ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)

நெடிதுயர்ந்த உடல், சுருள் முடி மற்றும் பரந்த புஜங்களைக் கொண்ட அந்த வாலிபரைப் பார்க்கும் யாரும், இவர் அல்லாஹ்வின் பாதையில் தன்னை அர்ப்பணிக்க வந்தவர் என்பதை எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இவரது இரவுகள் வணக்க வழிபாடுகளில் கழிந்தன, வீரம் மற்றும் நேர்மையான வாழ்வுக்குச் சொந்தக்காரராகவும், இறைச் சட்டங்களைக் கண்டிப்புடன் பேணி வாழக் கூடியவராகவும் அவரது வாழ்வு திகழ்ந்தது. இறையச்சத்துடன் கழிந்த அவரது வாழ்வில், கொடைத்தன்மையும், ஏழைகளுக்கு இரங்கும் தன்மையும், பணிவும் இன்னும் தியாகமும் நிறைந்திருந்தன. இத்தகைய நற்குணங்களுக்குச் சொந்தக்காரரான சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களினால் சொர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட 10 ஸஹபாப் பெருமக்களில் ஒருவராகவும் திகழக் கூடிய நற்பேற்றைப் பெற்றவராகத் திகழ்ந்தார்.

இன்னும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது பிரார்த்தனைகளை யா அல்லாஹ் நீ ஏற்றுக் கொள்வாயாக! இன்னும் அவரது வில்லிலிருந்து புறப்படுகின்ற அம்பு, எதிரியின் இலக்கைத் துல்லியமாகத் துளைக்க கிருபை செய்வாயாக என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்காகத் துஆச் செய்யும் பேறு பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள்.

இன்னும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் வாய்மையாக நடந்து கொள்வோம், எந்த நிலையிலும் அதிலிருந்து மாற மாட்டோம் என்று வாய்மையாக உறுதி மொழி அளித்த, அதாவது பைஅத்துர் ரிழ்வான் என்னும் ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட பெருமக்களில் இவரும் ஒருவராவார். திருமறைக்குர்ஆனில் புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பல நபித்தோழர்களில் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களும் ஒருவராவார். இன்னும் உஹத் போரிலே அஞ்சாமல் எதிரிகளைத் துளைத்துக் கொண்டு சென்று போரிட்ட மாவீரர்களில் இவரும் ஒருவராவார். வில் வித்தையில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவரான இந்த நபித்தோழர் உஹதுப் போர்க்களத்தில் தனது வில்லிலிருந்து அம்புகளை மழை என எதிரிகளின் மீது பொழிந்து எதிரிகளை நிலைகுலையச் செய்தவரும் ஆவார். அந்தப் போர்க்களத்தில் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் வில் வித்தையைக் குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு புகழ்ந்து கூறுபவர்களாக இருந்தார்கள்.

ஒ சஅத்..! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், உங்களது அம்புகளை வீசுங்கள்! என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தனது பதினேழாவது வயதில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். தாருல் அர்க்கம் என்ற பயிற்சிப் பாசறையில் வைத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றவரும், கல்வி பெற்றவருமாவார். இன்னும் ஷிஅப் அபீதாலிப் கணவாயில் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டு சொல்லொண்ணா துன்பங்களுக்கிடையில் இரண்டு வருடங்களைப் பொறுமையுடன் கழித்த பெருந்தகையுமாவார். வாழ்வின் அநேக தருணங்களைப் போர்க்களத்தில் கழித்த இவர், அங்கு தனது பிரமிக்கத்தக்க வீரத்தை நிரூபித்துக் காட்டினார். அவரது ஒவ்வொரு நிமிடமும் இன்றைக்கிருக்கின்ற முஸ்லிம் உம்மத் ஏற்றுப் பின்பற்றத் தக்கதாகவும், இன்னும் போர்க்களத்தில் இருந்து கொண்டிருப்பவர்களுக்குப் படிப்பினையாகவும் இருந்து கொண்டிருக்கின்றது.

இன்றைய ஈராக்கின் அன்றைய பிரபலமான நகராகத் திகழ்ந்த ஜஸ்ர் என்ற இடத்தில் வைத்து முஸ்லிம் படையணியினர் எதிரிகளைச் சந்தித்தனர். போர்க்குணத்துடன் மார்தட்டிக் கொண்டு வெற்றி எங்கள் பக்கமே என்று ஆர்ப்பரித்து வந்தனர் எதிரிகள். போர் துவங்கிய முதல் நாளிலேயே நான்காயிரம் முஸ்லிம் படைவீரர்கள் இறைவழியில் தங்களது உயிர்களைத் தத்தம் செய்திருந்தனர். அப்பொழுது, முஸ்லிம் உம்மத்தின் இரண்டாவது கலீபாவாக ஆட்சித்தலைவராக இருந்த உமர் (ரலி) அவர்களுக்கு இந்தச் செய்தி மிகவும் கவலையை அளித்தது மட்டுமல்லாமல், இனி தான் செல்வதன் மூலம் மட்டுமே எதிரிகளைச் சமாளிக்க முடியும் என்ற முடிவையும் அவர்கள் அப்பொழுது எடுத்து, தானே படைக்குத் தலைமையேற்பதற்காக மதீனாவை விட்டு ஈராக்கிற்கு புறப்படவும் தயாரானார்கள். இன்னும் அலி (ரலி) அவர்களை மதீனாவிற்குத் தற்காலிகத் தலைவராக நியமித்து விட்டு, சிறுபடையினருடன் ஈராக் நோக்கிப் புறப்பட்டும் விட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் ஈராக் நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் மிகவும் கவலையடைந்தவர்களாக, அவரைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் உமர் (ரலி) அவர்களை இடைமறிப்பதற்காகப் புறப்பட்டார்கள். மதீனாவின் புறநகர்ப் பகுதியிலேயே உமர் (ரலி) அவர்களைப் பிடித்து விட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், கலீபா அவர்களே! இப்பொழுது முஸ்லிம் உம்மத் எப்பொழுதும் இல்லாத அளவு பிரச்னைகளில் உழன்று கொண்டிருக்கின்றது. நிலைமைகளும் மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. நீங்கள் மதீனாவில் இருந்து நிலைமைகளைச் சமாளிப்பதற்கு அவசியமான இந்த நிலையில் நீங்கள் ஈராக் நோக்கிச் செல்வது சரியான முடிவல்ல. இன்னும் ஈராக்கின் நிலைமையைச் சமாளிப்பதற்கு மிகவும் அனுபவமிக்க, தீரமிக்க எத்தனையோ தளபதிகள் மதீனாவில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். உங்களுக்குப் பதிலாக அவர்களை நாம் அனுப்புவோம் வாருங்கள் என்று மதீனாவிற்கே திருப்பி அழைத்துக் கொண்டு வந்து விடுகின்றார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள், அலி (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோர்கள் கலந்து கொண்ட அந்த ஆலோசனைக் கூட்டத்தில், நான் போவதை நீங்கள் விரும்பவில்லை எனில், மிகவும் மோசமான நிலையில் ஈராக்கில் உள்ள முஸ்லிம்களின் படைக்குத் தலைமையேற்கக் கூடிய அளவுக்குத் திறமைவாய்ந்த படைத்தளபதி ஒருவரைத் தேர்வு செய்யுங்கள் என்று உத்தரவிடுகின்றார்கள்.

உமர் (ரலி) அவர்களின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், நமது படைக்கு மிகவும் தகுதி வாய்ந்த தளபதி ஒருவரை நான் தேர்வு செய்து விட்டேன். அவர் தான் மோசமான இந்த சூழ்நிலையை சமாளிக்கக் கூடிய தகுதி வாய்ந்த நபராகவும் இருப்பார் என்று கூறியவுடன், அவரது பெயரைக் கூறுங்கள், யார் அவர்? என்று உமர் (ரலி) அவர்கள் வினவ, அவர் தான் சிங்கம் போன்ற இதயம் கொண்ட, எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கக் கூடிய அளவுக்கு திறமையும் கொண்ட நமது மாவீரர் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) என்று கூறி முடித்தவுடன், அவையில் இருந்த அனைவரும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களது தேர்வு மிகச் சரியான தேர்வு என்று, அவரைத் தளபதியாக அனுப்ப சம்மதம் தெரிவித்தனர். இன்னும் அவரைத் தளபதியாக அனுப்புவதில் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தாயாரான ஆமீனா அவர்களின் ஒன்று விட்ட சகோதரரும் ஆவார். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றார்கள், அப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அங்கே நுழைந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களைக் குறித்து, இவர் தான் எனது தாய் மாமா, உங்களில் எவராவது இவரை விடச் சிறந்த தாய்மாமா ஒருவரை எனக்கு நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம் என்று பெருமைபடக் கூறினார்கள்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த ஆரம்ப நாட்களில் இஸ்லாமிய பயிற்சியை தாருல் அர்கமில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புப் பெற்ற ஆரம்ப கால முஸ்லிம்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவ்வாறு இவருடன் அந்தப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டவர்களில் பெருமை மிகு தோழர்களான அபுபக்கர் (ரலி), உத்மான் பின் அஃப்பான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), தல்ஹா பின் அப்துல்லா (ரலி), சுபைர் பின் அவ்வாம் (ரலி) ஆகியோர்களும் அடங்குவர். மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத அளவுக்கு இருந்த பொழுது, தங்களது தொழுகைகளை - இறைவணக்கத்தை நிறைவேற்ற இவர்கள் மக்காவின் ஒதுக்குப் புறமான பகுதிகளுக்குச் சென்று விடக் கூடியவர்களாக இருந்தார்கள்.

ஒருமுறை இவர்கள் ஒதுக்குப் புறமான இடத்தில் அமர்ந்து, இறைவணக்கத்தில் தங்களது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த பொழுது, மக்கத்து ரவுடிக் கும்பலொன்று இவர்களது இருப்பிடத்தை அடையாளம் கண்டு கொண்டு, அங்கே சிறியதொரு கலவரத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்கே கீழே கிடந்த ஒட்டகத்தின் எலும்பை எடுத்து அவர்களை நோக்கி படுவேகமாக வீசியெறிந்தார்கள் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள். இவர்களுக்குத் தொந்திரவு கொடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனின் தலையில் அந்த எலும்பு பட்டு, படுகாயத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது, இரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது. ஒரு சிறுவன் அடிபட்டதும் மற்ற அனைவரும் அந்த இடத்தை விட்டு வெருண்டோடி விட்டார்கள். இது தான் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மிகவும் சாதுர்யமாக தீரமாக இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்த்து தொடுத்த முதல் தாக்குதலாகும்.

இன்னும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த பல குண நலன்களைக் கொண்டிருந்தார்கள். எனினும் இங்கே அவற்றில் சில குணங்கள் மற்றவர்களிடமிருந்து இவரை தனித்துவமாக்கிக் காட்டியது. இவரது மிகச் சிறந்த நிபுணத்துவத்தை உஹதுப் போரில் வைத்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கண்டு கொண்டார்கள், அதுமட்டுமல்ல அதனை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆர்வப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சஅதே..! உமக்கு என் தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும் என்றும் கூறி, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) ஆசிர்வதித்தார்கள்.

இன்னும் இவரது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டு, அதற்குப் பதிலும் அளித்தான். இன்னும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் பிரார்த்தனைக்கு இறைவா! நீ பதில் அளிப்பாயாக! என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அதன் காரணமாக இவரது பிரார்த்னைகள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருந்தது. இன்னும் இறைத்தோழர்கள் யாவரும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை மிகவும் கண்ணியத்துடன் மதிப்பிட்டு, மரியாதை அளித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் முழு அரபுலகமும் சஅத் பின் அபீ வக்காஸ்(ரலி) அவர்களின் போர்த்திறனைப் பற்றி அறிந்திருந்தது. எந்த எதிரியையும் இவர் தன்னை மிகைத்து விட அனுமதித்ததில்லை. பிறர் கண்ணுக்கு எளிதில் புலப்படாத இரண்டு ஆயுதங்களை அவர் வைத்திருந்தார், அவை இரண்டையும் எதிரிகளின் கண்கள் பார்த்ததுமில்லை, ஒன்று அவரது அம்பு, மற்றது இறைவனை நோக்கி ஏந்தக் கூடிய அவரது கரங்கள், பிரார்த்தனைகள்.

