ஃபாத்திமா பின்த் கத்தாப் (ரலி)

ஃபாத்திமா பின்த் கத்தாப் (ரலி)

அண்ணலாரின் அழைப்புப் பணியின் ஆரம்ப காலத்தில் ஒரு நிகழ்ச்சி!

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள், ஆபூபக்கர் (ரலி) அவர்களைப் போன்ற முக்கியத் தோழர்கள் சிலருடன் கஅபா ஆலயம் சென்றிருந்தார்கள். அப்பொழுது அங்கே இணைவைப்பாளர்களான குறைஷித் தலைவர்களின் பெருங்கூட்டம் ஒன்று அமர்ந்திருந்தது. அவர்களின் முன்னிலையில் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஓர் உணர்ச்சிமிகு உரை ஆற்றினார்கள். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அனுமதியும் கிடைத்திருந்தது.
     
அவ்வுரை, இறைவனை நிராகரிப்பதும் பிறிதொரு பொருளை அவனுக்கு இணையாக பாவித்து வணங்குவதும் தவறான போக்குகளாகும் என்று சுட்டிக்காட்டியதுடன், சத்திய நெறியாம் தீனுல் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அன்பான அழைப்பும் விடுக்கும் வண்ணம் சென்று கொண்டிருந்தது!
     
மக்கத்து இணைவைப்பவர்களாவது, ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாவது! அவர்களின் முன்னால் சமர்ப்பிக்கப்பட்ட சத்திய அழைப்பு எதிர்மறையான விளைவினைத்தான் ஏற்படுத்தியது! உரை முடிவடையும் முன்பே அசத்தியத்தின் பாதுகாவலர்கள் அனைவரும் கொதிப்படைந்தார்கள். நபி (ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் நாற்புறங்களிலும் சூழ்ந்து கொண்டு தாக்கவும் - ஈவிரக்கமின்றி அடித்து நொறுக்கவும் தொடங்கினார்கள். அவர்களின் முதல்குறி அபூபக்கர் (ரலி) அவர்கள்தாம்!
     
உத்பா இப்னு ரபீஆ என்பவன் குறைஷிகளின் தலைவன், வீரத்திலும் பேர் பெற்றவன். அவன், தான் அணிந்திருந்த முரட்டுச் செருப்பால் அபூபக்கர் (ரலி) அவர்களின் திருமுகத்தில் பலமாக பல அடிகள் அடித்தான். பிறகு அவர்களைக் கீழே வீழ்த்தி வயிற்றில் ஏறி நின்று குதித்தும் மிதித்தும் துன்புறுத்தினான். இந்தத் தாக்குதலினால் அபூபக்கர் (ரலி) அவர்கள் கடுமையான காயத்திற்கும் வேதனைக்கும் ஆளானார்கள். அவர்களின் திருமுகமே அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிவிட்டிருந்தது,
     
அங்கு இருந்த முஸ்லிம்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை மட்டும் குறைஷிகள் ஒன்றும் செய்யவில்லை. அவர்களைப் பிடித்துச் சற்று பின்னால் தள்ள மட்டும் செய்தார்கள்.
     
இந்நிலையில் அபூபக்கர் (ரலி) அவர்களின் பனூதைம் எனும் கோத்திரத்தாருக்கு, கஅபா ஆலயத்தின் அருகே சிலர் அபூபக்கர் (ரலி) அவர்களை அடித்துக் கொண்டிருக்கின்றார்கள் எனும் செய்தி எட்டியது! உடனே அவர்கள் விரைந்து வந்து அபூபக்கர் (ரலி) அவர்களை இணைவைபாளர்களின் பிடியிலிருந்து விடுவித்தார்கள். அப்பொழுது அபூபக்கர் (ரலி) அவர்களுக்குச் சுய உணர்வே இல்லை. உயிர் பிழைப்பதே கடினம் எனும் நிலை!
     
இந்நிலையைக் கண்டதும் பனூதைம் கோத்திரத்தினர் கடுஞ்சினம் கொண்டனர். “அபூபக்கர் இறந்துவிட்டார்களெனில்.... அல்லாஹ்வின் மீது சத்தியமாக அதற்குப் பழிவாங்கியே தீருவோம். உத்பா இப்னு ரபீஆவை உயிருடன் விட்டுவைக்க மாட்டோம்!” என்று கர்ஜித்தினர்.
     
