அல்லாஹ் பற்றிய வர்ணனைகள், அவனது பண்புகள் தொடர்பில் ஒரு முஸ்லிமின் அகீதா

அல்லாஹ்வின் பண்புகள், அவனை  பற்றிய வர்ணனைகள் அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் எவ்வாறு கூறப்பட்டுள்ளனவோ அவ்வாறே அவற்றை எந்த மாற்று விளக்கமின்றி, ஒப்புவமை கூறாமல், உதாரணம் காட்டாமல்  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே பிரதான  நான்கு மத்ஹபுகளின் இமாம்கள் உட்பட  நேர்வழி நடந்த இமாம்களின்  கொள்கையாகும் . நான்கு மத்ஹப் இமாம்களின் கூற்றுகளுள் சில :

இமாம் அபூஹனீபா (றஹ்) :

1. அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பிடக்கூடாது. அல்லாஹ் கோபப்படுகிறான், அவன் திருப்தியடைகிறான் என்பவை அவனது பண்புகளாகும். அவனது கோபம் என்பதை அவனது தண்டனை என்றோ, அவனது பொருத்தம் என்பதை அவனது வெகுமதி என்றோ மாற்று விளக்கம் கூறக்கூடாது..அல்லாஹ்வின் கை, அல்லாஹ்வின் முகம் என்பவற்றுக்கும் மாற்று விளக்கம் கூறாமல் ஏற்றுகொள்ள வேண்டும். ஆனால் படைப்புகளின் கை, முகம் என்பவை போன்று அல்லாஹ்வின் கை, முகம் என்பவற்றை கற்பனை செய்துவிடக்கூடாது (நூல் : 'அல்பிக்ஹுல் அப்ஸத்' , 302).

2. அல்லாஹ் வானத்தில் இருக்கிறானா, பூமியில் இருக்கிறானா என்பது தெரியாது என்று கூறுபவன் அல்லாஹ்வை நிராகரித்தவனாவான்; இவ்வாறே அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான், ஆனால் அர்ஷ் என்பது வானிலுள்ளதா, பூமியிலுள்ளதா என்பது தெரியாது என்று கூறியவனும் அல்லாஹ்வை நிராகரித்தவனாவான் (நூற்கள் : 'அல்பிக்ஹுல் அப்ஸத்' /49, 'அல்உலுவ்வு'/101).

((அதாவது அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலுள்ள அர்ஷில் இருக்கிறான் என்று குர்ஆனும் ஸுன்னாவும் தெளிவாக குறிப்பிடும் போது, அர்ஷ் வானத்திலுள்ளதா, பூமியிலுள்ளதா என்று சந்தேகப்படுவது அல்லாஹ்வை நிராகரிப்பதாகும் என்பதே இமாம் அவர்களின் கூற்றின் சாரமாகும்)).

3. அல்லாஹ் அர்ஷில் நிலைபெற்றிருக்கிறான் என்பது அவனுக்கு அது தேவை என்பதனால் அல்ல, அவ்வாறு நிலைபெற்றிருப்பது அவனது தனிப் பெரும் பண்புகளில் ஒன்றாகும் (நூல் : 'ஷர்ஹுல் வஸிய்யஹ்' /10)

இமாம் மாலிக் (றஹ்) :

1. அல்லாஹ் வானத்தில் இருக்கிறான். ஆனால் அவன் அனைத்து இடங்களில் உள்ளதையும் நுணுகி அறிகிறான் (நூல் : ' மஸாஇலுல் இமாம் அஹ்மத்/263).

2. ஜஃபர் இப்னு அப்தில்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் : நாங்கள் இமாம் மாலிக் (றஹ்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது ஒருவர இமாம் அவர்களிடம் வந்து 'அல்லாஹ் அர்ஷில் நிலைபெற்றிருக்கிறான்' என்ற அல்குர்ஆன் வசனத்தின் விளக்கம் என்ன? என்று கேட்டார். அதற்கு இமாம் மாலிக்  அவர்கள் ' அல்லாஹ் அர்ஷில் நிலைபெற்றிருக்கிறான் என்பது அறியப்பட்ட விடயமாகும். எப்படி இருக்கிறான் என்பது அறிய முடியாத விடயம். ஆனால் அதை நம்புவது வாஜிப். அது பற்றி கேள்வி எழுப்புவது பித்அத் ஆகும்' என்று கூறினார்கள் (நூற்கள் : 'ஹில்யதுல் அவ்லியா', 6/325,
'அத்தம்ஹீத்' , 7/151).

