– மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ
1) நபியவர்களிடம் பிராத்தித்தல் அல்லது தனது கஷ்டத்தை போக்குமாறு, தனது தேவையை நிறைவு செய்து தருமாறு உதவி தேடி வேண்டுதல் வைத்தல் ஆகிய அனைத்தும் அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்கப்பட வேண்டியவைகளாகும். காரணம் பிரார்த்தனை எமது மார்க்கத்தில் ஒரு வணக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நபியவர்களே பின்வருமாறு கூறினார்கள் ‘ துஆ (பிரார்த்தனை) அது ஒரு வணக்கமாகும்.’ அபூதாவூத், திர்மிதி.
எனவே வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்யப்பட வேண்டியதாகும். இது அல்லாஹ்வுக்குக் கொடுக்கக் கூடிய உரிமை. இதனை யாராவது மற்றவர்களுக்கு கொடுத்து விடுவாரேயானால் அவர் அல்லாஹ்வின் உரிமையில் கை வைத்தவர் ஆகிவிடுவார். அதே வேலை இவ்வாறு அல்லாஹ் அல்லாதவரை அழைத்து பிராத்திக்கும்போது (அது நபியாக இருந்தாலும்) அல்லாஹ்வோடு நபியை இணையாக்கி விட்டோம் என்ற அல்லாஹ் மன்னிக்காத ஷிர்க் என்ற பாவத்தை செய்தவர்களாக கணிக்கப்பட்டு விடுவோம்.
நபியவர்கள் கூட எங்களைப் போன்று சாதாரணமாக தனது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டிருக்கின்றார்கள். பொதுவாக கப்ரிலே அடங்கப்பட்டிருக்கின்ற யாரிடமும் எமது தேவையை முன்வைக்க முடியாது. நபியவர்கள் கப்ரிலே ‘பர்ஸஹ்’ (திரையிடப்பட்ட வாழ்கையில்) இருக்கின்றார்கள். இவ்வாழ்கை எவ்வாறு இருக்கும் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரியும். இந்த ‘பர்ஸஹ்’; உலக வாழ்க்கைகும் நாம் அனைவரும் எழுப்படும் மறுமை வாழ்க்கைக்கும் இடைப்பட்ட ஒரு வித்தியாசமான வாழ்க்கையாகும்.
எனவே உயிரோடு நபியவர்கள் இருக்கும் போது ஸஹாபாக்கள் நபியவர்களிடம் சென்று யா ரஸுலுல்லாஹ் எனக்காக அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள் என்று கேட்டதை ஆதாரமாக கொண்டு நாமும் எமது தேவையை நபியவர்களிடம் சென்று கேட்க்க முடியாது. காரணம் இப்பொழுது நபியவர்கள் இருக்கும் வாழ்க்கையை நாம் யாருமே அறியமாட்டோம். அதே வேலை பிரார்த்தனை என்ற வணக்கத்தை அல்லாஹ் அல்லாதவரிடம் செய்ய முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதே வேலை மதீனாவில் இருக்கூடிய சில இடங்களை மக்கள் தாமாகவோ அல்லது தமது உலமாக்கள் மூலமாகவோ இது பாத்திமா (ரழி)யின் கபுரு, இது அலி (ரழி) யின் கப்ர், இது இன்ன ஸஹாபியின் கப்ர் என்று நினைத்துக் கொண்டு அந்த இடங்களுக்குச் சென்று அவர்களிடம் தமது தேவைகளை கடிதங்களில் எழுதி கட்டி வைப்பதும் அல்லது துனிகளில் வைத்து கட்டி வைப்பதையும் காண்கின்றோம்.