பிறகு அபூபக்கர் (ரலி) அவர்களை ஒரு துணியில் வைத்து எல்லோரும் சேர்ந்து தூக்கி வீட்டுக்கு கொண்டு சென்றார்கள். அங்கே அவர்கள் தந்தை அபூகுஹாஃபாவும் மற்றவர்களும் சூழ்ந்துகொண்டு அவர்களின் பெயர் கூறி சப்தமிட்டுக் தொடர்ந்து அழைத்தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் மயக்க நிலையில் இருந்தார்கள். மாலை நேரத்தில் கொஞ்சம் உணர்வு வந்தது. மெதுவாகப் பேசத் தொடங்கினார்கள். அப்பொழுது அவர்களின் நாவிலிருந்து வெளிப்பட்ட கேள்வி அனைவருக்கும் கோபமூட்டியது. அது என்ன?

      “அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எப்படி இருக்கின்றார்கள்?” என்பதுதான். 
     
இப்பொழுது பனூதைம் குலத்தார்க்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் மீது கெட்ட கோபம்தான் வந்தது. “இந்த நிலைமையிலும் நீர் முஹம்மதைப் பற்றிய நினைவை விடவில்லையே!” என்று குத்தலாகப் பேசலாயினர். ஏகத்துவ நெறியாம் இஸ்லாத்தை அவர்கள் அதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை!
     
உடனே, அபூபக்கரின் (ரலி) அவர்களின் தாயார் உமமுல் கைர் அவர்களிடம் “நீங்களே இவரைக் கவனித்து நன்கு குணப்படுத்துங்கள். எதையேனும் உண்ணவோ பருகவோ கேட்டால் கொடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு கலைந்து சென்றுவிட்டார்கள்.
     
அவர்கள் சென்றதும் அன்னை உம்முல் கைர் அவர்கள், தம் மகனாரிடம் எதையாவது உண்ணவேண்டும் அல்லது பருக வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆயினும் அவர்கள் பிடிவாதமாக மறுத்து விட்டார்கள்.
     
பழைய வினாவையே தொடர்ந்து எழுப்பினார்கள். “அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நிலைமை என்ன?”
     
“இறைவன் மீது சத்தியமாக! உம்முடைய தோழரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது! - இதுதான் அன்றுவரை இஸ்லாத்தில் இணையாதிருந்த அவர்களின் தாயார் அளித்த பதில்!
     
அப்பொழுது அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது, சத்திய நெறியாம் இஸ்லாத்தின் மீது தமது உயிரையும் விடவும் அதிக நேசம் கொண்டு உழைத்து வந்த உம்மு ஜமீல் எனும் பெண்மணியைப் பற்றித்தான்! இப்போதைய நிலைமையில் அவர்களுக்குத்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றித் தெரிந்திருக்கும்! உடனே தம் அன்னையிடம் கூறினார்கள்:
     
“நீங்கள் உம்மு ஜமீலிடம் சென்று அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்து வாருங்கள்!”
     
உம்முல் கைர், உடனே உம்மு ஜமீல் (ரலி) அவர்களிடம் சென்று, “அபூபக்கர் கடுமையான காயங்களுடனும் நோவினையுடனும் இருக்கின்றார். தம்முடைய தோழர் முஹம்மதைப் பற்றி உம்மிடம் விசாரிக்கச் சொன்னார்” என்று கூறினார்கள்.
     
அதற்கு உம்மு ஜமீல் (ரலி) அவர்கள் பதிலேதும் அளிக்காமல், “நீங்கள் விரும்பினால் நானும் உங்களுடன் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வருகிறேன்” என்று கேட்டுக் கொண்டார்கள்.

      “சரி, நடங்கள்.

      ...உம்மு ஜமீல் (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களின் நிலைமையைப் பார்த்ததும் பதறிப் போய்விட்டார்கள். தம்மை அறியாமலேயே அவர்களின் நாவு இவ்வார்த்தைகளை உச்சரித்தது:

      “இறைவன் மீது சத்தியமாக! தங்களிடம் இவ்வாறு நடந்து கொண்டவர்கள் ஐயமின்றி நிராகரிப்பாளர்கள்தாம், தீயவர்கள்தாம், உங்களை இவ்வாறு கொடுமைப்படுத்தியதற்கு அல்லாஹ் அவர்களைப் பழிவாங்கியே தீருவான் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது.