இமாம் ஷாபிஈ (றஹ்) :

1. அல்லாஹ் வானத்தில் அர்ஷில் இருக்கிறான். அவன் விரும்பியவாறு தனது படைப்புகளிடம் நெருங்குகிறான். அவன் விரும்பியவாறு அடி வானத்துக்கு இறங்குகிறான் (நூற்கள் : ' இஜ்திமாஉல் ஜுயூஷில் இஸ்லாமிய்யா'/165, 'அல்உலுவ்'/120).

2. அல்லாஹ்வின் பண்புகள் பற்றியும் அவற்றை நம்பும் முறை குறித்தும் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் 'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்களும் பண்புகளும் உள்ளன. அவற்றை அவனது வேதமும் அவனது தூதரின் மொழிகளும் நிரூபிக்கின்றன. அல்லாஹ்வின் பண்புகளை ஏற்க மறுக்கும் ஒருவரிடம் ஆதாரங்களை முன்வைத்த பின்னரும் கூட அவற்றை மறுத்தால் அவர் அல்லாஹ்வை நிராகரித்தவர் ஆவார். 

அல்லாஹ்வுக்கு இரு கைகள் உள்ளன. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: 'அல்லாஹ்வின் இரு கைகளும் விரிக்கப்பட்டுள்ளன' (5:64). அவனுக்கு வலது கை உண்டு. அல்லாஹ் கூறுகிறான் : 'வானங்கள் அவனது வலக்கையில் சுருட்டப்பட்டிருக்கும்' (39:67).
அவனுக்கு பாதம் இருக்கிறது. ஏனெனில் நபியவர்கள் கூறினார்கள் : ' அல்லாஹ் தனது பாதத்தை நரகின் மீது வைப்பான்' (புஹாரி). அல்லாஹ்வுக்கு விரல்கள் உள்ளன. நபி கூறினார்கள் : ' எந்த உள்ளமும் அல்லாஹ்வின் இரு விரல்களுக்கிடையில் உள்ளது' (முஸ்னத் அஹ்மத்).

அல்லாஹ்வை பற்றிய இத்தகைய வர்ணனைகளையும் அவனது பண்புகளையும் நாம் உண்மையானவை என ஏற்றுக்கொள்கிறோம். அவை எப்படி, என்ன அமைப்பில் இருக்கும் என்று கற்பனை செய்து கூற முடியாது. நாம் அவற்றை எதற்கும், யாருக்கும் ஒப்பிட்டும் கூற மாட்டோம்' (நூற்கள் : ' தம்முத் தஃவீல்' /124, ' அத்தபகாத்',1/283, 'ஸியரு அஃலாமிந் நுபலா' ,10/79).

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (றஹ்) :

1. அல்லாஹ் விரும்பியவாறு, அவன் விரும்பிய அமைப்பில் அர்ஷில் இருக்கிறான் என்று நாம் ஈமான் கொள்கிறோம்  (நூல் : 'தர்உ தஆருழில் அக்லி வந்நக்ல்', 2/30).

2. அல்லாஹ் தன்னைப் பற்றி அவனது வேதத்தில் எவ்வாறு வர்ணித்திருக்கிறானோ அவ்வாறே வர்ணியுங்கள் (நூல் : 'ஸியரு அஃலாமிந் நுபலா', 10/591).

3. மறுமையில் அல்லாஹ்வை கண்களால் காணமுடியாது என கூறுபவன்  அல்லாஹ்வை நிராகரித்தவனும் அல்குர்ஆனை பொய்ப்பித்தவனுமாவான் (நூல் : 'தபகாதுல் ஹனாபிலா', 1/145).

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
أحدث أقدم