(மொழி பெயர்ப்பாளனின் அனுபவம்: 2009ம் ஆண்டு ஹஜ்ஜின் போது ‘ஹன்தக்’ பிரதேசத்தில் ஹாஜிகளுக்கு மொழிபெயர்பாலனாக கடமையாற்றிய போது அல்லாஹ்வை மறந்து ஸஹாபாக்களிடம் தமது தேவைகளான நோய், காதல் பிளவு போன்றவற்றை முறையிட்டு எழுதியிருந்த கடிதங்களை கண்கூடாக பார்க்கக் கிடைத்தது.) எனவே இது மிகப் பெரும் ஷிர்க் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
2) நபியவர்களின் கப்ர் இருக்கும் இடத்திற்கு செல்லும் போது இரண்டு கைகளையும் நெஞ்சிலே வைத்து தொழுகையில் நிற்பது போன்று நிற்பது கூடாது. அல்லாஹ்வின் முன்னிலையில் மாத்திரம் தான் இவ்வாரு சிறுமையாக பணிவை வெளிக்காட்டி தொழுகையில் நிற்க வேண்டும். நபியவர்களுடைய தோழர்கள் நபியவர்களுடைய கப்ரை தரிசிக்க வரும் போது இவ்வாறு இரு கைகளையும் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு வரவில்லை. இச்செயலின் மூலம் நன்மை கிடைக்கும் என்றால் ஸஹாபாக்கள் நிச்சயமாக செய்திருப்பர். எனவே நாமும் இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
3) நபியவர்களது கப்ரை சூழவுள்ள சுவரை அல்லது ஜன்னல்களை தடவுதல் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு செயலாகும். இவ்வாரான ஒரு வழிகாட்டலை நபியவர்கள் எமக்கு போதிக்கவில்லை. அதே வேலை எமக்கு முன்னிருந்தவர்கள் கூட இவ்வாறு தொட்டு முகர்ந்து கொள்ளவில்லை. மாறாக இது எம்மை ஷிர்க் எனும் இணைவைத்தலுக்கு அழைத்துச் சென்று விடும். இவ்வாறு செய்யக் கூடியவர்கள் நபியவர்கள் மீதுள்ள அன்பினால் நான் இவ்வாறு செய்கின்றேன் எனலாம். ஆனால் நபியவர்கள் மீதுள்ள அன்பு ஒவ்வொரு முஸ்லிமினதும் உள்ளத்தில் இருக்க வேண்டும். தனது பிள்ளைகள், பெற்றோரை விடவும் நபியவர்களை அன்பு வைக்க வேண்டும். ஆனால் அந்த அன்பை இவ்வாறு சுவரை, ஜன்னலை தொட்டு முகர்ந்து வெளிப்படுத்த முடியாது. அன்பை ஒரு முஸ்லிம் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்றால் நபியவர்களை முழுமையாக பின்பற்றுவதன் மூலம் தான் அல்லாஹ்வின் அன்பைக் கூட பெறமுடிகின்றது.
அல்லாஹ் இதனை பின்வருமாறு கூறுகின்றான்.
(நபியே!) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும் அல்ல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (ஆல இம்ரான்-31)
நபியவர்களை நல்ல முறையில் பின்பற்றுவதன் மூலமாகத்தான் அவர்களது அன்பையும் அல்லாஹ்வின் அன்பையும் பெறமுடிகின்றது என்பதை மேற்படி வசனத்தின் மூலம் விளங்கலாம். நபியவர்களின் மீது அன்பு வைத்தலைப் பற்றி பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன. ‘யார் ஒருவர் தனது தந்தை, பெற்றோர், பிள்ளைகள் மற்றும் உலக மக்கள் அனைவரையும் விடவும் என்னை நேசிக்காதவரை முஃமினாக மாட்டார்.’ புகாரி, முஸ்லிம்.
இதை விட ஒருபடி மேலேரி உமர் (ரழி) அவர்களுக்கு தனது உயிரை விட என்னை நேசிக்க வேண்டும் என்று நபியவர்கள் வழிகாட்டினார்கள். புகாரி.
