بسم الله الرحمن الرحیم
1. குபைசதுப்னு உக்லா (رحمه الله) சொல்கிறார்:
"ஸஹாபாக்கள் ஒவ்வொருவரையும் நேசிப்பது இறைத்தூதரின் வழிமுறையாகும்."
[ شرح أصول اعتقاد أھل السنت والجماعة ٧:١٢٤٠ ]
2. ஹஸன் (رضی الله عنه) அவர்களிடம்; அபூபக்ர் (رضی الله عنه), உமர் (رضی الله عنه) ஆகியோரை நேசிப்பது ஸுன்னதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு இமாமவர்கள்; இல்லை, அவர்களை நேசிப்பது ஃபர்ழு (அதாவது ஸுன்னத் அல்ல கடமை) என்றார்கள்.
[ شرح أصول اعتقاد أھل السنت والجماعة ٧:١٢٣٩]
3. மஸ்ரூக் (رحمه الله) அவர்கள் சொல்கிறார்கள்:
"அபூபக்ர் (رضی الله عنه), உமர் (رضی الله عنه) போன்றோரை நேசிப்பதும் அவர்களின் சிறப்புகளைத் தெரிந்து கொள்வதும் நபிவழியாகும்.
[ شرح أصول اعتقاد أھل السنت والجماعة ٧:١٢٣٩]
4. இமாம் தஹாவி (رحمه الله) அவர்கள் கூறுகிறார்கள்:
"நாம் நபி (ﷺ) அவர்களின் தோழர்கள் அனைவரையும் நேசிப்போம். அவர்களில் எவர் மீது காட்டும் நேசத்திலும் நாம் கவனக்குறைவாக இருக்கமாட்டோம். அவர்களில் எவரை விட்டும் நாம் நீங்க மாட்டோம், அவர்களை கோபிப்பவர்களை நாம் கோபிப்போம். மேலும் அவர்களை மோசமாக விமர்சிப்பவர்களை நாம் கோபிப்போம். அவர்கள் விடயத்தில் நல்லதையே சொல்வோம். அவர்களை நேசிப்பது மார்க்கம், ஈமான், நல்ல காரியம், அவர்களை கோபிப்பது நிராகரிப்பு, நயவஞ்சகம், எல்லை மீறுதல் ஆகும்."
[العقیدة الطحاویة مع شرحھا لابن أبی العزص ٢٨٩ ]
5. இமாம் இப்னு தைமியா (رحمه الله) அவர்கள் கூறுகிறார்கள்:
"உஸ்மான் (رضی الله عنه), அலீ (رضی الله عنه) போன்ற அனைவரையும் நேசிப்பதும் இவர்கள் இருவரையும் விட அபூபக்ர் (رضی الله عنه), உமர் (رضی الله عنه) ஆகியவர்களை முதன்மைப்படுத்துவதும் ஸுன்னத்தாகும்."
[مجموع الفتاوی ٣: ٤٠٨ ]
6. ஸஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த பிரச்சினைகளில் நாவடக்கத்தோடு நடந்து கொள்ளல்:
ஸஹாபாக்கள் விடயத்தில் குறை காண்பவர்கள் பெரும்பாலும் ஸஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த சில பிரச்சனைகளை சிறந்த ஊடகமாக கையாளுகின்றனர். ஆனால் அஹ்லுஸ்ஸுன்னாக்கள் ஸஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த பிரச்சனைகளில் மௌனிகளாக நாம் இருப்பதுதான் நமது ஈமானுக்கு பாதுகாப்பு என்று கருதுகின்றனர்.
உமர் இப்னு அப்துல் அஜீஸ் (رحمه الله) அவர்களிடம் அலீ (رضی الله عنه), உஸ்மான் (رضی الله عنه), ஸிப்பீன் யுத்தம் தொடர்பாக வினவப்பட்டது. அதற்கவர்கள்; "எனது கரங்களை அந்த ரத்தத்தைவிட்டும் அல்லாஹ் தடுத்துவிட்டான், எனது நாவை அந்த ரத்தத்தில் நனைத்துக்கொள்வதை நான் வெறுக்கிறேன்" என்றார்கள்.
[ابن سعد فی الطبقات ٥/٣٠٧ ]
7. அலீ (رضی الله عنه), முஆவியா (رضی الله عنه) அவர்களுக்கு மத்தியில் நடந்தது பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று இமாம் அஹ்மத் (رحمه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு இமாமவர்கள் "நிச்சயமாக அவர்கள் விடயத்தில் நல்லதைத் தவிர எதையும் சொல்லமாட்டேன். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள்புரிவானாக" என்றார்கள்.
