மத்னா பின் ஹாரிதாஹ் ஷீபானி (ரஹ்)

மத்னா பின் ஹாரிதாஹ் ஷீபானி (ரஹ்)

கைஸ் பின் ஆஸிம் தமீமி அவர்கள் கூறினார்கள் :
''மத்னா பின் ஹாரிதா (ரலி) அவர்கள் சாதாரண மனிதர் அல்ல, உண்மையில் அவர்.. பனூ ஷீபானி கோத்திரத்தின் மிக இள வயதுத் தலைவரும் இன்னும் அரேபியாவின் புகழ் மிக்க வீரரும் ஆவார்."

ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நகருக்கு வெளியே வந்து ஏனைய அரபுக் குலங்களை ஓரிறையின் பக்கமாக, இஸ்லாத்தின் பால் அழைப்பதற்காகப் புறப்பட்டார்கள், இவர்களுடன் அலி (ரலி) அவர்களும், இன்னும் அபுபக்கர் (ரலி) அவர்களும் உடன் சென்றார்கள். அப்பொழுது ஒரு இடத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, அந்த இடத்தில் சிலர் அமர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

''ஓ..! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே.., இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள், இவர்கள் பெருமதிப்பு மிக்க மற்றும் மிகச் சிறப்பானதொரு குலத்துக்குச் சொந்தக்காரர்கள். இந்த உலகத்தின் அதிகாரமும், புகழும் இவர்களது மணிமுடியை அலங்கரித்த பெருமைக்குரிய குலத்தவர்களாவார்கள்"" என்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அந்தக் குலத்தவர்களைச் சுட்டிக் காட்டிப் பெருமையுடன் கூறிக் கொண்டிருந்த அந்த சமயத்தில், பனூ ஷீபானிக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களான மஃப்ரூக் பின் அம்ர், ஹானி பின் கபீஸா, நுஃமான் பின் ஷரீக் மற்றும் மத்னா பின் ஹாரிதாஹ் ஷீபானி ஆகியோர் அங்கு அமர்ந்திருந்தார்கள். அவர்களில் மஃப்ரூக் பின் அம்ர் என்பவர் மிகச் சிறந்த பாடகரும், இன்னும் விவாதக் கலையில் வல்லவருமாவார்.

அப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்கள் மஃப்ரூக் அவர்களைப் பார்த்து உங்களது குலத்தவர்கள் எத்தனை நபர்கள் இருப்பீர்கள் என்று கேட்டார்கள்.

நாங்கள் ஆயிரம் பேர் இருக்கின்றோம் என்று பதிலுரைத்த மஃப்ரூக் அவர்கள், போரில் இந்த எண்ணிக்கை எவரும் மிஞ்சி விட முடியாது என்றும் பதிலிறுத்தார்.

போரில் நீங்கள் கலந்து கொண்டால் உங்களது நிலை எவ்வாறு இருக்கும் என்றார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

போரில் கலந்து கொண்டிருக்கும் பொழுது சினம், அதன் உச்சத்தில் இருக்கும்.

எங்களது குலத்தவர்கள் தங்களது குழந்தைகளைக் காட்டிலும், தங்களது போர்க் குதிரைகளைத் தான் அதிகம் நேசிக்கக் கூடியவர்கள், இந்த உலக வாழ்க்கையின் சொத்துக்கள் சுகங்களை விட எங்களது போர்க்கருவிகளே எங்களுக்கு மிகவும் பிடித்தமானவைகள் என்றும் மஃப்ரூக் பதிலிறுத்தார்.

போரில் இவர்கள் கலந்து கொள்ளும் பொழுது, சில சமயங்களில் போர் இவர்களுக்குச் சாதமாகவும், இன்னும் சில சமயங்களில் அவர்களது எதிரிகளுக்குச் சாதகமாகவும் இருந்திருக்கின்றன என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்துக் கூறிய அபுபக்கர் (ரலி) அவர்கள், இந்த மக்களுக்கு ஏதேனும் நீங்கள் சொல்ல விரும்புகின்றீர்கள் என்பது போல், இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தார்கள்.

அவர்களுக்கான செய்தி இதுதான்,

வணங்கப்படுவதற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை"" என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

குறைஷியர்கள் இஸ்லாத்தை தேர்வு செய்து கொள்வதற்குப் பதிலாக அதனை உதாசினம் செய்து விட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக கலகம் புரிவதற்கே முடிவு செய்துள்ளார்கள். ஆனால், நீங்கள் எங்களது இந்த அழைப்பிற்கு ஒத்துழைப்பீர்கள் என்று நினைக்கின்றேன் என்றார்கள்.

மஃப்ரூக் கேட்டார், உங்களது இந்த செய்தியை அடுத்து வேறு ஏதேனும் தகவல்கள் உள்ளதா என்றார்.

இதன் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட வசனத்தை அவர்களிடம் ஓதிக் காண்பித்தார்கள் :

''வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான். நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்;. ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். (6:151-153)
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களிலிருந்து இறைவசனங்களைச் செவிமடுத்த அவர்கள், இந்த உலக வாழ்க்கையின் வளங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக கூறப்படுகின்றவருடைய சொற்களல்ல இவை என்று கூறியவர்களாக, இஸ்லாத்தைத் தங்களுடைய வாழ்வியல் நெறியாக அந்த மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுடைய பரம்பரை கண்ணியமிக்கது, இனிமையான மக்களும், சாதாரண மக்களும், பிறரைக் கவரக் கூடிய மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.

உண்மையிலேயே நாங்கள் இந்த இறைவசனங்களை இன்னும் அதிகமாகவே செவிமடுக்க விரும்புகின்றோம், இறைவனுடைய திருவசனங்களுக்கு முன்னால் நாங்கள் எங்களது இதயங்களைப் பறி கொடுத்தே விட்டோம் என்றார்கள். அதன் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள் :

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (16:90)

மஃப்ரூக் அவர்கள் இந்த இறைவசனங்களைச் செவிமடுத்ததன் பின்னர் ஆச்சரியத்தால் ஆட் கொண்டவராகக் கூறினார் :

மனிதர்களை உயர்ந்த நல்லொழுக்கத்தின் பால், நடத்தைகளின் பால் அழைக்கின்ற அதனைப் பின்பற்றி அதன் மீது செயல்படுதவற்கு உற்சாகமூட்டுகின்ற இப்படிப்பட்டதொரு கருத்துரையை நான் நிச்சயமாக இறைவன் மீது சத்தியமாக இதற்கு முன் எங்கும் கேட்டதே இல்லை.

பின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பக்கமாகத் திரும்பிக் கூறினார் :
இவர் தான் ஹானி பின் கபிஸாஹ், இவரும் என்னைப் போல நம்பிக்கை கொண்டு, ஒரே மார்க்கத்தை நம்புபர். அவர் என்ன கூற வருகின்றார் என்பதைத் தங்களால் கேட்க முடியுமா? என்றார்.

அதனை ஏற்றுக் கொள்ளுமுகமாக தனது கவனத்தை ஹானி அவர்களது பக்கம் மிகவும் ஆர்வத்தோடு திரும்பினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஹானி கூறினார் :
நீங்கள் சொன்னவற்றை நான் மிகவும் கவனமாகவும், தொடர்ந்து கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றேன். உங்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு சொல்லும் சத்தியமானவை, இன்னும் வாய்மை வாய்ந்தவை. நீங்கள் சற்று முன் ஓதிக் காட்டிய இறைவசனங்கள் எங்களது இதயங்களை ஆட் கொண்டு விட்டன, மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. ஆனால், நாங்கள் எங்களை இறுதி முடிவுக்கு வெகு விரைவில் வந்து விட இருக்கின்றோம். எங்களது கருத்துக்களை எங்களது குலத்தைச் சேர்ந்த ஏனையோர்களிடமும் நாங்கள் கலந்து பேச இருக்கின்றோம். அவரசப்பட்டு எடுக்கக் கூடிய சில முடிவுகள் விரும்பத்தகாத சில விளைவுகளை ஏற்படுத்தி விடலாம். எனவே தயவுசெய்து எங்களுக்கு சற்று ஆலோசனை செய்து கொள்வதற்கு அவகாசம் தாருங்கள் என்றார்.
அப்பொழுது, எங்களது குலத்தின் பெருமை மிக்க வீரரும், எங்களது மனங்கவர்ந்தவரும், இன்னும் எங்களது குலத்திற்கே பெருமை சேர்க்கக் கூடியவருமான மத்னா அவர்கள் என்ன சொல்ல வருகின்றார் என்பதையும் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கவனத்தை மத்னா அவர்களின் பக்கமாகத் திருப்பினார்கள், மத்னா கூறினார் :
நீங்கள் பேசியவற்றை நானும் செவிமடுத்தேன், நான் எதனைக் கேட்டேனோ அதனை நான் மிகவும் விரும்புகின்றேன். உங்களது ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களது மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி விட்டன. ஆனால் உங்களது இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளும் சக்தி, அதிகாரம் இப்பொழுது எங்களது கைகளில் இல்லை என்பதே உண்மையாகும். நாங்கள் ஈரானியப் பேரரசுடன் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்த்தின் அடிப்படையில் புதிதாக உருவாகும் எந்த இயக்கத்தையும் ஏற்றுக் கொள்ளவோ அல்லது புதிதாக ஆரம்பிக்கப்படும் எந்த இயக்கத்துக்கு உதவிக் கொள்ளவோ எங்களால் இயலாது. உங்களது இந்தப் புதிய அழைப்பை ஈரானியப் பேரரசர் கூட ஏற்றுக் கொள்வத்றகான வாய்ப்பு இல்லை என்றே கருதுகின்றேன். அவர் அவ்வாறு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதுவே எங்களுக்கு மிகவும் ஆபத்தானதாக முடிந்து விடும். ஆனால் உங்களுக்கு ஒன்றை நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம், இந்த அரேபியப் பகுதியில் உங்களுக்கு யாரேனும் துன்பம் விளைவிப்பார்களென்றால், உங்களது அழைப்புப் பணிக்கு இடையூறு செய்வார்களென்றால் எங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு நாங்கள் உதவுவோம் என்ற வாக்குறுதியை மட்டும் இப்பொழுது எங்களால் தர முடியும் என்று கூறினார்.