காரணம் நாம் இன்று முஸ்லிமாக இருக்கின்றோம் என்றால் அதற்கு நபியவர்களைக் கொண்டுதான் அந்த பாக்கியத்தை அல்லாஹ் எமக்கு வழங்கியுள்ளான். உலகில் இருக்கக்கூடிய மார்க்கங்களில் உண்மையான மார்க்கத்தை பின்பற்றுவது மிகப் பெறும் அருட்கொடையாகும். எனவே இந்த அருட்கொடையை நபியவர்களின் மூலமாக பெற்ற நாம் அவர்கள் காட்டித்தந்த மார்க்கத்தை தூயவடிவில் பின்பற்ற வேண்டும். எமது இபாதத்துக்களை அவர் சொல்லித்தந்த அமைப்பிலே மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் நபியை நேசிப்பவராக முடியும். ஒருவரை நேசிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு அவருக்கு மாறு செய்யும் போது அது அவர் மீது வைத்துள்ள உண்மையான நேசமாக முடியாது. அவரை ஏமாற்றுவதாகத் தான் இருக்க முடியும்.
இஸ்லாத்திலே எந்த ஒரு செயலும் நல்ல அமல் என்ற அந்தஸ்தை அடைய வேண்டும் என்றால் மேலும் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றால் அதற்கு இரு நிபந்தனைகள் இருக்கின்றன.
1) செய்யக் கூடிய செயல் அல்லாஹ்வுக்காக மட்டும் என்ற தூய எண்ணம் (இஹ்லாஸ்)
2) குறித்த செயல் நபியவர்கள் காட்டித்தந்த அடிப்படையில் எந்த கூட்டல் குறைத்தலும் இல்லாமல் செய்தல் (முதாபஆ)
இவை இரண்டில் ஏதாவது ஒன்றில் குறை ஏற்படும் போது குறித்த செயலை எவ்வளவு பிரயத்தனங்களுக்கு மத்தியில் செய்திருந்தாலும் அதற்கு அல்லாஹ்விடத்திலே எந்த பெருமதியும் இல்லாது போய்விடும்.
ஆல இம்ரான் அத்தியாயத்தின் 31ம் வசனமாகிய
(நபியே!) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
இவ்வசனத்தை சில அறிஞர்கள் சோதனையான வசனம் என்கிறார்கள். இமாம் ஹஸனுல் பஸரி அவர்கள் குறிப்பிடும் போது ‘சிலர் தான் அல்லாஹ்வை விரும்புவதாக சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அல்லாஹ் அவர்களை இவ்வசனத்தின் மூலம் சோதிக்கின்றான்.’
இமாம் இப்னு கஸீர் அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது ‘நபியவர்களின் வழியை பின்பற்றாது அல்லாஹ்வை விரும்புகின்றோம் என வாதிடுவோருக்கு இந்த கண்ணியமான வசனம் தீர்ப்பளிக்கின்றது. நபியவர்கள் கொண்டு வந்த அந்த உண்மையான மார்க்கத்தை தனது எல்லா சொல், செயலும் பின்பற்றாத வரை இவ்வாதம் பொய்பிக்கப்படுகின்றது. புகாரியிலே பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸிலே நபியவர்கள் கூறும்போது (யார் எமது விடயத்திலே (மார்க்கத்தில்) எமது அனுமதி இல்லாமல் ஒரு செயலை செய்கின்றாரோ அது நிராகரிக்கப்படும்.)
எனவே தான் மேற்படி வசனத்திற்கு விளக்கம் கூறும் சிலர் ‘நாம் ஒன்றை விரும்புவதை விட நம்மை (எவர் விரும்புகின்றாரோ அவரை) விரும்புவது முக்கியமாகும்’ எனவே அல்லாஹ்வை நாம் விரும்புகின்றோம் என வாதிடுவதை விட்டு விட்டு அல்லாஹ் எம்மை விரும்புவதற்கு காரணமாக இருக்கும் நபியவர்களை பின்பற்றுதல் எம்மில் வந்தாக வேண்டும்’ என்றார்.
