உம்மு ரூமான் (ரலி)

உம்மு ரூமான் (ரலி)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
''உங்களில் எவராவது சுவனத்தின் அழகிய கன்னிப் பெண்ணொருத்தியைக் காண விரும்புவீர்களென்றால், (அவர்கள்) உம்மு ரூமான் (ரலி) அவர்களைக் காணட்டும்"".

உம்மு ரூமான் (ரலி) அவர்கள் அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் மனைவியும், ஆயிஷா (ரலி) அவர்களின் தாயாருமாவார்கள். ஆக, அந்த வகையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மாமியாராவார்கள். இன்னும் இவரது மகன் அப்துர்ரஹ்மான் பின் அபுபக்கர் (ரலி) அவர்கள் சிறந்த குதிரை வீரரும், போர்க்கலைகளில் வல்லவருமாவார். இவர் தனது தாயிடமிருந்து தான் தைரியத்தையும், சிறந்த நற்பண்புகளையும் பெற்றுக் கொண்டார்கள். இவரது இயற்பெயர் ஸைனப் என்பதாகும், இருப்பினும் இவரது குடும்பப் பெயர் கொண்டே அறியப்படுகின்றார். இவர் பொறுமையும், சகிப்புத்தன்மை மிக்கவருமாக இருந்ததோடு, பிரச்னைகளின் பொழுது ஊகத்திற்கு இடம் கொடாமல், அதனைத் தீர ஆய்வு செய்து தெளிவு பெற்றுக்கொள்வதனைப் பண்பாகக் கொண்டவர். ஒருசமயம், ஆயிஷா (ரலி) அவர்களின் மீது களங்கம் சுமத்தப்பட்ட பொழுது, மற்ற பெண்களைப் போல வாய்கூசாமல் ஏச்சிலும், பேச்சிலும் ஈடுபடாமல் அமைதி காத்தார்கள். இவரது கணவர் அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் மேன்மைகளைப் பற்றி எடுத்துச் சொன்ன பொழுது, அதனை ஏற்றுக் கொண்டதோடு, காலம் காலமாக ஏற்றுப் பின்பற்றி வந்த மார்க்கத்தை துறந்து இஸ்லாத்தினை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆன்மீக ரீதியான மற்றும் ஒழுக்க ரீதியான போதனைகளையும் ஏற்றுக் கொண்டதோடு, மறுமையில் கிடைக்கவிருக்கின்ற சுவனத்தின் மீது ஆசை கொண்டவர்களாக அவர்கள் திகழ்ந்தார்கள்.

உம்மு ரூமான் (ரலி) அவர்கள் அரேபிய தீபகற்பத்தில் உள்ள சராத் என்ற இடத்தில் தங்களது இளமை வாழ்வை வாழ்ந்தார்கள். அவர்கள் வயதுக்கு வந்த பொழுது, அவர்களது சொந்த குலத்தைச் சேர்ந்த இளைஞரான அப்துல்லா பின் ஹாரித் ஸக்பரா அஸ்தி என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார், அவரது பெயர் துஃபைல் பின் அப்துல்லா என்பதாகும். அதன்பின் இவர்கள் மக்காவிற்கு இடம் பெயர்ந்தார்கள், இவர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் நெருங்கிய தோழராக ஆனார்கள். மிகக் குறுகிய காலத்திலேயே அப்துல்லா இறந்து போனதுடன், அவர்களது மனைவியும், பிள்ளையும் ஆதரவற்ற அநாதைகளானார்கள். இந்த நிலையைக் கண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், அப்துல்லா வின் விதவை மனைவியை தானே முன்வந்து மணந்து கொண்டார்கள். இந்தத் திருமணத்தில் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் மிகவும் சந்தோஷமடைந்ததோடு, அதன் பின் இவருக்கு அப்துர்ரஹ்மான் என்ற ஆண் மகவும், ஆயிஷா என்ற பெண் மகவும் பிறந்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பதாக கதீலா பின்த் அப்துல் உஸ்ஸா என்பவரை மணந்திருந்தார்கள். இவர்களுக்கு அஸ்மா என்ற பெண் மகவும், அப்துல்லா என்ற ஆண் மகவும், மதீனா ஹிஜ்ரத்திற்கு சற்று முந்தைய நாட்களில் பிறந்திருந்தது. அதன் பின் அபுபக்கர் (ரலி) அவர்கள் அஸ்மா பின்த் உமைஸ் என்பவரை மணந்து கொண்டார்கள். இவர்களுக்கு முஹம்மது பின் அபுபக்கர் என்ற ஆண்மகவு பிறந்தது. அதன் பின் ஹபீபா பின்த் காரிஜிய்யா என்ற பெண்ணை மணந்தார்கள், இவர்களுக்கு உம்மு குல்தூம் என்ற பெண் மகவு பிறந்தது.