உஹதுப் போரில் முஸ்லிம்களின் இதயங்களை ஆட்டிப் படைத்து கலங்கடித்த எதிரிகளை நேருக்கு நேராக எதிர்த்துப் போர் புரிந்தவர். உஹதுப் போர் நடந்து கொண்டிருக்கின்றது, சஅதே உமது அம்பை இன்னார் மீது எறியுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்பொழுது தான் அம்பு தீர்ந்து விட்டதை சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) உணர்கின்றார்கள். இருப்பினும், கட்டளை இட்டது இறைத்தூதர் (ஸல்) அவர்களாயிற்றே! இறைத்தூதரவர்களின் கட்டளைக்கு அடிபணிவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை அம்சமாயிற்றே! உடனே அங்குமிங்கும் தேடுகின்றார்கள், ஒரு அம்பும் கிடைக்கவில்லை, பின் இறுதியில் ஒரு உடைந்த அம்பு ஒன்று தான் கிடைத்தது. அதனைத் தனது வில்லில் பூட்டி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அந்த நபரை நோக்கி, அம்பெய்துகின்றார்கள். அந்த அம்பானது அந்த எதிரியின் முன் நெற்றியில் பட்டு, அந்த இடத்திலேயே அந்த நபர் தரையில் சாய்ந்து, தனது உயிரை விடுகின்றார். அதுபோல அடுத்த ஒரு வில்லைக் கண்டெடுக்கின்றார்கள். அந்த வில்லை எதிரியின் கழுத்துக்குக் குறி வைக்கின்றார்கள். அந்த வில்லும் சரியான இலக்கைத் தாக்க, தொண்டையில் குத்திய அம்பு அவனது நாக்கை வெளிக் கொண்டு வந்து விட்டது, அந்த எதிரியும் வீழ்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டான்.

ஒரு நபித்தோழர் அறிவிக்கின்றார்..! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள், யா அல்லாஹ்! அவரது குறியை மிகச் சரியாக ஆக்கி வைப்பாயாக! அவரது பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வாயாக!

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் பிரார்த்தனைகள் யாவும் நன்கு தீட்டப்பட்ட கூர்மையான வாளைப் போன்றது, இறைவன் அவரது பிரார்த்தனைகளை உடனே ஏற்றுக் கொள்ளவும் செய்தான்.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது மகன் தனது தந்தைகயின் பிரார்த்தனைகளை இறைவன் எவ்வாறு உடன் அங்கீகரித்தான் என்பதற்கு தனது நினைவலைகளில் இருந்து ஒரு சம்பவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகின்றார். ஒருமுறை ஒரு மனிதன் அலி (ரலி) அவர்கள் பற்றியும் இன்னும் சுபைர் (ரலி), தல்ஹா (ரலி) அவர்கள் பற்றியும் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு அர்ச்சித்துக் கொண்டிருப்பதை சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கேட்டு விட்டு, இந்த மாதிரி கெட்ட வார்த்தைகளைக் கொண்டு பேசுவதை நிறுத்துங்கள் என்று கோபத்துடன் கூறினார்கள். ஆனால் அந்த மனிதர் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் கோபத்தைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கொண்டே இருந்தார். மிகவும் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்ட சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், இனிமேலும் நீங்கள் நிறுத்தவில்லை என்றால், உங்கள் மீது சாபம் இறங்கட்டுமாக என்று நான் பிரார்த்தனை செய்து விடுவேன் என்று கூறினார்கள்.

உடனே அந்த மனிதர், நீங்கள் என்ன அனைத்து வல்லமையும் படைத்தவரா? அல்லது இறைத்தூதரா? நீங்கள் கேட்ட துஆவுக்கு இறைவன் உடனே பதில் அளிப்பதற்கு! என்று கேட்டு விட்டார். அந்த மனிதரது கேடு கெட்ட இந்த வார்த்தைகளைக் கேட்ட சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள். பின் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு (ஒளுச் செய்து கொண்டு) இரண்டு ரக்அத் துக்களைத் தொழுதார்கள். பின் இறைவனிடம் இவ்வாறு முறையிட்டார்கள் :

யா அல்லாஹ்! நீ யாரைப் பொருந்திக் கொண்டாயோ, இன்னும் அவர்களது நற்செயல்கள் குறித்து திருப்தி கொண்டாயோ அத்தகைய நல்ல ஆத்மாக்களைப் பற்றி இந்த மனிதர் குறை கூறிக் கொண்டிருக்கின்றார். நிச்சயமாக இத்தகைய கெட்ட வார்த்தைகளுக்கு அவர்கள் உரித்தவர்களல்ல என்பதை நீ அறிவாய், இந்த மனிதருடைய வார்த்தைகளை நீ நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டாய். அவர் வெளிப்படுத்திய இந்த வார்த்தைகளுக்காக பிற மனிதர்களுக்கு இவரை ஒரு படிப்பினையாக ஆக்கி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் பிரார்த்தனை செய்து விட்டு திரும்பிய சற்று நேரத்திற்குள்ளாக, எங்கிருந்தோ கட்டப்பட்ட கயிறை அறுத்துக் கொண்டு, மதம் பிடித்தது போல ஒரு ஒட்டகம் மனிதர்கள் கூடி நின்று கொண்டிருந்த அந்த இடத்தை நோக்கி வந்தது. அந்த ஒட்டகம் அந்த கூட்டத்தின் நடுவே அலை மோதித் திரிவதைக் கண்ட நாங்கள், அந்த ஒட்டகம் ஏதோ ஒரு குறிப்பிட்ட மனிதரைத் தேடுவது போல இருந்தது. அப்பொழுது, எந்த மனிதரைக் குறித்து சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இறைவனிடம் முறையிட்டார்களோ அந்த மனிதரின் தலையை இரத்த வெறி கொண்ட அந்த ஒட்டகம் கொத்தாகப் பிடித்து, அங்குமிங்கு பலம் கொண்ட மட்டும் ஆட்டியது. ஒட்டகத்தின் பிடியில் அகப்பட்ட அவனது கழுத்து முறிந்து, அவன் மரணத்தைத் தழுவினான். கூடியிருந்த மக்கள் அனைவரும் கண் மூடி விழிப்பதற்குள் நடந்து விட்ட அந்தக் கோரக் காட்சியைப் பார்த்து பிரமித்து நின்றார்கள்.

இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட, அந்த நல்லடியார்களைப் பற்றி சற்று முன் வாய்த் துடுக்காகப் பேசிய அந்த மனிதர் இப்பொழுது செத்து மடிந்த நிலையில் தரையில் வீழ்ந்து கிடந்தார். இவ்வாறு பேசத் துடிக்கும் மனிதர்களுக்கு ஒரு பாடமாகவும் அந்த நிகழ்வு இருந்தது.

நிச்சயமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருப்தியையும், இறைவனது திருப்பொருத்தத்தையும் தங்களது அர்ப்பணங்களால் பெற்றுக் கொண்ட அந்த நல்லடியார்களைப் பற்றி இப்பொழுதும் சரி.., எப்பொழுதும் சரி.., குறை கூறிப் பேசித் திரிபவர்களுக்கு இந்தச் சம்பவம் சிறந்ததொரு படிப்பினையாகத் திகழும். நிச்சயமாக இறைத்தோழர்களை நேசிப்பது இறைத் தூதரை நேசிப்பதற்கு முந்தையது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது அன்பு கொள்வது என்பது இறைவன் மீது அன்பு கொள்வதற்கு முந்தையது. இதில் எவரொருவர் இவ்வாறு அன்பு கொள்வதில் மறுதலிக்கின்றாரோ அவர் இஸ்லாமிய மார்கத்தையே புறக்கணித்தவராவார். எவரொருவர் இறைத்தோழர்களையும், இறைத்தூதர்களையும், இறைவனையும் அன்பு கொண்டு, அவர்கள் காட்டிய வாழ்வை மேற்கொள்கின்றாரோ, அத்தகையவர்கள் இம்மையிலும், மறுமையிலும் அளப்பரிய அருட்கொடைகளைப் பெற்றுக் கொள்வார்கள். இல்லை என்றால், அவர்கள் பாவ மன்னிப்புக் கோராத வரையிலும், அவர்களது மறுமை வாழ்வு நஷ்டமடைந்ததாகவே இருக்கும்.

இறைவன் நம் அனைவரையும் இந்த உத்தம ஆத்மாக்களை அதிகமதிகம் நேசிக்கக் கூடிய மக்களாக ஆக்கி அருள்வானாக! இன்னும் நம் அனைவரையும் அந்த உத்தம ஆத்மாக்களோடு மறுமையில் ஒன்றிணைத்து வைப்பானாக! ஆமீன்.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இறைவிசுவாசமிக்க, மிகவும் பரிசுத்தமான வாழ்வை மேற்கொண்டார்கள். அவர் தனது வருமானத்தை இறைவன் அனுமதித்த வகையிலேயே சம்பாதித்துப் பெற்றுக் கொண்டார். அதில் துளி அளவு கூட இறைவனது கோபத்திற்குட்பட்ட சம்பாத்தியத்தை அவர் பெற்றுக் கொண்டதில்லை. இறைவன் அனுமதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் வருமானம், இரட்டிப்பாகக் கிடைத்தாலும் சரியே அதனை அவர் பெற்றுக் கொள்ள முயற்சித்ததுமில்லை. இன்னும் மிகவும் வசதிவாய்ந்த செல்வந்தராகவும் இருந்தார். அவர் இறப்பெய்திய பொழுது, மிக அதிக பெருமானமுள்ள சொத்துக்களை விட்டுச் சென்றார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய இறுதி ஹஜ்ஜின் பொழுது, அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்ற நேரத்தில் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களே! என்னிடம் அதிகமான சொத்துக்கள் உள்ளன. அதற்கு எனது ஒரே ஒரு மகள் மட்டுமே வாரிசுதாரியாக உள்ளார். எனவே எனது சொத்தில் மூன்றில் இரண்டு பாகங்களை இறைவனுக்காக நான் தானம் செய்ய விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சஅதே! இது மிகவும் அதிகம், என்று கூறிய பொழுது, அப்படியானால் பாதிக்குப் பாதி கொடுத்து விடுகின்றேன். ஊஹ{ம்! இல்லை. இதுவும் அதிகம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின் நான் மூன்றில் ஒரு பகுதியைத் தருகின்றேன் என்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறிய பொழுது, அப்படியே செய்யும்..! என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இருப்பினும் மூன்றில் ஒரு பகுதி என்பதும் அதிகமே! இருப்பினும் அவ்வாறே நீங்கள் கொடுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறுதியாகக் கூறினார்கள். மேலும், தனது பெற்றோர் இறந்தவுடன் பொருளுக்காக ஒவ்வொருவரையும் அணுகி இரந்து பெற்றுக் கொள்வதைக் காட்டிலும், ஒருவர் தனது வாரிசுகளை பிறரிடம் கையேந்தாத அளவுக்கு, போதுமான அளவு பொருள் வசதியுடன் அவர்களை விட்டுச் செல்வது சிறந்தது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள். இன்னும் இறைவனது திருப்பொருத்தத்திற்காக வழங்கப்படும் கொடைகளுக்குப் பகரமாக இறைவன் மிகச் சிறந்த அருட்கொடைகளை அவர்களுக்கு வழங்கக் காத்திருக்கின்றான்.

இப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது நோய் மேலும் மேலும் முற்றிக் கொண்டிருந்தது. இன்னும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது விருப்பம் என்னவெனில், தனது மரணம் தனது விருப்பத்திற்குரிய நகரமாகிய மதீனாவில் வைத்து நிகழ வேண்டும் என்பதாக இருந்தது. அதற்காக அவரது இதயம் துடித்துக் கொண்டிருந்தது. அமைதியற்று இருந்தது. சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது அமைதியற்ற அந்த நிலையைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் மார்பின் மீது கையை வைத்து, இறைவனிடம் அவரது நோய் நீங்குவதற்காக பிரார்த்தனை செய்தார்கள். என்ன ஆச்சரியம்! கண் கட்டி வித்தை போல முன்னைக் காட்டிலும் அவர் மிகவும் ஆரோக்கியமான மனிதராக மாறி விட்டிருந்தார். அல்லாஹ் இறைத்தூதர் (ஸல்) அவர்களது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது நோயைக் குணப்படுத்தினான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அந்த பிரார்த்தனை சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் பழுத்த பழமாக மாறும் வரைக்கும் நீடித்திருந்தது. அவரது நீண்ட வாழ்வு இஸ்லாத்திற்குப் பல வெற்றிகளைக் குவித்துத் தந்தது. அவரது போர்த்திறமையின் காரணத்தினால், அரபுக்கள் பல இறைநிராகரிப்பாளர்களை வெற்றி கொண்டார்கள்.