மத்னா அவர்களது உரையைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனவர்களாக, மத்னா பின் ஹாரிதா ஷீபானி அவர்களே..,

இது மிகவும் வித்தியாசமாக இருக்கின்றதே.., நீங்கள் சத்தியம் இது தான் என்று ஒப்புக் கொண்டு விட்ட பிறகு, அதனை ஏற்றுக் கொள்ள என்ன தயக்கம். சத்தியம் இது தான் என்று ஒப்புக் கொண்டதன் பின்னர், அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதே முரண்பாடனதல்லவா? எப்பொழுது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, அதன் சட்ட திட்டங்களையும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கின்றீர்களோ அப்பொழுது தான் அந்த மார்க்கத்திற்கு எதிரானவற்றிற்கு எதிராக, அதனைப் பாதுகாப்பதற்கு முன்வர முடியும்"" என்றார்கள்.

மத்னா பின் ஹாரிதாஹ் அவர்களின் தயக்கத்திற்குப் பின்பாக, அவர்கள் உதவுவதாகச் சொன்ன வாக்குறுதியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ள இயலாது என்று கூறி விட்டார்கள்.

இன்னும் மிகக் குறுகிய காலத்தில் முழு ஈரானியப் பேரரசையும் முஸ்லிம்களின் கைப்பிடிக்குள் இறைவன் விழச் செய்து விடுவதை உங்களது கண்களாலேயே நீங்கள் காணப் போகின்றீர்கள் என்றால், அதனை நீங்கள் பார்க்கத்தான் போகின்றீர்கள் என்றால் உங்களது நிலை எவ்வாறு இருக்கும் என்று கேட்டார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். அவர்களது அத்தனை வளங்களும், விவசாயம், பொருளாதாரம் ஆகிய அனைத்தும் முஸ்லிம்களின் வசமாகி விடும். இதனைக் கேட்ட பின்பும் நீங்கள் ஓரிறைவனாகிய அல்லாஹ்வை வணங்க மாட்டீர்களா, அவனது புகழைப் பாட மாட்டீர்களா? என்றார்கள்.

ஆச்சரியம் கலந்த குரலில், ''நீங்கள் சொன்ன அனைத்தும் நிச்சயம் நடந்தேறுமா"" என்றார் நுஃமான் பின் ஷிரீக் அவர்கள்.

ஈரானியப் பேரரசு வீழ்ந்து முஸ்லிம்களின் கைகளுக்குள் வந்து விட்டால், அதன் கண்ணியமும், அதன் அலங்காரங்களும் தான் என்ன..! அந்த நேரத்தில் உங்களது மதிப்பு தான் என்ன..! என்று வியந்த அவரைப் பார்த்து,

அவர்களது அந்த ஆச்சரியம் உண்மை தான் என்பதை மெய்ப்பிக்கு முகமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்கண்ட வசனத்தை ஓதிக் காட்டினார்கள் :

நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம். இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும்; பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.) (33:45-46)

அதன் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஆருயிர்த் தோழர் அபுபக்கர் (ரலி) அவர்களுடன் தனது இருப்பிடத்திற்கு வந்து விட்டார்கள். பனூ ஷீபான் கோத்திரத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த நிகழ்ச்சி நடந்த அந்த நேரத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அளித்த இறுதிச் செய்தியில் அவர்களுக்கு இந்த உலக வாழ்க்கையிலேயே ஒரு மிகப் பெரிய வெற்றிக்கான நன்மாரயத்தை அறிவித்து விட்டுத் தான் வந்தார்கள்.

இப்னு அதீர் அவர்கள் கூறுகின்றார்கள், பனூ ஷீபானி குலத்தவர்களில் ஒருவரான ரபீஆ என்பவர் ஈரானியர்களுக்கு எதிரான போரில் கலந்து கொண்ட பொழுது, ஈரானியர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள், அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'இன்றைய தினம் அரபுக்கள் அரபுல்லாத ஒரு கூட்டத்திற்கு எதிராக பழி தீர்த்துக் கொண்டார்கள் என்றார்கள்."

நம்முடைய இந்த வரலாற்றுத் தொடர் நாயகரான மத்னா அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்த மாத்திரத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனினும், அவரது கோத்திரத்தவர்கள் விரைவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள், இன்னும் இஸ்லாமிய ஜிஹாதில் கலந்து கொண்டு மிகப் பெரிய வெற்றியை ஈட்டுவார்கள் என்றதொரு நன்மாரயத்தை அப்பொழுது பெற்றுக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களால் வழங்கப்பட்ட நன்மாராயம் பின்னாளில் உண்மையாகவே நிறைவேறியது. பின்னாளில் மத்னா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்கு மிகவும் வலிமை சேர்ப்பவராகவும், அவரது வருகையில் முஸ்லிம்களின் பலமும் அதிகரித்தது என்றும் கூறலாம்.

சில வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்பாகவே இந்தக் கோத்திரத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். பனூ ஷீபானி கோத்திரத்தாரைச் சந்தித்து விட்டு வந்த பின், மத்னா அவர்களின் குழு தான் முதன் முதலாக இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தது என்றும் கூறப்படுகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எடுத்து வைத்த இறைவசனங்கள் தான், அவர்களது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இஸ்லாம் என்பது சத்திய மார்க்கம் என்பதை உளப்பூர்வமாக அவர் ஆரம்பத்திலேயே ஏற்றுக் கொண்ட போதிலும், பல்வேறு புறநிலைக் காரணங்களுக்கு அதனை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தார்.

அல்லாஹ்வையும், அவனது தூதரான இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டு விட்டதன் பின்னர், இஸ்லாத்தினைக் கைவிட்டு விட்டு மறுதளித்தவர்களை அடக்குவதற்காக அபுபக்கர் (ரலி) அவர்கள் பதினொரு படைகளை உருவாக்கினார்கள். அந்தக் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக பல்வேறு பகுதிகளுக்கும் இந்தப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டன, இவர்கள் இஸ்லாத்தைப் பாதுகாக்கும் பணியில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார்கள்.

முதல் படையை அபுபக்கர் (ரலி) அவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களது தலைமையில், தலீஹா பின் கவாலத் என்பவனை ஒடுக்குவதற்காக அனுப்பி வைத்தார்கள்.

முஸைலமா கத்தாபை ஒடுக்குவதற்காக இக்ரிமா (ரலி) அவர்களது தலைமையில் படை சென்றது.

யமன் தேசத்தின் அஸ்வத் அன்ஸி என்பவனை ஒடுக்குவதற்காக முஹாஜிர் பின் அபூ உமைய்யா (ரலி) அவர்களது தலைமையில் படை அனுப்பி வைக்கப்பட்டது.

சிரியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காலித் பின் ஸயீத் பின் ஆஸ் (ரலி) அவர்கள் தலைமையில் படை அனுப்பி வைக்கப்பட்டது.

பனூ குதாஆ என்ற கோத்திரத்தாரை அடக்குவதற்காக உமைர் பின் ஆஸ் (ரலி) அவர்களது தலைமையில் படை அனுப்பி வைக்கப்பட்டது.

ஹுதைஃபா பின் முஹ்ஸின் (ரலி) அவர்களை ஓமன் தேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மெஹ்ரா மக்களை எதிர்கொள்வதற்காக அரஃபஜா பின் ஹாரிஸ்மாஹ் (ரலி) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

யமனின் ஒருபகுதியாகிய தஹாமா மக்களை எதிர்கொள்வதற்காக அபுபக்கர் (ரலி) அவர்கள் சுவைத் பின் மக்ரான் (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

பனூ ஸலீம் மற்றும் பனூ ஹவஸான் ஆகியோர்களுக்கு எதிராக தரீஃபா பின் ஹாதர் (ரலி) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இக்ரிமா பின் அபூஜஹ்ல் (ரலி) அவர்களுக்கு உதவுவதற்காக ஸர்ஜீல் பின் ஹஸனா (ரலி) அவர்களது தலைமையில் படை அனுப்பி வைக்கப்பட்டது.

பஹ்ரைன் தேசத்திற்கு ஆலா பின் ஹத்ரமி (ரலி) அவர்களது தலைமையில் படை அனுப்பி வைக்கப்பட்டது.

