ஸஃபியா பின்த் அப்துல் முத்தலிப் (ரலி)

ஸஃபியா பின்த் அப்துல் முத்தலிப் (ரலி)

உலகில் எண்ணற்ற சான்றோர்கள், பெரியோர்கள் வாழ்ந்து சென்றுள்ளார்கள், இனறைக்கும் வாழ்கின்றார்கள்! அவர்களின் உயர்வும் மேன்மையும் சந்தேகத்திற்று அப்பாற்ப்பட்டவை!

எத்தனையோ வீரர்கள், அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள், வானவர்களையே விஞ்சும் அளவு வாய்மையும் தூய்மையும் கொண்ட புனிதர்கள், பொறுமையின் சிகரங்கள் என்று போற்றப்படுகின்ற எத்தனையோ நல்லடியார்கள் வாழ்ந்து சென்றுள்ளார்கள், வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள்!
   
ஆனால்,
   
இத்தனை சிறப்புக்கள் இருந்தாலும் அனேகப் பெரியார்களின் வரலாறு இப்படித்தான் உள்ளது: அதாவது, அவர்கள் தம் அளவில் மிகவும் நல்லவர்கள், பெரும் வீரர்கள், புனிதமிக்கவர்கள், பொறுமை மிகுந்தவர்கள், இறைவனுக்கு நன்றி செலுத்தி வாழும் நல்லடியார்கள் என்று புகழ் பெற்றுள்ளார்கள்!
   
ஆயினும் அப்படிப்பட்ட பெரியார்களில் சிலர் தங்களின் சகோதரர்களின் குறிக்கோளற்ற - தகுதியற்ற வாழ்வைக் கண்டு கண்ணீர் விடுபவராய் இருப்பர்!
   
வேறு சிலர் தம்முடைய குழந்தைகள் தவறான வழியில் வாழ்வது குறித்து கவலை கொள்பவராய், கதறுபவராய் இருப்பர்! அவர்களைச் சீர்படுத்த அவரால் எதுவும் செய்ய முடியாத் நிலை!
   
இன்னும் சிலர் தம்முடைய பேரர்களின் தவறான, இழிந்த செயல்பாடுகள் குறித்து மனம் நொந்து மடிவர்! அவற்றை மாற்றும் வழி காணார்!
   
இதற்கு மாறாக அந்தப் பெரியவர்களைப் போன்று அவர்களுடன் உறவுமுறை கொண்ட அனைவரும் நேர்வழி வந்தவர்களாய், வரலாற்றில் இடம்பெறும் நற்ச்சேவை ஆற்றியவர்களாய் காணக்கிடைப்பது அரிதினும் அரிது!
   
அத்தகைய நற்பாக்கியம் பெற்ற ஒரு பெண்மணி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார், அவருடைய அருள்நிறை வாழ்க்கையைத்தான் இங்கு காணப்போகின்றோம். அவர் யார் தெரியுமா?
   
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புக்குரிய அத்தை - மரியாதைக்குரிய ஸஃபிய்யா (ரலி) அவர்கள்! அவர்கள் வீரமும் துணிவும் மிக்கவர்களாக - பொறுமையும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நற்பண்பும் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள்! அவர்களின் சகோதரர் யார் தெரியுமா?
   
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பாசமிகு பெரிய தந்தை - இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முன்னணித் தலைவர் ஹம்ஸா (ரலி) அவர்கள்தாம்! அவர்களின் பிரமிக்கத்தக்க வீரம் குறித்து மாநபி (ஸல்) அவர்களே பெருமைப்பட்டதுண்டு! அவர்களுடைய வீரவாள் புரிந்த துணிவுமிக்க செயல்களுக்கு பத்று, உஹதுப் போர்கள் சாட்சி பகர்ந்து கொண்டிருக்கின்றன!
   
ஸஃபிய்யா (ரலி) அவர்களின் மகனாரைத் தெரியுமா உங்களுக்கு? இறைத் தூதரின் உயிர்த் தோழர் என்று புகழப்பெற்ற ஜூபைர் (ரலி) அவர்கள்தாம்! அவருடைய முழு வாழ்வும் வீரத்திற்கும் தியாகத்திற்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது!
   
ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மருமகளாய் வந்தவரைத் தெரியுமா? வீரத்திருமகள் என்று வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவரும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் தௌர் மலையில் குகைத் தோழராய் இருந்த அபூபக்கர் (ரலி) அவர்களின் மூத்த மகளுமான அஸ்மா (ரலி) அவர்கள்தாம்!
   
அவர்களின் பேரர் யார்? போர்க்களத்தில் ‘ஜின்’ என்று பெயர் பெற்ற அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரலி) அவர்கள்தான்! மற்றும் இரு பேரர்கள் முஸ்அபும், உர்வாவும் எல்லாவிதச் சிறப்புகளும் பெற்றவர்களாவர்!
   