      ஏதேனும் உண்ண, பருக உம்மு ஜமீல் (ரலி) அவர்கள் வற்புறுத்தியும் கூட அபூபக்கர் (ரலி) அவர்கள் உடன்படவில்லை! “முதலில் நபி (ஸல்) அவர்களின் நிலைமை என்ன என்று கூறுங்கள்” என்பதையே பதிலாக அளித்தார்கள்.

      “நான் கூறும் விடயம் உங்களின் தாயாருக்குத் தெரிந்துவிடுமே!”

      “அவர்களால் ஏதேனும் ஆபத்து நிகழுமோ என்று நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை.

      “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! நபி (ஸல்) அவர்கள் நல்லபடியாக இருக்கின்றார்கள். நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்.”

      “சரி, இப்பொழுது நபி (ஸல்) அவர்கள் எங்கு இருக்கின்றார்கள்?”

      “அர்க்கம் (ரலி) அவர்களின் வீட்டில்தான்!”

      “அல்லாஹ்வின் மீது சத்தயமாக! நான் நபி (ஸல்) அவர்களைப் பார்க்காத வரையில் எதுவும் உண்ண மாட்டேன், அருந்தமாட்டேன்.”
     
நலம் விசாரிக்க வந்து கொண்டிருந்தவர்களின் வருகை நின்றதும் அன்னை உம்மு கைர் அவர்களும் உம்மு ஜமீல் (ரலி) அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு மெதுவாக வெளியேறி தாருல் அர்க்கமுக்கு வந்தார்கள்.
     
அண்ணலெம் பெருமானர் (ஸல்) அவர்கள் தம் அன்புத் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களைக் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டு போனார்கள். குனிந்து தம் தோழரின் நெற்றியில் அன்பு முத்தம் பொழிந்தார்கள். இக்காட்சியைக் கண்ணுற்ற தோழர்கள் அனைவரும் உள்ளம் உருகி நின்றார்கள்!
     
அபூபக்கர் (ரலி) அவர்களை அழைத்துச் சென்ற இரு பெண்களில் உம்முல் கைர், அபூபக்கர் (ரலி) அவர்களின் தாயார்! மற்றொரு பெண்ணாகிய உம்மு ஜமீல் (ரலி) அவர்களை யார் என்று நினைக்கின்றீர்கள்?
     
வேறு யாருமல்ல, ஃபாத்திமா பின்த் கத்தாப் (ரலி) அவர்கள்தாம்! கலீஃபா உமர் (ரலி) அவர்களின் அன்புக்குரிய சகோதரிதான் அவர்!
     
அவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் பாக்கியம் பெற்றார்கள் என்பது மட்டுமல்ல, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மற்றும் அபூபக்கர் (ரலி) அவர்களைப் போன்ற முக்கியமான நபித் தோழர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாயும் திகழ்ந்தார்கள். இஸ்லாத்தைத் தழுவிய நாள் முதலே அதன் உயர்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் முழுமூச்சுடன் பாடுபடும் ஊழியராய் மாறினார்கள்!

கணவருடன் இஸ்லாத்தைத் தழுவுதல்:

கத்தாபின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் தந்தையின் வீட்டில் வளர்ந்து வந்த ஆரம்பகால வாழ்க்கை பற்றி ஒருசில தகவல்கள்தாம் வரலாற்றில் காணக் கிடைக்கின்றன. சரித்திர ஏடுகள் அனைத்தும் விரிவாகக் குறிப்பிடுவது அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகு உள்ள நிகழ்ச்சிகளைத்தான், அதுவும் ஒரு சிலவற்றைத்தான்.
     
குறைஷிப் பெருங்குலத்தில் மக்ஸும் கிளையைச் சார்ந்த கத்தாபின் குடும்பம் அனைத்துச் சிறப்புக்கும் உயர்வுக்கும் உரிய கண்ணியமிக்க குடும்பமாய்த் திகழ்ந்தது. அன்றைய அரபிகளுக்கே உரிய பண்பாடுகளும், பிரத்யோகக் குணங்களும் அந்தக் குடும்பத்தில் பிறந்த ஆண்கள், பெண்கள் அனைவரிடமும் குடிகொண்டிருந்தன. அனைவரும் தம்முடைய ஆளுமையை புகழுக்குரியதாய் வளர்த்திருந்தார்கள்!
     