அவர் நோய்வாய்ப்பட்டிருந்த பொழுது, அவருக்காக இறைவனிடம் துஆச் செய்து விட்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் ஒரு இனத்துக்கு ஆதாயத்தைத் தேடிக் கொடுத்து விட்டு, இன்னுமொரு இனத்துக்கு இழப்பை ஏற்படுத்திக் கொடுக்காத வரைக்கும் அவரை மரணம் தழுவாது என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது இந்த முன்னறிவிப்பானது மிகச் சரியானதாக இருந்தது. சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் படை நடத்திச் சென்ற பொழுதெல்லாம், அரபுக்கள் வெற்றியைக் குவித்துக் கொண்டிருந்தார்கள், இன்னும் இறைநிராகரிப்பாளர்கள் தோல்வியைத் தழுவி ஓடிக் கொண்டிருந்தார்கள். நோயிலிருந்து குணமான சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், அதற்குப் பின் பல முறை திருமணம் முடித்தார்கள். அதன் காரணமாக அவருக்கு முப்பத்தி நான்கு மகன்களும், ஒரு மகளும் பிறந்தார்கள்.

எப்பொழுதெல்லாம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்துவார்களோ, அப்பொழுதெல்லாம் இறைவன் மீதுள்ள அச்சம் காரணமாக சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கதறி அழக் கூடியவர்களாக இருந்தார்கள். அவரது கண்கள் கண்ணீரைச் சுரந்த வண்ணமாகவே இருக்கும்.

ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது, இப்பொழுது நம்முடன் சொர்க்கத்து மனிதரொருவர் வந்து இணைந்து கொள்ளப் போகின்றார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அங்கிருந்த தோழர்கள் அனைவரும் யார் அந்த அதிர்ஷ்டக்காரத் தோழர் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அந்தத் தோழரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அப்பொழுது, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அவையில் நுழைந்தவுடன், இவர் தான் அந்த மனிதர் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இவர் தான் அந்த மனிதர், இவரது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாக இருக்கின்றது, அவரது நாவு சுத்தமானது, அவரது இதயமும் சுத்தமானது, இன்னும் அவர் மிகச் சிறந்த படைத்தளபதி என்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புகழாரம் சூட்டினார்கள். இத்தகைய சிறப்புகளுக்குரிய சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ர், உஹத் போன்ற போர்களில் கலந்து கொண்டிருந்தார்கள், அதுமட்டுமல்ல இன்னும் எண்ணற்ற போர்களில் கலந்து கொண்டு, இஸ்லாத்தில் தனக்கிருந்த தீர்க்கமான உறுதியை வெளிப்படுத்திக் காட்டினார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது இத்தகைய வீரமிக்க வரலாற்றுப் பக்கங்கள், இன்றளவும் இஸ்லாமிய வரலாற்றை நிறைத்துக் கொண்டிருக்கின்றன. நமக்கெல்லாம் மிகச் சிறந்த படிப்பினையாகவும் இருந்து கொண்டிருக்கின்றன.

தாயின் பாச வலை

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் இறைநம்பிக்கை மற்றும் உறுதி மற்றும் அதில் உண்மையாகவும் இருந்ததின் காரணமாக உமர் (ரலி) அவர்கள் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மீது பெருமதிப்பு வைத்திருந்தார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இஸ்லாத்தினை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பொழுது அவர் இளமை ததும்பும் வாலிபப் பருவம் கொண்ட இளைஞர். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக இவரது தாயார் மிகவும் கவலையடைந்தார். நம்முடைய முன்னோர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு தன் மகன் சென்று விட்டானே என்று அங்கலாய்க்க ஆரம்பித்தார், அழுது புலம்பினார், தன்னுடைய மகனை எப்பாடுபட்டாவது தன்னுடைய பழைய மார்க்கத்திற்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று துடிதுடியாய்த் துடித்தார். அதற்காக வழக்கமாக தாய்மார்கள் கடைபிடிக்கும் அனைத்து வித முயற்சிகளையும் செய்து பார்த்தார். ஆனால் எதிலும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இணங்கிப் போகவில்லை. இஸ்லாத்தில் உறுதியாக நிலைத்திருந்தார்கள். இறுதியாக, சஅதே..! நீ மீண்டும் நமது முன்னோர்களின் பழைய மார்க்கத்திற்கு வரவில்லை என்று சொன்னால், நான் சாகும் வரை உண்ண மாட்டேன், பருக மாட்டேன்..! என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று சபதமிட்டார். இறுதியாக..! என்னுடைய மகனை ஒரு முஸ்லிமாகப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் செத்து மடிவதே மேல் என்றார்.

தாயினுடைய இந்த தந்திரங்களுக்கெல்லாம், சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மசிந்து இடங்கொடுத்து, விட்டுக் கொடுத்துப் போகவில்லை, உணர்ச்சிகளுக்கு அடிமையாகவில்லை. அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்த அந்த இஸ்லாமிய வேர், இறைநம்பிக்கை என்னும் மரமாக வளர்ந்திருந்ததன் காரணமாக, எத்தகைய புயல் காற்றும் கூட.., அவரது பாதத்தின் உறுதியைப் பெயர்த்து, அந்த மரத்தை அசைக்கக் கூட யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்பொழுது சாகும் வரை உண்ண, பருக மாட்டேன் என்ற சபதமெடுத்த சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது தாயார் பசிக் கொடுமையின் காரணமாக மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார். தனது தயாரைப் பார்த்து, தனது இறைநம்பிக்கையின் உறுதியை இவ்வாறு வெளிப்படுத்திக் காட்டினார்..,

என்னுடைய தாயாரே! உங்களுக்கு ஒரு நூறு உயிர்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு உயிராக உங்களிடம் பறிக்கப்பட்டுப் போய்க் கொண்டிருந்தாலும், நான் என்னுடைய இறைநம்பிக்கையிலிருந்து, நான் கொண்டிருக்கும் ஈமானின் வேகத்தில் ஒன்றையேனும் நான் இழக்கத் தயாராக இல்லை, நான் எனது இறை மார்க்கத்தை விட்டு விட்டு, உங்களது உயிரைப் பாதுகாக்க நான் முன்வரப் போவதில்லை, எனவே இந்த உங்களது தந்திரங்கள் எல்லாம் என்னிடம் பலிக்காது தாயார் அவர்களே! நீங்கள் உண்ணுவதும் அல்லது உண்ணாமல் இருப்பதும், இன்னும் பருகுவதும் பருகாமல் இருப்பதும் உங்களது விருப்பம். நான் என்னுடைய இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை விட்டும் நான் வர மாட்டேன் என்று கூறி விட்டார்.

நம்முடைய தந்திரங்கள் எதுவும் பலனிளிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட அந்தத் தாய், தன்னுடைய உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார். அவரது இந்தத் துணிவும் உறுதியும் இன்றைக்கும் நமக்கொரு சிறந்த பாடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனைப் பற்றி இறைவன் தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் :

ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால், அப்போது நீ அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம். ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள் (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும். நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."" (31:15)

கதீஸிய்யாப் போர்

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த கதீஸிய்யாப் போர் நடைபெற்றது. இந்தப் போருக்கு தலைமைத் தளபதியாக சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் நியமித்தார்கள். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவாக நிறைவேற்ற விரும்பிய சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், உயிர் தியாகத்தில் வேட்கை மிக்க, ஒரு பக்கம் வீரத்தையும், இன்னொரு பக்கம் இறைநம்பிக்கையில் உறுதியும் மிக்க முப்பதாயிரம் படையினரைத் தயார்படுத்தினார்கள். அவர்கள் தங்களது கையிலே ஆயுதத்தையும், இதயத்தில் இறைநம்பிக்கை உறுதியையும் எடுத்துக் கொண்டவர்களாக மதீனாவை விட்டு கதீஸிய்யாவை நோக்கி, தங்களது எதிரிகளை சந்திக்கப் புறப்பட்டார்கள். இப்பொழுது கதீஸிய்யாவில் எதிரிகளுடன் இஸ்லாமியப் படை மோதிக் கொண்டிருக்கின்றது. அப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடமிருந்து வந்த தபாலைப் பெற்றுக் கொள்கின்றார்கள். அதில் உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார்கள் : சஅதே..!

நீங்கள் இப்பொழுது போராடிக் கொண்டிருக்கும் பூமியான கதீஸிய்யா ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற பிரதேசமாகும். இந்தப் போரில் நீங்கள் வெற்றி பெற்றீர்களானால் முழு ஈரானியப் பிரதேசமும் உங்களது கையில் கிடைக்கும். ஈரானின் நுழைவாயில் தான் கதீஸிய்யா. நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள், எனவே உங்களிடம் அடக்கி ஆளும் குணம் இருக்கக் கூடாது. இறைவனது அடிமைகளாகிய ஒருவரது இறைநம்பிக்கை மற்றும் அதில் உறுதி ஆகியவற்றில் மக்களுக்கிடையே உள்ள மதிப்பை நீங்கள் கௌரவிக்குமுகமாக நடந்து கொள்ள வேண்டும். தனது அடியார்களுக்கு உதவி செய்யவும், இன்னும் அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும் அல்லாஹ் ஒருவனே போதுமானவனாக இருக்கின்றான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பணியை நம்மிடம் விட்டுச் சென்றார்களோ, அந்தப் பணியின் மீதே நமது கவனம் இருக்கட்டும், என்று அந்த தபாலில் உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

இன்னும் அந்த மடலின் இறுதியில், உங்களது போர் நடவடிக்கையின் அனைத்து முன்னேற்றங்கள் பற்றியும் எனக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்துக் கொண்டே இருங்கள் என்றும் கட்டளையிட்டிருந்தார்கள். அதாவது, போர்க்களத்தில் எவ்வாறு இறங்கினார்கள்? அவர்களது தங்குமிடம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? எதிரிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தூரம்? சுருங்கச் சொன்னால், ஒவ்வொரு நிமிட நடவடிக்கையும் எவ்வாறு இருந்து கொண்டிருக்கின்றது, என்பதைப் பற்றிய படப்பிடிப்பைக் காண உமர் (ரலி) அவர்கள் விரும்பினார்கள்.

கலீஃபா உமர் (ரலி) அவர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்களாக, தனது ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும், அதன் விரிவான தகவல்களையும் தலைநகருக்கு உடனுக்குடன் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் ஒவ்வொரு தனிப்பட்ட வீரர்களுக்கும் இன்னும் ஒவ்வொரு குழுவுக்கு தான் என்னனென்ன பணிகளை கொடுத்திருக்கின்றேன் என்பதனைக் கூட சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டு, தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

ஈரானியப் படைகளும் குறைத்து மதிப்பிடும்படி இல்லை, அவர்களும் தங்களது முழுப்பலத்தையும் திரட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். இன்னும் இதுமாதிரியானதொரு படையை அவர்கள் இதற்கு முன் கண்டதுமில்லை. இரு படைகளும் முழு வலிமையுடன் தங்கள் தங்கள் வீரப் பெருமைகளை அசை போட்டுக் கொண்டு, படைக்களத்தில் மோதிக் கொண்டன. ஈரானின் மிகப் புகழ் வாய்ந்த படைத்தளபதி ஜெனரல் ருஷ்தும் என்பவரது தலைமையில் ஈரானியப் படைகள் போர்க்களத்திற்கு வந்திருந்தன.

இப்பொழுது போர் நிலைமைகளைப் பற்றி உமர் (ரலி) அவர்களுக்கு சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தகவல் அனுப்பும் பொழுது, ஈரானிப் படைகளுக்கு தளபதியாக ருஷ்தும் என்பவர் வந்துள்ளார், இன்னும் அவர்களது படை முழு ஆயுதத் தயாரிப்புகளுடனும் இன்னும் அவர்களுடன் மிகப் பெரிய யானைப் படையும் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். இன்னும் அவர்களுடன் மிகப் பெரிய படையணியும் வந்துள்ளது. சுருங்கச் சொன்னால், இந்தப் போர் மிகவும் கடுமையாக இருக்குமென்றே தெரிகின்றது என்று குறிப்பிட்டு எழுதி இருந்தார். இந்த நிலையில், நாம் எவ்வாறு நமது படையை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும், இன்னும் அது பற்றிய உங்களது கருத்தை அறிய நான் ஆவலுடன் இருக்கின்றேன் என்றும் எழுதினார்கள்.

