உண்மையான வெற்றி எது? ஒரு பட்டம் வாங்குவதா? ஒரு வேலை கிடைப்பதா? ஒரு பிரம்மாண்டமான மாளிகை வாங்குவதா வெற்றியா? அப்படியானால் ஏன் அத்தகைய ‘வெற்றியாளர்கள்’ மத்தியில் இத்தனை தற்கொலைகள்?
இவ்வுலகம் முழுவதும், அதிலுள்ள நாம் ‘வெற்றி’ என அழைக்கும் வசதிகள் அனைத்தும் உண்மையான வெற்றியை அடைவதற்கான கருவிகளாக படைக்கப்பட்டவை தான். உண்மையான வெற்றியை வரையறை செய்ய உரிமை பெற்றவன் நம்மைப் படைத்தவனான அல்லாஹ் மட்டுமே.
அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். [அல் குர்’ஆன், 7:8]
பிறகு ஏன் இத்தனை வசதிகள்?
அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது ஒன்று தான் வெற்றிக்கான வழி என்றால், இன்னும் வெற்றி என்பது மறுமையில் தான் என்றால், ஏன் அல்லாஹ் நமக்குள், இவ்வுலக வெற்றியைப் பெறுவதற்கு, இவ்வுலக ஆடம்பரங்களை அடைவதற்கான ஆவலை ஏற்படுத்தினான்? நாம் அழகிய ஆடைகளை அணிவதை விரும்புகிறோம், பெரிய, வசதியான வீடுகளில், நமக்குப் பிடித்தவர்களுடன் வாழ ஆசைப்படுகிறோம். நவீன உணவகங்களில் நவீன உணவுகளை உண்ண விரும்புகிறோம். இவையெல்லாம் – இவை மனித இயல்பின் ஒரு பகுதியே. நல்ல ஆடைகளை உடுத்துவதில் தவறில்லை என்பதை சுன்னத்திலிருந்து அறிந்து கொள்கிறோம்:
நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள், “எவருடைய மனதில் ஒரு எறும்பின் எடையளவு பெருமை இருக்கிறதோ, அவர் சுவனம் புக மாட்டார்.” அதைக் கேட்ட ஒருவர், “ஒரு மனிதர் அழகிய ஆடைகளையும், காலணிகளையும் அணிய விரும்புகிறார் என்றால்?” என கேட்டார். நபி (ﷺ) அவர்கள், “அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்றால் சத்தியத்தை கேலி செய்வதும், மறுப்பதும், மனிதர்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.” [முஸ்லிம்]
வசதி வெற்றிக்கான பாதை – அதுவே வெற்றி அல்ல
இன்னொரு கோணத்தில், அல்லாஹ் (சுபஹ்) நம் பெற்றோரின் மனங்களில் ஒரு சிறப்பான கருணையை வைத்து, அதனால், அவர்கள் தம் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த உணவைக் கொடுத்துவிட்டு, அவர்கள் மகிழ்ச்சியுடன் பட்டினி கிடக்கிறார்கள். தம் பிள்ளைகளின் அறைகளில் குளிர்சாதன வசதி செய்து கொடுத்து விட்டு, அவர்கள் வெப்பத்தில் உறங்குகிறார்கள். அவர்கள் நன்றாக படித்து, உலக வெற்றியை அடைவதற்காக, தங்களால் முடிந்த அளவு எல்லா வசதிகளையும் தங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கிறார்கள்.
இப்போது கற்பனை செய்து பாருங்கள், அவர்களுடைய பிள்ளைகள் இந்த வசதிகளுக்கு அடிமையாகி படிக்கத் தேவையில்லை என்று நினைத்தால், பெற்றோரின் நிலை எப்படி இருக்கும்! விளையாடுவதற்கு கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறான். குளிர் சாதனப்பெட்டியுலுள்ள பானங்களைப் பருகிக் கொண்டு, ஏ.சி. அறையில் உட்கார்ந்து நாள் முழுதும் படம் பார்த்துக் கொண்டு, இந்த ஆடம்பரங்களெல்லாம் நிரந்தரமாக இருக்குமென்றால், ஏன் படிக்க வேண்டும் என நினைக்கிறான்.
உண்மையில், அவன் என்ன செய்கிறானோ, அதைத் தான் நீங்களும், நானும் தினமும் செய்கிறோம் - வெற்றிக்கான கருவிகளையே வெற்றி என நினைத்துக் கொள்கிறோம்.
இறுதியான வெற்றி
அல்லாஹ் (சுபஹ்) நமக்கு இவ்வுலகில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது, நம்முடைய உண்மையான வேலையை (அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிவது, தவ்ஹீதை இவ்வுலகில் நிலைநாட்டுவது) செய்வதற்குத் தேவையான நேரமும், சக்தியும் நமக்கு இருக்க வேண்டுமென்பதற்க்காகத் தான். இந்த வசதிகள் எல்லாம் நிரந்தரமாக இருக்கும் என நாம் கற்பனை செய்து கொள்கிறோம். அதனால், நம்முடைய இறுதியான நோக்கமான, மறுமை வெற்றியை மறந்து விடுகிறோம்.
மறுமை வெற்றியை அடைவது எப்படி? அல்லாஹ் (சுபஹ்), சூரா பகராவில் குர்’ஆனை அறிமுகம் செய்யும்போது, வெற்றிக்கான சூத்திரத்தை அளிக்கிறான்:
இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல் குர்’ஆன் 2:2-5)