அத்தகைய புகழும் கீர்த்தியும் கொண்ட குடும்பத்தில் பிறந்த ஃபாத்திமா (ரலி) அவர்கள் நல்ல பருவ மங்கையாய் வளர்ந்து மலர்ந்தபோது அவர்களின் உறவுகார மாப்பிள்ளை ஸயீத் இப்னு ஜைத் இப்னு நுஃபைல் என்பவருக்கு பேசப்பட்டு திருமணம் நடைபெற்றது. நபி (ஸல்) அவர்களால் சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட பத்து நபித்தோழர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
     
இத்தம்பதிகள் பரஸ்பர அன்பும் கண்ணியமும் கொண்டிருந்தார்கள். ஒருமித்த கருத்தும், உறுதியான இணக்கமும் அவர்களுடைய வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளிலும் மகிழ்வைப் பொங்கிடச் செய்தன.
     
சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் நல்லிதயங்களை அல்லாஹ் அவ்விருவருக்கும் வழங்கிப் பேரருள் புரிந்திருந்தான். நபித் தோழர் கப்பாப் (ரலி) அவர்களின் தீவிர முயற்சியால் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இஸ்லாத்தின் முன்னணிக் குழுவில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெருமை அவ்விருக்கும் உண்டு. ஏனெனில் அன்றுவரை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 26தான்! அத்தம்பதிகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட வரலாற்றில், அழைப்புப் பணியில் ஈடுபடுவோர்க்கும் அதனை எதிர்கொள்ளும் மக்களுக்கும் பல அரிய படிப்பினைகள் உள்ளன!
     
இஸ்லாத்தின் அழைப்புப் பணியில் அண்ணல் நபி (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்ட பிரபல நபித்தோழர்களுள் கப்பாப் (ரலி) அவர்களும் ஒருவர். அவர்கள், சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் தெளிவான சிந்தனையும், மாச்சரியங்களுக்கு பலியாகாத இதயமும் உடையவர்கள் யார் என்று தேடி அலைந்து, அவர்களிடம் இஸ்லாத்தின் தத்துவங்களைப் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் பணியில் இரகசியமாய் ஈடுபட்டு வந்தார்கள்!
     
கப்பாப் (ரலி) அவர்களும் ஸயீத் இப்னு ஜைதும் நெருங்கிய நண்பர்கள். கப்பாப் தன் தோழரிடம் இஸ்லாத்தைப் பற்றி விளக்கிக் கூறி அவரைத் தெளிவடையச் செய்தார். அதன் பயனால் இஸ்லாத்தின் கொள்கை – கோட்பாடுகளில் அவருக்கு முழு திருப்தி ஏற்பட்டது. உடனே அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அவரைக் கையோடு அழைத்து வந்தார்கள். அண்ணலாரின் முன்னிலையில் ஸயீத் இஸ்லாத்தைத் தழுவினார். “அல்லாஹ் ஒருவனே இறைவன், அவனுடைய தூதர்தான் முஹம்மத்” என்று சாட்சி பகர்ந்தார்!
     
ஈமானின் பேரொளியுடன் - புரட்சித் தத்துவங்களுடன் - புத்தம் புதிய மனிதராய் இல்லம் திரும்பினார்கள் ஸயீத் (ரலி) அவர்கள்! அகமும் முகமும் மலர வரவேற்ற தம் அன்பு மனைவியிடம் நடந்த நிழ்ச்சியைக் கூறினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்ததையும் அப்பொழுது தம் இதயத்தில் உன்னதமான ஆன்மீக உணர்வு ஏற்பட்டதையும் விவரித்தார்கள்.
     
மேலும் கொள்கை கோட்பாடுகளிலும் அரசியல் மற்றும் கூட்டு வாழ்கையிலும் எத்தகைய அடிப்படை மாற்றங்களின் பக்கம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அழைக்கின்றார்கள் என்பதையும் - அவற்றிற்கு முற்றிலும் மாற்றமாக அன்றைய சமூக அமைப்பு எத்தகைய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது என்பதையும் அடுக்கடுக்காய் எடுத்துரைத்தார்கள். அப்பொழுது ஊக்கம் - உறுதியின் அடையாளங்கள் அவர்களின் முகத்தில் பளிச்சிட்டன! இஸ்லாத்தைத் தழுவ வேண்டுமென தாம் எடுத்த முடிவை ஒளிவுமறைவின்றி அறிவித்தார்கள்!
     