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! ஒருபுறத்தில் தம் சகோதரர் ஹம்ஸா (ரலி) அவர்களையும் மற்றொரு புறம் தம் வீரமகன் ஜூபைர் (ரலி) அவர்களையும் வேறொரு புறம் தம் மரியாதைக்குரிய மருமகள் அஸ்மா (ரலி) அவர்களையும், இன்னொரு புறம் புகழுக்குரிய தம் பேரப்பிள்ளைகளாம் அப்துல்லாஹ், முஸ்அப், உர்வா (ரலி) ஆகியோரையும் - இப்படித் தம்மைச் சுற்றிலும் இஸ்லாத்திற்காக இன்னுயிரையும் அர்ப்பணிக்கும் செயல்வீரர்களைக் காணும் பாக்கியத்தைப் பெற்ற அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களின் கண்கள் எவ்வளவு குளிர்ச்சி அடைந்திருக்கும்! வரலாற்றில் இப்படிப்பட்டதொரு நற்பேற்றைப் பெற்றவராய் மரியாதைக்குரிய ஸஃபிய்யா (ரலி) அவர்கள் மட்டுமே திகழ்கின்றார்கள்! “இது அல்லாஹ்வின் அருளாகும். அதை யாருக்கு வழங்க வேண்டுமென அவன் நாடுகிறானோ அவருக்கு வழங்குகின்றான்.

தனிச்சிறப்புகள்:
   
ஸஃபிய்யா (ரலி) அவர்கள் மக்கமா நகரத்தின் புகழ் பெற்ற கோத்திரமாகிய குறைஷிக் குலத்தில் பிறந்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பாட்டனாரும் அனைத்துச் சிறப்புகளும் மாண்புகளும் கொண்ட மக்கத்து விவேகியும் குறைஷித் தலைவருமான அப்துல் முத்தலிப்தான் அவர்களின் தந்தை! உயர் தகுதிகளும் ஆற்றல்களும் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் குழந்தைப் பருவத்திலேயே பல்கிப் பெருகி வரத் தொடங்கிவிட்டன! அவர்களின் ஆளுமை தனித்துவமும் நிறைவும் பெற்றுத் திகழலானது!
   
குதிரைச் சவாரியிலும் வாள் வீச்சிலும் ஈட்டி எறிவதிலும் நல்ல பயிற்சி பெற்ற ஸஃபிய்யா (ரலி) அவர்கள் போர்க் களத்தில் புகுந்து – மிகுதிறன் பெற்ற வீரனைப் போன்று தாக்குதல் தொடுப்பார்கள்!
   
அரபிகளில் பெரும்பாலோர் எழுத்தறிவுகூட இல்லாதவர்களாக (உம்மிகளாக) இருந்த அந்தக் காலத்தில் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் பெற்ற எழுத்தறிவும் சொல்லாற்றலும் பிரமிக்கத்தக்க அளவில் இருந்தன! கவிதைகள் இயற்றுவதிலும் புகழ் பெற்று விளங்கினார்கள்!
   
ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்குத் தம்முடைய தந்தை அப்துல் முத்தலிப் மீது மிகுந்த அன்பும் பற்றும் இருந்தன. அவர் மரணம் அடைந்தபோது பெரிதும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தார்கள்! அழுது புலம்பினார்கள்! மக்கத்துப் பெருந்தலைவர்களுள் ஒருவரும் தம் தந்தையுமான அப்துல் முத்தலிபுக்கு ஓர் இறங்கற்பா இயற்றினார்கள். அதில் அவருடைய மாண்புகளையும், சிறப்புகளையும் நயம்பட நினைவு கூர்ந்தார்கள்! சொல் நயமும் கருத்தாழமும் கொண்ட அந்தக் கவிதைகள் ஸஃபிய்யா (ரலி) அவர்களுடைய கவிப்புலமைக்கு ஒரு சான்று!

இஸ்லாத்தைத் தழுவுதல்:
   
அப்துல் முத்தலிப்பின் மரணத்திற்குப் பிறகு மக்கமா நகரின் பிரமுகர்களில் ஒருவரான ஹாரிஸ் இப்னு ஹர்ப் என்பவருக்கு ஸஃபிய்யா (ரலி) அவர்கள் மணம் முடித்துக் கொடுக்கப்பட்டார்கள்! சிறிது நாட்களில் அவர் மரணம் அடையவே அவ்வாம் இப்னு குவைலித் என்பவரை மணந்தார்கள். இவர், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவி கதீஜா (ரலி) அவர்களின் சகோதரர் ஆவார். இவருக்கும், ஸஃபிய்யா அவர்களுக்கும்தான் ஜூபைர் (ரலி) அவர்கள் பிறந்தார்கள்.
   
