சூரா முஜாதிலா: ஒரு பெண்ணின் உரிமைகளை உறுதி செய்தல்

கவ்லா என்று பெண்மணி இருந்தார். அவருடைய கணவன் வயோதிகராகவும், துர்குணமுடையவராகவும் இருந்தார்.  ஒரு நாள், கோபத்தில், ‘நீ என்னுடைய தாயின் முதுகுக்கு ஒப்பானவள்.” என்று கூறி விட்டார்.  இது, அக்காலத்தில் ‘ஸிஹார்’ என அழைக்கப்பட்ட நாட்டுப்புறவாசிகளின் விவாகரத்து ஆகும்.

இந்த மணவிலக்கு மிகவும் கொடுமையானது.  இது ஒரு பெண்ணின் விவாக உரிமைகளை ரத்து செய்கிறது.  அதே சமயம் அவள் மறுமணம் புரிவதையும் தடுக்கிறது.  அவர் வெளியே போய்விட்டு வந்து, அவளை நெருங்கினார்.  அப்பெண், அவரைப் பற்றி இறைதூதரிடம் (ஸல்) புகார் செய்த பிறகு தான் அவருக்கு அனுமதி தர முடியும் என்று கூறி மறுத்தாள்.  அதன் பின் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து புகார் கொடுக்க சென்றார்.

நபி (ஸல்) அவர்களுடைய தீர்ப்பை மாற்றுதல்

மனிதர்களிலேயே மிகவும் கருணையுடையவராக இருந்த நபி (ஸல்) அவர்கள் ஒரு நீதிபதியாகவும் இருந்தார்கள். இரு பக்கத்தையும் கேட்காமல் அவரால் நீதி வழங்க முடியாது.  அப்பெண்ணுடைய புகாரைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், அதைப் பற்றிய புதிய சட்டம் எதுவும் அல்லாஹ்விடமிருந்து வராததால், அத்தம்பதிகள் ஒருவருக்கொருவர் தடுக்கப் பட்டவர்கள் என்று தீர்ப்பு வழங்கி விட்டார்கள்.

அப்பெண் அழுதாள். அவர்களுடைய திருமணம் முடிந்து விட்டால், அவர்களுடைய குழந்தைகள் உயிர் வாழ மாட்டார்கள்.  ஏனென்றால், அவர்கள் பசியுடன் இருப்பார்கள், அவராலும் அவர்களைச் சரியாக கவனிக்க முடியாது என்றெல்லாம் கூறி, வாதாடிக் கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் வாதாடுவது மற்ற எவருக்கும் அனுமதிக்கப்பட்டதாக இல்லை. சூரா ஹுஜுராத்தில் அல்லாஹ் (சுபஹ்), நபி (ஸல்) அவர்களிடம் மிகவும் சப்தமாகவும், கடுமையாகவும் பேசிக் கொண்டிருந்த நாட்டுப்புறவாசிகளைக் கண்டிக்கிறான்.  கீழ்ப்படிதலுக்கு தகுதியான இறுதியான அதிகாரி நபி (ஸல்) அவர்கள் மட்டுமே.  இருப்பினும், நபி (ஸல்) அவர்கள் அந்த சூழ்நிலையின் தர்மசங்கடமான நிலையைப் புரிந்து  கொண்டார்கள். அப்பெண் உணர்ச்சிவசப்பட்டுள்ளார், மிகவும் ஆழமாக காயம் பட்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.  அந்த சமயத்தில் தான் கவ்லாவுக்கு, வேறு எவருக்கும் கிடைக்காத, ஏழு வானங்களுக்கு அப்பாலிலிருந்து இறைவனிடமிருந்தே தீர்ப்பு வருகிறது.

(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் – மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்..[அல் குர்’ஆன் 58:1] ].

அல்லாஹ் (சுபஹ்) கவ்லாவுக்கு தானே தீர்ப்பு வழங்கி அவரைக் கௌரவித்தான்.  மேலும், அதன் மூலம் நமக்கு காலவரம்பற்ற படிப்பினைகளைக் கொடுத்துள்ளான்.  நபி (ஸல்) அவர்களுடன் வாதாடியதற்காக அவருக்கு எவ்விதமான எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. குரலை உயர்த்தியதற்காக கண்டிக்கவும் இல்லை.  அவருடைய வலியை அல்லாஹ் புரிந்து கொண்டான்.  அவர்கள் இருவரும் என்ன சொன்னார்கள் என்பதையும் அல்லாஹ் அறிவதாகக் கூறுகிறான்.