நபியவர்களது கப்ரைச் சூழவுள்ள சுவர்களை தொட்டு முகர்வதைப் பற்றி இமாம் நவவி அவர்கள் கூறும் போது ‘ இது மார்க்கத்திற்கு முறனான கண்டிக்கத்தக்க செயலாகும்’ என தனது புத்தகமாகிய (அல்மஜ்மூஃ) இல் குறிப்பிடுகின்றார்.
நபியவர்கள் கூறினார்கள் ‘ யார் எமது மார்க்கத்தில் புதிதாக ஒரு கருமத்தை ஏற்படுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்படும்.’ புகாரி.
அதே வேலை அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் மற்றும் ஒரு அறிவிப்பில் ‘ எனது கப்ரை பெருநாள் (கொண்டாடும் இடம்) போன்று ஆக்கி விடாதீர்கள். என் மீது ஸலவாத்து சொல்லுங்கள் உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் என்னை வந்தடையும்.’ அபூதாவூத்.
இமாம் அல் புலைல் இப்னு இயால் (ரஹ்) இவ்ஹதீஸுக்கு விளக்கம் கூறும் போது ‘நேர் வழியை சொற்ப எண்ணிக்கையினர் பின்பற்றினாலும் அது உனக்கு தீங்கு தராது நீ நேர் வழியை பின்பற்று. அழிவின் பக்கம் (வழிகேட்டில்) பெரும்பான்மையினரான மக்கள் இருந்த போதிலும் வழிகேட்டை பின்பற்றுவதை விட்டும் உன்னை எச்சரிக்கின்றேன்’ என்றார்.
அறியாமையுடன் கப்ரைத் தொடுவது, முத்தமிடுவது என்பன பரக்கத்தை தந்துவிடாது. இச்செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கவையாகும். மேலும் பரக்கத்து என்பது மார்க்கத்திற்கு உடன்பாடான விடயங்களில் தான் இருக்க முடியும். சத்தியத்திற்கு மாற்றமாக செயற்பட்டு விட்டு பரக்கத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இதனை எந்த ஒரு பகுத்தறிவாளனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
4) நபியவர்களின் கப்ரைச் சுற்றி வலம் வருதல் தடை செய்யப்பட்டதாகும்
இச்செயல் மிகவும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. காரணம் அல்லாஹ் அவனது முதலாவது ஆலயமாகிய கஃபாவை மாத்திரம் தான் வலம் வருவதை (தவாப்) மார்க்கமாக்கியுள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான், பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி நகம் வெட்டி குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை ‘தவாஃபும்’ செய்ய வேண்டும். (அல் ஹஜ்-29)
இஸ்லாத்தில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற அமல்களை உலகின் எப்பகுதியில் இருந்தாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் இந்த தவாப் எனும் வணக்கத்தை மக்கா நகருக்கு செல்லாமல் நிறைவேற்ற முடியாது.
இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் போது ‘அல்லாஹ்வின் ஆலயமாகிய (கஃபாவைத்) தவிர பைத்துல் முகத்தஸிற்கு அருகில் உள்ள குப்பதுஸ் ஸஹ்ராவையோ அல்லது நபியவர்களது கப்ரையோ, அரபா மலையில் இருக்கும் அந்த அடையாளத்தையோ தவாப் செய்யமுடியாது என்பதில் முஸ்லிம் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தில் உள்ளனர்.’ என்கிறார்.
5) நபியவர்களது கப்ருக்கு அருகில் சத்ததை உயர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது
நபியவர்கள் உயிரோடு இருக்கும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுக்கத்தை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள், மேலும் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல் அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள். (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இருதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் -அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு. (ஹுஜ்ராத்-2,3)
இதிலிருந்து நபியவர்கள் உயிரோடு இருக்கும் போதும், மரணித்த பின்னரும் கண்ணியத்துக்குரியவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
6) பள்ளிக்கு வெளியிலோ, பள்ளிக்கு உள்ளேயோ தூரத்தில் இருந்த போதிலும் நபியவர்களது கப்ரை முன்னோக்கித்தான் அவர்கள் மீது ஸலாம் சொல்லியாக வேண்டும் என எண்ணுவது தவறு:
இது தொடர்பாக நூலாசிரியரின் ஆசான் ஆகிய அஷ்ஷெய்க் பின் பாஸ் (ரஹ்) கூறும் போது இச்செயல் ஒரு தூய்மையான நிலையில் இருந்து மிதமிஞ்சிய நிலைக்கு இட்டுச்செல்லும் என்கின்றார்.