தம் அன்பு மகன் ஜூபைர் சிறுவராய் - சுமார் 16 வயது பாலகராய் இருக்கும்போதே அவ்வாம் மரணம் அடைந்தார்! அப்பொழுது ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு இளமை மாறாப் பருவம்! இருப்பினும் அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமலேயே – தம் பிள்ளைகளைப் பராமரித்துக் கொண்டு காலத்தைக் கழிக்கலானார்கள்!
   
மக்கமா நகரில் இஸ்லாத்தின் பேரொளி இலங்கத் தொடங்கியபோது அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களுடைய சகோதரரின் புதல்வர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித்தூதராய் ஏற்றம் பெற்று மக்களை சத்திய நெறியின் பக்கம் அழைக்கத் தொடங்கிய காலத்தில், ஸஃபிய்யா (ரலி) அவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி இஸ்லாத்தில் இணைந்து கொண்டார்கள். அதற்கு முன்பே அவருடைய மகனார் ஜூபைர் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்!

மகனை வீர உணர்வுடன் வளர்த்தல்:
   
ஸஃபிய்யா (ரலி) அவர்கள் தம் பாசத்திற்குரிய மகன் ஜூபைர் (ரலி) அவர்களை அதிகக் கண்காணிப்புடன் வளர்த்து வந்தார்கள். அவர் போர்த் திறமை பெற்ற மாவீரராக வளர்ந்து வரவேண்டும், அச்சத்திற்கும் கோழைத்தனத்திற்கும் அவர் ஆளாகக் கூடாது என்பது அவர்களின் இலட்சியம்! ஆகையால் அவர் சிரமமான – அதிகக் கடுமையான வேலைகளைக் கொடுத்து ஜூபைர் (ரலி) அவர்களை அடிக்கடி சோதித்துப் பார்ப்பது வழக்கம்! அதன்பேரில் அடிக்கடி அச்சுறுத்தவும் கண்டிக்கவும் செய்தார்கள்! அடிப்பதற்குக்கூட தயங்குவதில்லை!
   
ஒருமுறை ஜூபைர் (ரலி) அவர்கள் தம் தாயாரிடம் வசமாய் மாட்டிக் கொள்ள, தாயார் அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்ததை ஜூபைரின் சிறிய தந்தை நவ்ஃபல் இப்னு குவைலித் என்பவர் பார்த்துவிட்டார். கடும் பதற்றத்திற்கு ஆளான அவர், பையனை இப்படியா அடிக்கின்றீர்கள்? என்று ஸஃபிய்யா (ரலி) அவர்களைக் கண்டித்தர்.
   
அவர், இதனை பனூ ஹாஷிம் குலத்தாரிடமும் தம் குடும்பத்தைச் சார்ந்த பெரியவர்களிடமும் தெரிவித்து, ஜூபைரிடம் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கடுமையாக நடந்து கொள்வதைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
   
இவ்வாறு - ஸஃபிய்யா (ரலி) அவர்கள், தம் மகனை அளவுக்கு அதிகமாகக் கண்டிக்கிறார்கள் என்பது பற்றிப் பரவலாகப் பேசப்பட்டபோது மக்கள் முன்னிலையில், “நான் ஜூபைரின் மீது கோபமாக உள்ளேன் என்று அவர் தவறான தகவல் தந்துள்ளார்! நான் எதற்காக அவரை அடித்து வளர்கிறேன் என்றால், அவர் பேரறிஞராய்த் திகழவேண்டும்! பெரிய படையையும் தோற்கடித்து, பரிசுப் பொருட்கள் பெறவேண்டும் என்பதற்காகத்தான்!”
   
என்று கவிதை பாடி தன் மீதுள்ள குற்றச்சாட்டை மறுத்தார்கள், ஜூபைர் (ரலி) அவர்களிடம் தாம் எதிர்பார்க்கும் இலட்சியத்தை விளக்கினார்கள்! அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் தம் மகனாருக்கு வீரத்தையும், விவேகத்தையும் ஊட்டி வளர்த்த அதே நேரத்தில் இஸ்லாத்தின் மீது பற்றுதலையும் பெருமானார் (ஸல்) அவர்கள் மீதான அன்பையும் அவருடைய உள்ளத்தில் நிரப்பினார்கள்!
   
அதன் விளைவாக – ஜூபைர் (ரலி) அவர்கள் அண்ணலாரின் மீது ஆழமான – அழுத்தமான அன்பையும் அவர்களுக்காக தம் இன்னுயிரை எந்நேரத்திலும் அர்ப்பணிக்கும் தியாக உணர்வையும் பெற்றார்கள்!

 ஒரு நிகழ்ச்சி!
   