உம்மு ரூமான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களிலேயே இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். தபகத் இப்னு ஸஅத் என்ற நூலில் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களிலேயே இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டவர்கள் என்று பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையிலேயே இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்ட உம்மு ரூமான் (ரலி) அவர்கள், மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றவர்களின் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்ட மக்களை குறைஷிகளின் நிராகரிப்பாளர்கள் படுத்திய பாட்டையும், முஸ்லிம்களின் மீது அவர்கள் கட்டவிழ்த்து விட்ட கொடூரங்களையும் கண்ணால் கண்ட உம்மு ரூமான் (ரலி) அவர்கள், முஸ்லிம்களின் நிலையை எண்ணி எண்ணி கண்ணீர் வடிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இருப்பினும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டவர்களாகவும், முஸ்லிம்களின் துன்பங்களைப் போக்க தனது கணவர் செய்து வரும் அற்பணிப்புகளுக்கு உறுதுணையாக இருப்பதிலும் அவர்கள் இன்பங் காணக் கூடியவர்களாக இருந்தார்கள். தனது கணவர் மூலியமாக இஸ்லாத்தின் உன்னதமான தாக்கத்தைப் பெற்றுக் கொண்ட இவர்கள், அதில் நிம்மதியும் கண்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும், தனது தோழர்களை நோக்கி மன தைரியத்தை இழந்து விட வேண்டாம், அமைதியாகவும், பொறுமையாகவும், இறைநம்பிக்கையில் உறுதியாகவும் இருங்கள் என்று ஆறுதல் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். நிச்சயமாக உங்களுக்கு சுவனம் வாக்களிக்கப்பட்டிருக்கின்றது என்று உற்சாகமூட்டக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். இவ்வாறு குறைஷிகளின் அதிகமான துன்பங்களுக்கு இரையானவர்களில் ஒருவர் தான், இஸ்லாத்தின் முதல் முஅத்தினாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிலால் (ரலி) அவர்கள். பிலால் (ரலி) அவர்களும், அவர்களுக்கு இணையாக துன்பங்களை அனுபவித்தவறுமான கப்பாப் பின் அரத் (ரலி) அவர்களை நோக்கி, 'இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் ஒவ்வொரு முஸ்லிமும் எவ்வாரெல்லாம் துன்பங்களை அனுபவித்தார்கள் என்று சுட்டிக்காட்டி, அவர்களை உற்சாகப்படுத்தக் கூடியவர்களாக இறைத்தூதுர் (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். இஸ்லாம் ஒவ்வொரு காலங்களிலும் மக்கள் முன் கொண்டு வரப்பட்ட பொழுது, அதனை ஏற்றுக்கொண்ட மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள், இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். அவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்கள் என்பதற்காக, அவர்களது உடல்கள் இரு கூறாகப் பிளக்கப்பட்டன, ரம்பம் கொண்டு அறுக்கப்பட்ட போதிலும் அவர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்ட இறைநம்பிக்கையை விட்டு விடவில்லை. அதிலிருந்து சற்றும் விலகிச் செல்லவில்லை என்று கூறி, இறைநம்பிக்கைக்கு உரம் சேர்க்கக் கூடியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.

''ஓ..! யாஸரின் குடும்பத்தவர்களே..! பொறுமையுடன் இருங்கள், (இறுதி நாளில்) உங்களுக்கு சுவனம் சித்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது"".