ஈரானியப் படைகள் போர்க்களத்திற்குள் நுழையும் பொழுது அச்சம் கொள்ள வேண்டாம் என்று எழுதிய உமர் (ரலி) அவர்கள் மேலும் தனது பதிலில், அகில உலகத்தின் அனைத்து சக்திகளும் நம்மைப் படைத்தவனாகிய வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது என்பதை எக்கணமும் மறந்து விடாதீர்கள். அனைத்துத் தருணங்களிலும் இறைவனைப் புகழ்ந்து போற்றி, அவனிடம் உங்களது பிரார்த்தனைகளைக் கோரிய வண்ணமிருங்கள், அவனது உதவியை கேட்டுப் பெற்ற வண்ணம் இருங்கள். இரண்டாவதாக, மிகவும் திறமை மிக்க, புத்திக் கூர்மையுள்ள, அனுபவமிக்க இஸ்லாமியப் படைவீரர்களைத் தேர்ந்தெடுத்து, நமது ராஜதந்திரிகளாக ஈரானிய மன்னரிடம் அனுப்பி வையுங்கள். அவர்கள் ஈரானிய மன்னரிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லட்டும், பின்னர் இரண்டு படைகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கு அழைக்கட்டும். இன்னும், அந்த ராஜதந்திர நடவடிக்கையின் பொழுது, ராஜதந்திரிகளை ஈரானிய மன்னர் எவ்வாறு எதிர்கொண்டழைத்தார் என்பதைப் பற்றித் தனக்கு விரிவாகக் கடிதம் எழுதுமாறும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் பணிப்புரை வழங்கி இருந்தார்கள். இன்னும் ஒவ்வொரு நிமிட நடவடிக்கையைப் பற்றியும் தனக்கு தகவல் தராமல் இருந்து விட வேண்டாம் என்றும் அவர்களுக்கு இறுதியாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்கள்.

இறுதியாக வல்ல அல்லாஹ் தான் நமது உதவியாளன், அவனே நம்மைப் பாதுகாக்கப் போதுமானவன் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

போருக்கு மத்தியிலும் அழைப்புப் பணி

உமர் (ரலி) அவர்களின் உத்தரவைப் பெற்றுக் கொண்ட சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், படையணியில் இருந்த மிகச் சிறந்த, அறிவுள்ள, திறமையுள்ள, ராஜதந்திரமிக்க நபர்களைப் பொறுக்கி எடுத்து, ஈரானிய மன்னரின் அவைக்கு அனுப்பி வைத்தார். உலக வளங்களை தங்களது மேனியில் பூட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்த ஈரானிய அவையினருக்கு மத்தியில் இந்த உலக வாழ்வை மறுமை வாழ்விற்காக விற்று விட்ட அந்த கூட்டத்தினர், மிகவும் எளிமையான உடைகளுடன் சென்று ஈரானிய மன்னரது அவையில் நுழைந்தனர்.

இஸ்லாமிய ராஜதந்திரிகளின் ஆடம்பரமில்லாத எளிமையான அந்த தோற்றத்தை கண்ட ஈரானிய மன்னரது அவை சற்று நடுங்கித் தான் போனது. முஸ்லிம் ராஜதந்திரிகளின் தலைவராகச் சென்றவர் இப்பொழுது ஈரானிய அவையில் இவ்வாறு உரையாற்றினார்,

மன்னரே!! நம் அனைவரையும் படைத்த வல்ல அல்லாஹ் தான் எங்களைத் தேர்வு செய்து இங்கு அனுப்பி வைத்துள்ளான், எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மக்களின் பணி என்னவென்றால், கேடு கெட்ட சிலை வணக்கக் கலாச்சாரத்திலிருந்து மக்களை மீட்டெத்து உண்மையான நேர்வழியின் பால், படைத்த வல்ல அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கக் கூடிய மக்களாக அவர்களை வழி நடத்துவது ஒன்றே எங்களுக்கு இடப்பட்ட பணியாகும். இன்னும் வல்ல அல்லாஹ் அந்த மக்களை இருளிலிருந்து வெளிச்சத்தின் பாலும், அறியாமையிலிருந்து ஞான வெளிச்சத்தின் பக்கமும் வழி காட்டுமாறு பணித்துள்ளான். தனியொரு மனிதனை அவன் மீது சுமத்தப்பட்டுள்ள அடிமைத் தளையிலிருந்து அவனை விடுவித்து, அநியாயக்கார ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து அவனை பூரண சுதந்திர சுவாசக் காற்றை சுவாசிக்கும் இஸ்லாமிய பூங்காவுக்குள் நுழைவித்து, இறைவனது அருள் பெற்ற நன்மக்களாக மாற்றுவதொன்றே எம் மீது சுமத்தப்பட்ட பணியாகும்.

யார் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்கின்றார்களோ அவர்கள் வரவேற்கப்படுவார்கள், இன்னும் யார் இதனை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் மீது போர் தொடுக்கப்படும். அவர்களது பூமிகள் வெற்றி கொள்ளப்பட்டு எமது பூமிகளாக, இஸ்லாமிய ஆட்சிப் பிரதேசமாக மாற்றப்படும். இறைவனது அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களது பூமிகள் அவர்களுக்கே உரிமை வழங்கப்பட்டு, அதன் ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவர்களுடையதாகவே இருக்கும். இந்த அழைப்பை யார் உதாசினம் செய்தார்களோ, அவர்கள் மீது போர் தொடுக்கப்படும், இன்னும் அவர்களது பூமிகள் முற்றிலும் அல்லாஹ்வின் ஆட்சிப் பிரதேசமாக மாறும் வரைக்கும் அந்தப் போர் இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இப்பொழுது ஈரானிய மன்னர் ஆச்சரியம் கலந்த தொணியில்,

உங்களது அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களுக்கு, உங்களது இறைவனின் என்ன வாக்குறுதியை வழங்கி இருக்கின்றான் ?

மரணித்திற்குப் பின் உள்ள வாழ்க்கையில் சுவனம் கிடைக்கும், அவர்கள் அங்கு மிகவும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வார்கள். இன்னும் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையெனில், வெகு சீக்கிரமே இந்தப் பூமிப் பிரதேசங்கள் எங்களுக்குச் சொந்தமானவையாக மாறும், மன்னர் மணிமுடியைத் துறக்க நேரிடும், இன்றைய உமது அதிகாரங்கள் மற்றும் ஆட்சிப் பிரதேசம் யாவும் முந்தைய வரலாறாக மாறித் தான் போய் விடும் என்று உறுதியாக எச்சரிக்கையான குரலில் பதில் கூறினார்கள்.

முஸ்லிம் ராஜதந்திரிகளின் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாகப் பொறுக்கி எடுக்கப்பட்ட விஷம் தோய்ந்த அம்புகள் பாய்வது போல ஈரானின் மன்னரின் மார்பில் பாய்ந்தது. பொறுமையையும் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஈரானிய மன்னன் அதிர்ந்த குரலில் எதிரே உள்ளவனை அழைத்தான். அந்த மனிதன் மன்னரே உங்களது கட்டளை என்ன என்பதைக் கூறுங்கள் என்பது போல் வந்து நின்றான்.

வெளியே சென்று சிறிது மணலை அள்ளி வா என்று ஆணையிட்டான் ஈரானிய மன்னன். சென்ற அவன் சிறிது நேரத்தில் ஒரு கூடை நிறைய மண்ணுடன் வந்து மன்னனின் முன் நின்றான். எதிரே நின்று கொண்ட முஸ்லிம் ராஜதந்திரிகளில் ஒருவரான ஆஸிம் பின் உமர் (ரலி) அவர்களுக்கு முன் அந்த மண் கூடையை மன்னன் எறிந்தான். அதனை தன்னுடன் எடுத்துக் கொண்ட ஆஸிம் பின் உமர் (ரலி) அவர்கள், அதனை சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் எடுத்துச் சென்றார்.

வாழ்த்துக்கள்! ஈரானிய மன்னர் தானே முன் வந்து தனது மண்ணை நமக்குத் தாரை வார்த்து விட்டார்! என்று அந்த மண்ணைப் பார்த்து சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உற்சாகம் மிகுந்த குரலில் கூறினார்கள்.

ஈரானின் மன்னரது அவையில் நடந்த அனைத்தையும் வரி விடாமல் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் அந்தக் குழு ஒப்படைத்த விட்டு, போர் என்ற பதிலைத் தவிர வேறு எதனாலும் அவருக்கு பாடம் புகட்ட இயலாது என்பதையும் தெரிவித்தனர். நமக்கிடையே உள்ள விவகாரத்தை போர் ஒன்றின் மூலமாக மட்டுமே தீர்த்துக் கொள்ள இயலும் என்பதை அவருக்குச் சொல்லி விட்டுத் தான் வந்தோம் என்றது அந்தக் குழு.

தனது தோழர்கள் ஈரான் மன்னர் முன்பாகத் தெரிவித்து விட்டு வந்த தீரமான, தீர்க்கமான பதிலைக் கேட்ட, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது கண்கள் குளமாகின. இந்தப் போர் இன்னும் சில நாட்களில், அதனை விடச் சீக்கிரமாகவே ஆரம்பிக்கப்பட்டு விடும் என்றார் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி).

ஆனால் முஸ்லிம்கள் போர் தான் இறுதி முடிவு என்று உறுதியாகத் தீர்மானித்து விட்ட பின்னர் ஏற்பட்ட சூழ்நிலைகளில், சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி விட்டார்கள். இதனால் அவர்களால் முன்னெப்பொழுதும் போல் செயல்பட இயலவில்லை. அம்மை நோய் அவர்களைப் பீடித்திருந்தது. அதன் காரணமாக அவர்களால் எழுந்து நடக்கக் கூட திராணியற்றவர்களாகவும், உட்கார இயலாதவர்களாகவும் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில், எவ்வாறு குதிரை மீது ஏறி போர் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தார். இந்த பாரதூரமான நிலையில் தான் என்ன செய்வதென்றே புரியாத நிலையில் இருந்து கொண்டிருந்தார் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள்.

அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதொரு அறிவுரை ஒன்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் மூலையில் தைத்தது. ஆம்! முஸ்லிம்கள் எப்பொழுதும், நான் நினைத்திருந்தால் அல்லது முடிந்தால் என்பன போன்ற வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த அறிவுரை தனது நினைவுக்கு வந்த மாத்திரமே, விரைந்து எழுந்து நின்று தனது தோழர்களுக்கிடையே ஒரு சிறப்புரை ஒன்றை ஆற்றினார்கள், அப்பொழுது கீழ்க்கண்ட வசனத்தைத் தனது தோழர்களுக்கு ஓதிக் காட்டினார்கள்.

நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; ''நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம். வணங்கும் மக்களுக்கு இதில் (இக்குர்ஆனில்) நிச்சயமாகப் போதுமான (வழிகாட்டுதல்) இருக்கிறது. (21:105-106)

இந்த உரையை முடித்துக் கொண்ட பின்பு, தனது படை வீரர்களுக்கு மதிய நேரத்து லுஹர் தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். தொழுகை முடிந்தவுடன் படை வீரர்கள் தத்தமது போர்க்கவசங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை தயார்நிலைப்படுத்தி, தங்களையும் போருக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டார்கள். அங்கே மிகச் சிறந்த கவிஞர்கள், பாடகர்கள் போன்றவர்கள் போர் வீரர்களை உற்சாகப்படுத்தும் ஓரிறைச் சிந்தனை மற்றும் மறுமைச் சிந்தனையைக் கொண்ட கவிதைகளைப் பாட ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது அங்கே பாடப்பட்ட மிகச்சிறந்த கவிதைகளில் சிறப்புக்குரியதாக ஹத்தீல் அஸதீ (ரலி) என்பவர் பாடிய பாடல் மிகச் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.

ஓ! மிகப் பெரும் தளபதி சஅத் பின் அபீ வக்காஸ் - ன் தோழர்களே!

உங்களது வாட்களை கோட்டை அரண்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்!