நபித்துவம் எய்திய ஆரம்ப காலத்தில் ஒரு நாள் - ‘அண்ணல் நபி (ஸல்) அவர்களை மக்கத்து இணைவைப்பாளர்கள் கைது செய்துவிட்டார்கள் அல்லது கொலை செய்துவிட்டார்கள்’ என்ற வதந்தியை ஜூபைர் (ரலி) அவர்கள் கேள்விப்பட்ட போது மிகுந்த பதற்றத்திற்குள்ளாகி, “வாருங்கள்! என்ன நடந்தது என்று பார்த்து வரலாம்” என்று முழுங்கியவாறு உருவிய வாளுடன் புறப்பட்டு மின்னல் வேகத்தில் நபியவர்களின் இல்லம் அடைந்தார்கள்! அங்கு நபி (ஸல்) அவர்கள் நலமாக இருப்பதைக் கண்டதும்தான் அவர்களுக்கு உயிரே வந்தது. அகமும் முகமும் மகிழ்ச்சியால் மலர்ந்தன!
   
பெருமானார் (ஸல்) அவர்கள் ஜூபைர் (ரலி) அவர்களின் உருவிய வாளின் பக்கம் சுட்டிக்காட்டி, “இது என்ன?” என்று கேட்டார்கள்.
   
“அல்லாஹ்வின் தூதரே, என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும்! எதிரிகள் உங்களைக் கைது செய்துவிட்டார்கள் அல்லது கொலை செய்து விட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். அதற்காகத்தான்....”
   
நபியவர்கள் புன்னகை புரிந்தவாறு “உண்மையில் அப்படி நடந்துவிட்டால் நீர் என்ன செய்வீர்?” என்று கேட்டார்கள்.
   
“அல்லாஹ்வின் தூதரே, இறைவன் மீது சத்தியமாக! நான் இந்த மக்காவாசிகளுடன் போரிட்டு மடிவேன்” என்று சிறுவர் ஜூபைர் (ரலி) அவர்கள் உறுதிபடக் கூறினார்கள்!

வீரமும் பொறுமையும்:
   
அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹஜ்ரத் செய்தார்கள். தம் அன்பு மகனார் ஜூபைர் (ரலி) அவர்களுடன் அங்கே தங்கினார்கள்!
   
மதீனா வாழ்க்கையின்போது இஸ்லாமிய வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டங்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அபாயமிகு சூழ்நிலைகளில், மிகத் துணிவான உதவிகளைச் செய்த பெருமை அவர்களுக்கு உண்டு.
   
உஹது போரின் ஒரு நிகழ்ச்சி ஸஃபிய்யா (ரலி) அவர்களின் துணிவுக்கும் வீரத்திற்கும் ஒரு சான்றாகத் திகழ்கின்றது.
   
வெற்றிக்கனி திட்டமிட்டபடி முஸ்லிம்களின் கையில் விழ இருந்த வேளையில்.. இறைத்தூதர் இட்ட ஒரு கட்டளை மீறப்பட்டதன் விளைவால் போரின் நிலைமை தலைகீழாக மாறியது. முஸ்லிம்களின் அணி சிதறுண்டு, வீரத்தில் பெயர் பெற்ற நபித்தோழர்கள் உள்பட பலரும் களத்தை விட்டு ஓடய மோசமான நிலை ஏற்பட்டிருந்தது.
   
அப்பொழுது அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கையிலே ஈட்டியை ஏந்தியவாறு போர்க்களம் நோக்கிக் கிளம்பினார்கள். களத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி, அவர்களின் இதயங்களில் இஸ்லாத்தின் பற்றையும் இறைத்தூதரின் மீதான அன்பையும் மீண்டும் ஏற்படுத்தி அவர்களின் வீரத்தை தட்டியெழுப்பினார்கள். அவர்களை நோக்கி, “இறைவனின் தூதரை விட்டுவிட்டா நீங்கள் திரும்பி வந்தீர்கள்?” என்று கோபமாகக் கேட்டார்கள். அப்படியே எதிரிகளையும் ஈட்டி கொண்டு தாக்கியவாறு போர்க்களத்தின் அருகில் வந்துவிட்டார்கள்.
   
ஸஃபிய்யா (ரலி) அவர்களைக் களத்தருகே கண்டுவிட்ட காருண்ய நபி (ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அவர்களின் மகனார் ஜூபைர் (ரலி) அவர்களை அழைத்து, “உம்முடைய தாயார் ஸஃபிய்யா (ரலி) அவர்களைச் சந்தித்து திரும்பிப் போகச் சொல்லுங்கள்! அவர்களின் சகோதரர் ஹம்ஸா (ரலி) அவர்களுடைய உடலை – அக்கிரமமாகச் சிதைக்கப்பட்ட உடலை அவர்கள் பார்த்துவிடக் கூடாது” என்று அவசர ஆணை பிறப்பித்தார்கள்!
   