சொல்லொண்ணாக் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட அந்தநீண்ட நெடிய நாட்களில், உம்மு ரூமான் (ரலி) அவர்கள் தன் கண் முன் கொடுமையான காட்சிகளைக் கண்ட பொழுதிலும் இறைநம்பிக்கை இழக்காமல் உறுதியாக இருந்தார்கள். அவர்களின் அதிகமான நேரங்கள் இறைவனிடம் தியானிப்பதிலும், தொழுகையைக் கடைபிடிப்பதிலும் கழிந்து கொண்டிருந்தது. தனது கணவர் அபுபக்கர் (ரலி) அவர்கள் சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தினை மேலோங்கச் செய்வதற்காக அழைப்புப் பணி செய்து கொண்டிருந்த பொழுது, அதனால் கவரப்பட்ட உம்மு ரூமான் (ரலி) அவர்கள் தனது கணவருக்கு ஆத்மீக ரீதியாக ஒத்துழைப்பு வழங்கினார்கள், உறுதுணையாக இருந்தார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் தனது ஆருயிர்த் தோழரான அபுபக்கர் (ரலி) அவர்களின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போகக் கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறு வருகை தரும் பொழுதெல்லாம் ஆயிஷா (ரலி) அவர்களை நற்பண்புகளோடு வளர்ப்பதற்கான அறிவுரைகளை வழங்கிச் செல்லக் கூடியவர்களாக இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்கள் ஹிஜ்ரத்திற்கு மூன்று வருடங்களுக்கு முன்னர், மரணமடைந்து விட்டதன் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஒரு வருடமாக எந்தப் பெண்ணையும் மணமுடிக்காமலேயே வாழ்ந்து வந்தார்கள். அதன்பின்னர் தான் ஜிப்ரீல் (அலை( அவர்களின் அறிவுறுத்தலுக்குப் பின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள்.

ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ''உங்களை நான் தொடர்ந்து மூன்று நாட்களாக கனவில் கண்டு வந்தேன்"" என்றார்கள். வானவ தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் உங்களது உருவத்தை பட்டுத் துணியில் சுற்றி எடுத்து வந்து, என்னிடம் காண்பித்து, இது தான் உங்களது மணமகளது தோற்றமாகும் என்றார்கள். நான் அந்தத் துணியை விலக்கிப் பார்த்த பொழுது உங்களது உருவம் அதில் இருக்கக் கண்டேன். அல்லாஹ் தனது தூதர் (ஸல்) அவர்களின் துணைவியாக ஆயிஷா (ரலி) அவர்களையே தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்றார்கள். கவ்லா பின்த் ஹகிம் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், உங்கள் முன் இரண்டு தேர்வு இருக்கின்றது, இவர்களில் யாரை நீங்கள் மணக்க விரும்புகின்றீர்கள் என்று கேட்ட பொழுது, இரண்டு பேரையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்து மணந்து கொண்டார்கள். இதன் மூலம் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மாமியார் என்ற சிறப்புத் தகுதியையும் பெற்றுக் கொண்டார்கள்.

இறைவன் தன்னுடைய அடியாரும், தூதருமான முஹம்மது (ஸல்) அவர்களை மக்காவை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து கிளம்புமாறு உத்தரவிட்டதும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முதன்முதலில் தனது ஆத்மார்த்த நண்பரான அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டிற்குத் தான் முதலில் விரைந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருப்பத்தினை அறிந்து கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் ஏன் எதற்கு என்ற எந்தக் கேள்வியையும் கேட்காமல் உடன் கிளம்ப சித்தமானார்கள். பயணத்திற்குத் தேவையான சில பொருட்களை எடுத்துக் கொண்டு, அத்துடன் வீட்டில் இருந்த அத்தனை செல்வங்களையும் தன்னுடன் எடுத்துக் கொண்டார். தன்னுடைய தந்தையையும், பிள்ளைகளையும் இறைவனது பாதுகாப்பின் கீழ் விட்டு விட்டு, இதுவரை கண்டறியாத ஒரு இடத்திற்கு இருவரும் பயணமானார்கள்.