எதிரிகளை எதிர்க்கும் பொழுது சிங்கமாக நிலைகுலையாது நில்லுங்கள்!!

உங்களது வாட்கள் பயனற்றுப் போனால் விற்களைப் பயன்படுத்துங்கள்

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

அம்புகள் தனது இலக்கை நோக்கிச் சரியாகச் செல்லும் என்றால்

வாட்களால் எந்தப் பயனுமில்லை.

இப்பொழுது முஸ்லிம் படைவீரர்களிடையே மரண சிந்தனை மேலோங்கியது, எங்கும் உற்சாகம் கரைபுரண்டோடியது. ஒவ்வொரு போர் வீரரும் தான் ஷஹீத் என்னும் உயர் பதவியை அடைந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் போருக்குத் தயாராக நின்றார்கள். அவர்களது அந்த உணர்வுகளை மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருந்தார்கள், மிகப் பெரும் காரிகள். ஆம்! அவர்கள் திருக்குர்ஆனிலிருந்து சூரா அன்ஃபால் மற்றும் சூரா அத்தவ்பா ஆகிய அத்தியாயங்களிலிருந்து இறைவழிப் போரை ஊக்கப்படுத்தக் கூடிய வசனங்களை போர் வீரர்களுக்கு முன் ஓதிக் காட்டி, இன்னும் அவர்களது உணர்வுகளை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தமது தோழர்களது உற்சாகத்தை உயிர்ப்பிக்க வேண்டுமென்றால், அல்லாஹ{ அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் என்ற கோஷத்தை மட்டுமே எழுப்ப வேண்டியிருந்தது. அந்தக் கோஷம் கேட்டவுடன் எதிரிகளின் மீது பாய்வதற்கு வீரர்கள் தயாராகவே இருந்தார்கள்.

அன்றைய கால வழக்கப்படி, முழுமையாகப் போர் துவங்குவதற்கு முன் - அதாவது முழு படைவீரர்களும் போரில் ஈடுபடுவதற்கு முன், இரு புறமும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வீரரை அழைத்து போர் செய்ய வைப்பதென்பது வழக்கமாக இருந்தது. அந்த அடிப்படையில் போர் ஆரம்பமாகியது.

இப்பொழுது ஈரானின் புறத்திலிருந்து பட்டுத் துணியால் தன்னை அலங்கரித்துக் கொண்டு, போர்க்கவசங்களை அணிந்து கொண்டிருந்த மிகச் சிறந்த படை வீரனை முன்னிறுத்தப்பட்டது. அவனை எதிர்கொள்வதற்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து அம்ர் பின் மஅதி கர்ப் (ரலி) அவர்கள் முன் வந்தார்கள். ஈரானியப் போர் வீரன் மிகவும் கவனமாக தனது முயற்சிகளை மேற்கொண்டு, அம்ர் (ரலி) அவர்களை வீழ்த்துவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தான், அம்ர் (ரலி) அவர்களை நோக்கி ஒரு அம்பையும் எடுத்து எய்தான், அம்ர் (ரலி) அவர்கள் தன்னை நோக்கி வந்த அம்பை கவனமாகத் தடுத்து, தனது குதிரையின் மீதேறி எதிரியை நோக்கி மிக விரைவாகவும், அதிக வேகத்துடனும், உறுதியாகவும் செலுத்தி, தனது அத்தனை பலத்தையும் திரட்டி தனது வாளைக் கொண்டு எதிரியின் கழுத்தில் ஒரு வெட்டு வெட்டினார்கள். எதிரியின் தலை அவனது முண்டத்திலிருந்து தனித்துத் தெறித்து, தரையில் விழுந்தது. அதன் பின் ஒவ்வொரு வீரராக அழைக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்திக் காட்டினார்கள்.

இறுதியாக, முழுப் படையும் போர்க்களத்தில் சந்திக்க ஆரம்பதித்தது. ஈரானியர்கள் தங்களது யானைப்படையை முன் கொண்டு வந்தார்கள். யானையை முன்னெப்பொழுதும் பார்த்திராத அரேபியக் குதிரைகள் இப்பொழுது மிரள ஆரம்பித்தன. ஒரு உயரமான பரணிலிருந்து முஸ்லிம் படைகள் சந்தித்துக் கொண்டிருந்த இந்த திடீர்த் தாக்குதலை மிகவும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள். இதே நிலைமை நீடித்தால் முஸ்லிம்களின் தரப்பு மிகவும் இக்கட்டுக்குள்ளாகி விடும் என்பதையும் உணர்ந்தார்கள். பனீ அசத் குலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை அழைத்து, உமது போர்த்திறமைகளை வெளிப்படுத்துவீராக என்று குரல் கொடுத்தார்கள். பனீ அசத் - ன் மிகப் பெரும் தலைவரான அவர் தனது மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக பெருங்குரலெடுத்துக் கூறினார் :

பனீ அசதின் இளம் வீரர்களே முன்னேறுங்கள், சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உங்களது வீரத்தின் மீது நம்பிக்கை வைத்து உங்களைக் குறித்துப் போற்றுகின்றார்கள். இன்றைய தினம் உங்களது போர்த்திறமைகளையும், வீரத்தையும் வெளிப்படுத்தக் கூடிய சோதனைக் களம். எதிரியை நிலைகுலையச் செய்து இஸ்லாத்தின் புகழை ஓங்கச் செய்வதற்காக உங்களது உயிர்களை அர்ப்பணிக்க விரையுங்கள். முன்னேறிச் செல்லுங்கள், மலை போல் உங்கள் முன் நிற்கின்ற அந்த யானைப் படைகளோடு மோதுங்கள். நீங்கள் கொடுக்கக் கூடிய ஒரு அடியும் இடி போல் இறங்கினால், பெருமலையும் பொடிக் கற்களாகும் என்பதை அவர்கள் அப்பொழுது உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற வீரமிக்க உரையை நிகழ்த்தினார்கள்.

இந்த வீர உரையைக் கேட்ட பனீ அசத் வாலிபர்கள் முன்னேறிச் சென்று, யானைப் படையை தங்களது வாட்களால் பதம் பார்க்க ஆரம்பித்தார்கள். முடிவில்லாத உன்னதமான வாழ்க்கைக்காக தங்களது அற்ப கால இந்த வாழ்க்கையை இழக்கத் துணிந்த அந்த கூட்டத்தின் முன்பாக மிகப் பெரிய அந்த யானைப்படை கூட தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது. முதலில் அவர்கள் யானையை ஓட்டி வந்த ஈரானிய வீரர்களைக் குறி பார்த்து தங்களது அம்புகளைத் தொடுத்தார்கள். அம்பு பட்டவுடன் காய்ந்த சறுகுகள் உதிர்வது போல் யானையிலிருந்து அவர்கள் உதிர்ந்தார்கள். இப்பொழுது சில முஸ்லிம் வீரர்கள் யானையின் துதிக்கையை வெட்ட ஆரம்பித்தார்கள். துதிக்கையை இழந்த யானைகள் இப்பொழுது பயம் கொண்டு பிளிற ஆரம்பித்தன, பயம் கொண்டு மிரண்டு போன அந்த யானைகள் பாய்ந்த பாய்ச்சலில் தனது படைகளையே தனது கால்களுக்குக் கீழே இரையாக்கிக் கொண்டு, ஈரானியப் படைக்களத்தை நாசமாக்கிக் கொண்டு பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது. இதில் சில முஸ்லிம் வீரர்கள் கூட தங்களது இன்னுயிரை இழந்தார்கள். இந்த யானைப் படையை செயலிழக்கச் செய்ததன் காரணமாக, முதல் நாள் போர் முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தந்ததுடன் முடிவடைந்தது.

மறுநாள் காலை பொழுது புலர்ந்தவுடன், இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்து விட்டு, காயம்பட்டவர்களுக்கு சிகிச்சைகளை முடித்து விட்டு, முஸ்லிம் வீரர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட படையணிகளில் இணைந்து, அடுத்த நாள் போருக்குத் தயாரானார்கள். இருபடைகளும் மோதுவதற்கு சற்று முன்பதாக அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களால் அனுப்பப்பட்ட இன்னொமொரு படைப்பிரிவு ஹிஸாம் பின் உத்பா (ரலி) அவர்களது தலைமையில் வந்திணைந்து கொண்டது. இப்பொழுது முன்னணியில் இருக்கக் கூடிய படைப்பிரிவுக்கு காகா பின் அம்ர் (ரலி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்கள். போர் ஆரம்பிப்பதற்கு முன்பதாக தனிப்பட்ட வீரர்கள் மோதும் களம் ஆரம்பமானது. இதில் மிகவும் பிரிசித்தி பெற்ற போர்த் திறன் படைத்த முஸ்லிம் முன்னணி வீரர்கள் களம் இறங்கினார்கள். முதல் மோதலில் காகா பின் அம்ர் (ரலி) அவர்கள் ஈரானிய கமாண்டர் பீமன் என்பவனை எதிர்த்து நின்றார்கள். அவனது தலையை காகா பின் அம்ர் (ரலி) அவர்கள் துண்டித்தார்கள். அடுத்து ஈரானின் மிகப் பெரும் வீரனாகத் திகழ்ந்த அஃவன் பின் கத்பா என்பவனும் இந்தப் போரில் கொல்லப்பட்டான்.

ஈரானின் மிகப் பெரும் போர் வீரர்களாகத் திகழ்ந்த அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள். போர் இப்பொழுது உக்கிரமாகத் தொடங்கியது, போர் துவங்கியது முதல் இரு படைவீரர்களும் வெற்றியை இலக்காக வைத்து கடுமையான மோதலில் இறங்கினார்கள். முஸ்லிம் படைகளில் உள்ள ஒட்டகங்கள் அனைத்தையும் சேர்த்து கயிறுகளால் பிணைத்து, ஒரு ஒட்டகத்திற்கும் இன்னொரு ஒட்டகத்திற்கும் இடைப்பட்ட கயிறை இறுக்கமில்லாமல் மிகவும் தளர்வான நிலையில் தொங்க விடும்படி காகா பின் அம்ர் அவர்கள் தனது படை வீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். காகா பின் அம்ர் (ரலி) அவர்களின் இந்த போர் உத்தி மிகவும் வேகமாக வேலை செய்தது. எதிரிகளின் படை நடுவே ஓட்டி விடப்பட்ட இந்த கயிறு பிணைக்கப்பட்ட ஒட்டகங்களின் கயிறுகளில் சிக்கி, ஈரானியக் குதிரைகள் தடுக்கி தரையில் விழுந்தன. இதன் காரணமாக ஈரானியப் போர் வீரர்கள் தங்களது குதிரைகளைக் கட்டுப்படுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டனர், மிகவும் சிரமமப்பட்டனர். குதிரைகள் சரியாக ஒத்துழைக்காததால், தடுக்கியும் விழுந்ததால் போர்க்களம் இப்பொழுது ரணகளம் ஆனது, ஆம்! எங்கும் மரணக் கூச்சல் எதிரிகளின் தரப்பிலிருந்து கேட்க ஆரம்பித்தது.

போர் இப்பொழுது கடுமையாக இருந்தது. இப்பொழுது அபூ மஹ்ஜன் என்ற மிகப் பெரும் பாடகர் (ஏதோ ஒரு காரணத்திற்காக) சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தார். போர்க் களக்காட்சிகளை தனது கூண்டுக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அவர், தானும் வெளியில் சென்று போர் செய்ய வேண்டும், எதிரிப் படைகளை துவம்சம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு அதிகரித்தது. அப்பொழுது, அவருக்கு அருகே நின்று கொண்டிருந்த சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது மனைவியை அழைத்து எனது சங்கிலியை அவிழ்த்து விடுங்கள் நானும் சென்று போர் செய்ய வேண்டும். நான் போரில் கொல்லப்படாமல் இருந்தால், நான் கண்டிப்பாக மீண்டும் இங்கே வந்து விடுகின்றேன் என்று உறுதியளிக்கின்றேன் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் மனைவி சலமா (ரலி) அவர்கள் முதலில் மறுத்து விடுகின்றார்கள். பின் அபூ மஹ்ஜன் (ரலி) அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் ஒரு பாடலைப் பாடுகின்றார்கள் :

துக்கம் என் தொண்டையை நெறிக்க..

துயரம் என் நெஞ்சைப் பிளக்க..

இதோ இன்னல்களுக்கு இடையே கதீஸிய்யா..!