இவை அனைத்தையும் ஆழ்ந்த கவனத்துடன் செவிமடுத்துக் கொண்டிருந்த ஃபாத்திமா (ரலி) அவர்களால் தம் கணவர் தனது பேச்சை முடிக்கும் வரையில் பொறுமையுடன் இருக்க முடியவில்லை! வேறெதற்கும் அல்ல, ஏகத்துவக் கலிமாவை மொழிந்து சத்திய மார்க்கத்தில் சேருவதற்குத்தான்! ஆம், அக்கணமே ஃபாத்திமா (ரலி) அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்கள். அப்பொழுது ஸயீத் இப்னு ஜைத் (ரலி) அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. தம் அழைப்பை ஏற்று தம்முடன் இஸ்லாத்தில் இணைந்த அன்பு மனைவியிடம் மகிழ்வையும் பாராட்டுதலையும் தெரிவித்தார்கள்!

இஸ்லாமியப் பயிற்சி பெறல்:
     
இஸ்லாத்தில் இணைந்ததும் அத்தம்பதியினரை விட்டும் கப்பாப் (ரலி) அவர்கள் ஒதுங்கிவிடவில்லை. தொடர்ந்து அவர்களின் இல்லம் வந்து இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளுடன் ஒழுக்கப் பண்புகளையும் அவர்களுக்கு ஊட்டுவார்கள். மனத்தடுமாற்றம், குழப்பம், வழிகேடு ஆகியவற்றில் சிக்கிவிடாமல் அவர்களைப் பாதுகாத்து இறைநெறியில் நிலைத்திருக்கச் செய்வார்கள். திருக்குர்ஆனையும் மார்க்கத்தின் வழிமுறைகளையும் போதித்துக் கொண்டிருப்பார்கள். மேலும் அத்தம்பதியினர் புரிந்து கொள்வதற்குச் சற்று சிரமமான விடயங்களை நன்கு விளக்கிக் கூறி அவர்களின் இதயத்தில் ஈமானின் பயிரைச் செழித்தோங்கச் செய்வார்கள். ஆனால் அனைவரும் ஒரு விடயத்தைக் குறித்து அஞ்சிக் கொண்டிருந்தார்கள், அது என்ன?

என்னைக் கொல்வது இருக்கட்டும்:
உன் தங்கையை என்ன செய்யப் போகிறாய்?
     
ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் கணவருடன் இஸ்லாத்தைத் தழுவி, அழைப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அதே நேரத்தில் - அவர்களின் சகோதரர் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக – விரோதமான போக்கில் மும்முரமாய் இருந்தார்கள். இஸ்லாத்தின் கடும் விரோதி என்று பெயர் பெற்றிருந்த அபூஜஹ்லுக்கு நிகர் அன்று உமர் அவர்கள்தாம்!
     
தாங்கள் இருவரும் இஸ்லாத்தை தழுவிய செய்தி மக்களிடையே பரவி படிப்படியாக உமர் அவர்களின் காதுக்கும் எட்டி விட்டால் என்ன செய்வது என்பதுதான் ஃபாத்திமா தம்பதியை கவலையில் ஆழ்த்தியது.
     
உமர் அவர்களின் கோபம் எங்குபோய் நிற்குமோ என்று அவர்கள் அஞ்சிக் கொண்டிருந்தாலும், இறைவன் மீது அவர்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்குத் துணிவை வழங்கியது. எது வரினும் சமாளிப்பதற்கு அவர்கள் தயாராகவே இருந்தார்கள்.
     
இக்காலகட்டத்தில் மக்கத் திருநகரில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி நாளுக்கு நாள் விரிவடைந்து முன்னேறிக்கொண்டு வந்தது. மக்களின் கவனம் இஸ்லாத்தின் பக்கம் திரும்பலானது. அண்ணலாரின் வார்த்தைகளில் மக்களுக்கு புதிய கவர்ச்சி ஏற்பட்டது கண்டு அசத்தியவாதிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாயினர்.
     
“மக்களே! உங்களைப் படைத்து உணவளித்து பாதுகாக்கும் இறைவன் ஒருவன்தான். அவனை மட்டும் வணங்குங்கள். நீங்களாகவே உருவாக்கிய இந்தச் சிலை வணக்கத்தை விட்டொழியுங்கள். தம் மீது உட்காரும் ஈயை விரட்டக்கூட இந்தச் சிலைகளால் இயலாதபோது அவற்றின் முன் ஏன் கையேந்திப் பிரார்த்திக்கின்றீர்கள்?” என்று நபியவர்கள், அன்று மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்த தௌ்ளத் தெளிவான கருத்தின் பக்கம் சத்தியத்தின் நேயர்கள் - ஒருவர் பின் ஒருவராக விரைந்து வந்து கொண்டிருந்தார்கள். மக்காவில் பிரபல வீரர் ஹம்ஸா அவர்கள் 29வது நபராக இஸ்லாத்தில் இணைந்து விட்டதைக் கண்ட மக்கத்து இணைவைப்பாளர்கள் நிலைகுலைந்து போயினர்!
     