ஜூபைர் (ரலி) அவர்கள் தம் அன்னையைத் தேடி ஓடிவந்து, “அன்புள்ள அன்னையே, நீங்கள் போர்க்களத்தைவிட்டு திரும்பிச் செல்லுமாறு அல்லாஹ்வின் தூதர் ஆணை பிறப்பித்துள்ளார்கள்” என்று கூறினார்கள்.
   
“நான் ஏன் திரும்பிச் செல்லவேண்டும்? என் சகோதரர் கொல்லப்பட்டு அவருடைய உடல் சின்னா பின்னப்படுத்தப்பட்ட செய்தி என் காதுக்கு எட்டத்தான் செய்தது. இறைவழியில் இந்தத் தியாகம் மிகவும் குறைவுதான்! அவருக்கு நேர்ந்த கதியைக் கண்டு நான் பதறவில்லை, அமைதியாகத்தான் இருக்கிறேன். அதற்கான கூலியை அல்லாஹ்விடம் எதிர்பார்த்து பொறுமையுடன் இருப்பேன் - இன்ஷா அல்லாஹ்!” என்று ஸஃபிய்யா (ரலி) கூறினார்கள்.
   
உஹது களத்தில் பேராண்மையுடன் போரிட்டுக் கொண்டிருந்த ஹம்ஸா (ரலி) அவர்களை வஹ்ஷ் இப்னு ஹர்ப் எனும் அடிமை ஒளிந்திருந்தது அம்பெய்து கொல்ல, அவர்களின் உடலை ஹிந்து என்பவள் - பத்றுப் போரில் அவளுடைய தந்தை உத்பாவை ஹம்ஸா (ரலி) அவர்கள் கொன்றதற்குப் பழிவாங்கும் வெறியில் சிதைத்து, மூக்கையும் காதையும் வெட்டியெறிந்திருந்தாள். அது மட்டுமல்ல வயிற்றையும் கிழித்து ஈரலை வெளியே எடுத்து மென்று துப்பித் தனது வெறியை தீர்த்துவிட்டிருந்தாள்!
   
ஹம்ஸா (ரலி) அவர்களின் புனித உடலை, இப்படிக் குரூரமாகச் சிதைக்கபட்ட நிலையில் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் காணக்கூடாது என்றுதான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். ஆனாலும் பொறுமையுடன் இருப்பதாக ஸஃபிய்யா (ரலி) அவர்கள் உறுதி அளித்தபோது காண்பதற்கு அனுமதி வழங்கினார்கள்!
   
ஸஃபிய்யா (ரலி) அவர்கள், ~ஹீதான வீரர்களின் உடல்களுக்கு அருகில் வந்தார்கள். அவற்றிற்கிடையே கொடுமையன முறையில் சிதைக்கப்பட்டுக் கிடந்த தம் பாசத்திற்குரிய சகோதரர் ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலைக் கண்டதும் தம்மையும் அறியாமல் “ஜய்யோ” என்று அலறிவிட்டார்கள். எனினும் பொறுமையை மேற்கொண்டு இன்னா லில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன் (திண்ணமாக நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள், அவன் பக்கம் திரும்பிச் செல்பவர்களாய் உள்ளோம்) என்று கூறிவிட்டு தம் சகோரருக்கு இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரினார்கள்.

கவி நயம்:
   
பிறகு தம் சகோதரரைப் பொதிந்து அடக்கம் செய்வதற்காக நீளமான இரு வெள்ளைத் துணிகளைக் கொண்டு வந்தார்கள். அங்கே அன்ஸாரித் தோழர் ஒருவரை அடக்கம் செய்ய அறவே துணி இல்லாமல் இருந்தது. ஸஃபிய்யா (ரலி) அவர்கள் தம் மகனார் ஜூபைர் (ரலி) அவர்களை நோக்கி,

“இந்தப் பெரிய துணியை அந்த அன்ஸாரித் தோழருக்காக் கொடுத்துவிடும். சிறிய துணியை உம் மாமாவுக்கு வைத்துக் கொள்ளலாம்” என்று கூறினார்கள்!
   
அந்தத் துணியைக் கொண்டு ஹம்ஸா (ரலி) அவர்களின் தலையை மறைத்தால் கால் மறைக்கப்படாமல் இருந்தது. காலை மறைத்தால் தலை திறந்து கிடக்கிறது. எனவே தலையைத் துணியால் பொதிந்து மறைத்துவிட்டு, கால்களில் இலைதலைகளைப் போட்டு அடக்கம் செய்யப்பட்டது.
   
சிறந்த கவிஞராகவும் திகழ்ந்த ஸஃபிய்யா (ரலி) அவர்கள் தம் அன்புக்குரிய சகோதரர் ஹம்ஸா (ரலி) அவர்களின் பெயரில் ஓர் உருக்கமான இரங்கற்பா இயற்றினார்கள். அதில் ஓரிடத்தில், தம் சகோதரரை அடக்கம் செய்யும்போது ஏற்பட்ட துணிப் பற்றாக்குறையையும் மிக நயமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்!
   
