறுவர்.
[நூல்: இப்னு அசாகிர்]

ஆதாரம்: தஃப்சீர் இப்னு கஸீர்


2.. அல்லாஹ்வின் தூதர் (ﷺ) கூறினார்கள்:

ஒவ்வொரு தலைமுறையிலும் நீதி பேணுகிறவர்களே இந்தக் கல்வியைச் சுமந்து செல்கிறார்கள். அவர்கள்தாம் வரம்புமீறிகளின் திரிபுவாதங்களையும், பொய்யர்களின் அசத்திய வாதங்களையும், மூடர்களின் பொய்யான விளக்கங்களையும் நிராகரிப்பார்கள்.

அறிவிப்பாளர்: அபுத்தர்தா (رضی الله عنه)

ஆதாரம்: முஸ்னது பஸ்ஸார் 9423, மிஷ்காத் அல்மஸாபீஹ் (அல்அல்பானீ - ஸஹீஹ்) 248


3. அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

طَلَبُ العِلمِ فَرِیضَة عَلَی کُلِّ مُسلِم

கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமை.

அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (رضی الله عنه)

ஆதாரம்: சுனன் இப்னுமாஜா - 224, ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் - 72


4. அலீ இப்னு அபீதாலிப் (رضی الله عنه) சொல்கிறார்கள்: 

கல்வி இல்லாதவர்கள் கூட தமக்குக் கல்வி இருப்பதாக வாதிப்பதும், அவர்களைக் கல்வி உள்ளவர்கள் என்றால் மிகிழ்ச்சி அடைவதுமே கல்வியின் அருமைக்குப் போதிய ஆதாரமாகும். மேலும், அறியாமை தன்னிடம் இருக்கக் கூடாது என்று அறியாமையில் இருப்பவர்கள் கூட விரும்புவது, அதன் இழிவுக்குப் போதிய ஆதாரமாகும்.

ஆதாரம்: தத்கிரத் அஸ்ஸாமிஃ வல்முத்தகல்லிம், பக்கம்: 10


5. அபுத்தர்தா (رضی الله عنه) அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் சொன்னார்கள்: 

* யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் போகிறாரோ, அல்லாஹ் அவர் போகிற பாதையைச் சொர்க்கத்தின் பாதைகளில் ஒரு பாதையாக ஆக்குவான்.

* கல்வியைத் தேடுபவர் மீது திருப்தி அடைந்தவர்களாக தங்கள் இறக்கைகளைத் தாழ்த்துகிறார்கள் மலக்குகள்.

* ஓர் அறிஞருக்காக வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள். கடலின் ஆழத்தில் உள்ள மீன்களும் அவருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றன. 

* வணக்கசாலிக்கு முன்பு ஓர் அறிஞருக்கு இருக்கும் சிறப்பு, எல்லா நட்சத்திரங்களுக்கு முன்பு முழு நிலவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றது.

நிச்சயமாக  அறிஞர்கள், நபிமார்களின் வாரிசுகள். நிச்சயமாக நபிமார்கள், தங்கக் காசுகளையோ வெள்ளிக் காசுகளையோ வாரிசுச் சொத்தாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் விட்டுச் சென்ற சொத்து, கல்விதான். யார் அதை எடுத்துக்கொண்டாரோ, அவரே மிகப் பெரிய பங்கை எடுத்துக்கொண்டவர்.

ஆதாரம்: சுனன் அபூதாவூது - 3643


6. முஆது இப்னு ஜபல் (رضی الله عنه) அவர்கள் கூறினார்கள்:

கல்வி (அல் இல்ம்) கற்றுக்கொள்ளுங்கள்.

* அல்லாஹ்வுக்காக அதைக் கற்றுக்கொள்வது இறையச்சமாகும்.

* அதைத் தேடுவது ஒரு வணக்கம்.

* அதை ஒருவருக்கொருவர் சேர்ந்து படிப்பது இறைத்துதி (தஸ்பீஹ்).

* அதை ஆய்வு செய்வது ஜிஹாது.

* அதை அறியாதவருக்குக் கற்றுத் தருவது தர்மம். 

* அதை உரியவர்களிடம் செலவழிப்பது (அதாவது ஆர்வமானவர்களுக்குக் கற்பிப்பது) அவர்களின் நெருக்கத்தைப் பெற்றுத் தரும்.

* தனிமையில் அதுவே துணை; நண்பன்.

* மகிழ்ச்சியின்போது ஆதாரமாக அமையும். துன்பத்தின்போது உதவியாளனாக இருக்கும்.

* நண்பர்களிடத்தில் அமைச்சரைப் போன்றது. அந்நியர்களிடத்தில் உறவினரைப் போன்றது.

* சுவர்க்கப் பாதைக்குக் கலங்கரை விளக்கமானது.

கல்வியைக் கொண்டு அல்லாஹ் சில சமுதாயங்களை உயர்த்தி விடுகிறான்.

நன்மையான விஷயங்களில் அவர்களைத் தலைவர்களாகவும், அனைவரும் அவர்களைப் பின்பற்ற வேண்டிய வழிகாட்டிகளாகவும் ஆக்கிவிடுகிறான்.

ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்ம் வஃபள்லிஹி 1/115


7. அபூ யூசுப் (رحمه الله) கூறுகிறார்கள்:

மக்களே! நீங்கள் தேடும் கல்வியின் மூலம் அல்லாஹ்வை நாடுங்கள். உறுதியாகச் சொல்கிறேன். எந்தச் சபையில் நான் அங்கு அமர்ந்துள்ள மக்களிடம் பணிந்தவனாக எனது எண்ணத்தை ஆக்கிக்கொண்டு அமர்ந்தேனோ, அங்கிருந்து புறப்படும்போது அந்த மக்களைவிட மேன்மையடையாமல் இருக்கவில்லை. எந்தச் சபையில் நான் அங்கு அமர்ந்துள்ள மக்களைவிட என்னை மேலானவனாகக் கருதிக்கொண்டு அமர்ந்தேனோ, அங்கிருந்து புறப்படும்போது அந்த மக்கள் முன் இழிவடையாமல் இருக்கவில்லை.

கல்வியானது பல வணக்கங்களில் ஒரு வணக்கம். அல்லாஹ்வை நெருங்குவதற்கான பல வழிகளில் ஒரு வழி. ஆகவே, ஒருவர் தம் எண்ணத்தைத் தூய்மைப்படுத்திய நிலையில் அதைத் தேடினால், அவருடைய அமல் தூய்மையானதாக, ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆகும். அதனுடைய அருள்வளம் (பரக்கத்) முழுமையாகக் கிடைக்கும். ஆனால் அவர் அல்லாஹ்வுக்காக என்றில்லாமல் வேறு காரணத்திற்காக அதைத் தேடினால், அவருடைய செயல் வீணாகிவிடும். அவரின் வியாபாரம் (அதாவது கல்வியைத் தேடுவது கொண்டு அல்லாஹ்விடம் பெற இருந்த இலாபங்கள்) நஷ்டத்தில் முடியும். ஏன், அவர் எதிர்பார்த்த உலக ஆதாயங்களும் கிடைக்கப் பெறாமல், எதையும் அடையாத நிலைக்கும் அவர் ஆளாகலாம். மொத்தத்தில் அவர் தம் இலக்கை அடைவதில் தோல்வி அடைகிற அதே சமயம், தம் முயற்சிகள் அனைத்தையும் வீணாக்கியவராகவும் ஆகிவிடுவார்.

ஆதாரம்: தத்கிரத் அஸ்ஸாமிஃ வல் முத்தகல்லிம் 69-70


8. இமாம் அவ்ஸாயீ (رحمه الله) கூறுகிறார்கள்:

முஹம்மது (ﷺ) அவர்களின் தோழர்கள் என்னவெல்லாம் அறிவித்தார்களோ, அதுதான் கல்வி. அதற்கு அப்பால் எதுவும் கல்வி இல்லை.

ஆதாரம்: ஜாமிஃ பயானில் இல்ம் வ ஃபள்லிஹி 2/29


9. இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி (رحمه الله) சொல்கிறார்கள்:

கல்வியைத் தேடுவது கட்டாயக் கடமையாகும். இது குறித்து வந்துள்ள அறிவிப்பு ஆதாரப்பூர்வமாக இல்லை என்றாலும் கடமைதான். ஏனெனில், கல்வியைத் தேடுபவர் அவருக்கு அவசியமானதைக் கற்றுக்கொள்வது அவருக்குக் கடமை. அவரின் வுளூ, தொழுகை, அவரிடம் செல்வம் இருந்தால் அவரின் ஸகாத், ஹஜ்ஜு இதுபோன்ற கடமைகளைச் சரியாக செய்து முடிக்க அவருக்குக் கல்வி கட்டாயம்.

மேலும் கூறுகிறார்கள்: ஒருவர்தம் மீது கடமையானக் கல்வியைக் கற்பதற்கு ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தால் அதற்காக அவர்பெற்றோரிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை. ஆனால் உபரியான கல்வியைக் கற்பதற்கு ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தால் அதற்குப் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும்.

ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி வஃபள்லிஹி 1/9


10. இமாம் இப்னுல் கய்யிம் (رحمه الله) அவர்கள் கூறினார்கள்:

கல்வியைத் தடுக்கக்கூடிய விஷயங்கள் ஆறு விஷயங்களாகும்.

1. கேள்வியை விட்டுவிடுதல். (அதாவது கேள்வி கேட்காமல் இருப்பது).

2. செவிதாழ்த்திக் கேட்காமல் அமைதியாக இருத்தல்.

3. தவறான புரிதல்.

4. மனனம் செய்யாமை.

5. அதைப் பரப்பாமலும் பிறருக்குக் கற்றுக்கொடுக்காமலும் இருத்தல். யார் கல்வியைச் சேர்த்து வைத்துவிட்டு, அதனைப் பரப்பமல், கற்றுக்கொடுக்காமல் இருக்கிறாரோ, அவரை அல்லாஹ் மறதியைக் கொண்டு சோதித்துவிடுவான். அதாவது அவரது கல்வியை மறக்கடித்துவிடுவான். இதை நாம் தெளிவாக உணர முடியும்.

6. அதன்படி செயல்படாமல் இருத்தல். அதன்படி செயல்படுதல் அதனை நினைவுபடுத்துவதற்கும் அதனைச் சிந்திப்பதற்கும் காரணமாக அமைகிறது. ஒருவர் அதன்படிச் செயல்படவில்லை என்றால், அதனை அவர் மறந்துவிடுவார்.
Previous Post Next Post