உம்மு ரூமான் (ரலி) அவர்களுக்கு இது மிகவும் கடுமையான நேரமாக இருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்து சென்று விட்ட அபுபக்கர் (ரலி) அவகள் வீட்டில் இருந்த அத்தனை செல்வத்தையும் தன்னுடன் எடுத்துச் சென்று விட்டதன் காரணத்தால், வீட்டின் அன்றாடச் செலவுகளுக்கே அவர் சிரமப்பட வேண்டியதாயிருந்தது. இந்த சிரமங்களுக்கு இடையிலும், அவரது உள்ளம் யா அல்லாஹ் அந்த இருவரையும் மிகவும் பாதுகாப்பாக மதீனாவிற்குக் கொண்டு சேர்த்து விடு என்று படைத்த வல்லோனை நோக்கி பிரார்த்தனை நீண்டு கொண்டே இருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் மதீனாவை மிகவும் பாதுகாப்பாக அடைந்து விட்டதன் பின்னர், ஸைத் பின் ஹாரித் (ரலி) மற்றும் அபூ ராஃபிஃ (ரலி) என்ற இரு தோழர்களையும் தன்னுடைய குடும்பத்தவர்களை அழைத்து வருவதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள். அதேபோல அப்துல்லா பின் அரீகத் (ரலி) என்ற தோழரிடம் தனது மகன் அப்துல்லாவுக்கு ஒரு கடிதமும் அனுப்பி வைத்த அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், இருவரும் சேர்ந்து தனது குடும்பத்தவர்களை அழைத்து வர மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்களும், அவரது தாயாருமான உம்மு ரூமான் (ரலி) அவர்களும் ஒட்டகத்தில் மதீனாவை நோக்கிப் பயணமானார்கள். பயணம் செய்து போய்க் கொண்டிருக்கும் வழியில், எதிர்பாராத விதமாக அவர்கள் பயணம் செய்த ஒட்டகம் திமிர ஆரம்பித்தது, கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் இருவரையும் தூக்கி எறிந்தது. உம்மு ரூமான் (ரலி) அவர்கள் தனது பிரியத்திற்குரிய மகள் கீழே விழுந்தது குறித்து மிகவும் கவலையடைந்தவர்களாக, ''என்னுடைய இளம் மணப்பெண்ணே"" என்று அழைத்து சோகத்தை வெளிப்படுத்தினார்கள். பின் ஒருவர் அந்த ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து அடக்குமாறு கூறவும், அதன்படி செய்த பின் அந்த ஒட்டகம் அமைதியானது. அதன் மூலம் தாயும், மகளும் மிகப் பெரிய ஆபத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள்.

இவர்கள் மதீனாவை அடைந்ததும், அபுபக்கர் (ரலி) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் குடியேறினார்கள், வீட்டினை ஒழுங்கு செய்ய ஆரம்பித்தார்கள். இந்த வீட்டிலிருந்து தான் ஆயிஷா (ரலி) அவர்கள் மணப் பெண்ணாக இறைத்தூதர் (ஸல்) அவர்களது வீட்டிற்குச் சென்றார்கள். எனவே, இந்த இல்லம் இறைச் செய்தி வெளிப்பாட்டினைச் சுமந்த இல்லமாக பரிணமித்திருந்ததோடு, இன்னும் இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்கள் வரிசையில், தனது மகளும் இணைந்தது குறித்து உம்மு ரூமான் (ரலி) அவர்கள் மிகவும் சந்தோசமடைந்தார்கள். இதனை விட வேறென்ன பெருமைகள் என்னுடைய குடும்பத்திற்கு வேண்டும்?! என்றும் அவர்கள் தனது சந்தோசத்திற்கான காரணத்தையும் தனக்குள் கூறிக் கொண்டார்கள்.

நயவஞ்சகர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறிய பொழுது, முழு மதீனா நகரமே ஒருவித இறுக்கமான சூழலில் சிக்கித் தவித்தது, எங்கும் குழப்பம் நிறைந்து முஸ்லிம்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியாக இருக்கக் கூடியவர் எவ்வாறு மிகப் பெரிய பாவம் ஒன்றைச் செய்திருக்க முடியும், அவ்வாறு செய்திருக்கும்பட்சத்தில் அதனை எவ்வாறு ஒப்புக் கொள்ள முடியும்? என்று மக்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.