மத்னா பின் ஷீபானி (ரலி) அவர்களது கோத்திரத்தாரின் வாழ்விடங்கள் பஹ்ரைன், யமாமா மற்றும் ஈரான் தேசத்தினை ஒட்டியதாக அதன் எல்லைப் புறங்களில் அமைந்திருந்தது. கிளர்ச்சியாளர்களான பஹ்ரைனின் பனூ ரபீஆ கோத்திரத்தாரை வெற்றி கொள்வதற்கு ஏதுவாக ஆலா பின் ஹழ்ரமி (ரலி) அவர்கள் மத்னா (ரலி) அவர்களின் துணையைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களுடன் தொடர்பு கொண்டார்கள். மாபெரும் வீரர்களான பனூ ஷீபானி கோத்திரத்தார்கள் மத்னா (ரலி) அவர்களின் தலைமையில் ஆலா பின் ஹழ்ரமி (ரலி) அவர்களது படையுடன் இணைந்து கொண்டார்கள். இந்தப் படைகள் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதில் மிக முக்கியப் பங்காற்றியது. மத்னா (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நேசப் படை என்பதை அந்தப் போரில் நிரூபித்துக் காட்டியதோடு மட்டுமல்லாது, பஹ்ரைனின் இரண்டு நகரங்களான கதீஃப் மற்றும் ஹஜ்ர் ஆகியவற்றையும் கைப்பற்றினார்கள். அதன் பின்னர் ஈரானை வெற்றி கொள்வதற்கும் அவர் உதவினார், இன்னும் வளைகுடாப் பகுதியின் வடக்கு எல்லைப் பகுதியாகிய யூப்ரடிஸ் மற்றும் தஜ்லா நதிகள் கடலில் கலக்கும் முகத்துவாரம் வரைக்கும் இஸ்லாமியப் படைகள் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.

மிகச் சிறந்த வரலாற்று அறிஞரான வப்ர், காஸிம் பின் ஆஸிம் அத்தமீமி அவர்கள் மத்னா அவர்களது தாக்கம் எந்தளவுக்கு இருந்தது என்பதை இவ்வாறு குறிப்பிடுகின்றார் :

''மத்னா பின் ஹாரிதா (ரலி) அவர்கள் சாதாரண மனிதர் அல்ல, உண்மையில் அவர்.. பனூ ஷீபானி கோத்திரத்தின் மிக இள வயதுத் தலைவரும் இன்னும் அரேபியாவின் புகழ் மிக்க வீரரும் ஆவார்."

மத்னா (ரலி) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களின் அவைக்கு வந்து, ஈரானோடு போர் புரிவதற்கு அனுமதி அளிக்குமாறு தானே முன்வந்து அனுமதி கேட்டார்கள். அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது. ஈரான் தேசத்தோடு முஸ்லிம்கள் போர் செய்து அந்த தேசத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை முதன் முதல் முஸ்லிம்களுக்கு ஊட்டியவரே மத்னா (ரலி) அவர்கள் தான். இன்னும் ஈரானுக்கு எதிராக அவர் போர் முரசம் ஒலிக்கச் செய்த அந்த நாட்களில், ஈரானைப் பற்றிப் பேசுவதற்கும் அதன் மீது போர் முஸ்தீபு செய்வதற்கும் யாருக்குமே துணிச்சல் இருந்ததில்லை, அந்த அளவுக்கு ஈரானானது மிகவும் பலமிக்க, எதிரிகளை அச்சம் கொள்ளச் செய்யக் கூடிய அளவுக்கு பலம் பொருந்தியதாகவும் இருந்தது. மத்னா (ரலி) அவர்களின் இந்த துணிச்சல் மிக்க நடவடிக்கையின் ஆரம்பம் தான், ஈராக் முஸ்லிம்களின் வசமானது, ஈராக் முதலில் வெற்றி கொள்ளப்பட்டது.

இடைவிடாது தொடர்ந்தேர்ச்சியாக ஈராக் மீது மத்னா அவர்கள் போர் தொடுத்த வண்ணம் இருந்தார்கள். தனது போர் நடவடிக்கைகளை விரைவு படுத்துவதற்காக மேலும் படைகளை அனுப்பி வைக்குமாறு அபுபக்கர் (ரலி) அவர்களிடம் மத்னா (ரலி) அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். எதிரிகள் மூச்சு விடுவதற்குக் கூட அவர்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள். யமாமா வில் தங்கி இருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்களை, ஈராக்கின் மீது முற்றுகையிட்டுள்ள மத்னா (ரலி) அவர்களுக்கு உதவிக்குச் செல்லும்படி உத்தர விட்டார்கள். இன்னும் மத்னா (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் நின்று பணியாற்றும்படி காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு அபுபக்கர் (ரலி) உத்தரவிட்டிருந்தார்கள். விரைந்து வந்து ஈராக்கை அடைந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், ஈராக்கிய படைத்தலைவனான ஹர்மூஸ் க்கு இவ்வாறு கடிதம் எழுதினார்கள் :

காலித் பின் வலீத் ஆகிய நான் ஹர்மூஸ் க்கு எழுதிக் கொள்வது,
''சத்தியத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. இஸ்லாத்தை ஏற்றுக் கொள், அதுவே உமக்கு மிகவும் நல்லது. எங்களது பாதுகாப்பின் கீழ் இருந்து கொள்வதற்காக உனக்கும் உன்னுடைய மக்களுக்குமாக வரியைச் செலுத்தி விடு. எங்களது இந்த வேண்டுகோளை நீ ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதன் விளைவு எதிர்கொள்ளத் தயாராக இரு. வாழ்வதை விட உன்னதமான நோக்கத்திற்காக தங்களது இன்னுயிரை இழக்கவும் தயாராக இருக்கக் கூடியதொரு கூட்டத்துடன் நான் உன்னுடைய எல்லைப் பகுதிக்கே வந்து விட்டேன்.""
கடிதத்தைப் படித்து முடித்த ஹர்மூஸ் கோபம் தலைக்கேறியவனாக தனது படைகளை புகழ்மிக்க நகரமான கத்மியா, பஸராவிற்குள் அருகில் உள்ள நகரத்திற்கு மிகவும் படாடோபான ஆர்ப்பாட்டங்களுடன் தனது படைக்குத் தலைமை தாங்கி வந்தான். காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது படையை மூன்று பிரிவாகப் பிரித்து ஒரு படையை மத்னா (ரலி) அவர்களின் தலைமையில் அனுப்பி வைத்தார்கள். மிகவும் வீராவேஷத்துடன் மத்னா (ரலி) அவர்களின் தலைமையில் களம் புகுந்த முஸ்லிம்கள், ஈரானியப் படைகளை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். மிகப் பெரிய செல்வங்களைப் போர்ப் பரிசாகப் பெற்றுக் கொண்டார்கள். ஒவ்வொரு முஸ்லிம் வீரரும் போர்த் தளவாடங்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டதோடு, ஓராயிரம் திர்ஹம்களையும் பரிசாகப் பெற்றுக் கொண்டார்கள். மத்னா (ரலி) அவர்கள் போர்தளவாடக் கருவிகளைப் பெற்றுக் கொண்டதோடு நின்று கொண்டார், பண வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் அவர் ஆர்வம் காட்டவில்லை, அது அவருக்கு முக்கியமானதுமன்று, அல்லாஹ் இஸ்லாமியப் படைகளுக்கு அளித்த வெற்றியே தனக்கு இறைவன் அளித்த மிகப் பெரிய பரிசாக அவர் கருதியதே அவர் உலக ஆதாயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமைக்கான காரணமாக இருந்தது என்றால் அதில் மிகையில்லை.

அல் ஸலாஸில் போரில் பெரு வெற்றி பெற்றதன் பின்னர் ஓய்வுக்காக மஸார் பகுதியை நோக்கிச் சென்ற ஈரானியப்படைகள் அங்கிருந்து கொண்டு, நதிக் கரையில் ஒன்றுகூடி மீண்டும் தங்களது படைகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்தார்கள். இன்னொரு போரை ஆரம்பிப்பதற்கு முன்பதாக அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டு, தங்களை முழு அளவில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களது திட்டமாக இருந்தது.

மத்னா பின் ஹாரிதா (ரலி) அவர்களுடைய சகோதரரான மானி பின் ஹாரிதா (ரலி) அவர்கள் அந்த நதிக்கரையில் ஒன்று கூடியிருந்த படைகள் என்னதான் செய்து கொண்டிருக்கின்ற என்பது பற்றி நோட்டம் விட்ட பொழுது, அவர்கள் எந்த நேரமும் இஸ்லாமியப் படைகள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என்ற அவர்களது நோக்கத்தைப் புரிந்து கொண்டார்கள். அவர்கள் தாங்கள் இழந்த பகுதிகளை எப்படியும் மீட்டாக வேண்டும், தோல்விக்கு பதிலடி கொடுத்தாக வேண்டும் என்று ஈரானியர்களது உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த வஞ்சக நெருப்பை அறிந்து கொண்ட மானி பின் ஹாரிதா (ரலி) அவர்கள், ஈரானியர்களின் நோக்கம் இது தான் என்பதை காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள். அதனைக் கேட்ட காலித் பின் வலீத் (ரலி)அவர்கள் சற்றும் தாமதிக்காது மத்னா மற்றும் மானி பின் ஹாரிதா (ரலி) ஆகியோர்களையும் உள்ளடக்கிய படையை உடனே கிளப்பி, ஈரானியர்கள் மீது தாக்குதல் தொடுக்கப் பணித்தார்கள். முஸ்லிம்களின் தாக்குதலில் நிலைகுலைந்து போன ஈரானியர்கள் இம்முறையும் முஸ்லிம்களிடம் தோற்றுப் போனார்கள்.

போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களை மதீனாவிற்கு அனுப்பி வைத்து விட்டு, மஸார் லிலேயே காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தங்கி விட்டார்கள். இந்தப் போரினை வரலாறு 'தானி" என்றழைக்கின்றது. காரணம், இந்தப் போர் தானி என்ற ஆற்றின் கரையினிலே நடந்தது. இன்னும் மத்னா (ரலி) அவர்களின் வீரமும், அவர்களது அனுபவமும் மிகச் சிறந்த வெற்றியை முஸ்லிம்களுக்குப் பெற்றுத் தந்தது.

மிகவும் கடினமாக சூழ்நிலைகளில் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் மத்னா (ரலி) அவர்களிடம் கலந்தாலோசனை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் பல சந்தர்ப்பங்களில் வெற்றி கொள்ளப்பட்ட பகுதிகளில் மத்னா (ரலி) அவர்களை நிர்வாகியாகவும், தனது பிரதிநிதியாகவும் மத்னா (ரலி) அவர்களை நியமித்து விட்டு, படைகளுடன் தான் முன்னேறிச் சென்றிருக்கின்றார்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள்.

அவ்வாறு காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் ஹிராத் என்ற பகுதியை முற்றுகையிடுவதற்காக அந்தப் பகுதிக்கு சென்றடைந்த பொழுது, அந்தப் பகுதியே ஆள் அரவமற்ற நிலையில் வெறிச்சோடிக் கிடந்தது. பின்னர் தான் அவர்கள் அனைவரும் கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்திருக்கின்றார்கள் என்பதனை அறிந்து கொள்ள முடிந்தது. சில பொறுக்கி எடுக்கப்பட்ட தளபதிகளைக் கொண்டு அந்தக் கோட்டையை முற்றுகையிடச் செய்தார்கள். அவ்வாறு முற்றுகையிட்டவர்களில் தரார் பின் அஸ்வர் (ரலி) அவர்கள் வெள்ளைக் கோட்டையையும், இன்னும் தரார் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அர்பாஇன் கோட்டையையும் முற்றுகையிட்டார்கள். அதனைப் போலவே ஏனைய முஸ்லிம் வீரர்கள் கோட்டையினைச் சுற்றிலும் முற்றுகையிட்டவாறு நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது மத்னா (ரலி) அவர்கள் அம்ர் பின் பகீலா வினுடைய கோட்டையை ஒரு சுற்றுச் சுற்றி வந்த பொழுது, அம்ர் பின் அப்துல் மஸீஹ் ம் அந்த இடத்தில் இருந்தார்.

அந்தக் கோட்டையில் அடைக்கலம் புகுந்திருக்கும் மக்களை இஸ்லாத்தின்பால் அழைக்குமாறு தனது படையினருக்கு உத்தரவிட்டார் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள். அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டால் நல்லது, அவ்வாறில்லா விட்டால் அவர்களது முடிவு என்னவென்பதைத் தீர்மானிப்பதற்கு சற்று அவகாசம் வழங்கிடுங்கள். அந்த அவகாச காலத்தில் அவர்கள் எந்த முடிவுக்கு வராவிட்டால், அவர்கள் மீது போர் தொடுத்திடுங்கள் என்று காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது படையினருக்கு உத்தரவிட்டார்கள். கோட்டைக்குள் நுழைந்திருந்தவர்களும், இனி வசமாக மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்ததன் பின்னர், வரி செல்லுவதற்கு ஒப்புக் கொண்டார்கள். அதற்குப் பகரமாக தங்களது வாழ்வுக்கும், சொத்துக்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். இவர்களது இந்தக் கோரிக்கையை ஒரு தூதுவர் மூலமாக கலிஃபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்குத் தெரிவித்து அவர்களது சம்மதத்தைக் கோரினார்கள். அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் சம்மதம் தெரிவித்து, வரியை அறவிடும்படி கேட்டுக் கொண்டார்கள், இது காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தோழர்களுக்கு நல்லதொரு உற்சாகத்தைத் தந்தது.

கலிஃபா அவர்களது சம்மதத்தைப் பெற்றுக் கொண்ட காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், ஹிரா மக்களின் சார்பாக வந்த அதீ பின் அதீ, அம்ர் பின் அதீ, அம்ர் பின் அப்துல் மஸீஹ் மற்றும் அயாஸ் பின் கபீஸா ஆகியோர்கள் ஒப்பமிட, முஸ்லிம்களின் சார்பில் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் ஒப்பமிட்;டார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு அடுத்ததாக அவர்களுக்குக் கீழ் இயங்கி அனைத்து தளபதிகளும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். ஹிரா மக்கள் எந்தவித நிர்ப்பந்தமுமில்லாது, விருப்பத்துடனேயே ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்கள். இந்த ஒப்பந்தம் மூலமாக ஹிரா பகுதியும் முஸ்லிம்கள் வசமானது, ஆட்சிக்குட்பட்ட பிரதேசமாக மாறியது.

ஈரானியப் படைகளுடன் போர் செய்து வெற்றி பெற்றிருந்த நேரம் அது, முஸ்லிம்கள் சற்று முன் தான் போரில் ஈடுபட்டு களைப்புடன் இருக்கின்றார்கள், எனவே இப்பொழுது போரை எதிர்பாராத விதத்தில் துவக்கினால் நமக்கே வெற்றி என்று ரோமனிய படைத்தளபதி ஹெர்குலஸ் தீர்மானித்தான். அவனது அந்த போர்த் தயாரிப்புகளைப் பற்றி கலிஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் அறிந்தார்கள். அதனை அறிந்த மாத்திரத்திலேயே ஆச்சரியத்தால் அவர்களது புருவங்கள் உயர்ந்தன.

''அல்லாஹ்வின் மீது ஆணையாக.., காலித் பின் வலித் (ரலி) அவர்கள் மூலமாக இந்த ரோமர்களுக்கு நான் ஒரு பாடம் கற்பித்துக் கொடுக்கப் போகின்றேன், அவர்கள் பைத்தியம் பிடித்து ஓடப் போகின்றார்கள்"" என்று ஆச்சரியப்பட்டுக் கூறினார்கள்.

அப்பொழுதே காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள் அபுபக்கர்(ரலி) அவர்கள் :

ஓ.. அபூ சுலைமான் அவர்களே, உங்களது நேர்மையான மற்றும் உன்னதமான நோக்கத்திற்கு அல்லாஹ் நிரப்பமான நற்கூலியை வழங்குவானாக. அல்லாஹ்வினுடைய பேரருளைப் பெற்றுக் கொள்வதற்காக உங்களுடைய சக்திகளையும், ஆற்றல்களையும் செலவிடுங்கள், அவன் உங்கள் மீது கருணையைப் பொழிவான், இன்னும் தற்புகழ்ச்சி, பெருமை ஆகியவற்றினின்றும் விலகி இருங்கள், அவை உங்களது நற்செயல்களைப் பாழடித்து விடும். கர்வத்துடன் திரிபவர்கள் எப்பொழுதுமே அவமரியாதையையும், கண்ணியக் குறைவையும் பெற்றுக் கொள்வார்கள். அல்லாஹ் எப்பொழுதும் நமக்கு நன்மையை நாடுவான், அவனே அருட்கொடைகளை வழங்கக் கூடிய பேரருளாளனாக இருக்கின்றான். உங்களிடம் இருக்கக் கூடிய படையினரில் பாதியை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள், மீதி உள்ள பாதிப் படைகளை அங்கேயே விட்டுச் செல்லுங்கள். அவர்களை மத்னா (ரலி) அவர்களின் பொறுப்பில் விட்டுச் செல்லுங்கள் என்று அந்தக் கடிதத்தை முடித்திருந்தார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களிடம் உத்தரவைப் பெற்றுக் கொண்ட காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், சற்று தன் முன் உள்ள படையினரை நோட்டம் விட்டார்கள். அவர்களில் மிகச் சிறந்தவர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, மீதமுள்ள கீழ்படிதழுள்ள தோழர்களை மத்னா (ரலி) அவர்களின் பொறுப்பில் விட்டார்கள். படைகள் இரு கூறாகப் பிரிவதற்கு முதலில் மத்னா (ரலி) அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களில் ஒரு பகுதியினரைத் தேர்வு செய்த விதத்தை பார்த்த மத்னா (ரலி) அவர்கள் மிகவும் கவலைக்குள்ளானார்கள். ஆனால், இந்த உத்தரவு அபுபக்கர் (ரலி) அவர்களிடமிருந்த வந்ததன் காரணமாக, சரி.., நீங்கள் கலிஃபாவினுடைய உத்தரவுக்குக் கட்டுப்படுங்கள், அதேநேரத்தில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களே..! நீங்கள் இவ்வாறு பிரித்தெடுப்பதற்குப் பதிலாக, எல்லாத் தரப்பிலிருந்தும் சரி பாதியாக நீங்கள் பிரிப்பது நல்லது என்று கூறினார்கள் மத்னா (ரலி) அவர்கள்.

