நிர்ப்பந்தமான நிலை ஏற்பட்டாலே தவிர நாம் பெருநாள் தொழுகையத் திடலில் தொழுவோரே!

முஸ்லிம்களாகிய நாம் ஈதுல் ஃபித்ர், ஈதுல் அழ்ஹா என்ற இரு பெருநாட்களைக் கொண்டாடுகின்றோம்.

நமது பெருநாள் என்பது நோன்பு, ஸகாத்துல் ஃபித்ர்,   உழ்ஹிய்யா, குர்பான் போன்ற வணக்க வழிபாடுகளோடு தொடர்புபட்டதாகும்.

பெருநாள் தொழுகை எனும் போது - முஸல்லா- பள்ளிக்கு வெளியில் காணப்படும் திடலிலேயே நபி (ஸல்)  அவர்களும் கலீஃபாக்கள் மற்றும் அவர்களின் பின் வந்த முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர் என்பது பல ஸலஃபு இமாம்களின் முடிவாகும். 

அதனால் தற்போது மக்கா மதீனாவில் நடப்பதை வைத்து இந்த விளக்கம் பொய்யாகாது.
عن أم عطية رضي الله عنها قالت : كُنَّا نُؤْمَرُ أنْ نَخرُجَ يَومَ العِيدِ حتَّى نُخْرِجَ البِكْرَ مِن خِدْرِهَا، حتَّى نُخْرِجَ الحُيَّضَ، فيَكُنَّ خَلْفَ النَّاسِ، فيُكَبِّرْنَ بتَكْبيرِهِمْ، ويَدْعُونَ بدُعائِهِمْ، يَرْجُونَ بَرَكَةَ ذلكَ اليَومِ وطُهْرَتَهُ.(متفق عليه) 
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப் பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைக்குப்பின் வாழும் நிலையில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு மக்களுடன் சேர்ந்து “தக்பீர்” கூறுவார்கள்
அந்த நாளுடைய (பரகத்தை) ஆதரவு வைத்தவர்களாக அவர்களுடைய தக்பீருடன் தக்பீர் கூறுவார்கள், 
அவர்களுடைய துஆவுடன் அவர்களும் துஆ
கேட்பார்கள்.
 ( புகாரி/ முஸ்லிம்-)

இந்த ஹதீஸ் ஏழுவருட கால மௌலவிகளின் கண்பார்வையில் இன்றுவரைப் படாத ஹதீஸ்களில் ஒன்றாகவும் இருக்கலாம்.

ஏனெனில் அவர்களில் பலர் ஹதீஸ் கிரந்தங்க ளைப் பகுப்பாய்வு செய்து படிப்பதில்லை என்பதில் எனக்கும் அனுபம் உண்டு.

அப்படித்தான் உண்மை மறைத்து கீழ்ப்படிந்து ஊரோடு ஒத்துப் போகுதல் என்ற உண்மை மறைப்பு வழிமுறையால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்ற மனோ நிலையில் இருக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தம்.

அல்லது, அவர்களின் ஹஸரத் மத்ஹபு போக்கில் கடும் போக்காளராக இருப்பின் அதனைத் தலைகீழாக  பாடம் சொல்லிக் கொடுத்திருக்கவும் வாய்ப்புண்டு.

பரவாயில்லை. ஹதீஸ் தெளிவு வரும் வரை அவர்கள் இவ்வாறு செய்வதை நம்மால் ஒன்றும் கூற முடியாத நிலை.

சரி எது எப்படியானாலும் இப்போது விஷயத்திற்கு வருவோம்.

மேற்படி ஹதீஸில் 
முஸல்லா , 
வெளியேறிச் செல்லுதல்,
மாதவிடாய்ப் பெண்களும் பங்கெடுத்தல்,
கட்டளையிடப்பட்டோம் போன்ற பல்வேறுபட்ட வாசகங்கள் என்பன பெருநாள் தொழுகை என்பது பள்ளியில் தொழப்படுவது கிடையாது. 
மாறாக அது முஸல்லாவில் பள்ளிக்கு வெளியில் உள்ள ஒரு திடலில்தான் என்பதை நமக்கு உணர்த்துகின்றது.

மாதவிடாய் பெண்கள் வரக் கூடாதது பள்ளி என்பதும் திடலே நபியின் மிகப் பொருத்தமான வழிகாட்டலாகும். 

இமாம்  இப்னுல் கையிம் (ரஹி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய அன்றாட வாழ்வியல் முறை பற்றி விளக்கும் பெறுமதிமிக்க தனது "ஸாதுல் மஆத்" என்ற நூலில்:
مضت سنة النبي صلى الله عليه وسلم العملية على ترك مسجده في صلاة العيدين ، وأدائها في المصلى الذي على باب المدينة الخارجي [ انظر زاد المعاد لابن القيم 1/441 ] .
நபி (ஸல்) அவர்கள் தனது மஸ்ஜிதை விட்டும் வெளியேறிச் சென்று மதீனாவின் (பள்ளியின்) வெளி எல்லை வாசலில் உள்ள திடலில் திறைவேற்றுவதே அவர்களின் சுன்னாவாக இருந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். ( ஸாதுல் மஆத்)

மத்ஹபு நூல்களில் பெருநாள் தொழுகை:

மத்ஹபு நூல்களில் பெருநாள் தொழுகை பற்றித் தேடினால் ஷாஃபிஈ மத்ஹபினரைத் தவிர மற்ற மத்ஹபு இமாம்களின் கிரந்தங்களிலும் جبانة ஜபானா எனப்படும் #முஸல்லாவில் நிறைவேற்றுவது பற்றியே எழுதப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.