உடனே தம்முடைய ‘தாருல் நத்வா’ எனும் மன்றத்தைக் கூட்டி ஆலோசனை செய்யலானார்கள். அண்ணலாரின் தலைமையில் தோன்றியுள்ள ‘புதிய இயக்கம் குறித்து விவாதம் தொடங்கியது.
     
“இஸ்லாத்தைப் பற்றி எவ்வளவுதான் தவறான தகவல்களை அளித்தாலும் பயனில்லாமல் போகிறதே! இஸ்லாத்தை விட்டும் மக்களை திசைதிருப்ப முடியவில்லையே! அப்படி ‘மதம் மாறி’ச் சென்று விட்டவர்களை எவ்வளவுதான் எண்ணி நகையாடினாலும், அச்சுறுத்தினாலும், ஆசைவார்த்தை கூறினாலும் அவர்களை அசைக்க முடியவில்லையே! அவர்கள் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்ட பிறகும் கூட இஸ்லாத்தைக் கைவிட மறுக்கின்றார்களே! நாளுக்கு நாள் நம்பிக்கையாளர்கள் அதிகமாகின்றார்களே! அந்தோ! நமது சமுதாயம் இப்படிச் சின்னாபின்னப்பட்டுப் போகிறதே!” என்று அனைவரும் மனம் நொந்து போனார்கள். எப்படியும் இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.
     
அப்பொழுதுதான் அபூஜஹ்ல் நீண்டதொரு உரை நிகழ்த்திவிட்டு “யார் முஹம்மதைத் தீர்த்துக் கட்டுகிறாரோ அவருக்கு 100 செந்நிற ஒட்டகங்களையும், ஆயிரம் வெள்ளி நாணயங்களையும் அன்பளிப்பாய்த் தருவேன்” என்று அறிவித்தான்.
     
அங்கே உமரும் இருந்தார்கள். அவர் கட்டான உடலும், கதிகலங்கச் செய்யும் தோற்றமும் பிரமிக்கத்தக்க வீரமும் கொண்ட துணிச்சலான இளைஞர்! இஸ்லாத்தைப் பற்றி கடும் விரோதம் கொண்டிருந்ததால், ஏற்கனவே குமைந்து கொண்டிருந்த அவர்களின் உள்ளத்தை இப்பொழுது அபூஜஹ்லின் வெறியூட்டும் பேச்சு எரிமலையாக்கியது! கண்களில் கோபக்கனல் தொறிக்க எழுந்து நின்று கூறினார்கள்:
     
“அபுல் ஹிகமே, ‘லாத், உஸ்ஸா’ மீது ஆணையாக! நான் முஹம்மதைக் கொல்லாத வரையில் ஓயப்போவதில்லை!”

ஹம்ஸா (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனத்தில் ஓர் ஆசை பிறந்தது. குறைஷிகளின் தூண்களாக விளங்கும் அம்ருப்னு ஹிஷாம் (அபூ ஜஹ்ல்), உமருப்னுல் கத்தாப் இருவரில் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவுமாறு செய்யப்பட்டல் வேண்டும் என்பதுதான் அந்த ஆசை!
     
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்: “அல்லாஹ்வே, ஹிஷாமின் மகன் அம்ர் அல்லது கத்தாபின் மகன் உமர் இந்த இருவரில் ஒருவரைக் கொண்டு இஸ்லாத்திற்கு வலிமை சேர்ப்பாயாக!”
     
இந்தப் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொண்டு, இஸ்லாத்தைத் தழுவுவதற்கும், அதற்கு உயர்வும் சிறப்பும் சேர்ப்பதற்கும் உமர் (ரலி) அவர்களைத் தேர்வு செய்தான்.
     
இந்தப் பிரார்த்தனை நடைபெற்றதற்கு மறுதினம்தான் உமர் (ரலி) அவர்கள் அண்ணலாரைத் தீர்த்துக்கட்ட வேண்டும் எனும் உறுதியில் உருவிய வாழுடன் வெளிக் கிளம்பினார்கள்!
     