அதே வேலை சில மக்கள் மதீனாவுக்கு வரும்போது அதிகமான மக்களின் ஸலாத்தை எத்திவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்றார்கள். இச்செயலை அங்கிகரிக்கூடிய வகையில் எந்த ஒரு ஆதாரத்தையும் நபிவழியில் காணமுடியாது. இவ்வாறு யாரிடமாவது மக்கள் வந்து எனது ஸலாத்தை நபியவர்களுக்கு எத்திவையுங்கள் என்று கூறினால் அதற்கு கீழ்கண்டவாறு பதில் கூறலாம்.
‘நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகம் ஸலவாத்தும், ஸலாமும் கூறுங்கள். உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் அது மலக்குகளின் மூலமாக நபியவர்களுக்கு எத்திவைக்கப்படும் என்று கூறி அவ்வாறு சொல்லுபவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் ‘நிச்சயமாக மலக்குகள் பறந்து கொண்டிருக்கின்றனர் எனது உம்மத்தினரின் ஸலாத்தை அவர்கள் எனக்கு எத்திவைப்பர்.’ நஸாயீலே பதியப்பட்ட நம்பகமான ஹதீஸாகும்.
மற்றும் ஒரு அறிவிப்பிலே ‘உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள். எனது கப்ரை பெருநாள் கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது நீங்கள் ஸலவாத்து சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத்து எனக்கு எத்திவைக்கப்படும்.’ அபூதாவூத்
அதே வேலை ஹஜ், உம்ராவுக்கும் மதீனா ஸியாரவுக்கும் சம்மந்தம் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மதீனாவுக்கு வராமலே ஹஜ்ஜை முடித்துவிட்டு அல்லது உம்ராவை முடித்து விட்டு தனது ஊருக்கு திரும்பினால் கூட எந்தப் பிழையும் கிடையாது. அதே வேலை மதீனாவை ஸியாரத் செய்ய நேரடியாக இங்கு வந்து ஹஜ், உம்ரா செய்யாமல் திரும்பினால் கூட அதற்குறிய நன்மை கிடைத்து விடும்.
ஆனால் ஹஜ், உம்ரா செய்பவர் நபியவர்களின் கப்ரை ஸியாரத் செய்துதான் ஆக வேண்டும் என்பதற்கு சில ஹதீஸ்களை ஆதாரமாக கூறுவார்கள் ‘ யார் ஹஜ் செய்து விட்டு என்னை ஸியாரத் செய்யவில்லையோ அவர் என்னை நோவினை செய்துவிட்டார்.’ மேலும் ‘நான் மரணித்த பின் யார் என்னை ஸியாரத் செய்கின்றாரோ அவர் நான் உயிரோடு இருக்கும் போது ஸியாரத் செய்ததற்கு சமனாகும்.’ மற்றும் ஒரு செய்தியில் ‘ யார் என்னையும் எனது தந்தை இப்ராஹீமையும் ஒரே வருடத்தில் தரிசிக்கின்றாரோ அல்லாஹ்விடம் அவருக்கு சுவர்க்கத்தை பெற்றுக் கொடுக்க உத்தரவாதம் அளிக்கின்றேன்.’ மேலும் ‘யார் எனது கப்ரை தரிசிக்கின்றாரோ அவருக்கு எனது பரிந்துரை கடமையாகி விட்டது.’
