சூரியன் உதிக்கும் நாட்களிலேயே சிறந்த நாள்

சூரியன் உதிக்கும் நாட்களிலேயே சிறந்த நாளான வெள்ளிக்கிழமை பொழுது சாய்ந்துகொண்டிருக்கிறது. 

வெள்ளிக்கிழமை நாளில் ஒரு குறித்த நேரமிருக்கிறது, அந்நேரத்தில் கேட்கப்படும் துஆவை அல்லாஹ் அங்கீகரிக்காமல் இருக்க மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுரைத்தார்கள் 

பார்க்க: (புஹாரி மற்றும் முஸ்லிம்)

அந்த நேரமானது அஸர் தொழுகையின் கடைசி நேரம், அதாவது மஃரிப் தொழுகைக்கு சற்று முன்னதான நேரமென ஹதீஸில் பதிவாகியுள்ளதுடன், அதுவே அதிகமான இமாம்களுடைய கருத்தாகவும் இருக்கிறது. 

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மற்றும் இமாம் இப்னுல் கைய்யிம் அல்-ஜவ்ஸிய்யஹ் (ரஹ்) ஆகிய இருவரும்கூட, குறித்த நேரமானது அஸருடைய இறுதி நேரமென வலுவாகக் கூறுகின்றனர். 

மேலும், இது ஒரு குறுகிய நேரப்பகுதி என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது. 

இன்றைய நாளுக்கான அந்நேரத்தை நாம் தற்போது நெருங்கிக்கொண்டிருக்கிறோம். அல்லாஹ்விடத்தில் தன்னுடைய பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதை விட சிறப்பும், அகமகிழ்வும் ஒரு மனிதனுக்கு வேறு என்ன இருக்கப்போகிறது? 

மஃரிபுடைய தொழுகைக்கு சுமார் 30-20 நிமிடங்கள் முன்பதாக அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து, அல்லாஹ் ‘என்னுடைய பிரார்த்தனையை நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்போகிறான்’ என்ற திடமான உளவுறுதியுடன், கிப்லாவை முன்னோக்கி இரு கரமேந்திப் பிரார்த்திக்கின்றபோது வல்ல ரப்புல் ஆலமீன் நிச்சயமாகக் கொடுத்தருளத்தான் போகிறான்.

இந்நேரத்தில் கேட்கப்படக்கூடிய துஆ அல்லாஹ்விடத்தில், அவன் நாடினால், நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும்; இம்மை மற்றும் மறுமை வெற்றிக்கு அவசியமானவற்றைக் கேட்டுப் பிரார்த்திப்பதற்கு இந்தப் பொன்னான நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வோம்!

- எம். எஸ். எம். ரஸ்மி


أحدث أقدم