முழு மதீனா நகரமே இப்பொழுது ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி, அவர்கள் நல்லொழுக்கமுடையவர் அல்லர் என்று எள்ளி நகையாட ஆரம்பித்திருந்தது. தன்னைப் பற்றி மதீனா மக்கள் என்ன பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை உம்மு மஸ்தா என்ற பெண்மணி மூலம் அறிந்து கொண்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், இன்னும் இவை அனைத்திற்கும் மூல காரணம் அந்த பெண்மணியின் மகன் தான் என்பதையும் அறிந்து மிகவும் கவலை அடைந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்று தனது தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்கள். தனது பெற்றோர்களிடம் நடந்த விபரங்களை கண்ணீர் மல்க ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய பொழுது, அவர்களது குடும்பமே இப்பொழுது இறுக்கமான சோகத்தின் பிடியில் வாழ ஆரம்பித்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களும் மிகவும் கவலை அடைந்தார்கள், இன்னும் ஆயிஷா (ரலி) அவர்களை அவர்களது வீட்டிற்கு வந்து பார்க்க வந்தார்கள். அப்பொழுது, ஆயிஷாவே.., உண்மையிலேயே நீங்கள் பாவம் செய்திருக்கும்பட்சத்தில் இறைவனிடம் மன்னிப்புக் கோரிக் கொள்ளுங்கள், அவன் மிகவும் கருணையாளனாக இருக்கின்றான், உண்மையில் நீங்கள் அந்த பாவததைச் செய்யவில்லை என்றால், அதன் உண்மையை அவன் விரைவில் வெளிப்படுத்துவான், கவலைப்படாதீர்கள், அவன் உங்களை மன்னிப்பான் என்றும் கூறினார்கள். தனது தாயாரைப் பார்த்த ஆயிஷா (ரலி) அவர்கள், இதற்கு நீங்களே பதில் கூறுங்கள் என்ற பொழுது, உம்மு ரூமான் (ரலி) அவர்கள் எதனையும் பேசாது அமைதியாக இருந்து விட்டார்கள். பின்னர் தனது தந்தையான அபுபக்கர் (ரலி) அவர்களைப் பார்த்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு பதில் கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள், அவரும் எந்த பதிலையும் பேசாது அமைதியாக இருந்து விட்டார்கள். இறுதியாக, தானே அதற்கான பதிலை அளிக்க முன் வந்த ஆயிஷா (ரலி) அவர்கள், 'நான் என்னுடைய தவறை மறுத்தேன் என்றால் - நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான் - முஹம்மது (ஸல்) அவர்கள் அதனை நம்பவில்லையெனில், அந்தத் தவறை நான் ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், அவர் திருப்தி அடையக் கூடும், ஆனால் நான் செய்யாத தவறை ஒப்புக் கொள்வது உண்மைக்குப் புறம்பானதாகி விடும். இதற்குச் சரியான பதில் என்னவென்றால், தனது மகன்களுக்கு முன்னால் எந்தவித உதவியுமற்ற நிலையில் இருந்த யூசுப் (அலை) அவர்களின் தந்தையவர்களின் பதிலே மிகச் சிறந்ததாக இருக்குமென்று நினைக்கின்றேன் என்று கூறி முடித்த ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

''எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்; மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்"" என்று கூறினார். (12:18)
என்ன தான் தன்னைத் தேற்றிக் கொண்ட போதிலும், அந்த தினங்கள் மிகவும் கொடுமையாக இருந்தன, ஏனெனில் யூசுப் (அலை) அவர்களின் தந்தையான யாக்கூப் (அலை) அவர்களின் பெயரைக் கூட அவர்களால் தனது ஞாபகப் பரப்பிற்குக் கொண்டு வர இயலவில்லை. அந்த அளவுக்கு மன அமைதியின்றி தவித்தார்கள். இந்த சம்பாஷனைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே, இந்தச் சம்பவம் குறித்த விளக்கம் இறைச் செய்தியாக வெளியாகிக் கொண்டிருந்தது, இறைச் செய்தி நிறைவடைந்தவுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களை வியர்வை முத்துக்களாகச் சூழ்ந்திருந்தன, ஆயிஷா (ரலி) அவர்களின் பக்கம் புன்னகையுடன் திரும்பினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