ஹனஃபி மத்ஹப் அறிஞர்களில் ஒருவரான  இமாம் ஐனீ (ரஹி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வெளியில் ஓர் இடத்தில் தொழுவது பற்றி  விளக்கும் முஸ்லிமின் கிரந்த ஹதீஸ் விளக்கத்தில்: 
وفيه البروز إلى المصلى والخروج إليه ، ولا يصلى في المسجد إلا عن ضرورة . 
நிர்ப்பந்தமான நிலை ஏற்பட்டாலே தவிர  பெருநாள் தொழுகையத் திடலில் தொழுவதற்காக திடலுக்கு செல்வதும் அந்த ஹதீஸில்  உள்ளடங்கி இருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஹனஃபி மத்ஹப் நூலான அல்ஃபதாவா அல்ஹின்திய்யாவில்:
وفي الفتاوى الهندية ( ج1 ص118) : " الخروج إلى الجبانة (المصلى ) في صلاة العيد سنة ، وإن كان يسعهم المسجد الجامع ،على هذا عامة المشايخ وهو الصحيح "
பள்ளி வாசல் விசாலமானதாக இருந்தாலும் #ஜபானா எனப்படும் #முஸல்லாவிற்கு  வெளியேறிச் செல்வது சுன்னத்தாகும். இந்த கருத்தில்தான் பெரும்பாலான அறிஞர்கள் இருக்கின்றனர். அதுவே சரியான கருத்தாகும் என இடம் பெற்றுள்ளது.  
(அல்ஃபதாவா அல்ஹின்திய்யா)

இமாம் மாலிகின் அல்முதவ்வனாவில்
وفي المدونة المروية عن مالك (ج1ص171 ) قال مالك : لا يُصلَّى في العيدين في موضعين ، ولا يصلون في مسجدهم ، ولكن يخرجون كما خرج النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .
பெருநாள் தொழுகையை இரண்டு இடங்களில் தொழக் கூடாது. (ஊர்மக்கள்) அவர்களின் பள்ளிகளிலும்  தொழக் கூடாது;  இருப்பினும் நபி (ஸல்) அவர்கள் திடலுக்கு வெளியேறிச் சென்றது போல அவர்கள் வெளியேறிச் செல்லவேண்டும் என இடம் பெற்றுள்ளது.
 (அல்முதவ்வனா).

மற்றொரு அறிவிப்பில்:
.[ وروى ] ابن وهب عن يونس عن ابن شهاب قال : كان رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يخرج إلى المصلى ، ثم استن بذلك أهل الأمصار "
பெருநாள் தொழுவதற்காக நபி (ஸல்) அவர்கள் திடலுக்கு வெளியேறிச் செல்பவர்களாக இருந்தார்கள்.  பின்னால் வந்த மக்கள் அந்த வழியை சுன்னாவாகக் கடைப்பிடித்தார்கள் என வந்துள்ளது.

இமாம் இப்னு குதாமா அல் ஹன்பலியின் முக்னீ என்ற நூலில்:
وقال ابن قدامة الحنبلي في المغني ( ج 2 ص229-230 ) " السُّنَّةُ أَنْ يُصَلَّى الْعِيدُ فِي الْمُصَلَّى 
 திடலில் பெருநாள் தொழுவதே நபிவழியாகும் எனக் குறிப்பிட்டிருப்பதைப்
பார்க்கலாம். 

மழை போன்ற காரணங்களால்  பள்ளி வாசலில் தொழ அனுமதிக்கப்பட்ட விதிவிலக்கான சட்டத்தை வைத்துக் கொண்டு  பள்ளியில் தொழுவது சிறப்பு, அது உலமா சபை தீர்மானம் , மாவட்ட உலமாக்கள் தீர்மானம் என்றெல்லாம் பிதட்டும் ஏழு வருட  அரபி மத்ரஸா காலக் கழிப்பு பட்டதாரிகள் திடலில் தொழுவது சுன்னா என்பதை மறுத்து, தமது வழமையான மார்க்க மறைப்பிற்கு கச்சை கட்டிக் களம் கண்டாலும்  அவர்களை விட சத்தியத்தைப் பின் பற்ற விரும்பும் சாதாரண பொதுமக்கள் இதில் தெளிவடைந்து விட்டனர் என்பதே இலங்கையின் இன்றைய கள நிலவரம் .

தவ்ஹீத்/ குர்ஆன் ஹதீஸ் பேசுவோர்தான் பிழையான பொருள் செய்துள்ளனர் எனப் போய்ப் பிரச்சாரம்  செய்யும் ஏழு வருட கேஸ்கள் தாம் சார்ந்த ஷாஃபிஈ மத்ஹப் தவிர்ந்த ஏனைய மத்ஹபினர் ஜபானா என்ற வெளித் திடலில் தொழுவது சுன்னா என எப்படி கூறினார்களோ தெரியவில்லை. அப்படியானால் யார் விளங்கியது பிழை என்பதை மக்கள் இந்த கட்டுரை மூலம் விரைவில் விளங்கிக் கொள்வர்
إن شاء الله. 
اللهم لك الحمد والشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. 

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
أحدث أقدم