தேவைகளும், நினைவுகூருதலும்

தினமும் நமக்கு ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது.  சில சமயம் நாம் யாராவது நம்மை நேசிக்க வேண்டும் என்ற தேவை, சில சமயம் யாராவது நம்மை மகிழ்விக்க வேண்டும் என்ற தேவை, சில சமயம் தூங்க வேண்டிய தேவை, இன்னும், சில சமயங்களில் நாம் எதுவுமே செய்ய வேண்டாம் என்ற தேவை ஏற்படும்போது, எதுவுமே செய்யாமல் இருக்கிறோம்.  வாழ்க்கை முடிவில்லாத தேவைகளைக் கொண்டு வருகிறது.

எப்படியிருந்தாலும், நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும், உண்மையிலேயே நமக்கு அல்லாஹ் தேவைப்படுகிறான்.

நமக்கு எந்த தேவையும் இல்லை என்று உணரும்போது நாம் அல்லாஹ்வை மறந்து விட எத்தனிக்கிறோம்.  காரியங்கள் எளிதாக இருக்கும்போது, நமக்கு இடைவிடாது அல்லாஹ்வின் தேவை இருக்கிறது என்பதை மறந்து விட எத்தனிக்கிறோம்.  அதனால் தான், பல அறிஞர்கள் சிரமத்தின் சோதனையை விட, சொகுசின் சோதனை மிகப்பெரிது என்று கூறியுள்ளார்கள்

இப்னு குதமா அல் மக்திஸி அவர்கள் கூறினார்கள்:

தன் குடும்பத்தாருடனும், செல்வத்துடனும் தன் வீட்டில் உட்கார்ந்திருக்கும் ஒருவருக்கு ஒரு மரத்துண்டின் உதவியால் கடலில் மிதந்து கொண்டிருக்கும் ஒருவரை விட அல்லாஹ்வும் அவனுடைய கருணையும் தேவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  இதன் கருத்து உங்களுடைய இதயத்தில் ஆழமாகப் பதிந்து விட்டால், காப்பாற்றுவதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த வழியையும் அறியாத கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒருவரைப் போல் அல்லாஹ்வைச் சார்ந்திருங்கள்.

ஒவ்வொரு புதிய தினமும் நாம் எழுந்திருக்கும் போது, நமக்கு அல்லாஹ் தேவைப்படுகிறான்.  எல்லோரும் தூக்கத்திலிருந்து விழிப்பதில்லை.  நாம் படிப்பதற்கு, வேலை செய்வதற்கு, கடைத்தெருவுக்கு போவதற்கு என்று எதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றாலும், நமக்கு அவன் தேவைப்படுகிறான்.  தினமும் எத்தனையோ மக்கள் சாலைகளில் இறந்து போகிறார்கள்.

நம் நேசத்துக்குரியவர்களைக் காப்பதற்கும், அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அருள்வதற்கும், வழிகாட்டுவதற்கும், மன்னிப்பதற்கும், இவ்வுலக இருளில் சிக்கி அலையாமல் இருப்பதற்கும் நமக்கு அல்லாஹ்வின் உதவி தேவைப்படுகிறது.  நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தாரில் பலர் நிராகரிப்பிலேயே இறந்து விட்டார்கள்.  பல இளைஞர்களும், முதியவர்களும் நோயாளிகளாக, ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.

மிகக் கடினமான நிலையில், உலகம் நம்மைச் சூழ்ந்து நெருக்குவது போல் உணரும்போது அவன் நமக்குத் தேவைப்படுகிறான். நம்முடைய திருமணங்களில் ஏற்படும் பிர்ச்சினைகள், பெற்றோரால் துன்புறுத்தப்படும்போது, மற்ற எந்த வேதனையை அனுபவிக்கும்போதும் நமக்கு அவன்  தேவைப்படுகிறான்.  நமக்குப் பிரியமானவர்கள் நம்மை புரக்கணிக்கும்போதும், புண்படுத்தும்போதும், நம்மை உள்ளூர முற்றிலும்  நாசப்படுத்தும்போதும் அவன் நமக்குத் தேவைப்படுகிறான்.