 “பிறர் நலம் பேணும் பணியிலும் கொடையிலும் அவர் எந்த அளவுக்குச் சிறந்தவரெனில் இறந்த பிறகும்கூட தம் அருகில் இருந்தவரை அவர் மறந்தாரில்லை.”
   
அந்த அன்ஸாரித் தோழரின் உடலுக்கு பொதிதுணி வழங்கப்பட்டதைத்தான் இப்படி சோகம் கலந்த நயத்துடன் பாடுகின்றார்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்கள்.
   
அதில் இன்னோர் இடத்தில் தம் சகோதரர் பெற்ற மறுமைப் பேறு குறித்தும் - தம் மனத்தில் பதிந்துவிட்ட அவரது நினைவு குறித்தும் இப்படி அழகாகப் பாடுகின்றார்கள்:

    “அர்ஷின் அதிபதியாகிய சத்திய இறைவன்
      சுவனத்தின் பக்கம் அவரை அழைத்துள்ளான்.
      அங்கே அவர் உயிர் வாழ்கிறார்,
      அது குறித்து எனக்கு மகிழ்ச்சிதான்!
      அல்லாஹ்வின் மீது ஆணையாக!
      கிழக்கு நோக்கித் தென்றல் காற்று வீசும் காலமெல்லாம்
      நான் உம்மை மறக்க மாட்டேன்!
      ஊரில் இருந்தாலும் பயணமானாலும் இதோ
      கவலையால் அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றேன்!”
     
அதில் மற்றோர் இடத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை நோக்கி இவ்வாறு உருகி நின்றார்கள், ஸஃபிய்யா (ரலி) அவர்கள்.

    “இன்று உங்கள் வாழ்வில் வந்திருப்பது ஒரு துயரமிகு நாள்!
      ஆம்! இன்றைய சூரியனே கறுத்துப் போய்விட்டது!
      முன்போ அது பிரகாசமாய் இருந்தது!”

சமயோசிதமான செயல்:
   
ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு நடைபெற்ற அகழ் யுத்தத்தில் அரபு நாடு முழுவதின் இணைவைப்பாளர்களும் யூதர்களும் முஸ்லிம்களை அழித்துவிட வேண்டுமென ஒன்று திரண்டிருந்தார்கள். குறிப்பாக மதீனாவுக்குள் வாழ்ந்த – நேற்று வரை நேசமாகப் பழகிவந்த பனூ குறைளா யூதர்கள் தீடீரென்று இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினார்கள். அவர்களின் திடீர் துரோகம் முஸ்லிம்களுக்குப் பெரும் ஆபத்தாக வந்து விடிந்தது!
   
இத்தகைய சோதனை மிக்க காலகட்டத்தில் - இஸ்லாத்தைக் காப்பதற்காக தங்களின் இன்னுயிரையும் அர்ப்பணித்த நபித்தோழர்கள் புரிந்த சாதனை மகத்தானது, அத்துடன் அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் காட்டிய வீரமும் சமயோசிதமான உதவியும் குறிப்பிடத்தக்கவையாகும்! அண்ணல் நபி (ஸல்) அவர்களே கூட அதனைப் பாராட்டி, போரில் கிடைத்த பரிசில் - பொருள்களில் ஒரு பங்கை ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்கள்!
   
அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களின் அத்தகைய வீரச் செயல் என்ன?
   
அகழ் யுத்தத்தின்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கை – உள்ளூர் எதிரிகளான பனூகுறைளா எனும் யூத கோத்திரத்தார்களிடமிருந்து பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றுவதுதான்! அவர்கள் அத்தனை பேரையும் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான ஒரு கோட்டைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக இருக்க ஏற்பாடு செய்தார்கள்!
   
கோட்டை மிகவும் உறுதியானதுதான். ஆயினும் இந்த ஏற்பாடு முற்றிலும் அபாயம் நீங்கியதாக இல்லை!
   
அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் அனைத்து வீரர்களும் போரில் ஈடுபட்டிருந்ததால், இங்கே பனூ குறைளா யூதர்கள் வசித்த பகுதிக்கும் கோட்டைக்கும் இடையே எந்தப் படையும் பாதுகாவலுக்கு இல்லை. கோட்டையினுள் இருப்பது முழுக்க முழுக்க பெண்களும் குழந்தைகளும்தான். தாக்குதல் கொடுத்தால் அதைச் சமாளிப்பதற்கு அங்கு வீரர்கள் யாரும் இல்லை. எனும் விஷயம் யூதர்களுக்குத் தெரிந்தால் ஆபத்துதான்!
   