அவன் நபி (ஸல்) அவர்களுடைய நிலைபாடு புரிந்து கொள்ளக்கூடியது தான் என்பதையும் அவர்களுக்குப் புரிய வைத்தான்; நபி (ஸல்) அவர்கள் கருணையுள்ள மனிதர் தான், ஆனால், அவரும் கூட, ஒரு தீர்ப்பை சொல்வதற்கு முன்னால், இரு பக்கத்து நியாயத்தையும் கேட்க வேண்டிய நிலையில் உள்ள ஒரு மனிதர் தான்.

அல்லாஹ் (சுபஹ்) முதல் வசனத்தை ‘நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்’ என முடிக்கிறான்.  கவ்லாவிடம், தான் எல்லாவற்றையும் கேட்பதாகவும், பார்ப்பதாகவும் கூறுகிறான்.  அவன், அப்பெண்ணுடைய கணவன் அவளிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டான், அவளுடைய முதல் கண்ணீரைப் பார்த்தான்.  அவளுடைய கணவன் எத்தனை கடினமாக அவளிடம் நடந்து அவளுடைய உணர்வுகளைக் காயப்படுத்தினான் என்பதையும் அவள் எப்படி அழுதாள் என்பதையும் பார்த்தான்.  அவள் எப்படி முறையானதைச் செய்யும் முயற்சியில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள் என்பதையும் கண்டான்.  நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அவள் அழுதபோது, அவளுடைய அழுகையைக் கேட்டான்.  அவளுடைய அந்தப் பயணம் முழுவதிலும் அல்லாஹ், அவளுடன் இருந்தான்.

நாம் பெரும் சோகத்தில் இருக்கும்போது, நாம் அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

கணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது, இது கணவர்களுக்கும், ஆண்களுக்கும் அவர்கள் பெண்களை நடத்தும் விதத்தைப் பற்றி எச்சரிக்கை.  கவ்லா எத்தனை தூரம் காயப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்த அல்லாஹ் அவள் பக்கம் இருந்தான்.  அவள் கணவன் அவளைக் காயப்படுத்தினான், ஆனால், அதைப் பற்றி பெரிதாக நினைக்கவில்லை.  சிறிது நேரம் கழித்து, ஒன்றுமே நடக்காதது போல் திரும்பி வந்தான்.  அல்லாஹ் அனைத்தையும் கேட்டான்.  அனைத்தையும் பார்த்தான்.  அதன் பின், அவன் தன்னுடைய அறிவுரையைத் தந்தான்:

“உங்களில் சிலர் தம் மனைவியரைத் “தாய்கள்” எனக் கூறிவிடுகின்றனர்; அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்” (ஆகிவிடுவது) இல்லை; இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் – எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் – ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன்; மிகவும் மன்னிப்பவன்..’ [அல் குர்’ஆன், 58:2]

இஸ்லாமிய வரம்புகளின் அடிப்படையில், அல்லாஹ், இத்தகைய மணவிலக்கை தடை செய்கிறான்.  மேலும், இம்மாதிரி மனதைப் புண்படுத்தக்கூடிய சொற்கள் கண்டிக்கத்தக்கவையும், பொய்யானவையும் என்று கூறுகிறான்.  கவ்லாவின் கணவன், இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்.  கோபத்தின் போது எதையோ சொல்லி விட்டு, அது குறிப்பிடத்தக்கது என எண்ணவுமில்லை.  மாறாக, அல்லாஹ் (சுபஹ்) அதைத் தவறு என சுட்டிக் காட்டுகிறான்.  அவன் அதைக் குறிப்பிடத்தக்கதாகவும், கண்டிக்கத்தக்கதாகவும் எண்ணுகிறான்.

சொற்களால் காயப்படுத்தப்படுத்துவது கனமான காரியமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்

நம்மில் பல ‘முஸ்லிம்கள்’ சொற்களால் காயப்படுத்துவதை பெரிய தவறாக எண்ணுவதில்லை.  ஆனால், இங்கு அல்லாஹ் (சுபஹ்), தனக்கு இது கனமான காரியம் என்பதை தெளிவு படுத்துகிறான்.  உண்மையில், இவ்விஷயத்தின் தீவிரம் அடுத்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  உலக முடிவு வரை ‘ஸிஹார்’ சொல்வதற்கான  தண்டனை,  வார்த்தைகளால் மனைவியை நோகடிப்பதை   அல்லாஹ் எத்தனை கனமான விஷயமாக கருதுகிறான் என்பதற்கு அடையாளம்.

மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் – மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான். ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் – வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் இழிவாக்கப்பட்டதைப் போல் இழிவாக்கப்படுவார்கள் – திட்டமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். காஃபிர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, பின்னர் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிக்கும் நாளில், அவர்கள் அவற்றை மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து வைத்திருக்கிறான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.” [அல் குர்’ஆன் 58:3-6]

கடைசி வசனத்தின் இறுதியில் அல்லாஹ் (சுபஹ்) தன்னுடைய மன்னிப்பு மற்றும் கருணையைப் பற்றி நினைவூட்டுகிறான்.  இருப்பினும், அல்லாஹ் (சுபஹ்) ஒரு பிராயச்சித்தத்தை நாடுகிறான்.  அந்த பிராயச்சித்தம் ஒரு அடிமையை விடுதலை செய்தல்.  இக்காலத்தில் அதற்கு வழியில்லாததால், நமக்கு அதன் விளைவு புரிவதில்லை.  அடிமையை விடுதலை செய்வது, கடுமையான குற்றங்களுக்கு பிராயச்சித்தமாக இருக்கிறது.  யாராவது ஒருவர் மற்றொருவரைத் தவறாகக் கொன்று விட்டால், அதற்கு பிராயச்சித்தமாக ஒரு அடிமையை விடுதலை செய்யும்படி இஸ்லாம் கூறுகிறது.  மனைவியை நோக்கி கூறப்படும் துன்பம் தரும் சொற்களையும் அல்லாஹ் அதை அளவு பாவ காரியமாகத் தான் பார்க்கிறான்.  அதற்கு அடுத்த தேர்வு, இரு மாதங்களுக்குத் தொடர்ந்து நோன்பு நோற்றல் அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

அதன் பின் அல்லாஹ் (சுபஹ்) ஒரு கடுமையான எச்சரிக்கையை கொடுக்கிறான்: “எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் இழிவாக்கப்பட்டதைப் போல் இழிவாக்கப்படுவார்கள் – திட்டமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். காஃபிர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு. [அல் குர்’ஆன் 58:3-6]

வாய் வார்த்தைகளை நாம் அத்தனை கனமானவை என நினைக்காவிட்டாலும், அல்லாஹ்விற்கு அவை கனமானவை.  தங்களுடைய முக்கியமான மறுபாதியை நடத்துவதில் சகோதரர்களுக்கு இது ஒரு கடுமையான எச்சரிக்கை. 

வார்த்தைகளால் உடைந்த இதயத்தை ஒட்ட வைக்கவும் முடியும், அல்லது ஒருவருடைய இதயத்தை உடைந்து போக வைக்கவும் முடியும்.  அல்லாஹ் (சுபஹ்) தன்னுடைய அழகிய செய்தியை நம்மிடம் சொல்வதற்கு  தேர்ந்தெடுத்த முறை வார்த்தைகள் தான்.  இஸ்லாத்தின் எதிரிகள் அல்லாஹ்விற்கு எதிரான செய்திகளைப் பரப்புவதற்கு தேர்ந்தெடுத்த முறையும் வார்த்தைகள் தான்.  சொற்கள் சக்தி வாய்ந்தவை.  அவை நாம் சொர்க்கத்தை நோக்கி செல்கிறோமா அல்லது நரகத்தை நோக்கி செல்கிறோமா என்பதை முடிவு செய்யக்கூடியவை.  நம்முடைய வாழ்வின் முக்கியமான மற்றொரு பகுதியை நடத்துவதில் நாம் கையாளக்கூடிய சொற்கள் தான் நம்முடைய நம்பிக்கையின் பலம் அல்லது பலவீனத்திற்கு சாட்சி சொல்லக்கூடியவை.

குர்’ஆன் பெண்களின் உரிமையை மதிக்கிறது

இஸ்லாம் பெண்களையும், பெண்களின் உரிமைகளையும் மதிப்பதில்லை என்று சொல்லும் மக்கள் தான் இந்த சூராவைப் படிக்க வேண்டும்.  அல்லாஹ் எப்படி பெண்களை கௌரவிக்கிறான் என்பதற்கு உள்ள பல வசனங்களில் இதுவும் ஒரு உதாரணம்.  கவ்லாவுடைய வலி அத்தனை பெரிதாக இருந்ததால், அதற்கு தீர்ப்பு சொல்லும் பணியை அல்லாஹ் (சுபஹ்), நபி (ஸல்) அவர்களிடம் விடவில்லை.  மாறாக, அவன் காலமெல்லாம் நிலைத்து நிற்கக்கூடிய வகையிலும், நாம் நம் வாழ்க்கைத் துணைகளை நடத்த வேண்டிய சரியான முறையையும் அறிவிக்கும் வகையிலும் குர்’ஆந் வசனங்களாக இறக்கினான்.  மணவிலக்குகளும், குடும்பத்தினரால் துன்புறுத்தலும் அதிகமாகிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இந்த வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது.  அல்லாஹ்வின் அதிருப்தியைப் பெற்றுத்தரும் அனைத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவதற்கு அவனுடைய உதவியையே நாம் நாடுவோம்.
Previous Post Next Post