மேற்குறிப்பிட்ட எல்லா செய்திகளும் ஆதாரபூர்மற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகும் என்பதனை மிகப்பெரும் அறிஞர்களான தாரகுத்னி, உகைலி, பைஹக்கி, இப்னு தைமிய்யா, இப்னு ஹஜர் (ரஹ்) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
அதே வேலை சூரா நிஸாவின் 64-ம் வசனமாகிய பின்வரும் வசனத்தை ஆதாரமாக காட்டுகின்றனர்.
‘அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக் கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.’
இந்த வசனம் அநியாயம் செய்த ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து பாவமன்னிப்பு தேடுவதை குறிக்கவில்லை மாறாக நபியவர்கள் உயிரோடு இருக்கும் போது முனாபிகீன்கள் அவர்களிடம் வருவதை குறித்து நிற்கின்றது. காரணம் நபித்தோழர்கள் யாருமே நபியவர்களது கப்ருக்கு பாவமன்னிப்பு தேடி வந்தது கிடையாது.
உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் வரட்சி ஏற்பட்டபோது நபியவர்களின் கப்ருக்குச் செல்லாமல் அப்பாஸ் (ரழி) அவர்களை முன்னிருத்தி துஆச் செய்தார்கள். ‘யா அல்லாஹ் நாம் முன்னர் வரட்சி ஏற்பட்டபோது நபியர்களைக் கொண்டு பிராத்தித்தோம். அப்போது நீ எமக்கு நீர் புகட்டினாய். இப்போது நமது நபியின் சிறிய தந்தையைக் கொண்டு உன்னிடம் பிராத்திக்கின்றோம். நீ எமக்கு நீர் புகட்டுவாயாக’ இந்த துஆவை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் அம்மக்களுக்கு மழையை இறக்கினான். ஆதாரம்: புகாரி.
உண்மையிலேயே நபியவர்களின் மரணத்திற்கு பின் அவர்களிடம் சென்று பிராத்திக்க முடியுமாக இருந்தால் உமர் (ரழி) அவர்கள் அதை செய்திருப்பார்கள். அதே போன்று புகாரியிலே பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு அறிவிப்பிலே ஆயிஷா (ரழி) ஒருமுறை தலைவழி ஏற்பட்ட போது நபியவர்களிடம் முறையிட ‘ நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் நான் உனக்காக பாவமன்னிப்பு தேடுவேன், மேலும் உனக்காக பிரார்திப்பேன்.’ ஆயிஷா (ரழி) இதைக் கேட்ட பின் நபியவர்களுக்கு முன் நானும் மரணிக்க வேண்டாமா? என்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்) புகாரி
நபியவர்களது துஆ அவர்களது மரணத்திற்கு பின்னரும் கிடைக்கும் என்றிருந்தால் நபியவர்கள்’ நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்’ எனச் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
உதவி தேடும் நோக்கம் இல்லாமல் பொது மையவாடிகளை தரிசிப்பதை பற்றி ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. ‘ கப்ருகளை தரிசியுங்கள், நிச்சயமாக அது மறுமையை நினைவு படுத்தும்.’ என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். முஸ்லிம்.
என்றாலும் மையவாடியிலே நீண்ட நேரம் நின்றுகொண்டிருக்கக் கூடாது. அடிக்கடி ஸியாரத் செய்யவும் கூடாது. காரணம் இச்செயல் அளவு கடந்த செயற்பாடுகளுக்கு இட்டுச்செல்லும்.
அவ்வாறே நபியவர்கள் மீது அதிகமாக ஸலவாத்து சொல்லுவதன் சிறப்பு நிறையவே கூறப்பட்டுள்ளன. இது நபியவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது. உம்மத்தினரின் கப்ருகளுக்கு அடிக்கடி செல்லுவதற்கு இதனை ஆதாரமாக கொள்ளக் கூடாது. நபியவர்களுக்கு ஸலவாத்து சொல்லும்போது அது மலக்குகள் வயிலாக எத்திவைக்கப்படும் என்கின்ற ஹதீஸ்களை நாம் ஆரம்பத்திலே அறிந்து கொண்டோம்.