இது சம்பந்தமாக இறைவனே தனது இறைச் செய்தியின் மூலம் தெளிவை வழங்கியது குறித்து, ஆயிஷா (ரலி) அவர்களின் பெற்றோர் மிகவும் சந்தோசமடைந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்களைப் பார்த்து.., உங்களது கணவருக்கு நன்றி கூறுங்கள் என்றார்கள். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களோ எனது நன்றிக்குரியவன் அல்லாஹ் தான், அவனே என்மீதுள்ள களங்கத்தைத் துடைத்தெறிந்தான் என்றார்கள். மேற்கண்ட சம்பவம் குறித்த வசனம் இறங்கியதன் பின்னர், ஆயிஷா (ரலி) அவர்கள் மீதிருந்த பாசமும், இன்னும் மதிப்பும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் முன்னைக் காட்டிலும் அதிரிகத்தது.

உம்மு ரூமான் (ரலி) அவர்கள் இரவும் பகலும் இறைவணக்கத்தில் கழித்து இன்பமடையக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் முழு நோக்கமே அல்லாஹ்வினதும் இன்னும் அவனது தூதர் (ஸல்) அவர்களினது முழு திருப்தியையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகவே இருந்தது. அவர் தனது கணவருக்கு எல்லா நேரத்தில் கடமையாற்றக் கூடிய மனைவியாக இருந்தார்கள். தொழுகையைப் பற்றி தனது கூறுகின்றவைகளைக் குறித்து வைத்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். ஒருசமயம் அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது வீட்டில் நுழைந்த பொழுது உம்மு ரூமான் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு, தொழுகையின் பொழுது அமைதியையும், கலங்கமில்லாத நிலையையும் உடல் எய்தி அதனை அது வெளிப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். அமைதியும் இன்னும் கவனமும் தொழுகையை முழுமையடையச் செய்ய உதவும் என்றார்கள், அபுபக்கர் (ரலி) அவர்கள்.

ஒருநாள் அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் அவர்களது மனைவி உம்மு ரூமான் (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காணச் சென்றார்கள். இருவரிடமும் நீங்கள் வந்த நோக்கமென்ன என்பதைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். அதற்கு அவர்கள், ''ஆயிஷா (ரலி) அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு இருவரும் ஒரு சேர பதில் கூறினார்கள்."" இந்தச் சம்பவத்தை இமாம் அத்தகபி அவர்கள் தனது சியார் அல் ஆலம் அந் நுப்லா என்ற நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களுக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள், அந்தப் பிரார்த்தனை மூலமாக ஆயிஷா (ரலி) அவர்களின் வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான அனைத்துப் பாவங்களையும், அதில் எந்தத் தடயத்தையும் விட்டு வைக்காது அல்லாஹ் அனைத்தையும் மன்னித்தான். ஆயிஷா (ரலி) அவர்களின் பெற்றோர்கள் இருவரும் இது குறித்து மிகவும் சந்தோசமடைந்தார்கள்.

பின்னர் அவர்களிடம், இந்தப் பிரார்த்தனையானது யார் யாரெல்லாம் என்னை அல்லாஹ் இறைத்தூதராக அறிவித்த பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, தீனில் உறுதியாகவும் இருந்தார்களோ அத்தனை பேருக்கும் என்னுடைய இந்தப் பிரார்த்தனை பொருந்தும் என்று கூறினார்கள்.

