என்னைப் பிரமிக்க வைத்த பின்னிரவுத் தொழுகையின் ஆச்சரிமான மகிமைகள்

ஐவேளை தொழுகைக்கான அழைப்பு மனிதனின் குரலினால் (அதான்) விடுக்கப்படுகிறது. ஆனால் பின்னிரவு வணக்கத்திற்கான அழைப்பு வல்ல ரஹ்மான் அல்லாஹ்வினால் விடுக்கப்படுகிறது.

ஐவேளைத் தொழுகைக்கான அழைப்பை அனைத்து மனிதர்களும் செவியுறலாம். ஆனால் பின்னிரவுத் தொழுகைக்கான அழைப்பை சில மனிதர்களால் (முஃமின்கள்) மாத்திரமே உணர முடியும்.

ஐவேளைத் தொழுகை "வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்" என்பதாக அழைப்பு விடுக்கும். பின்னிரவுத் தொழுகைக்கான அழைப்பு "என்னிடம் கேட்பவர் உண்டா? நான் வழங்கக் காத்திருக்கிறேன்" என்பதாக இருக்கும்.

ஐவேளைத் தொழுகையை பெரும்பாலும் முஸ்லிம்கள் நிறைவேற்றுகின்றனர். 
பின்னிரவுத் தொழுகையை அல்லாஹ் தேர்ந்தெடுத்த ஒரு சில முஃமின்கள் மாத்திரமே நிறைவேற்றுவர்.

ஐவேளைத் தொழுகையை முகஸ்துதி, உலக இலாபம், சூழல் நிர்ப்பந்தம் போன்ற காரணங்களால் பலர் நிறைவேற்ற வேண்டியுள்ளனர். 

ஆனால் யாரும் அவதானிக்கமுடியாத, அல்லது அவதானிப்பதற்கு சிரமமான நேரமான அனைவரும் ஆழ்ந்து உறங்கும் நேர்த்தில் இறையச்சமும், இக்லாஸும் நிறைந்த ஒரு முஃமினால் மாத்திரமே பின்னிரவுத் தொழுகையை நிறைவேற்ற முடியும்.

ஐவேளைத் தொழுகை உலகின் பரபரப்பு மற்றும் சோலிகளுக்கு இடைநடுவில் நிறைவேற்றப்படுவதால் மனதை ஒருநிலைப்படுத்தி சற்று ஆறியமர்ந்து நிறைவேற்றுவது ஒப்பீட்டளவில் சிரமம். அதேநேரம் பரபரப்பு அடங்கிய உலக சோலிகளிலிருந்து விடுபட்ட நேரமான பின்னிரவு நேரத் தொழுகை மனக்கட்டுப்பாடு,உளத்தூய்மைக்கு நெருக்கமாகவும் ஷைத்தானின் ஊசலாட்டங்கள் போன்றவற்றிலிருந்து ஒப்பீட்டளவில் தூரமாகவும் உள்ள சாந்தமான நேரமாகும்.

"கேளுங்கள், கொடுப்பதற்கு காத்திருக்கிறேன்" என்ற வாக்குறுதி பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதை கட்டாயமாக்குகிறது. ஐவேளைத் தொழுகைகளின் பிரார்த்தனைகளுக்கு இவ்வாக்குறுதி இல்லை.

இறுதியாக எவரது முறைப்பாடுகளையும் கவலைகளையும் துயரங்களையும் செவியேற்கவும், வேண்டுதல்களை நிறைவேற்றவும் அல்லாஹ் நாடுகிறானோ அவருக்கே பின்னிரவில் கண்விழித்து வுழூ செய்து தொழவும், இஸ்திஃபார் செய்யவும், திக்ரு ஸலவாத்தில் ஈடுபடவும் ஸுஜூதில் விழுந்து மன்றாடவும் தொழுகையில் நின்று உரையாடவும் அல்லாஹ் அருள்பாளிக்கிறான்.

எனவே இப்பெரும் பாக்கியத்தை எமக்கு நாமே தடுத்து துர்ப்பாக்கியம் அடைந்து கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்வது நமது முயற்சியில் தங்கியுள்ளது.

முக்கிய குறிப்பு: கடமைக்கே முதற் சிறப்பு, ஐவேளைத் தொழுகையை பேணாத ஒருவர் இரவுத் தொழுகையின் சிறப்பை அடையமுடியாது.

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 இரவின் மூன்றாம் பகுதி எஞ்சியிருக்கும் போது எமது இரட்சகன் ஒவ்வொரு இரவிலும் இவ்வுலகின் (முதலாம்) வானத்திற்கு இறங்குகிறான். 

(இறங்கியதும்) யார் என்னை அழைப்பது? அவருக்கு நான் அவரது வேண்டுதலை நான் ஏற்கிறேன்.

யார் என்னிடம் கேட்பது? அவருக்கு நான் கொடுக்கிறேன். 

யார் என்னிடம் பாவமீட்சி கோருவது? அவரை நான் மன்னிக்கிறேன். 

என்று கூறுகிறான்.
புகாரி: 1145, முஸ்லிம்: 758

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "يَنْزِلُ رَبُّنا تَبارَكَ وتَعالَى كُلَّ لَيْلةٍ إلى السَّماءِ الدُّنْيا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ، يقولُ: مَن يَدْعُونِي، فأسْتَجِيبَ له؟ مَن يَسْأَلُنِي فأُعْطِيَهُ؟ مَن يَستَغْفِرُني فأغْفِرَ له؟"
 أخرجه البخاري (1145)، ومسلم (758)

Previous Post Next Post