அதே வேலை பகீஃ மற்றும் உஹத் ஷுஹதாக்களை ஸியாரத்து செய்வது மார்க்க வரம்புக்குள் இருத்தல் வேண்டும். மார்க்க வரம்பு மீறப்படுகின்ற போது அது பித்அத்தான செயலாகி விடும்.
கப்ருகளை தரிசிப்பது எந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதன் பிரயோசனங்கள் என்ன (உயிரோடு இருப்போருக்கும், மரணித்தவருக்கும்) என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் எமக்கு சுட்டிக் காட்டிள்ளார்கள்.
உயிரோடு இருக்கும் மனிதர் (தரிசிக்கப் போகின்றவர்) மூன்று பிரயோசனங்கள் அடைந்து கொள்வார்.
1) மரணத்தை ஞாபகப்படுத்திகின்றார். நல்ல செயல்களைச் செய்து மரணத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளமுடிகின்றது. இதனை நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் ‘கப்ருகளை தரிசியுங்கள் அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும்’ முஸ்லிம்.
2) இச்செயல் நபியவர்களின் ஸுன்னாவாக இருப்பதால் இதற்கு நன்மை பதியப்படும்.
3) மரணித்த முஸ்லிம்களுக்காக துஆச் செய்வதன் மூலம் அவர்களுக்கு நன்மை செய்ததாகி விடும்.
அதே வேலை மரணித்தவர் கப்ருகள் தரிசிக்கப்படுகின்ற போது உயிரோடு இருப்பவரின் பிரார்த்தனையை பெற்றுக் கொள்கின்றார். இது மரணித்தவர் பெரும் பிரயோசனமாகும். ஏனெனின் மரணித்தோர் உயிரோடு இருப்போரின் துஆவின் மூலம் நன்மை அடைகின்றார்.
நபியவர்கள் காட்டித்தந்த அமைப்பிலே கப்ருகளில் இருப்போருக்காக நாம் பிராத்திக்க வேண்டும். புரைதத் இப்னு ஹுஸைப் (ரழி) அறிவிக்கும் ஹதிஸில் நபியவர்கள் கப்ருகளுக்குச் சென்றால் பின்வரும் துஆவை ஒதக்கூடியவாக இருந்தார்கள் ‘முஃமின்களிலும், முஸ்லிம்களிலும் கப்ருகளில் இருக்க கூடியவர்களே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். மேலும் நிச்சியமாக நாங்களும் உங்களை சந்திக்க இருக்கின்றோம். எங்களுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடத்திலே மன்னிப்பை வேண்டுகின்றோம்.’ முஸ்லிம்.
கப்ருகளை தரிசிப்பது ஆண்களைப் பொருத்தவரையில் விரும்பத்தக்க ஒரு செயலாகும். ஆனால் பெண்களைப் பொருத்தவரை அறிஞர்களுக்கு மத்தியிலே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. ஒருபிரிவினர் இதனை தடைசெய்கின்றனர். மற்றும் சிலர் இச்செயலை அனுமதிக்கின்றனர். என்றாலும் இவ்விரண்டு கருத்துக்களிலும் பெண்களுக்கு கப்ருகளை தரிசிப்பதை தடைசெய்யக்கூடிய கருத்து மிகவும் வழுவானது. காரணம் நபியவர்கள் கூறினார்கள் ‘கப்ருகளை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபிக்கட்டும்.’ திர்மிதியிலே பதியப்பட்ட ஆதாரபூர்வமான ஹதீஸாகும்.
பெண்களுக்கு ஸியாரத்தை அனுமதிப்பவர்கள் கூறுவது போன்று அடிக்கடி ஸியாரத் செய்யக் கூடிய பெண்ணுக்குத்தான் அல்லாஹ்வின் சாபம் என சொல்ல முடியாது. கீழ்வரும் அல்குர்ஆனிய வசனத்திலும் அதிகமான அநியாயம் செய்பவன் என்று பொருள் கொள்ள முடியாது.