நான் படைகளை இவ்வாறு பிரித்திருப்பது, நல்லதொரு நோக்கத்தை முன்னிட்டுத்தான் பிரித்திருக்கின்றேன், அந்த வகையில் தான் நான் விரும்பியவர்களைத் தேர்வு செய்திருக்கின்றேன் என்று காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் மத்னா (ரலி) அவர்களுக்கு விளக்கமளித்தார்கள்.

அந்த விளக்கத்தைக் கேட்ட பின்பு, அதில் திருப்தியடைந்த மத்னா (ரலி) அவர்கள், ''அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக, இன்னும் உங்கள்மீது அருட்கொடைகளைப் பொழிவானாக. உங்களது தலைமைத்துவத்தையும் நிலைத்திருக்கச் செய்வானாக, இன்னும் உங்கள் மீது அருட்செய்து மிகப் பெரும் பலத்தையும் அளிப்பானாக..!"" என்று துஆச் செய்தவண்ணம் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.

பலவீனமான மற்றும் காயமடைந்திருந்த தோழர்களை மதீனாவிற்கு அனுப்பி வைத்து விட்டு, எஞ்சியுள்ள தோழர்களை அழைத்துக் கொண்டு யர்மூக் நோக்கி தனது பயணத்தைத் துவங்கினார்கள் மத்னா(ரலி) அவர்கள்.

இஸ்லாமியப் படைகள் இருகூறாகப் பிரிந்தது பற்றிய தகவல் கிடைக்கப் பெற்ற ஈரானியப் பேரரசன் இது தான் முஸ்லிம்களுக்கு தக்க பாடம் கற்பித்துக் கொடுக்கும் தருணம் என்பதை உணர்ந்தவனாக, இந்த சந்தர்ப்பத்தை நழுவாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சபதமெடுத்தவனாக, முஸ்லிம் படைகளை எதிர்கொள்வதற்காக வேண்டி மிகப் பெரிய படையைத் தயார் செய்து, ஹொர்மூஸ் ஜத்வியா என்ற தளபதியின் கீழ் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்தான். அதுவுமல்லாது, மதனா (ரலி) அவர்களை அச்சுறுத்தி ஒரு கடிதத்தையும் அனுப்பி வைத்தான்.

உங்களை எதிர்ப்பதற்காகவே பயங்கரமான, எதற்கும் அஞ்சாத, இன்னும் இரத்த தாகம் கொண்டதொரு படையை நான் அனுப்பி வைத்துள்ளேன், அந்தப் படையனாது பன்றிகளையும், கோழிகளையும் மேய்ப்பவர்களைக் கொண்டதாகும். அவர்களைக் கொண்டே உங்களை நான் எதிர்க்கச் சித்தமாக இருக்கின்றேன் என்று அந்தக் கடிதத்தில் ஈரானிய மன்னன் எழுதி இருந்தான்.
அதற்கு பதலளிக்கு முகமாக மத்னா (ரலி) அவர்களும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பி வைத்தார்கள். அந்தக் கடிதமானது புத்திசாலித்தனமாக, ஞானம் நிறைந்ததாக மற்றும் தொலை நோக்குச் சிந்தனை கொண்டதாக எழுதப்பட்டிருந்தது.

''கடிதத்தைப்பெற்றுக் கொண்டேன், சூழல்களையும் அறிந்து கொண்டேன். நீங்கள் எழுதியவற்றிலிருந்து நீங்கள் ஒரு வன்முறையாளர் அல்லது வழிகெட்டுப் போனவர் அல்லது ஒரு பொய்யர் என்பதைப் புரிந்து கொண்டேன். இந்த நிலை உமக்கு கெட்டது, எமக்கோ சாதகமானது. ஒன்றை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது.., ஆளும் மன்னர்கள் பொய்யுரைப்பர் என்றால் அது அவர்களுக்கு அவமானகரமானதாகும், இன்னும் மக்களின் முன்பாக அவர் அசிங்கப்பட வேண்டியதிருக்கும். அல்லாஹ்வினுடைய தண்டனைகள் அவரைச் சூழ்ந்து கொள்ளும். எங்களது புரிந்துணர்வுகளும், இன்னும் அனுபவங்களும் எங்களுக்கு எதனை முன்னறிவிக்கின்றதென்றால், உங்களுக்கு மரணம் அன்மித்து விட்டதன் காரணமாகத் தான் எங்களை எதிர்க்க முன்வந்திருக்கின்றீர்கள் போலத் தோன்றுகின்றது. பாம்பு இறக்க வேண்டுமென்றால் அது தன் வலையை விட்டும் வெளி வந்தாக வேண்டுமல்லவா..! அல்லாஹ்விற்கே நாங்கள் நன்றி கூறிக் கொள்கின்றோம்.., அவனே ஆடுகளையும், ஓநாய்களையும், பன்றிகளையும், கோழிகளையும் மேய்ப்பவர்களைக் கொண்டதொரு படையை எங்களுக்கு எதிராக அனுப்பி வைத்திருக்கின்றான். தயவுசெய்து மண்டையில் எதுவுமில்லாத அந்த மடையர்களை எங்களை எதிர்க்க அழைத்து வாருங்கள். உனது போதாத அறிவு மற்றும் ஞானத்தைக் கண்டு நாங்கள் மிகவும் பரிதாப்படுகின்றோம்"" என்று தனது கடித்தை மத்னா (ரலி) அவர்கள் முடித்திருந்தார்கள்.

''வாரும்..! எங்களது பலத்தைப் பரிசோதிப்பதற்கு..,
நீர் உமது அம்புகளைப் பரிசோதிக்கும் போது,
நாங்கள் எங்களது வீரத்தைப் பரிசோதிப்போம்""

ஈரானியப் படைகள் களத்தில் இறங்கி இருந்த பொழுது, அவர்களை எதிர்ப்பதற்காக முஸ்லிம் படைகளுக்கு தலைமை தாங்கிய வண்ணம் மத்னா (ரலி) அவர்கள் முன்னணியில் நின்றார்கள். மதாயன் என்ற இடத்தில் உக்கிரமமாக போர் நடந்தது. அந்தப் போரில் அல்லாஹ்வின் மிகப் பெரும் கருணையின் காரணமக முஸ்லிம் படைகள் வென்றன. இந்த வெற்றிச் செய்தியை அறிவிப்பதற்காக ஒரு மடலை, கலிஃபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு எழுதினார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் இஸ்லாத்தை விட்டும் வெளியில் சென்ற தோழர்கள் சிலர், மீண்டும் இஸ்லாத்திற்குள் வருவதற்கு தாங்களாகவே விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவர்களை ஏற்றுக் கொள்வதற்கு கலிஃபா அவர்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மத்னா (ரலி) அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். அவர்களது அனுபவம் மற்றும் திறமைகளை முஸ்லிம் படைகள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அதில் மேலும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்த இடைப்பட்ட காலத்தில், அவரது மடலுக்காக பதில் வரத் தாமதமாகியது. பொறுத்துப் பார்த்த மத்னா (ரலி) அவர்கள், தானே மதீனா சென்று கலிஃபா அவர்களைச் சந்தித்து, மேற்கண்ட பிரச்னைக்கான அனுமதியைப் பெற்று வருவது என்றே கிளம்பி விட்டார்கள். அங்கு சென்ற பொழுது தான் தெரிந்தது, கலிஃபா அவர்கள் மரணப்படுக்கையில் வீழ்ந்திருக்கின்றார்கள். நிலமை சற்று கவலைக்கிடமாக உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டார்கள். கலிஃபா அவர்களைச் சந்திக்கச் சென்ற பொழுது, கலிஃபா அவர்கள் படுக்கையில் கிடந்தார்கள். மத்னா (ரலி) அவர்களைப் பார்த்த மாத்திரத்தில்.., கலிஃபா அவர்களது முகம் பிரகாரசமடைந்தது. மத்னா (ரலி) அவர்கள் கூறியவற்றை கவனமாகக் கேட்டுக் கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள்.., உமர் (ரலி) அவர்களை அழைத்து.., மதனா (ரலி) அவர்கள் கூறுகின்ற அனைத்தும் மதிப்புமிக்கவை, அவற்றை ஏற்று நடைமுறைப்படுத்துங்கள் என்றார்கள். நான் இன்றைய மாலைக்குள் இருப்பேனா அல்லது எனது இறைவனின் அழைப்பை ஏற்றுச் சென்று விடுவேனா என்பது தெரியாது. நான் எனது இறைவன் அழைக்கப்பட்டு விட்டேனென்றால், மத்னா (ரலி) அவர்களது தலைமையில் ஒரு படையை தாமதமின்றி அனுப்பி வைத்து விடுங்கள், இடைப்பட்ட நேரத்தில் எவ்வளவு பெரிய துக்கரமான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் சரி.., அவரது படை புறப்படுவது தாமதமாக வேண்டாம் என்று கூறினார்கள். இன்னும் சிரியா வெற்றி கொள்ளப்பட்டு விட்டதென்றால், காலித் பின் வலீத் (ரலி) அவர்களது தலைமையில் இயங்கும் படையை ஈராக்கிற்கு திரும்பி வந்துவிடும்படி உத்தரவிடும்படியும் கலிஃபா அபுபக்கர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள், அதிகாலைத் தொழுகைக்கு முன்பதாகவே மத்னா (ரலி) அவர்களின் தலைமையில் உள்ள படையை ஈரானியப் படைகளை எதிர்ப்பதற்குத் தயார் செய்தார்கள். சூரியன் உதயமாகி சற்று நேரத்திற்கெல்லாம்.., உமர் (ரலி) அவர்களை கலிஃபாவாக மக்கள் ஏற்று, பைஅத் செய்துகெண்டார்கள். உமர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு மூன்று நாட்களாகியும், மக்கள் கீழ்படியாமை மற்றும் பொடுபோக்குத் தனம் மற்றும் ஈரானியப் படைகளை எதிர்ப்பது எவ்வாறு என்று நம்பிக்கையீனத்துடன் கிளம்பத் தாமதம் செய்து வந்தனர். அவர்களின் அச்சத்தைப் போக்கி.., ஜிஹாத் குறித்த உன்னதத்தை எடுத்தியம்பி அவர்களை போர்க்களம் நோக்கி விரைய வைத்தற்கானதொரு வீர உரையை மத்னா(ரலி) அவர்கள் நிகழ்த்தினார்கள்.