நானோ பொங்கி நிற்க..

என் உயிரோ விம்மி நிற்க..

ஆர்வத்தால் என் அங்கங்கள் அதிர்ந்து நிற்க..!

அங்கே தோழர்கள் ..!

ஈட்டியும் வில்லுமாய் விரைந்திருக்க..

நானோ சங்கிலியின் சன்னலுக்கு

கம்பியாய் நிற்கின்றேன்..!

என் உறுதியை நிறுத்தும்

கயிறுகள் ஒரு பக்கம்..!

என் வேகத்தை விலை பேசும்

அதன் இறுக்கம் ஒரு பக்கம்..!

நான் ஓரடி முன்னேற

இரண்டடி பின்னுழுக்கும்

கால் விலங்கு ஒரு பக்கம்..!

ஓசையே இறுதி வழி என்று

ஓவென்று நான் அலற..!

எனது ஓசையின் ஒவ்வொரு இலக்கும்

பாலையில் தொலைத்த பனித்துளி யானதே..!

இவரது இந்த சோகமான பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சலமா (ரலி) அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் உடைப்பெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அபூ மஹ்ஜன் (ரலி) அவர்களைப் பிணைத்து வைத்திருந்த கூட்டின் அருகே சென்ற சலமா (ரலி) அவர்கள் அவரைப் பிணைத்திருந்த கட்டுக்களை அவிழ்த்து, சிறையிலிருந்து வெளியே வர உதவுகின்றார்கள். உணர்ச்சியின் உச்சத்திலிருந்த அபூ மஹ்ஜன் (ரலி) அவர்கள், அங்கே கட்டப்பட்டிருந்த சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் குதிரையின் மீதேறி போர்க்களத்தில் நுழைந்து, எதிரிகளின் தலைகளை வரிசையாகக் கொய்து, தரையில் புரள வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர் கொடுத்த அடியின் காரணமாக அவரது வலது புறமும், இடது புறமும் எதிரிகளின் தலைகள் தேங்காய் சிதறுவது போல் சிதறிக் கொண்டிருந்தன. போர்க்களக் காட்சிகளை பரணிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், போர்க்களத்தில் இப்பொழுது ஒரு மிகப் பெரும் மாற்றம் ஒன்று தெரிவதைக் கண்ணுற்று, தன்னுடைய மனைவியை அழைத்து, யார் அந்த மனிதர் இந்த அளவுக்கு உக்கிரமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றாரே! என்று வினவுகின்றார்கள். அப்பொழுது சலமா (ரலி) அவர்கள், அவர் தான் நீங்கள் கட்டிப் போட்டிருந்த அபூ மஹ்ஜன் (ரலி) அவர்கள் என்று அவருக்கு ஞாபகமூட்டுகின்றார்கள். இன்னும் உயிருடன் இருந்தால் திரும்பி வந்து விட வேண்டும் என்ற கட்டளையின் அடிப்படையில் அவரை நான் தான் விடுவித்து அனுப்பினேன் என்று கூறினார்கள்.

இதனைக் கேட்ட சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், வல்ல அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த அளவு வீரமிக்க தோழரை நான் இனிமேல் எப்பொழுதும் பிடித்து பிணையில் வைத்திருக்க மாட்டேன், இன்னும் நான் அவரை விடுதலை பெற்றவராவார் என்றும் அவருக்கு நன்மாரயங் கூறுகின்றேன் என்றும் கூறினார்கள்.

இரண்டாவது நாளும் முஸ்லிம்களுக்கே வெற்றி கிடைத்த போதிலும், இதுவே இறுதி வெற்றி என்றும் கூற முடியாத அளவுக்கு மூன்றாவது நாளும் போர் நடந்தது. ஒவ்வொரு நாளும் ஈரானிய மன்னன் புதுப்புதுப் படைப்பிரிவை அனுப்பி, மேலும் ஈரானியப் படைகளுக்கு வலுச் சேர்த்துக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட மிகவும் அனுபவம் வாய்ந்த படைத்தளபதியான காகா பின் அம்ர் (ரலி) அவர்கள் இன்னொரு உத்தியைக் கையாண்டார்கள். புதிதாக வந்து சேரக் கூடிய படைகளைத் தடுத்து நிறுத்தி விட்டால், வெற்றியை எளிதாக்கி விடலாம் என்பதே அவரது கணிப்பு. எனவே, சிரியாப் பகுதியிலிருந்து ஒரு படைப் பிரிவை அனுப்பி, புதிததாக ஈரானிலிருந்து வரக் கூடிய படைகளை, கதீஸிய்யாவில் போராடிக் கொண்டிருக்கக் கூடிய படைப்பிரிவுடன் இணையும் முன்பே தாக்குதல் தொடுத்து விட்டால், கதீஸிய்யா விலிருக்கும் படையை எளிதில் வெற்றி பெற்று விடலாம், அதே நேரத்தில் புதுப் படைப்பிரிவை செயலிழக்கச் செய்து விடலாம் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.

எனவே, ஒரு நூறு பேர் கொண்ட தீரமிக்க முஸ்லிம் படைவீரர்களைத் தேர்வு செய்து சிரியா பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். இப்பொழுது இந்தப் படை புதிதாக ஈரானிலிருந்து வரக் கூடிய படைகளை எதிர் கொள்ள ஆரம்பித்தது. திடீரென வந்த தாக்குதலை எதிர்பார்க்காத ஈரானியப் படைகள், மேலும் மேலும் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வரும் முஸ்லிம்களின் படைகளைக் கண்டு மிரண்டார்கள். இன்னும் அவர்கள் சிரியாவிலிருந்து முஸ்லிம்களின் புதிய படைப்பிரிவொன்று வந்திருப்பதாகக் கணக்குப் போட்டார்கள். ஆனால் ஈரானியப் படைத்தளபதி, இந்தத் திடீர்த் தாக்குதலையும், அதன் நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தனது படைகளை மீண்டும் தயார் செய்து தனது படைகளை நடுவே நிற்க வைத்து, படைக்கு இடதும், வலதுமாக யானைப் படையை காவலுக்கு அமைத்து படைகளை அனுப்பிக் கொண்டிருந்தான். ஆனால், ஈரானியத் தளபதியின் இந்த யுக்தியை அறிந்த அம்ர் பின் மஆத் யக்ரப் (ரலி) அவர்கள், யானைகளின் மீது தாக்குதல் தொடுக்குமாறு தனது படைவீரர்களுக்குக் கட்டளையிட்டார்கள். யானைகளின் மீது தாக்கதல் ஆரம்பமானது, யானைகளில் தும்பிக்கைகள் வெட்டிச் சாய்க்கப்;பட்டன. தும்பிக்கைகளை இழந்த யானைகள், மிரண்டு போய், தனது படைகளின் நடுவே திரும்பி ஓட ஆரம்பித்தது. யானைகளின் காலடியில் சிக்கிக் கொண்ட ஈரானிய வீரர்கள், மடிந்ததோடல்லாமல், தோல்வியையும் தழுவினார்கள். இருப்பினும் மீண்டும் மீண்டும் ஈரானில் இருந்து போர் வீரர்களை ஈரானிய மன்னன் அனுப்பிக் கொண்டே இருந்தான்.

இப்பொழுது நிலைமையைச் சரியாகக் கணித்துக் கொண்ட காகா பின் அம்ர் (ரலி) அவர்கள், மிகச் சிறந்த அம்பெறியக் கூடிய வீரர்களின் குழுவை அமைத்து, அதற்குத் தானே தலைமை தாங்கியவர்களாக ஈரானியப் படைத் தளபதி ருஷ்துமை நோக்கி, போர்க்களத்தில் நுழைந்தார்கள். காகா பின் அம்ர் (ரலி) அவர்களைக் கண்ட ருஷ்தும், தானே முன் வந்து அவர்களுடன் போர் செய்ய எத்தணித்தான். பின் இது நடவாத காரியம் என்பதை அறிந்து கொண்டவனாக, அங்கிருந்து தப்பிப் போக முயற்சி செய்து, அந்த இடத்தை விட்டே ஓட ஆரம்பித்த அவன், அருகில் இருந்த ஆற்றில் குதித்து தப்பிப் போக முயற்சி செய்தான். ஆற்றில் குதித்து தப்பிப் பிழைக்க நீந்திக் கொண்டிருப்பதைக் கண்ட முஸ்லிம் படைவீரர்களில் ஒருவரான ஹிலால் (ரலி) அவர்கள், தானும் ஆற்றில் குதித்து ருஷ்துமை விரட்ட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் ருஷ்துமை எட்டிப் பிடித்த ஹிலால் (ரலி) அவர்கள், அவனை இறுக்கப் பற்றிப் பிடித்துக் கொண்டு, தனது குறுவாளால் ஓங்கி ஒரு குத்து குத்தினார். இப்பொழுது, ருஷ்தும் ஆற்றிலேயே பிணமாக மிதக்க ஆரம்பித்தான்.

ஈரானியப் படைத்தளபதி கொல்லப்பட்ட செய்தியை, ஈரானியப் படைவீரர்களுக்கு மத்தியில் மிக வேகமாகப் பரப்பப்பட்டது. தன்னுடைய தளபதி இறந்த செய்தியைக் கேட்ட ஈரானியப் படைவீரர்கள் இப்பொழுது தாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில் நம்பிக்கை இழக்க ஆரம்பித்தனர், படைக்களத்தை விட்டுப் புறமுதுகிட்டு ஓட ஆரம்பித்தார்கள். ஓடிய அவர்களை மிக அதிக தூரம் விரட்டிச் சென்றதோடு, போரை முஸ்லிம்கள் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். இப்பொழுது போரில் முஸ்லிம்கள் முழு வெற்றி பெற்று விட்டார்கள்.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இந்தப் போரில் நேரடியாகக் கலந்து கொள்ளா விட்டாலும், தனது இருப்பிடத்தில் இருந்து கொண்டு படைக்களுக்குத் தேவையான கட்டளைகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருந்தார்கள். இந்தப் போரில் கலந்து கொண்டவர்களின் இறைநம்பிக்கை மற்றும் வீரம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக, படைத்தளபதிகளின் சரியான திட்டமிடுதல் இருந்ததை நாம் காண முடிந்தது. அதுவே கதீஸிய்யாப் போரில் முஸ்லிம்களுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தது.

படைத்தளபதிகள் போரில் நேரடியாகப் பங்கு கொண்டாலும் அல்லது பங்கு கொள்ளா விட்;டாலும், யுத்த வரலாற்றின் நெடுகிலும் நடைபெற்ற போர்களில் ஒரு போரின் வெற்றிக்கும் அல்லது தோல்விக்கும் அதன் தளபதிகளே காரண கர்த்தாக்களாக இருந்துள்ளார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததன் காரணமாக அவரால் நேரடியாகப் போரில் பங்கு கொள்ள இயலாமல், பரணில் உட்கார்ந்து கொண்டு போர் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார், இன்னும் தனது படைவீரர்களுக்கும், துணைத் தளபதிகளுக்கும் கட்டளைகளை அங்கிருந்தே பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

அல்லாஹ்வின் படைவீரர்களே வலது பக்கம் முன்னேறுங்கள்,

அல்லாஹ்வின் படைவீரர்களே இடது பக்கம் முன்னேறுங்கள்.

ஓ! முகீராவே! இப்பொழுது நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள்

ஓ! ஜரீர்! இப்பொழுது நீங்கள் சற்றுப் பின் வாங்குங்கள்

ஓ! நுஃமான்! உங்களது வாளைக் கொண்டு தாக்குங்கள்

ஓ! அஸத்! முன்னேறுங்கள்! இப்பொழுது தாக்குங்கள்!

ஓ! காகா! விரைந்து முன்னேறிச் செல்லுங்கள்!!

என்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்து கட்டளைகள் பறந்து கொண்டிருந்தன.