நாம் கைவிடப்பட்டது போல் உணர்ந்து, எது உண்மை என்பதைக் காணத்தவறும்போது நமக்கு அல்லாஹ்  தேவைப்படுகிறான்.  நம்மைச் சுற்றிலும் அநீதியையும், துன்பங்களையும் கண்டு, எதுவும் செய்ய முடியாத, உதவியற்ற நிலையில் இருக்கும்போது, அவன் நமக்குத் தேவைப்படுகிறான்.

நம்முடைய போராட்டங்களிலும், மீளுதல்களிலும், நாம் உடைந்து போகும் நிலையில் இருக்கும்போதும், அவன் நமக்குத் தேவைப்படுகிறான். நமக்கு அன்பு தேவைப்படும் போதும், வெற்றி தேவையாக இருக்கும்போதும், அவன் நமக்குத் தேவைப்படுகிறான். நாம் வழி தவறி வழி காட்டுதல் இல்லாமல் தவிக்கும்போது அவனுடைய வழிகாட்டுதல் நமக்குத் தேவைப்படுகிறது.

நம் உயிர் பறிக்கப்பட்டு, மண்ணறை வாழ்வின் வேதனையில் உழன்று கொண்டிருக்கும்போது, நமக்கு அவன் தேவைப்படுகிறான்.

இன்ப நிலையில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்,  துன்ப நிலையில் அவன் உங்களை நினைவு கூருவான். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  [திர்மிதி]

நம்முடைய தொழுகைகள், புகழுதல்கள், இடைவிடாத அன்பு இவற்றின் மூலம் அல்லாஹ்வுடன் நாம் தொடர்புடன் இருக்கிறோம்.  அவனை நினைவுகூருதலின் சக்தி நம்முடைய து’ஆ மற்றும் திக்ரில் தான் அடங்கியிருக்கிறது.  அல்லாஹ் கூறுகிறான்: ‘நிச்சயமாக அல்லாஹ்வை நினைவுகூருவதில் தான் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.’  ’[அல் குர்’ஆன்13:28]

நாம் கண்விழித்திருக்கும் எல்லா நேரத்தையும் அவனுடைய நினைவில் கழித்தால் நம்முடைய தேவையுள்ள நிலையை நாம் வெளிப்படுத்துகிறோம்.  நாம் என்ன செய்து கொண்டிருந்தாலும், அல்லாஹ்வை நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  ஒரு விருந்தில் சந்தோஷமாக இருக்கும்போது கூட தொழுகை நேரம் வந்தால் அல்லாஹ்வை நினைத்து தொழுகிறோம்.

அல்லாஹ்வை நினைவுகூர்ந்து ஆபாசமானவற்றைப் பேசுவதைத் தவிர்த்துக் கொள்கிறோம்.  நாம் வெளியே இருக்கும்போது யாராவது நம்மைப் புண்படுத்தி விட்டால், நாம் பதிலுக்கு அவர்களைப் புண்படுத்துவதில்லை, ஏனென்றால், நன்மை செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான் என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதால்.  அதே போல், நாள் முழுதும் நாம் அல்லாஹ்வை நம்முடைய இதயத்திலும், சிரசிலும் தாங்கியிருக்கிறோம்.

அல்லாஹ்வை நினைவு கூருதலும், து’ஆ செய்தலும் நம்முடைய உள்ளத்தின் வேதனைகளுக்கு அமைதியளிக்கின்றன.  விதியை மாற்றி எழுதுவதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன.  நபி (ஸல்) அவர்கள், ‘விதியை மாற்றக்கூடிய ஒன்றே ஒன்று து’ஆ’ என்று கூறியுள்ளார்கள்.

திக்ரு நம்மைப் பாதுகாக்கிறது, வழிகாட்டுகிறது, வாழ்வைப் பற்றிய நம் கண்ணோட்டத்தை மாற்றுகிறது.  நம்முடைய வேதனை மிகுந்த சோதனைகளைக் கடந்து முன்னேறத் தேவையான பலத்தை அது தருகிறது.  ஏனென்றால், நாம் சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறும் போது அல்லாஹ் இருக்கிறான் என்பதை நாம் அறிகிறோம்.  இவ்வுலக வாழ்க்கை, இன்னும் சிறந்த இல்லத்தை நோக்கிய நம்முடைய பயணத்தைத் தவிர வேறெதுவுமில்லை என்பதை இடைவிடாமல் நினைவூட்டுகிறது.