என்னருமைத் தோழர்களே..!

நாம் ஈரானியர்களின் முதுகெலும்பை முறித்திருக்கின்றோம்.., நம்மை வெற்றி பெற்று விடலாம் என்ற தைரியத்தை அவர்கள் இழந்து விட்டார்கள்.., இன்னும் அதில் அதனை முற்றிலுமே இழந்து விட்டார்கள். முன்பு அவர்களிடம் இருந்த தைரியம் இப்பொழுது இல்லை. நீங்கள் வல்லமை மிக்க அல்லாஹ்வின் சிங்கங்கள், இன்னும் போர்க்;களத்தில் நாயகர்கள், இத்தைகய நன்மக்களை எதிர்பார்த்து வெற்றி காத்திருக்கின்றது. உங்களது வீரம் மற்றும் உயர்வானது.., அவர்களின் உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உச்சந் தலைமுதல் உள்ளங்கால்கள் வரைக்கும் அச்சத்தை விதைத்திருக்கின்றது. போர்க்களத்தில் நீங்கள் காட்டக் கூடிய வீரத்தை நினைத்து விட்டால் வீட்டில் இருக்கும் பொழுது கூட அச்சத்தால் நடுநடுங்கக் கூடியவர்களாக, உதவி செய்ய யாருமற்ற நிலையில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். அவர்களது அந்த ஆணவம், கர்வம் அத்தனையையும் தவிடு பொடியாக்குவதற்காக நீங்கள் கிளர்ந்தெழுங்கள், அவர்களது சகாப்தத்தை வரலாற்றிலிருந்து துடைத்தெறிந்து விடுங்கள் என்று உரையாற்றினார்கள். எங்கே.., என்னுடன் கிளம்புவதற்குத் தயாராகுங்கள்.., இன்னும் அடக்குமுறை ஆட்சியாளர்களின் முதுகெலும்பை முறித்தெடுப்பதற்குக் கிளம்புங்கள் என்றார்கள்.

இன்னும் உமர் (ரலி) அவர்களும் ஒரு வீர உரையை ஆற்றினார்கள். அபூ உபைதா (ரலி) அவர்களும், இன்னும் சில முஜாஹிதீன்களும் எழுந்து நின்று 'அல்லாஹுஅக்பர்" என்று முழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து நாங்கள் போருக்குத் தயார் என்று பதில் குரல்கள் விண்ணை நிறைத்தன. மக்கள் ஈரானியப் படைகளை எதிர்கொள்வதற்குத் தயாராகி கிளம்பினார்கள். மிகவும் கடினமாக பயணத்திற்குப் பின்னே.., கூஃபா என்ற இடத்தில் தங்கினார்கள். சில நாட்கள் கழித்து நம்ரக்" என்ற இடத்தில் வைத்து இரண்டு படைகளும் மிகவும் உக்கிரமமான முறையில் மோதின. ஈரானியத் தளபதி மஹான் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டதோடு, படைகள் சிதறி ஓட ஆரம்பித்தன. இந்தப் போரில் முஸ்லிம் வீரர்கள் ஏராளமான போர்ப் பொருட்களைப் பெற்றுக் கொண்டார்கள். அதில் ஐந்தில் ஒரு பாகம் மதீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. உண்மையில், தளபதி மத்னா (ரலி) அவர்கள் எதனை நினைத்தார்களோ.., அதனைத் தங்களது செயலில் காட்டி வெற்றி பெற்றார்கள். தனது உணர்ச்சியை குர்ஆன் வசனமொன்றைக் கூறி வெளிப்படுத்திக் காட்டினார்கள்.

அரபுக்களுக்கே உரிய அந்த வேகத்தில் களம் புகுந்த முஸ்லிம் படைவீரர்கள் தஜ்லா மற்றும் புராத் நதிக் கரையின் இருமருங்கிலும் மிகவும் வேகமாகப் பயணித்து களம் கண்டார்கள். இதன் காரணமாக நம்ரக், ஸகாதிய்யா, ஜஸ்ர் மற்றும் புயாப் ஆகிய பகுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்களின் கைவசமாகின.

நம்ரிக் பகுதியில் முஸ்லிம்களிடம் மோசமான முறையில் தோற்றுப் போனதன் பின்பு, ஈரானியத் தளபதியாக இருந்த ருஸ்தும் என்பவர், ஈரானிய மன்னரின் ஒன்று விட்ட சகோதரரான.., நர்ஷி என்பவரிடம்.., நீள அகலத்துடன் பரந்து வருகின்ற முஸ்லிம் படைகளிடமிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னேற்பாட்டைச் செய்து கொள் என்று அறிவுறுத்தினார். உன்னுடைய பகுதியை சேர்த்து எடுத்துக் கொள்வதற்கு அவர்கள் திட்டம் தீட்டியிருக்கின்றார்கள் என்றும் அவர் அவருக்கு அறிவுறுத்தினார். கஷ்கர் பகுதியானது மிகவும் வளமான விவசாயப் பகுதியாகவும்.., உலகின் மிகச் சிறந்த உயர்தரமான பேரீத்தம் பழத் தோட்டங்கள் நிறைந்ததாகவும் இருந்தது.

இதன் காரணமாக கஷ்கர் பேரீத்தம் பழம் உலகின் மிகப் புகழ் வாய்ந்ததொன்றாக இருந்தது. முஸ்லிம் படைகளின் தளபதிப் பொறுப்பில் இருந்த அபூ உபைதா (ரலி) அவர்கள்.., மத்னா இப்னு ஹாரிதா (ரலி) அவர்களிடம்.., நமாரிக் வெற்றிக்குப் பின்னர், ஈரானிய மன்னரின் ஒன்று விட்ட சகோதரரால் ஆளப்படுகின்ற கஷ்கர் பகுதியை நோக்கி படையைச் செலுத்துமாறு ஆலோசனை கூறுகின்றார்கள். நமாரிக் பகுதியை அடுத்து கஷ்கர் மீது நாம் படை எடுக்கவில்லை என்றால், தோற்று ஓடிப் போன ஈரானியப் படைகள் இந்தப் பகுதிக்குச் சென்று.., பின்பு மீண்டும் அவர்கள் ஒன்று கூடி நம்மைத் தாக்க தீர்மானிக்கலாம்.., அதற்கான சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்கிடக் கூடாது என்று அறிவுரை கூறினார். இதனை அடுத்து அந்த ஆலோசனைக்குப் பின்னர்.., ஈரானியப் படைகளை விரட்டிச் சென்ற முஸ்லிம்கள்.., கஷ்கர் பகுதியின் மையப் பகுதியும் மிகப் பிரதான நகருமான வஸ்ஸத் என்ற இடத்தில் வைத்து மீண்டும் ஈரானியப் படைகளை எதிர் கொண்டார்கள். ஈரானியப் படைகள் நிலைகொள்ள முடியாத அளவுக்கு மிகத் தீவிரமான, உடனடித் தாக்குதலைத் தொடுத்தார்கள் முஸ்லிம்கள். இங்கும் ஈரானியர்கள் வெற்றி கொள்ளப்பட்டார்கள்.., இன்னும் போர்க்களத்தை விட்டும், போர்க்கருவிகளைப் போட்டு விட்டே ஓடினார்கள்.

இங்கும் முஸ்லிம் போர்ப் பொருட்களன்றி.., நல்ல பேரீத்தம் பழங்களையும், உணவுகளையும் சேர்த்தே பெற்றுக் கொண்டார்கள். இன்னும் நர்ஷி மன்னரின் செல்வப் பெட்டகத்தையும் பெற்றுக் கொண்டார்கள். அவன் தான் தப்பித்தால் போதுமென்று செல்வங்கள் அனைத்தையும் விட்டு விட்டு ஓடி விட்டான்.