வழியில் எதிர்பாராதவிதமாக நுஐம் இப்னு அப்துல்லாஹ் (ரலி) எனும் நண்பரின் சந்திப்பு கிடைத்தது. அவர், உமர் (ரலி) அவர்களின் ‘பனூ அதி’ எனும் கோத்திரத்தைச் சேர்ந்தவர், முன்பே மறைமுகமாக இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்.
     
நுஐம் (ரலி) அவர்கள் கேட்டார்கள், “உமரே! வாளும் கையுமாக எங்கே கிளம்பி விட்டீர்?”
     
உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள், “மதம் மாறிவிட்ட அந்த மனிதரைக் கொலை செய்யப் போகிறேன். அவர், குறைஷிகளின் ஒற்றுமையைச் சின்னாபின்னமாக்கி விட்டார், நம்மையெல்லாம் பைத்தியக்காரர்களாக்கிக் கொண்டிருக்கின்றார். நம்முடைய தெய்வங்களை இழிவுபடுத்திப் பேசுகின்றார். நமது மதத்தில் களங்கம் ஏற்படுத்துகின்றார்.”
   
“இது அபாயமானதொரு செயலாயிற்றே! இறைவன் மீது சத்தியமாக! நீர் தவறான கருத்துக்கு ஆளாகியுள்ளீர். நீர் முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொலை செய்து விட்டால் அப்து மனாஃப் குடும்பத்தார்கள் உம்மைப் பூமியில் நடந்து திரியும் வண்ணம் உயிருடன் விட்டு வைப்பார்கள் என்று நினைத்துக் கொண்டீரா?”
     
“எனக்கு யாரைப் பற்றியும் பயம் கிடையாது. என்ன, நீர் கூட இஸ்லாத்தைத் தழுவி விட்டதுபோல் தெரிகிறதே! அதற்கான தண்டனையை முதலில் உமக்கு ஏன் கொடுக்கக் கூடாது?”
     
“எனக்குத் தண்டனை கொடுப்பது இருக்கட்டும். முதலில் உமது குடும்பத்தைச் சார்ந்தவர்களைப் பற்றிய சேதி தெரியுமா உமக்கு?”
     
“எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களா? யார் அவர்கள்?”
     
“உம்முடைய சகோதரி ஃபாத்திமாவும் அவருடைய கணவர் ஸயீதும்தான்! இஸ்லாத்தைத் தழுவியுள்ள அவர்களை என்ன செய்வது என்று முதலில் கவனியும்!”
     
“அவர்கள் இருவருமே அப்படிச் செய்து விட்டார்களா? அது உண்மையென்றால் அவர்கள் இருவரையும் கொலை செய்தே தீருவேன்!” என்று ஆவேசமாகக் கூறினார்கள் உமர் அவர்கள். பிறகு ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லம் நோக்கி வேகமாக நடந்தார்கள்.
     
அப்பொழுது ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஃபாத்திமா - ஸயீத் தம்பதிக்கு கப்பாப் (ரலி) அவர்கள் திருக்குர்ஆன் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். திருமறையின் 20வது அத்தியாம் ‘தாஹா’ எழுதப்பட்டிருந்த ஏடு ஒன்றும் இருந்தது. கதவு லேசான இடைவெளியுடன் உட்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது.
     
கதவின் அருகில் வந்துவிட்ட உமர் அவர்களின் காதில் குர்ஆன் ஓதும் குரல் விழுந்தது, கதவை பலமாகத் தட்டினார்கள்.
     
வந்திருப்பவர் தம் சகோதரர் உமர் அவர்கள்தாம்’ என்பதை ஃபாத்திமா (ரலி) அவர்கள் புரிந்து கொண்டார்கள். உடனே கப்பாப் (ரலி) அவர்களை, வீட்டின் பின்புறத்தில் ஓரிடத்தில் மறைந்து கொள்ளுமாறு சொன்னார்கள். பிறகு, திருக்குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட ஏட்டையும் ஒளித்து வைத்துக்கொண்டு படபடக்கும் இதயத்துடன் கதவைத் திறந்தார்கள் ஃபாத்திமா (ரலி) அவர்கள்!

உமரை உருவாக்கினார்கள்:

உமர் (ரலி) அவர்கள் வீட்டில் நுழைந்ததும் வினவினார்கள்:

      “சற்றுமுன் நான் கேட்ட குரல் எத்தகையது?

   ஃபாத்திமா மற்றும் ஸயீது (ரலி) இருவரும் கூறினார்கள்: “நீங்கள் எதையும் கேட்டிருக்க முடியாதே!