[الخلال فی السنت ١/٤٦٠ ]
8. அபூ உஸ்மான் அஸ்ஸாபூனி (رحمه الله) அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னாக்களின் கொள்கையை தெளிவுபடுத்தும் போது சொல்கிறார்கள்:
"நபி (ﷺ) அவர்களின் தோழர்களுக்கு மத்தியில் நடந்தவற்றில் நாம் மௌனமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுவதோடு, ஸஹாபாக்களைக் குறைகாணும் விதத்திலோ அல்லது அவர்களைக் குறைத்து மதிப்பிடும் விதத்திலோ பேசுவதிலிருந்தும் எமது நாவுகளைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். மேலும் ஸஹாபாக்கள் அனைவரையும் நேசிக்க வேண்டும். அவர்கள் அனைவருக்காகவும் அருள் வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும் என்று கருதுகின்றனர்."
[عقیدة السلف اصحاب الحدیث ص ٢٩٤ ]
9. அல் காழி அபூபக்ர் இப்னுல் அரபி (رحمه الله) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
"ஹவாரிஜ்கள் இரண்டு வகை:
* ஒரு குழுவினர், "உஸ்மான் (رضی الله عنه), அலீ (رضی الله عنه), ஜமல் போரில் கலந்து கொண்டவர்கள், ஸிப்பீன் போரில் கலந்து கொண்டவர்கள், தீர்ப்புக்காக ஏற்படுத்தப்பட்ட அந்தக்குழுவை ஏற்றுக்கொண்டு பொருந்தியவர்கள் அனைவரும் காபிர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
* மற்றைய குழுவினர், யாரெல்லாம் பெரும் பாவம் செய்கிறாரோ அவர்களெல்லாம் காபிர்கள், நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
மற்றும் சில அறிஞர்கள் இமாம் இப்னுல் அரபி சொல்கின்ற முதலாவது குழுவினர் இரண்டாம் குழுவிலிருந்தே தோற்றம் பெற்றனர் என்று குறிப்பிடுகின்றனர். ஏனெனில் முதல் குழுவினர் ஸஹாபாக்களில் அதிகமானவர்களைக் காபிர்கள் என்று சொல்வதற்கு காரணம் அவர்கள் (ஸஹாபாக்களை) பெரும் பாவம் செய்தனர் என்று நினைப்பதாகும்."
[ فتح الباری ١٢/٢٨٥ ]
10. முஸ்தபா அஸ்ஸிபாஈ (رحمه الله) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
"ஹவாரிஜ்களின் அத்தனை பிரிவுகளுமே பிரச்சனை (- உஸ்மான் (رضی الله عنه) அவர்களின் கொலை -) நடப்பதற்கு முன் எல்லா ஸஹாபாக்களையும் நல்லவர்களாகவும் நம்பகமானவர்களாகவுமே கருதினர். பின்பு அலீ (رضی الله عنه), உஸ்மான் (رضی الله عنه), ஜமல்யுத்தத்தில் கலந்து கொண்டவர்கள், அதிலே நியமிக்கப்பட்ட இரண்டு நடுவர்கள், அதைப் பொருந்திக்கொண்டவர்கள், இரு நடுவர்களையும் அல்லது அவர்களில் ஒருவரை சரிகண்டோர், அனைவரையும் காபிர்கள் என்றனர். இதனாலேயே அதிகமான ஸஹாபாக்களின் ஹதீஸ்களை; அவர்கள் பிரச்சனையின் போது தீர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட முயற்சியை பொருந்திக் கொண்டதனாலும், அந்த ஹலீபாக்களை பின்பற்றியதனாலும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஏனெனில் அவர்கள் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளுமளவிற்கு நம்பகமானவர்கள் அல்ல என்று கருதினர்."
[ السنة ومکانتھا فی التشریح الإسلامی ١٥٠،١٥١]
11. அப்துல் காதிர் ஷபீஹ் அல்-ஹம்தி (رحمه الله) அவர்கள் ஹவாரிஜ்களின் பிரிவுகளை குறிப்பிட்டுவிட்டு கூறுகிறார்கள்:
"அலீ (رضی الله عنه), உஸ்மான் (رضی الله عنه), இரண்டு நடுவர்கள், நடுவர்கள் ஏற்படுத்துவதை பொருந்திக்கொண்டவர்கள், அந்த நடுவர்களில் இருவரின் தீர்ப்பையோ அல்லது ஒருவரின் தீர்ப்பையோ ஏற்றுக்கொண்டவர்கள். இவர்கள் அனைவரையும் காபிர்கள் என்று சொல்வதில் அவர்களின் எல்லாப்பிரிவுகளும் ஒற்றுமைப்படுகின்றன. அது போல் அநியாயம் செய்கின்ற அரசனுக்கு எதிராக போராடவேண்டும் என்பதிலும் ஒற்றுமைப்படுகின்றனர். ஹவாரிஜ் மாத்திரம் அந்த அரசனை அநியாயக்காரன் என்று கண்டாலும் சரியே."
[ الأدیان والفرق والمذاھب المعاصرة : ١.٤ ]