உம்மு ரூமான் (ரலி) அவர்கள் மீது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதிக மரியாதை வைத்திருந்தார்கள், அதற்குப் பிரதியீடாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பொருந்தக் கூடிய செயல்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செய்பவர்களாக உம்மு ரூமான் (ரலி) அவர்கள் இருந்தார்கள். மனிதர்களுக்கும் இன்னும் படைத்தவனுக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை ஒவ்வொருவரும் சரிவர நிறைவேற்றும் பொழுது, உண்மையிலேயே மனித வாழ்வு அமைதியாகக் கழியக் கூடியதாக ஆகி விடும். ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைப் பற்றியும், அவர்களது பண்பு நலன்கள் பற்றியும் அதிகமாகவே பேசி விட்டார்கள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களுக்கு, பெண்களுக்கே உரிய அந்த பொறாமை எண்ணம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்க, உணர்ச்சி வேகத்தில் தன்னையுமறியாமல், இந்த உலகத்திலே கதீஜா (ரலி) அவர்களை விட்டால் வேறு பெண்ணே கிடையாதா" என்று கேட்டு விட்டார்கள். இதனை எதிர்பார்க்காத இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய முகம் கோபத்தால் சிவக்க ஆரம்பித்தது. இதனை அறிந்து கொண்ட உம்மு ரூமான் (ரலி) அவர்கள், 'ஆயிஷா (ரலி) அவர்கள் இன்னும் சிறுபிள்ளையாகவே இருக்கின்றார்கள், அவளை நீங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி, அவர்களைச் சாந்தப்படுத்தினார்கள். தனது மகளுக்காக தானே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.

அப்பொழுது மிகவும் காயப்பட்ட மனதுடன் ஆயிஷா (ரலி) அவர்களைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பதில் கொடுத்தார்கள், இந்த உலகததில் கதீஜா (ரலி) அவர்களை விட்டால் வேறு பெண்ணே இல்லையா என்று தானே கேட்டீர்கள்? இறைவன் மீத சத்தியமாக, ஆயிஷாவே.., உங்களது குலத்தவர்கள் என்னை இறைவனது தூதரென்று ஏற்றுக் கொள்ள மறுத்த பொழுது, அவள் என்னை தூதரென்று ஏற்றுக் கொண்டாள், இறைநம்பிக்கை கொண்டாள். இன்னும் உங்களிடம் நான் பெறாததை.., அதாவது, அவள் எனக்கு மழலைச் செல்வங்களை மிகப் பெரும் பொக்கிஷமாகத் தந்தாள், என்று கூறி முடித்தார்கள்.

உம்மு ரூமான் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறிய அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்களே ஒழிய எந்த வார்த்தையும் பேசவில்லை, ஏனெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்பொழுதும் படைத்த வல்லோனின் உத்தரவுப்படியே பேசக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதும் அவர்களது மௌனத்திற்குக் காரணமாகும். அவர்கள் எப்பொழுதும் தானே சுயமாகப் பேசக் கூடியவர்களல்லர், அவர்களது பேச்சுக்கள் அனைத்தும் வல்ல அல்லாஹ்வின் உத்தரவுப்படியே, வஹீயின் அடிப்படையைக் கொண்டதாக இருக்கும்.

ஹிஜ்ரி 6ம் ஆண்டுக்குப் பிறகு உம்மு ரூமான் (ரலி) அவர்களது இறந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அவர்களது அடக்க நேரத்தின் பொழுது, அவர்களுக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாவ மன்னிப்பிற்காக பிரார்த்தித்தார்கள். சந்தேகமில்லாமல், இதுவே அவர்களுக்கு மிகப் பெரிய கௌரவமாகும். உம்மு ரூமான் (ரலி) அவர்கள் குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருசமயம் கூறும் பொழுது, சொர்க்கத்துக் கன்னிப் பெண்ணைப் பார்க்க விரும்புகின்றவர்கள், உம்மு ரூமான் (ரலி) அவர்களைப் பார்க்கட்டும் என்று கூறி இருக்கின்றார்கள். இதன் மூலம், உம்மு ரூமான் (ரலி) அவர்கள் அல்லாஹ் நாடினால் சுவனத்தில் நுழையக் கூடிய பெண்மணி என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது குறிப்பால் நமக்கு உணர்த்தி இருக்கின்றார்கள். இன்னுமொரு அறிவிப்பின்படி, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்பு தான் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள் என்றும் உள்ளது.

நிச்சயமாக அல்லாஹ்வின் வசனங்கள் சத்தியமானவை, அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் :

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்து இன்னும் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகின்றார்களோ அவர்களே சுவனபதிக்குரியவர்கள்; அங்கு அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள். (11:23)
Previous Post Next Post