இப்பொழுதும் ஐந்தில் ஒரு பாகம் மதீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.., ஏனையவற்றை முஜாஹிதீன்களுக்கு மத்தியில் பிரித்து வழங்கப்பட்டது. இன்னும் அந்தப் பொருட்களுடன் ஒரு கடிதத்தையும் அனுப்பி வைத்த மத்னா (ரலி) அவர்கள், அதில்..,

உமர் (ரலி) அவர்களே...! ஈரானிய மன்னன் உண்டு கழித்த அந்த சுவையான உணவுகளை அல்லாஹ் எங்களுக்கு வழங்கியிருக்கின்றான். அல்லாஹ் எங்களுக்கு வழங்கியுள்ள அந்த அருட்கொடைகளை நீங்களும் ருசித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக இத்துடன் உங்களுக்கும் சிறிது அனுப்பி வைத்திருக்கின்றோம் என்று எழுதினார்கள்.

வாஸத் என்ற இடத்தில் நடந்த போர் வரலாற்றில் ஸகதிய்யா என்றழைக்கப்படுகின்றது. முஸ்லிம்களிடம் ஈரானியர் பெற்ற தோல்வி என்பது சொல்லும் தரமன்று. மிகப் பெரிய தோல்வியைப் பெற்றுக் கொண்ட ஈரானியர்கள் புறமுதுகு காட்டி ஓடினார்கள். ஓடிய அவர்கள் மீண்டும் மதீனாவின் மீது போர் தொடுப்பதற்கான ஆயத்தங்களைச் செய்யலானார்கள். முஸ்லிம்களை எதிர்த்து துணிச்சலாகப் போர் புரியும் வல்லமை பெற்றவர்கள் உங்களில் யார் இருக்கின்றீர்கள்? என்று தளபதி ருஷ்தும் தனது படையினரைப் பார்த்துக் கேட்டான்.

அந்தப் படையில் இருந்த அனைவரும் ஒருமித்த குரலில் பஹ்மன் ஜத்விய்யா என்பவனை முன்மொழிந்தார்கள். தடித்த அடர்த்தியான புருவங்களைக் கொண்ட பஹ்மன்.., தனது புருவங்களை உயர்த்திக் காட்டி.., அதில் பெருமிதமடைந்தான். தனது உருவத்தை வைத்து எதிரிகள் அச்சமடைவார்கள் என்று தனக்குள் அவன் கணித்துக் கொண்டான்.., பெருமை கொண்டான். படையினரின் முன்மொழிதலுடன், தளபதி ருஷ்தும் மதீனாவிற்கு எதிரான படைக்குத் தளபதியாக பஹ்மன் ஐ நியமித்து, அவனுக்கு சிறப்பு படையையும் அளித்து, அத்துடன் மிகப் பெரும் விலங்கினமான யானைப் படை ஒன்றையும் அவனுடன் அனுப்பி வைத்தான். ஈரானியக் கொடியை கையில் ஏந்தியவர்களாக.., தேசிய உணர்வு கொப்பளிக்க - முஸ்லிம்களை எதிர்த்துக் களம் காண, தாயகப் பெருமையை நிலைநாட்டும் ஆர்வத்துடன் மதீனாவை நோக்கி ஆர்ப்பரித்து வரலானார்கள்.
பஹ்மான் தலைமை ஏற்று வரும் அந்தப் படையை எதிர்கொள்வதற்கு முஸ்லிம் படைகளும் தயார் செய்யப்பட்டன. முஸ்லிம்களின் படைப் பிரிவுக்கு தலைமைத் தளபதியாக அபூ உபைத் பின் மஸ் ஊத் (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள், இவர்களின் தலைமையின் கீழ் மிகப் பெரும் அனுபவசாலியும், பல போர்க்களங்களில் தளபதியாகப் பணியாற்றியவருமான மத்னா பின் ஹாரிதா ஷீபானி (ரலி) போன்றவர்களும் இடம் பெற்றிருந்தார்கள். இப்பொழுது முஸ்லிம்களின் படைகள் யூப்ரடிஸ் நதிக்கரையை நோக்கிச் செல்லலாயிற்று. நதியின் மறுகரையில் இறங்கி நின்று கொண்டிருந்த ஈரானியப் படைகளின் தளபதி அங்கிருந்து கொண்டு முஸ்லிம்களின் தலைமைத் தளபதியான அபூ உபைதா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தான்.
அதில்..,

''நதியைக் கடந்து வந்து ஒன்று நீங்கள் எங்களைச் சந்திக்கச் சித்தமாகுங்கள். அல்லது எங்களை அங்கு வர அனுமதித்து உங்களைச் சந்திக்க சித்தமாகுங்கள். இதில் எதுவொன்றையாவது தேர்வு செய்து கொள்ளும் உரிமையை நான் உங்களுக்கு வழங்குகின்றேன்"" என்று அதில் எழுதி இருந்தான்.

ஈரானியப் படைத்தளபதியின் செய்தியைக் கேள்விப்பட்ட ஸலீத் பின் கைஸ் அவர்களும், இன்னும் ஏராளமான முஸ்லிம்களும், 'நாம் எந்த நிலையிலும் ஆற்றைக் கடந்து செல்வது கூடாது, அது நமக்கு பெருத்த சேதத்தை விளைவிக்கும்" என்று கருத்துக் கூறினார்கள். எதிரிகளை எதிர்க்கும் நிலையிலும் கூட, முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்பு விஷயத்திலும் கவனம் செலுத்தியாக வேண்டும் என்று அவர்களது ஆலோசனை இருந்தது. ஏற்கனவே ஈரானியர்கள் உடல் திறனை மிகுதியாகப் பெற்றிருப்பவர்கள், இந்த நிலையில் ஆற்றைக் கடந்து நாம் செல்லுவது என்பது, அவர்களுக்கே சாதகமாக அமையும் என்றார்கள்.

முஸ்லிம்களின் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த அபூ உபைதான பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் திட்டமோ வேறு விதமாக இருந்தது. அவருக்கிருந்து வீரம் மற்றும் இறைவன் மீதான நம்பிக்கை, மரணத்திற்கு அஞ்சாத போக்கு ஆகியவற்றினூடாக.., நாமே ஆற்றைக் கடந்து செல்வோம் என்ற முடிவினை எடுத்து.., முஸ்லிம்களை ஆற்றைக் கடக்கும்படி பணித்தார்கள்.

இந்தப் போரின் பொழுது.., அதுவும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் பொழுது நடைபெற்ற இந்தப் போரில் முஸ்லிம்கள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டார்கள். எடுத்த முடிவின் அடிப்படையில் அவர்கள் சோதனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எதிரிகள் ஆற்றின் கரை ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட முடிவது. ஆற்றினுள் இறங்கி பின் எதிரிகளைத் தாக்குவது என்பது மிகவும் ஆபத்தான முடிவாகி விட்டது. ஈரானியப் படைத்தளபதி தனது கரங்களில் மணியோசை எழுப்பும் வளையத்தை அணிந்திருந்தான். இந்த சப்தமும் கூட முஸ்லிம்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. ஈரானியப் படைகள் அந்த சப்தத்தைக் கணித்து முன்னேறிச் செல்ல உதவியது. இந்த மணியோசையைக் கேட்ட அரபுக் குதிரைகளும், ஒட்டகங்களும் மிரள ஆரம்பித்தன. இதன் காரணமாக முஸ்லிம் படை பெருத்த சேதத்திற்கு முகம் கொடுக்க வேண்டியதாகி விட்டது.

இப்பொழுது மிரளும் குதிரை மற்றும் ஒட்டகங்களை விட்டும் கீழிறங்கி போர் செய்ய முஸ்லிம்கள் முடிவெடுத்த பொழுது.., யானையின் பாதங்களில் சிக்கி இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அபூ உபைதா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் தலைமையில் இயங்கி வந்த முஸ்லிம்களுக்கு இருந்த ஒரே ஒரு சந்தர்ப்பம் என்னவெனில்.., யானைகளைப் பிணைத்திருக்கும் கயிறுகளை வெட்டி விட்டு, போரின் போக்கை மாற்றுவது தான் அது. அதுவே வெற்றி பெறுவதற்கான ஒரே வாய்ப்பாகவும் இருந்தது. இதனை முனைப்புடன் செயல்படுத்த அபூ உபைதான பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் களமிறங்கிய போது, யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த போது.., மிரண்டு அலறித் துடித்து கலவரத்தை உண்டு பண்ணிய யானையின் பாதங்களுக்கிடையே சிக்கி தளபதி அபூ உபைதா பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இறந்து போனார்கள். தளபதி அவர்களின் மரணத்தைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள், பின்வாங்குவதற்குப் பதிலாக முன்னைக் காட்டிலும் முனைப்புடன் களத்தில் இயங்கினார்கள். மிகப் பெரும் முயற்சிக்குப் பிறகு ஒரு யானையைக் கொன்று சரித்திரம் படைத்தார்கள். கீழே விழுந்து கிடந்த தளபதியின் கைகளில் இருந்த கொடியைப் பாய்ந்து சென்று பற்றிக் கொண்டு, போரினைத் தொடர்ந்தார்கள். அந்தக் கொடியினைப் பற்றிக் கொண்டிருந்த முஸ்லிம் வீரரும் மரணமடைய இன்னொருவர் அந்தக் கொடியைத் தாங்கினார். இப்படியாக ஏழு பேர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது அந்தக் கொடி. நிலைமை முற்றிலும் முஸ்லிம்களுக்குப் பாதகமாகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்த மத்னா (ரலி) அவர்கள், யூப்ரடிஸ் நதிக் கரையில் இருந்ததொரு பாலத்தின் வழியாக எஞ்சிய முஸ்லிம் வீரர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தார்கள். மிகவும் காயம்பட்டு பலவீனமாக இருந்த நிலையிலும் கூட.., கடைசி வீரர் கரையேறும் வரைக்கும் மத்னா (ரலி) அவர்கள் தொடர்ந்து களத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