‘உமது இறைவன் அடியார்கள் மீது அனியாயம் செய்பவனாக இல்லை’ (சூரா புஸ்ஸிலத்-46)
எனவே பொதுவாகவே ஸியாரத் செய்யும் பெண்ணுக்குத் தான் அல்லாஹ்வின் சாபம் இருக்கின்றது என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் பலகீனமானவர்கள் என்பதாலும் அவ்வாரே அழுவது, ஒப்பாரி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதனாலும் கப்ருகளை சியாரத் செய்வது தடைசெய்யப்ட்டுள்ளது எனலாம்.
அவ்வாரே பெண்கள் இதனை விட்டுவிட்டாலும் ஒரு விரும்பத்தக்க விடயத்தை விட்டாதாகவே கருதப்படுமே தவிர கடமையான செயலை விட்டதாகி விடாது. ஆனால் கப்ருகளை தரிசிக்கின்ற போது அல்லாஹ்வின் சாபத்திற்கு சொந்தக்காரியாகின்றாள்.
பித்அத்தான தரிசிப்பை பொறுத்தவரையில் இஸ்லாம் ஆகுமாக்காத செயல்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். கப்ருகளில் அடங்கப்பட்டிருப்பவரிடம் பிரார்த்தனை செய்வது, அவர்களிடம் உதவி தேடுவது, தமது தேவைதளை நிறைவேற்றுமாறு வேண்டுவது போன்ற பல இஸ்லாத்திற்கு முரணான விடயங்களை உதாரணத்திற்கு கூறலாம். பித்அத்தான தரிசிப்பின் மூலம் கப்ருகளிலே உள்ளவர்கள் பிரயோசனப்படப் போவதில்லை. அதே வேலை தரிசிக்கச் சென்றவரும் எந்த வித பிரயோசனங்களும் இல்லாமல் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டு குறித்த இடத்தை விட்டு திரும்பிவர நேரிடும்.
இது தொடர்பாக அஷ்ஷெக் பின் பாஸ் (ரஹ்) அவர்கள் கூறும் போது ‘மேற்படி அடங்கப்பட்டவர்களிடம் உதவி தேடி தரிசிக்கச் செல்வது பித்அத்தான காரியமாகும். அதே வேலை இஸ்லாம் இதனை தடை செய்துள்ளது. எமக்கு முன்னிருந்தவர்கள் யாருமே இவ்வாறு செய்தது கிடையாது. மாறாக நபியவர்கள் கூறியது போன்று ‘கப்ருகளை ஸியாரத்து செய்யுங்கள் மேலும் கெட்ட வார்த்தைகளை சொல்லாதீர்கள்’ முஸ்னத் அஹமத், முஅத்தா மாலிக்
எனவே இச்செயல் பித்அத்தாக இருந்த போதிலும் சில செயல்கள் பித்அத் என்ற அந்தஸ்திலும் மற்றும் சில செயல்கள் ஷிர்க் என்ற நிலையிலும் உள்ளன. அதே வேலை கப்ருகளிடம் சென்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது பித்அத்தான செயலாகுவதுடன், கப்ருகளில் உள்ளோரிடம் எமது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திப்பது, உதவி தேடுவது இணைவைப்பாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களையும், இந்த மதீனாவிலே வாழக்கூடியவர்களையும், இங்கு தரிசிக்க வருபவர்களையும் பொருந்திக் கொண்டு புகழப்படக்கூடிய நல்ல முடிவை இவ்வுலகிலும், மறுமையிலும் தந்தருள்வானாக! இந்த கண்ணியமான பூமியிலே வசிக்கக்கூடிய பாக்கியத்தையும், நல்ல பண்பாடுகளையும் தந்தருள்வானாக! நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
நன்றி: ‘பல்லுல் மதீனா’ அஷ்ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல்-அப்பாத்