இஸ்லாத்தை தங்களது இதயங்களில் ஏந்திக் கொண்டவர்களே! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களே! நீங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றீர்கள்! நீங்கள் எதிரிகளுக்கு எளிதில் எதையும் விட்டுக் கொடுத்து விடுபவர்கல்லர், இன்னும் அவர்களுக்கு எதிராகத் தூக்கிய உங்களது கைகளை நிறுத்தி விடவும் மாட்டீர்கள்! இந்த உலகமே உங்களது இந்த வீரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. புடைத்து நிற்கின்ற உங்களது மார்பில் அச்சத்தை அவர்கள் பார்க்கவில்லை, அதில் எதிரிகளை நிலைகுலையச் செய்யக் கூடிய, வீர மரணம் என்ற வேட்கையைத் தான் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், ம்..! முன்னேறுங்கள்..! வீர மரணம் உங்களுக்குக் காத்திருக்கின்றது..! ஷஹீத்..! என்ற அந்தஸ்து உங்களை அழைக்கின்றது..! என்று தனது படைவீரர்களை உற்சாகமூட்டிக் கொண்டே இருந்தார்கள் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள்.

இறைவனது கட்டளையையும், தனது தூதர் (ஸல்) அவர்களது கட்டளையையும், இன்னும் தனக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கின்ற தளபதிகளின் கட்டளைகளையும் மானசீகமான முறையில் ஏற்று, அதில் உண்மையாக, வலுவாகத் தங்களது பாதங்களில் உறுதியைக் காண்பித்த இந்த உத்தமர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பிற்குரிய கடமைகளைச் சரிவர நிறைவேற்றியதன் காரணமாக, அல்லாஹ் இந்தப் போரில் தன் திருத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு வெற்றியை அளித்தான்.

கதீஸிய்யாப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றாலும், இன்னும் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய தூரம் மிக அதிகமாகவே இருந்தது.

மத்யன் போர்

கதீஸிய்யாவில் ஈரானியர்களை வெற்றி பெற்ற பின், அதே ஈரானியர்களை மீண்டும் மத்யன் என்ற இடத்தில் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. இந்தப் போரிலும் ஈரானியர்கள் கதீஸிய்யாப் போருக்கு வந்திருந்ததைப் போலவே மிக மிக முன்னேற்பாடுகளுடன், அதிகமான ஆயுதங்களுடனும் வந்திருந்தார்கள். இந்தப் போரில் முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய தடையை தஜ்லா என்ற நதி ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஈரானியப் படை ஒரு கரையிலும், மறு கரையில் முஸ்லிம்களின் படையும் நின்று கொண்டிருந்தது. இருவரையும் பிரித்து வைத்து, அந்த நதி தனது போக்கில் போய்க் கொண்டிருந்தது. ஈரானியர்களைத் தாக்க வேண்டுமென்றால் ஆற்றைக் கடந்து தான் தாக்க வேண்டும் என்ற நிலை, இன்னும் ஆறு ஈரானியர்களை முஸ்லிம்களிடமிருந்து பாதுகாக்கக் கூடிய கவசமாகவும் திகழ்ந்து கொண்டிருந்தது. இன்னும் அந்த ஆற்றின் குறுக்கே இருந்த அத்தனை பாலங்களை ஈரானியர்கள் நிர்மூலமாக்கி, உடைத்து வைத்திருந்தனர். எனவே, தஜ்லா நதி முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் சவால் விட்டுக் கொண்டிருந்தது.

முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால், எதிர்த்தாக்குதலை நடத்த வேண்டுமென்றால்.. முஸ்லிம்கள் தான் முதலில் அடி எடுத்து வைத்து எதிர்த்தாக்குதலை நடத்த வேண்டும். ஆனால் ஆறு குறுக்கிட்டு ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையில் இது எப்படிச் சாத்தியம்? அப்படியே, ஆற்றைக் கடந்து எதிரிகளைச் சந்திக்கலாம் என்ற முடிவினை எடுத்தாலும் ஆற்றைக் கடந்து கொண்டிருக்கின்ற நிலையிலேயே எதிரில் உள்ள ஈரானியப் படைகளின் தாக்குதலைச் சந்திக்க வேண்டி வரும். இது எதிரிக்கு சாதகமாகக் கூட ஆகி விடும்.

இப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் ஒரு புது வித யுக்தி ஒன்றை வகுத்தார்கள். அதன் படி ஒரு படைப்பிரிவு ஆஸிம் பின் அம்ர் (ரலி) அவர்கள் தலைமையில் ஆற்றில் இறங்குவது, இன்னும் அடுத்த படைப்பிரிவு முதல் பிரிவுக்கு சற்றுத் தூரத்தில் காகா பின் அம்ர் (ரலி) அவர்கள் தலைமையில் ஆற்றில் இறங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில், முதலில் இறங்கிய படைப்பிரிவுடன் ஈரானியப் படைகள் மோதிக் கொண்டிருக்கின்ற நிலையில், இரண்டாவது பிரிவு ஆற்றகை; கடக்க ஆரம்பிக்கும். இந்த நிலையில் முதல் பிரிவுடன் ஈரானியர்கள் மோதுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் பொழுதே, இரண்டாவது பிரிவு எதிர்க்கரையை அடைந்து, எதிர்பாராத தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்து, ஈரானியர்களை நிலைகுலையச் செய்வதே இந்த ஏற்பாட்டின் நோக்கமாக இருந்தது. சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் இந்த போர்க்கலைத்திட்டம் வெகு சிறப்பாக வேலை செய்தது, எதிரிகளை நிலைகுலையச் செய்ததுடன் வெற்றியையும் பெற்றுத் தந்தது. இன்னும் இராணுவ வரலாற்றில், சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் இந்தப் போர்த்திட்டம் பொன்னெழுத்துக்களால் பதிக்கக் கூடியதொரு வரலாற்றுச் சிறப்பைக் கொண்டதாகவும் அமைந்து விட்டது.

இந்தத் திட்டத்தைத் தெளிவாகத் தன்னுடைய படைவீரர்களுக்கு விளக்கிய பின், இறைவன் மீது நம்பிக்கை கொண்ட என்னுடைய படைவீரர்களே! அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்தவர்களாக இந்த ஆற்றில் இறங்குங்கள் என்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். இப்பொழுது, முஸ்லிம் வீரர்கள் ஒவ்வொருவரின் உதடும், அல்லாஹ்வின் திருநாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தது, இன்னும் அவர்கள் ஹஸ்புனல்லாஹ வ நிஃமல் வக்கீல் - அதாவது எங்களுக்கு உதவி செய்ய அல்லாஹ்வே போதுமானவன் என்று கூறிக் கொண்டே இப்பொழுது ஆற்றில் இறங்க ஆரம்பித்தார்கள்.

ஆழமான அந்த தஜ்லா நதியை எந்தவித பயமுமின்றி இப்பொழுது முஸ்லிம் வீரர்கள் கடக்க ஆரம்பித்தார்கள். முஸ்லிம் வீரர்கள் ஆற்றைக் கடந்த இந்த சம்பவத்தை உலகம் இவ்வாறு பேசிக் கொண்டது :

இவர்கள் என்ன நிலத்தில் நடந்து செல்வது போலல்லவா ஆற்றின் மீது நடந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு ஆற்றைக் கடந்த முஸ்லிம் வீரர்களில் சல்மான் அல் பார்ஸி (ரலி) அவர்களும் ஒருவராவார். யுத்த வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கக் கூடிய அளவுக்கு, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அழகியதொரு பணியைச் செய்தார் சல்மான் (ரலி) அவர்கள்.

அவர் கூறினார் :

இஸ்லாம் என்ற இந்த இறைமார்க்கம் உன்னதமானது, சிறப்பு மிக்கது, அது வானத்திலிருந்து இந்த உலகத்திற்கு இறக்கி அருள் செய்யப்பட்டது. அந்த வல்ல அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இந்த ஆறானாது இறைநம்பிக்கை கொண்ட நல்லடியார்களுக்கு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அந்த பாலைப் பூமியைப் போன்றதே!

எவனுடைய கைவசத்தில் என்னுடைய உயிர் இருக்கின்றதோ..! அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக..! ஆற்றில் யார் யாரெல்லாம் இறங்கினார்களோ அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவே அதன் மறுகரையை அடைந்தார்கள். ஆழமான அந்த நதி அவர்களில் எவருக்கும் எந்த கெடுதியையும் ஏற்படுத்தவில்லை.

இன்னும் ஆற்றைக் கடந்த வீரர்களிடமிருந்து ஒரு கயிறு கூட தவறி அந்த ஆற்றில் விழுந்து விடவில்லை. ஒரு போர்வீரருடைய குவளை ஒன்று தவறி ஆற்றில் விழுந்து விட, அதனை கண்டெடுத்துத் தருமாறு தன்னுடைய சக வீரர்களிடம் வேண்டுகிறார். ஆற்றில் தவறி விழுந்த அந்தக் குவளை இவர்களை நோக்கி மிதந்து வந்து கொண்டிருந்தது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

முஸ்லிம்கள் ஆற்றைக் கடந்து வருவதைப் பார்த்த ஈரானியப் படைகள், தங்களது கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை, தங்களை ஏதோ மிகப் பெரிய பிராணி ஒன்று விழுங்க வருவதைப் போலக் கண்டார்கள், பயத்தால் நடுங்கினார்கள், இன்னும் படையை விட்டு ஓடவும் விரண்டோடவும் செய்தார்கள். ஆனால் ஈரானியப் படைத்தளபதி உறுதியுடன் முஸ்லிம்களை எதிர்த்து நின்றார், விரண்டோடிய சிலர் மீண்டும் அவருடன் வந்து ஒட்டிக் கொண்டனர். ஆனால் ஈரானியப் படைக்கு முதல் நாளிலேயே முஸ்லிம் வீரர்கள் சமாதி கட்டி விட்டனர். ஈரானியர்களின் மத்யன் பிரதேசமும், கோட்டைகளும், அரண்மனைகளும் இப்பொழுது முஸ்லிம்கள் வசமாகின. ஈரானியப் பேரரசர் தோல்வியடைவதற்கு முன்பே, மத்யனை விட்டு யஸ்ட்கார் என்ற பகுதியை நோக்கிச் சென்று விட்டார். மத்யனின் அத்தனை பொருள்களும், இன்னும் கஜானாக்களும் கைப்பற்றப்பட்டு, மதீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மத்யன் நகரில் நுழைந்த பொழுது, மத்யன் நகரம் வெறிச்சோடிக் கிடந்தது. ஆள் நடமாட்டமில்லாமல் அமைதியாக இருந்தது. இந்தக் காட்சி சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை மிகவும் பாதித்து விட்டது. அதன் காரணமாக அவரது நாவிலிருந்து கீழ்க்கண்ட வசனம் உதிர ஆரம்பித்தது :

எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்? இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்). இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்). அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம். (44:25-28)

மத்யன் பிரதேசம் முஸ்லிம்களின் கைவசம் வந்ததும், அதனையடுத்த ஈராக் பகுதியும் முஸ்லிம்களின் கைவசம் வந்தது, இப்பொழுது அங்கு இஸ்லாமிய ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது. மக்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு, வீட்டை விட்டு யார் யார் ஓடினார்களோ அவர்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு வந்து, அமைதியான முறையில் வசிக்கலாம் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டது. இந்த அறிவிப்பைக் கேட்ட அவர்கள், மீண்டும் தங்களது வாழ்விடங்களுக்கு வந்தார்கள், தங்களது பொருள், மற்றும் செல்வம், சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டவர்களாக தங்களது வாழ்வைத் துவங்கினார்கள்.

ஈராக்கின் முழுப் பகுதியும் இஸ்லாமியப் படைகளின் கைவசம் வந்ததும், ஈராக்கின் கவர்னராக சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) நியமிக்கப்பட்டார்கள். வெற்றி கொள்ளப்பட்டவுடன் அந்த தேசத்தை ஒருங்கிணைத்து அதனை ஆள்வதென்பது மிகவும் சிரமமானதொரு பணியாக இருந்தது. சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தன்னுடைய தோழர்களது தீரமிக்க தியாகத்தையும், வீரத்தையும் கண்டு இறைவனுக்கு நன்றி கூறினார். இன்னும் வெகு சீக்கிரத்திலேயே ஈராக் பிரதேசத்தை மிகவும் செழிப்பான, வியக்கத்தக்க மாறுதல்களைக் கொண்ட பூமியாக, ஒரு முன்மாதிரி மிக்க தேசமாக மாற்றிக் காட்டினார்.

ஈராக்கின் சீதோஷ்ண நிலை நமது வீரர்களுக்கு ஒத்து வரவில்லை. அநேக வீரர்கள் இதனால் கடுமையான நோய்களுக்கு ஆளாகி வருகின்றார்கள் என்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கலீபா உமர் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.