வெற்றிகரமானதொரு தளபதிக்கு இருக்க வேண்டியதொரு பண்பு என்னவென்றால்.., போரின் போக்கிற்கு ஏற்ப கள நிலவரங்களுக்கு ஏற்ப முடிவெடுக்கும் திறமை பெற்றிருக்க வேண்டும். களத்தில் முன்னேறிச் செல்வது.., ஆதாயமாக இருக்குமெனில் முன்னேறுவதும்.., படைகளைத் திருப்பிப் பெற்றுக் கொள்வது சேதத்தைத் தவிர்க்க முடியும் எனும் பட்சத்தில் திருப்பி அழைத்துக் கொள்வதும் சிறந்த போர்ப் பண்பாடுகளாகும்.

முஸ்லிம்கள் இப்பொழுது பாதுகாப்பான பகுதிக்கு வந்த பின்னர், அர்வா பின் ஸைத் அவர்களை மதீனாவிற்கு அனுப்பி வைத்து.., உமர் (ரலி) அவர்களுக்கு கள நிலவரங்களை தெரிவித்தார்கள். முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டது குறித்து உமர் (ரலி) அவர்கள் கவலையடைந்தார்கள், இன்னும் முழு மதீனாவுமே சோகத்தில் ஆழ்ந்தது. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் கண்களில் கண்ணீர் கசிந்தது. உமர் (ரலி) அவர்களோ.., மக்களே அச்சப்பட வேண்டாம், துயரப்பட வேண்டாம்.., வெற்றியும் தோல்வியும் போரின் பொழுது சகஜமானவைகள் என்று ஆறுதலும், தேறுதலும் கூறி மக்களைத் தேற்றினார்கள்.

''ஜஸ்ர்"" என்பது அரபி மொழியில்.., நதியின் குறுக்கால் போடப்பட்டிருக்கும் பாலத்தைக் குறிக்கும் அல்லது ஓடையை, நீரோடையைக் குறிக்கும். முஸ்லிம்கள் பாதுகாப்பாக களத்தை விட்டும் வெளியேறுவதற்கு மிகவும் உதவிகரமாக அந்த ஓடையும், அதில் அமைந்திருந்த பாலமும் காரணமாக அமைந்த காரணத்தால்.., இந்தப் போருக்கு 'ஜஸ்ர்" என்றழைக்கப்படுகின்றது.

மேலும், இந்தப் போரினை அடுத்து நடந்த போரினை 'யவ்முல் அஷர்" என்றழைக்கப்படுகின்றது. அதாவது 'பத்து நாட்கள்" - அதாவது ஒரு முஸ்லிம் படைவீரர் பத்து ஈரானியப் படை வீரர்களைக் கொன்ற நாள் என்ற பதத்தில் அழைக்கப்படுகின்றது. இன்னும் 'மஹ்ரன்" என்றும் அழைக்கப்படுகின்றது. அதாவது ஈரானிய படைத் தளபதி மஹ்ரன் நினைவாக இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

அல் ஜஸ்ர் போருக்குப் பின்னர், பல முஜாஹிதீன்கள் மதீனாவிற்குத் திரும்பி விட்டார்கள். ஆனால் மத்னா (ரலி) அவர்கள் அங்கே தங்கி, மக்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் பணியை மேற்கொண்டார்கள். அதேநேரத்தில்.., புதிய படைகளை அனுப்பி வைக்குமாறு உமர் (ரலி) அவர்களுக்குத் தகவல் அனுப்பினார்கள். முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சமீபத்திய பின்னடைவுக்குப் பின்னர் உடனே மாற்றுப் படைகளை அனுப்புவது சற்று தாமதமானது. இருப்பினும், மாற்றுப் படைகள் அனுப்பியும் வைக்கப்பட்டன. அப்பொழுது மதீனாவின் சுற்றுப் புறங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் சிரியாவில் நடைபெற்று வரும் போரில் கலந்து கொள்ள உமர் (ரலி) அவர்களிடம் அனுமதி கேட்டு வந்தார்கள். அவ்வாறு வந்தவர்களை மத்னா (ரலி) அவர்களுடன் இணைந்து கொள்ளுமாறு அனுமதி வழங்கி உமர்(ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்களுக்கு மீண்டும் படைகள் வந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்ட ஈரானியப் படைத் தளபதிகளான ருஷ்தும் மற்றும் ஃபெரோஸான் ஆகிய இருவரும் மதீனாவிற்கு எதிராக அவர்களும் ஈரானியப் படைகளைத் தயார் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் தங்களது படையை மிகப் பலமிக்கதாகக் கட்டமைத்ததோடு, அதற்குத் தளபதியாக மெஹ்ரான் ஹம்தானி என்பவரைத் தளபதியாக நியமித்தார்கள். இந்த இருபடைகளும் யூப்ரடிஸ் நதிக்கரையின் ஓரத்தில் அமைந்த போயப் ஓடையின் அருகே சந்தித்தது.

ஈரானியப் படைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரிவுடனும் யானைப் படைகள் இணைக்கப்பட்டிருந்தன. முஸ்லிம்களுக்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்த மத்னா (ரலி) அவர்கள் தனது படையினரைப் பார்த்து, நான் 'அல்லாஹு அக்பர்" என்று மூன்று முறை குரலெழுப்பியவுடன், நீங்கள் தயார் நிலைக்கு வந்து விட வேண்டும். நான்காவது முறை அல்லாஹ{ அக்பர் என்று முழங்கியவுடன் தாக்குதலை ஆரம்பித்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். இதில் முதல் முழக்கத்தைக் கேட்டவுடனேயே ஈரானியர்கள் போரை ஆரம்பித்து விட்டார்கள்.., உடன் எதிர்த் தாக்குதலும் முஸ்லிம்களிடமிருந்து ஆரம்பமாகி விட்டது. போர்க்களத்தினூடாக சுற்றிச் சுழன்று வந்த மத்னா (ரலி) அவர்கள், முஸ்லிம்களை உற்சாகப்படுத்திய வண்ணம் இருந்தார்கள்.

முஜாஹிதீன்களே..! முன்னேறுங்கள். இந்த நாளில் நாம் அவமானத்தை அடைந்து விடக் கூடாது. ஜஸ்ர் யுத்தத்தில் பெற்ற பின்னடைவுக்குப் பழிக்குப் பழிவாங்கும் அருமையான சந்தர்ப்பம் உங்கள் முன் வந்து நிற்கின்றது. எதிரிகளைத் தாக்குங்கள். மதீனாவின் ஒவ்வொரு கண்களும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. உங்களைப் போன்ற வீரர்கள் போர்க்களத்தில் உறுதியாக இருப்பார்கள் என்பதையும், நிலைத்திருப்பார்கள் என்பதையும் நானறிவேன் என்று களத்தில் உரையாற்றிக் கொண்டே வந்தார்கள்.

இந்த உரையின் காரணமாக எழுச்சி பெற்ற முஸ்லிம்கள் முழு எழுச்சி பெற்றவர்களாக, ஈரானியர்களைத் துவம்சம் செய்ய ஆரம்பித்தார்கள். இந்தப் போரில் ஈரானியர்கள் புறதுகிட்டு ஓடினார்கள், ஜஸ்ர் ல் இழந்த புகழை இப்பொழுது முஸ்லிம்கள் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். 'போயப்" என்ற இடத்தில் பெற்ற இந்த வெற்றியை இட்டு முஸ்லிம்கள் பெருமிதமும், சந்தோஷமும் அடைந்தார்கள்.

'போயப்" ல் நடந்த யுத்தத்திற்குப் பின்னர்.., ஜஸ்ர் போரில் ஏற்பட்ட காயம் மத்னா (ரலி) அவர்களை மிகவம் வாட்ட ஆரம்பித்தது, அது சீழ்பிடித்து ஆழமாக அவரைப் பாதிக்க ஆரம்பித்தது. இறுதியாக.., மத்னா (ரலி) அவர்கள் அந்தக் காயத்தின் காரணமாகவே மரணத்தைச் சந்திக்க வேண்டி இருந்தது. இறையடி சேர்ந்தார்கள். வல்ல அல்லாஹ்விடமிருந்து வந்தோம்.., அவனிடமே நம்முடைய மீளுதலும் இருக்கின்றது.

வல்ல அல்லாஹ்.., மத்னா (ரலி) அவர்களது மண்ணறையைத் தனது சுவனத் தோட்டத்தில் ஒன்றாக ஆக்கி அருள்வானாக..!

சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (89:27-30).

Previous Post Next Post