இந்த சூழ்நிலையில் ஒருநாள் யூதன் ஒருவன் அந்தப் பக்கமாகச் சென்று கோட்டையின் நிலவரம் என்ன என்று ஒட்டுக் கேட்க முயன்றான்!
   
அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் தற்செயலாக அவனை நோட்டமிட்டபோது அவன் எதிரிகளால் அனுப்பப்பட்ட உளவாளி என்பதைத் துல்லியமாகக் கவனித்து விட்டார்கள்.
   
உடனே கோட்டையின் சொந்தக்காரரான ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்: (அவர்கள் போரில் கலந்து கொள்ளச் செல்லாதிருந்தார்கள்)
   
“ஹஸ்ஸான் அவர்களே, இந்த யூதன் கோட்டையைச் சுற்றி சுற்றி வருவதைப் பாருங்கள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நமக்குப் பின்னால் இருக்கின்ற யூதர்களிடம் சென்று நம்முடைய நிலைமையை இவன் அறிவித்துக் கொடுக்காமல் இருக்கமாட்டான்! இறைத்தூதரும் அவர்தம் தோழர்களும் நம்மை இங்கே விட்டுவிட்டுப் போருக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள்! எனவே கீழே இறங்கிச் சென்று இந்த யூதனைக் கொன்றுவிட்டு வாரும்!”
   
“அப்துல் முத்தலிப்பின் மகளே, அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இந்த வேலையை நிறைவேற்றிட நான் தகுதி பெற்றிருக்கவில்லை என்பதைத் திண்ணமாக நீங்கள் அறிவீர்கள்தானே!”
   
ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் இவ்வாறு தட்டிக் கழ்த்தது கோழைத்தனத்தினால் அல்லா: மாறாக அவர்கள் அதிக அளவு முதுமை அடைந்திருந்தார்கள் என்பது ஒருபுறம் இருக்க, அவர்களின் முழங்கையின் நடுவில் ஒரு நரம்பு வெட்டப்பட்டு அதனால் போரில் கலந்துகொள்ள இயலாமல் இருந்தார்கள்! இவ்வாறு வரலாற்றாசிரியர்கள் சிலர் கருத்துக் கொண்டுள்ளார்கள்!
   
ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் இவ்வாறு பதிலளித்ததைப் பார்த்த ஸஃபிய்யா (ரலி) அவர்களின் உள்ளத்தில் வீரம் பொங்கியெழுந்தது!
   
உடனே எழுந்து, கூடாரத்திற்கு அடிக்கப்பட்டிருந்த வலுவான முளையைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு, கோட்டையிலிருந்து இறங்கி மெதுவாக வாயிலைத் திறந்து வெளியே வந்தார்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்கள்! அந்த யூதன் கவனமின்றி இருக்கும் நேரத்தை எதிர்பார்த்து அவனது தலையில் பலமாக அடித்தார்கள்! அதே இடத்தில் அவன் பிணமானான்!
   
பிறகு ஸஃபிய்யா (ரலி) அவர்கள் நேராக ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம் வந்து ‘அவனது தலையைத் துண்டித்து வாருங்கள்’ என்று வேண்டினார்கள். அதற்கும் அவர் இயலாது என்று கூறவே தாமே சென்று அவனது தலையைத் துண்டித்துக் கொண்டு வந்து கோட்டையின் உச்சியிலிருந்து தொலைவில் வீசி எறிந்தார்கள்.
   
துண்டிக்கப்பட்ட தலையைப் பனூ குறைளா யூதர்கள் கண்டபோது கோட்டைக்கு உள்ளேயும் முஸ்லிம்களின் படை ஒன்று இருக்கிறது எனக் கருதி கோட்டையைத் தாக்கும் எண்ணத்தைக் கைவிட்டார்கள்.
   
இவ்வாறு – அஞ்சா நெஞ்சம் கொண்ட ஸஃபிய்யா (ரலி) அவர்கள் துணிச்சலான நடவடிக்கையில் இறங்கி, யூதர்களால் நேரவிருந்த பேராபத்தைத் தடுத்து முஸ்லிம் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றினார்கள்!

போரில் மருத்துவ சேவை:
   
அகழ் யுத்தத்திற்குப் பிறகு – கைபர் பள்ளத்தாக்கில் வசித்து வந்த பனூ நுளைர் கோத்திரத்தைச் சேர்ந்த யூதர்கள் இஸ்லாத்திற்கு எதிரான நீண்ட சதித் திட்டங்களை உருவாக்கி வந்தார்கள். அதனைக் கேள்விப்பட்டதும் முற்றவிடாமல் முன்கூட்டியே அதனைத் தகர்த்துவிடுவதற்காக அந்த யூதர்களுடன் ஒரு போரை மேற்கொண்டார்கள் நபி (ஸல்) அவர்கள்! அதுதான் கைபர் போர்!
   