அதற்கு, சரியான இடத்தைத் தேர்வு செய்து அங்கு புதியதொரு நகரை நிர்மாணிக்கும்படியும், படைவீரர்களுக்கு அங்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும்படியும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் பதில் கடிதம் எழுதினார்கள். எனவே, புதிய இடம் தேர்வு செய்யப்பட்டது, புதிய நகரம் கூஃபா நிர்மாணிக்கப்பட்டது. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது, நகரின் மார்பிடத்தில் மிகப் பெரிய பள்ளிவாசல் ஒன்றும் கட்டப்பட்டது. அந்தப் பள்ளியில் ஒரே நேரத்தில் 40 ஆயிரம் பேர் நின்று தொழும் அளவுக்கு விசாலமாக அந்தப் பள்ளி கட்டப்பட்டது. ஈராக்கை திட்டமிட்டபடியும், சரியான நிர்வாகத்திறனைக் கொண்டு ஆட்சி செய்யப்பட்டதாலும், முன்னைக் காட்டிலும் அமைதியாகவும், செழிப்பாகவும், நிம்மதியாகவும் மக்கள் வாழ ஆரம்பித்தார்கள்.

சரியான நிர்வாகம், பாரபட்சமில்லாத நீதி, இன்னும் மக்களை சரியான முறையில் வழி நடத்தியதால் மக்கள் அமைதியையும், சுபிட்சத்தையும், சந்தோஷத்தையும் இஸ்லாமிய ஆட்சியில் அனுபவித்தார்கள். ஆனால், எப்பொழுதும் பிரச்னைகளை உருவாக்கி அதில் குளிர்காய விரும்பும் ஒரு கூட்டம் எங்கும் இருந்து கொண்டிருப்பது போல கூஃபாவிலும் ஒரு சிறு கூட்டம் உருவாகியது. இன்னும் அந்தக் கூட்டம் அரசைக் குறைகூறிக் கொண்டே இருந்தது மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் தொழ வைப்பதில்லை என்றும் இன்னும் வேலைகளில் சோம்பேறித்தனத்தையும், பொடுபோக்காகச் செயல்படுவதாகவும் கவர்னர் மீது குற்றம் சாட்டினார்கள்.

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றிய குற்றச்சாட்டைப் பெற்றுக் கொண்ட கலீபா உமர் (ரலி) அவர்கள், உடனே மதீனாவிற்குப் புறப்பட்டு வரும்படி சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடுகின்றார்கள். அந்த உத்தரவைப் பெற்றுக் கொண்ட மாத்திரத்திலேயே, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு பயணமாகின்றார்கள்.

அங்கு சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டைப் பற்றி உமர்(ரலி) விசாரணை செய்கின்றார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களே! உங்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டைப் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

சிரித்துக் கொண்டே..! நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த முறையில் தொழ வைத்தார்களோ, அதே முறையில் தான் தொழ வைக்கின்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முதல் இரண்டு ரக்அத்துக்களை எவ்வாறு பிந்திய இரண்டு ரக்அத்துக்களை விட நீட்டித் தொழ வைத்தார்களோ அதனைப் போன்றே நானும் மக்களுக்கு தொழ வைக்கின்றேன் என்று கூறினார்கள். சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது பதிலால் திருப்தியுற்ற உமர் (ரலி) அவர்கள், சரி..! இப்பொழுது நீங்கள் மீண்டும் ஈராக் சென்று கவர்னர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

ஆனால் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களோ! சிரித்துக் கொண்டே.., என் மீது திருப்தி கொள்ளாத, இன்னும் என்னுடைய தொழுகையில் சந்தேகம் கொண்டு நான் சரியாகத் தொழுகையை நடத்தவில்லை என்று என்னைப் பற்றிப் புகார் செய்த மக்களிடமா என்னை மீண்டும் திருப்பி அனுப்புகின்றீர்கள். என்னுடைய வாழ்வை இனி நான் மதீனாவில் கழிக்க விரும்புகின்றேன், எனக்குப் பதிலாக வேறு யாரையாவது நியமித்து விடுங்கள் என்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கோருகின்றார்கள். எனவே, இதுவரை சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு உதவியாக இருந்த உதவி கவர்னரையே, ஈராக்கின் கவர்னராக நியமித்து விடுகின்றார்கள்.

ஹிஜ்ரி 23 ல் பாரசீக நெருப்பு வணங்கியான ஒருவன், உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் பொழுது கத்தியால் குத்தி விட்ட நிகழ்ச்சி நடந்தது. அந்த தாக்குதலில் இருந்து உமர் (ரலி) அவர்கள் மீள இயலவில்லை. அவர்களை மரணம் நெருங்கிக் கொண்டிருந்த வேலையில், உமர் (ரலி) அவர்களை அடுத்து ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்பது என்றதொரு பிரச்னை உருவாகியது. இன்னும் யாரையும் உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுக் கூறவில்லை, தலைமைப் பதவிக்கு நியமிக்கவும் இல்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பேரன்மைப் பெற்ற தோழர்களைக் கொண்ட, ஆறு நபர் கொண்ட கமிட்டியை நியமித்து, அவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து புதிய கலீபாவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆறுபேர் கொண்ட குழுவில் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களும் ஒருவராவார். இன்னும் எனக்குப் பின் ஒருவரை கலீபாக நியமிக்க வேண்டும் என்று நான் முடிவு எடுத்தால், நான் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களையே நியமிப்பேன் என்றும் அப்போது கூறினார்கள். ஆனால் அது சரியல்ல. தனது தலைவரைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை முஸ்லிம் உம்மத்திற்கு இருக்கின்றது என்று உமர் (ரலி) அவர்கள் கூறி விட்டார்கள்.

இன்னும் எனக்குப் பின் கலிபாவாக வரக் கூடியவர் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களாக இல்லா விட்டால், அவரல்லாது வேறு யாராவது ஆட்சிக்கு வருவாரேயானால், அவ்வாறு பொறுப்புக்கு வரக் கூடியவர் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளட்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். பின் உமர் (ரலி) அவர்கள் மரணமடைந்து, அவர்களை நல்லடக்கம் செய்ததன் பின்பு, நபித்தோழர்களில் அதிகமானோரின் ஆதரவின் அடிப்படையில், உதுமான் (ரலி) அவர்கள் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்கள்.

மீண்டும் ஈராக் கவர்னராக..!

உதுமான் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், ஈராக் பகுதியின் கவர்னராக மீண்டும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களைச் சென்று பதவியேற்றுக் கொள்ளுமாறு பணித்தார்கள். உதுமான் (ரலி) அவர்களின் உத்தரவுப்படி, மீண்டும் ஈராக் சென்று அங்கு மூன்று வருடம் ஆட்சிப் பொறுப்பில் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கடமையாற்றினார்கள். சில வருடங்கள் கழித்து, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கும் நிதியமைச்சராகப் பதவி வகித்த அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக மீண்டும் தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு, மதீனாவிற்கே திரும்பி வந்தார்கள். மதீனாவை அண்மித்துக் கொண்டிருந்த வேiலையில், மதீனாவிற்கும் சில மைல்கள் தூரத்தில் உள்ள அகீக் என்ற இடத்தில் தனக்கென ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு, தனிமையான வாழ்வை வாழ ஆரம்பித்தார்கள்.

தனிமை வாழ்வு

இன்னும் முஸ்லிம் சமுதாயத்தைப் பல்வேறு பிரிவுகளுக்கும் பிளவுகளுக்கும் இட்டுச் சென்றதோடு, நபித்தோழர்கள் பலரது உயிர்களையும் குடித்த ஜமல் யுத்தம், ஸிப்பீன் யுத்தம் போன்வற்றிலும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொண்டார்கள். இன்னும் அந்தக் காலப் பிரிவில் முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள், குழப்பங்கள், வாதப் பிரதிவாதங்கள் எதனைப் பற்றியும் தன்னிடம் கூற வேண்டாம் என்று தன்னுடைய குடும்பத்தவர்களுக்கு உத்தரவே போட்டு வைத்திருந்தார்கள் என்றால், அவர்கள் எந்த அளவுக்கு இந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் மனமுடைந்து போயிருப்பார்கள் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றது.

அவர்கள் வேதனையுடன், ஒரு முஸ்லிம் சகோதரனின் வாள், சொந்த முஸ்லிம் சகோதரனின் தலையைத் துண்டிக்கப் பயன்படுத்தப்படுகின்றதே என்று வேதனை தொணிக்கக் கூறி வருந்தினார்கள். இருதரப்பினரும் எனது மரியாதைக்குரிய தோழர்கள் தான், இவர்களில் யாருக்கு எதிராகவும் எனது கனவில் கூட நான் என்னுடைய வாளை உயர்த்த மாட்டேன் என்றும் கூறினார்கள்.

இறுதி நாட்கள்

ஹிஜ்ரி 54 ல் அந்த அகீக் என்ற இடத்தில் தனியாக வாழ்ந்து கொண்டிருந்த பொழுது, அவருடைய 80 வது வயதில் மரணம் அவரை வந்தடைந்தது. அவருடைய இறுதி நிலை பற்றி, அவரது மகன் விவரிப்பதை நாம் இங்கு நோக்குவோம் :

என்னுடைய தந்தையின் தலை என்னுடைய மடிமீதிருந்தது, அவரது கண்கள் பார்வை வெளிச்சத்தை இழந்து, நிலை குத்தி நின்றது. அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

என்னை நோக்கி.., ஏன் மகனே அழுகின்றாய், பொறுமையாக இரு என்று எனக்கு ஆறுதல் கூறினார். நிச்சயமாக அல்லாஹ் எனக்கு எந்தத் தண்டனையும் கொடுக்க மாட்டான், இன்ஷா அல்லாஹ்..! என்றும் கூறினார்கள்.

இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது மலரிதழால் எனக்கு சொர்க்கம் உண்டென்று நன்மாரயம் கூறியிருக்கின்றார்கள் என்று கூறி விட்டு,

மகனே! அந்த அலமாரியைச் சற்று திறப்பாயாக! என்று கூறி, அதில் நான் மடித்து வைத்திருக்கும் பழைய துணி ஒன்றை எடுத்து வருவாயாக என்று கூறினார்கள்.

நான் அந்தப் பழைய துணியை எடுத்து வந்து கொடுத்தேன்.

அதனைப் பார்த்து, இதை நான் பத்ர் யுத்தத்தின் பொழுது அணிந்திருந்தேன், அதனால் அதனை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தேன். இன்னும் இந்த துணியைக் கொண்டே எனக்கு நீ கபனிடுவாயாக!! இந்தத் துணி பழைய துணியாக இருக்கின்றதே என்று நீ கவலைப்பட வேண்டாம். அது பழையதாக இருந்தாலும், வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இதனைக் கொண்டே எனக்கு நீ கபனிட்டு அடக்கம் செய்! என்றும் கூறினார்கள்.

அவ்வாறு அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில், அவர்களது உயிர் விண்ணை நோக்கிச் சென்று விட்டது. பின்பு அவரது ஜனாஸா ஜன்னத்துல் பக்கீ யில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கதீஸிய்யாவையும்..! பெர்ஸியாவையும் வெற்றி கொண்ட மாவீரரே!!

இன்னும் தனது போர்த்திறத்தாலும், ஞானத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும் மத்யனை வெற்றி கொண்ட பெருமகனே!

தஜ்லா நதியின் மீது தனது குதிரையைச் செலுத்தி பயம் என்றால் என்ன? என்று கேட்ட பெருவீரரே!

கூஃபா நகரை உருவாக்கிவரே!

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மலரிதழால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்டவரே!

இஸ்லாத்தின் மிகப் பெரும் படைத்தளபதியே! நெறி தவறாத ஆட்சியாளரே!

ஓ!! சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களே!!

உங்களுக்கு எங்கள் ஸலாம்..! உங்களுக்கு எங்கள் ஸலாம்..!

சொர்க்கம் உங்களை ஆசிர்வதிக்கட்டும். அதன் தென்றல் காற்றும், சிரித்து தனது மலரிதழை வெளிக்காட்டும் மலரிதழ்களின் சுகந்தமும், இன்னும் சொர்க்கத்தின் ஓடைகளின் சலசலப்பும் என்றென்றும் உங்களைச் சுற்றி வந்து கொண்டே இருக்கட்டுமாக!! ஆமீன்!!
Previous Post Next Post