'துல்ஹஜ் பிறையை நீங்கள் கண்டு, உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க எண்ணினால், துல்ஹஜ் முதலாவது பிறை தொடக்கம் உழ்ஹிய்யா பிராணியை அறுக்கும் வரை தனது முடி, நகம் என்பவற்றை அகற்றுவதை தடுத்துக்கொள்ளவும்' (முஸ்லிம், திர்மிதி).
மேற்படி ஹதீஸிலிருந்து பெறப்படும் சட்டங்கள் :
1. உழ்ஹிய்யா நிறைவேற்றுபவர் முடி, நகம் அகற்றகூடாது என்ற தடை ஹராம் என்ற வகையிலான தடையல்ல என்ற போதிலும் தவிர்ந்துகொள்ள வேண்டிய ஒரு காரியமாகும்.
2. உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற நினைத்திருப்பவர் (குடும்பத் தலைவர்) மாத்திரமே தனது முடி, நகம் என்பவற்றை அகற்றுவது கூடாது.
3. அவரது மனைவி, பிள்ளைகள், குடும்பத்திலுள்ளோர்முடி, நகம் அகற்றுவதில் தடையேதும் இல்லை. மேற்படி ஹதீஸில் நபியவர்கள் குடும்பத்திலுள்ளோருக்கு முடி, நகம் அகற்றுவதற்கு தடை விதிக்கவில்லை.
4. ஒருவர் தவறுதலாக அல்லது மறதியாக முடி, நகங்களை அகற்றினால் அதனால் குற்றமேதும் இல்லை. அதற்கு குற்றப்பரிகாரம் நிறைவேற்ற வேண்டிய அவசியமுமில்லை.
5. அத்தியாவசியத் தேவை அல்லது காயம் போன்றவற்றுக்காக முடி, நகம் அகற்றுவதில் தடை ஏதும் இல்லை.
6. துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து சில நாட்கள் கடந்த பின்னரே உழ்ஹிய்யா நிறைவேற்ற ஒருவர் முடிவுசெய்தால் அவர் முடிவுசெய்த கணத்திலிருந்து உழ்ஹிய்யா நிறைவேற்றும் வரை முடி, நகம் அகற்றமாட்டார். ஏற்கனவே சில நாட்கள் அகற்றியதில் குற்றமில்லை.
7. ஒருவர் தனது உழ்ஹிய்யா பிராணியை வழங்குவதற்கு இன்னுமொருவரை பொறுப்பாக்கினால், பொறுப்பாக்கிய பிராணியின் உரிமையாளரே முடி, நகம் அகற்றகூடாது. பொறுப்பாக்கப்பட்டவர் முடி, நகம் களைவதில் குற்றமில்லை. ஏனெனில் அவர் இன்னொருவரின் பொறுப்பை நிறைவேற்றும் ஒருவரேயன்றி, பிராணியின் உரிமையாளர் அல்ல.
பார்க்க :
1. அல்மஜ்மூஃ : இமாம் நவவி (ரஹ்)
2. மஜ்மூஉ பதாவா : ஷெய்க் பின் பாஸ் (ரஹ்)
3. மஜ்மூஉ பதாவா : ஷெய்க் இப்னு உதைமீன் (ரஹ்)
4. தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா : ஷெய்க் ஆதில் பின் யூஸுப்
5. அஷ் ஷர்ஹுல் மும்திஃ : ஷெய்க் இப்னு உதைமீன் (ரஹ்)
ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)