அபூ மஹ்தூரா ரலியல்லாஹு அன்ஹு!

"மதிப்பிற்குரிய ஸஹாபி அபூ மஹ்தூரா —رضي الله عنه— அவர்களின் ஒரு சம்பவத்தை நான் இங்கு நினைவு கூறுகிறேன். அவர் சிறு வயதினராக இருந்த வேளையில் பாங்கு ஒலியைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார். அவர் அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை, அதனால் பாங்கு ஒலியைப் கேலி செய்து கொண்டிருந்தார்.

உடனே நபி ﷺ அவர்கள் அவரை அழைத்தார்கள், ஆனால் அதற்காக அவருக்கு எந்தத் தண்டனையும் வழங்கவில்லை. மாறாக, அவரது நெற்றியைத் தடவிக் கொடுத்து, அவருக்குப் பாங்கைக் கற்றுக் கொடுத்தார்கள்.

அதற்குப் பிறகு, அவர் மக்கா நகரில் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் முஅத்தினாக (பாங்கு சொல்பவராக) மாறினார். அவருடைய தலைமுடி மிக நீளமாக இருந்தது, அவர் அமரும் போது அவரது முடி மீது அமரும் அளவுக்கு அது நீண்டிருந்தது.

மக்காவாசிகள் அவரிடம், "நீங்கள் ஏன் உங்களது தலைமுடியைச் சிரைக்கக் கூடாது?" என்று வினவியபோது, அவர்கள் பின்வருமாறு கூறினார்டள்: "அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் தமது திருக்கரங்களால் தடவிக் கொடுத்த ஒரு தலையை நான் எவ்வாறு சிரைப்பேன்?" அதாவது நபி ﷺ அவர்கள் அவரது நெற்றியிலும் தலைமுடியிலும் தடவிக் கொடுத்தார்கள். எனவே, தனது நெற்றியிலும் தலையிலும் கரம் வைத்து, தண்டிக்காமல் மன்னித்த நம் தூதர் ﷺ அவர்கள் மீது கொண்ட பேரன்பின் காரணமாக, அவர் தனது தலையில் சவரக்கத்தியைப் பட விடவில்லை, தன் தலையைச் சிரைக்கவும் இல்லை —அல்லாஹ் அவரைப் பொருந்தித் கொள்வானாக-."

-அஷ்ஷைக் வலீத் அத்தஹ்வான்-

● மேலதிக தகவல்: 

அபூ மஹ்தூரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:

 "அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஹுனைன் போர்க்களத்திலிருந்து புறப்பட்டபோது, நான் மக்காவாசிகள் பத்து பேர் கொண்ட ஒரு குழுவுடன் அவர்களைத் தேடிப் புறப்பட்டேன். அப்போது அவர்கள் தொழுகைக்காக பாங்கு சொல்வதைக் கேட்டோம். நாங்களும் அவர்களுக்குப் போட்டியாக, அவர்களைக் கேலி செய்யும் விதமாக பாங்கை சொல்லத் தொடங்கினோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "இவர்களில் மிக அழகான குரலில் பாங்கு சொன்ன ஒரு மனிதரின் குரலை நான் கேட்டேன்" என்று கூறினார்கள். பிறகு எங்களை அழைத்து வரச் சொன்னார்கள். நாங்கள் ஒவ்வொருவராக பாங்கு சொன்னோம், அவர்களில் நானே கடைசியாக இருந்தேன்.

 நான் பாங்கு சொன்னபோது, அவர்கள் "இங்கே வருவீராக' என்று கூறினார்கள். என்னை அவர்களுக்கு முன்னால் அமர வைத்தார்கள். பிறகு எனது நெற்றியைத் தடவிக் கொடுத்து, எனக்கு மூன்று முறை பரக்கத் வேண்டிய துஆ செய்தார்கள். பின்னர், "நீங்கள் சென்று பைத்துல் ஹராம் (கஃபா) அருகில் பாங்கு சொல்லுங்கள்" என்றார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே, அது எப்படி?'' என்று கேட்டேன்.
அப்போது நீங்கள் இப்போது சொல்வதைப் போலவே எனக்கு பாங்கை கற்றுக் கொடுத்தார்கள்

நூற்கள்: அபூதாவூத், நஸாயீ மற்றும் அஹ்மத்
أحدث أقدم