இந்தப் போரிலும் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கலந்து கொண்டு போர்க்கால சேவைகளை ஆற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். முஸ்லிம் பெண்கள் சிலருடன் - குறிப்பாக அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த குஅய்பா பின்த் ஸஃத் (ரலி) எனும் நபித் தோழியருடன் சேர்ந்து போர்க்களத்திற்கு அருகில் ஒரு கூடாரம் அடித்துக் கொண்டு போரில் காயம்பட்ட வீரர்களுக்கு மருத்துவ உதவி அளித்தார்கள்.
   
போர் முடிந்த பிறகு போரில் கைப்பற்றப்பட்ட பொருள்களை முஸ்லிம் வீரர்களுக்குப் பகிர்ந்தளித்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மருத்துவ சேவை ஆற்றிய பெண்களுக்கும் அவற்றை வழங்கினார்கள். அதில் அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கும் அதிகப் பங்கை அளித்துக் கௌரவித்தார்கள்!

அண்ணலார் மீது இரங்கற்பா:
   
அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் தம் சொந்த சகோதரரின் புதல்வரான அண்ணல் நபி (ஸல்) அவர்களை விட இரண்டு மூன்று வயதுதான் மூத்தவர்களாய் இருந்தார்கள். குழந்தைப் பருவத்தில் இருவரும் ஒரே வீட்டில்தான் வளர்ந்து வந்தார்கள். ஆகையால் உளப்பூர்வமான பாசமும் நேசமும் இருவரின் இதயத்திலும் குடிகொண்டிருந்தது. எந்த அளவுக்கெனில், ஸஃபிய்யா (ரலி) அவர்களின் மகனார் ஜூபைர் (ரலி) அவர்களை பெரும்பாலும் ‘இப்னு ஸஃபிய்யா (ஸஃபியயாவின் மகன்) என்றுதான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்போடு குறிப்பிடுவது வழக்கம்!
   
இப்படி – உயிருக்கு உயிரான அன்புடனும் உயர்ந்த மரியாதையுடனும் பேசிப் பழகி வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றபோது பெண்களிலேயே – குறிப்பாக நபியவர்களின் குடும்பத்துப் பெண்களிலேயே அதிகமான அதிர்ச்சிக்கு ஆளாகிப் பெரிதும் கவலை கொண்டவர் அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள்தாம்! தாங்க முடியாத மனவேதனையையும் ஆதங்கத்தையும் கவிதைகளாக வடித்து நபியவர்களின் பெயரில் அவர்கள் இரங்கற்பா இயற்றினார்கள்!

      நெஞ்சை நெகிழச் செய்யும் அக்கவிதைத் தொகுப்பிலிருந்து இதோ சில வரிகள் -

    “அல்லாஹ்வின் தூதரே, நீங்கள்
      எங்களின் நம்பிக்கையாய்த் திகழ்ந்தீர்கள்!
      நீங்கள்
      எப்போதும்
      எங்களுக்குப் பேருபகாரம் புரிபவராய் இருந்தீர்களே-
      அன்றி
      என்றுமே அநீதி இழைத்ததில்லை!
      நீங்கள்
      எங்களுக்கு
      பெரும் கிருபை புரிபவராய் -
      நேர்வழி காட்டுபவராய் -
      கல்வி புகட்டுபவராய் திகழ்ந்தீர்கள்!
      இன்று
      அழக்கூடிய அனைவரும் உங்களுக்காக
      அழத்தான் வேண்டும்!
      அல்லாஹ்வின் தூதரே!
      என்னுடைய
      தாயாரும்
      சிற்றன்னையும்
      மாமாவும்
      உங்கள் மீது அர்ப்பணமாகட்டும்!
      ஏன்
      நானும் எனது சொத்து முழுவதும்
      உங்களுக்கே அர்ப்பணம்!
      அந்தோ!
      நம்முடைய தலைவரை
      நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்குமாறு
      அல்லாஹ் விட்டு வைத்திருந்தால்,
      நாம் எவ்வளவு நற்பாக்கியம் உடையவர்களாக
      இருந்திருப்போம்!
      ஆயினும்,
      இறைவனின் தீர்ப்பு மிகவும்
      உறுதியானதன்றோ!
      அல்லாஹ்வின் தூதரே!
      உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்!
      நீங்கள் நிலையான சுவனபதிகளில் பிரவேசிப்பீர்களாக!”
   
அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் தமது 73-வது வயதில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மரணம் அடைந்தார்கள். மதீனாவில் ஜன்னதுல் பகீஃ எனும் அடக்கத் தலப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
   
அல்லாஹ் அவர்களைத் திருப்தி கொண்டு, அவர்கள் புரிந்த தியாகங்களுக்கும் சேவைகளுக்கும் நற்கூலி வழங்குவானாக, ஆமீன்!
Previous Post Next Post