இந்த வாழ்க்கை, இடைவிடாது அல்லாஹ்வை நினைவு கூருவதில் அர்ப்பணிப்பு, அவனுக்கு நன்றி செலுத்துதல், நமக்கும், நம்மைச் சுற்றி வாழ்பவர்களுக்கும் பொறுமையைத் தேடுதல். அதன் நம்பிக்கையான தோழன் து’ஆ தான், அதாவது இன்ப நிலையிலும், துன்ப நிலையிலும் அவனுடைய உதவியை நாடுதல்.

எல்லா நேரங்களிலும் நீங்கள் அல்லாஹ்வை ஒழுங்காக நினைவு கூருவதில்லை என்று  எண்ணி மனம் வருந்தாதீர்கள்.  எங்கேயாவது தொடங்க வேண்டும், சிந்தனையில்லாமல், இயந்திரகதியில் திக்ரு செய்தாலும் பரவாயில்லை.

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், “(திக்ர்) சில சமயம் உள்ளத்தினாலும், நாவினாலும் சொல்லப்படுகிறது, அது தான் திக்ருகளில் மிகச் சிறந்தது.  சில சமயம் மனதினால் மட்டும் செய்வது இரண்டாவது அடுத்த சிறப்பான இடத்தைப் பிடிக்கிறது;  சில சமயம், நாவினால் மட்டும் செய்யக்கூடியது, மூன்றாவது தரத்தை உடையது.” உள்ளத்தினாலும், நாவினாலும் சொல்லப்படுகிற திக்ருகளைப் போல், நாவினால் மட்டும் செய்யப்படும் திக்ருகள் அல்லாஹ்வை அறிந்து கொள்ளுதல், இறையன்பு, நெருக்கம் போன்ற பயன்களைத் தருவதில்லை,  உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு, நாவிலிருந்து மட்டும் தான் திக்ர் ஆரம்பிக்கிறது!

இமாம் அல் கஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், “முதலில் நாவிலிருந்து மட்டும் திக்ரு தொடங்குகிறது; அதன் பின், உள்ளம் நினைவு கூர வேண்டிய அழுத்தத்திற்கு ஆளாகிறது; பிறகு, தானாகவே உள்ளம் நினைவு கூருகிறது.”

இமாம் இப்னு அதாயில்லாஹ் அல் இஸ்கண்தரி அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ்வின் இருப்பை நீங்கள் உணராததால், திக்ரைக் கைவிட்டு விடாதீர்கள், ஏனென்றால், உங்களுடைய நினைவுகூருதலில் கவனமில்லாமல் இருப்பதை விட, அவனை  நினைவு கூராமலே இருப்பது மோசமானது.  நீங்கள் தொடர்ந்து கவனமில்லாமல் திக்ரு செய்தாலும், அவன் ஒரு வேளை உங்களை கவனத்துடன் திக்ரு செய்ய வைப்பான்; கவனுத்துடன் செய்யும் திக்ரை, அல்லாஹ்வின் இருப்பை உணர்ந்த திக்ராக்குவான்; அந்நிலையிலிருந்து, நாம் யாரை நினைவு கூருகிறோமோ அவனைத் தவிர வேறெதுவும் இல்லாமல் இருப்பது போல் உணர வைப்பான் (நம் மனதில் அல்லாஹ்வைத் தவிர வேறெந்த நினைவும் இல்லாத நிலை): ‘இன்னும், இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல..’ ” [அல் குர்’ஆன்14:20]

அவனை நினைவு கூருதலும், அவனிடம் து’ஆ செய்தலும்: அவனுடைய அன்பைப் பெறுவதற்கு இவை நமக்கு நுழைவுச்சீட்டுகள்.

யா அல்லாஹ், எங்கள் மீது உன் அன்பைப் பொழிவாயாக
Previous Post Next Post