      உமர் (ரலி) அவர்கள், “இல்லை! நான்தான் சற்று முன் செவியுற்றேனே! இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் இருவரும் முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாக நான் கேள்விப்பட்டேனே, உண்மையா? என்று கோபமாகக் கேட்டார்கள்!

      இவ்வாறு கேட்டவண்ணம் தம்முடைய மைத்துணரை (ஸயீது இப்னு ஜைதை) தாவிப் பிடித்தார்கள். அவர்களின் முடியைப் பற்றி இழுத்துக் கீழே தள்ளினார்கள். அவர்களை பலமாக அடிக்கலானார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் கணவரைக் காப்பாற்றுவதற்காக முயன்றபோது அவர்களுக்கும் அடி விழுந்தது! ஒரு கட்டத்தில் ஸயீது (ரலி) அவர்களை ஒரு பலகையால் பலமாகத் தாக்கியபோது ஃபாத்திமா (ரலி) அவர்கள் குறுக்கே வந்து தடுத்திட முயன்றார்கள். அதனால் அந்த அடி அவர்களின் தலையில் விழவே தலையிலிருந்து இரத்தம் பீரிட்டு வரலாயிற்று. இந்த நேரத்தில் கணவரும் மனைவியும் ஒருமித்த குரலில்.....

      “நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம். அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். உம்மால் செய்ய முடிந்ததை செய்து கொள்ளும். ஆனால் சத்திய மார்க்கத்தை நாங்கள் கைவிட மாட்டோம்!

மற்றோர் அறிவிப்பில் ஃபாத்திமா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதாக வந்துள்ளது:

      “உம் சகோதரியை விதவையாக்கிடவா வந்துள்ளீர்? அவ்வாறெனில் முதலில் என்னைக் கொன்று விடும்! ஆயினும் சத்திய மார்க்கம் எங்களின் இதயத்திலிருந்து வெளியேறாது! வெளியேறாது! வெளியேறாது! முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்துள்ள மார்க்கத்தின் மீதே எங்களின் மரணம் இருக்கும்!”

      இரத்த வெள்ளத்தில் கிடந்த சகோதரியின் நாவிலிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டதும் உமர் அவர்கள் நிலைகுலைந்து போய்விட்டார்கள்! தணலாய்த் தகித்துக் கொண்டிருந்த அவருடைய கோபம் மாறியது! ‘ஆ! என்ன செயலைச் செய்து விட்டோம்’ என்று பெரிதும் மனம் வருந்தினார்!

      ஃபாத்திமா (ரலி) அவர்களின் தலையிலிருந்து வழிந்தோடிய குருதி உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கைப் போக்கையே திருப்பியது! எதிர்காலத்தில் இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா என்று அரபுநாடு மட்டிலும் அல்ல, உலகம் முழுவதும் புகழப் போகும் மாமனிதராய் அவர்களை மாற்றி அமைத்தது!

      ஆம்! சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
      “அப்படியானால், சற்றுமுன் நீங்கள் ஓதிக் கொண்டிருந்ததை எனக்கும் காண்பியுங்கள்.
      ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
      “நீங்கள் அதனை வீணாக்கி விடுவீர்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது.
      அதற்கு உமர் (ரலி) அவர்கள் தம்முடைய கடவுளர் மீது ஆணையிட்டுக் கூறினார்கள்: “நீங்கள் எவ்வித அச்சமும் கொள்ளவேண்டாம். அதனை நான் படித்துவிட்டு திரும்பத் தந்து விடுகிறேன்.”

      அப்போது தம் சகோதரரின் இதயத்தில் இறைவேதம் இடம் பிடித்து விடக் கூடும் எனும் எண்ணம் ஃபாத்திமா (ரலி) அவர்களின் உள்ளத்தில் தோன்றியது. அவரை நோக்கி அறிவுரை நல்கும் தோரணையில் அழுத்தமாகக் கூறினார்கள்: “நாங்கள் படித்துக் கொண்டிருந்தது இறைவேதத்தை! இதோ இந்த ஏட்டினைத்தான்! இதில் இறைவனின் வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இதனை சுத்தத்துடன்தான் தொட வேண்டும்.”

      உமர் அவர்கள், “இதோ நான் சுத்தமாகி வருகிறேன்” என்று கூறி உடனே குளித்துவிட்டு வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறைவசனங்கள் எழுதப்பட்ட அந்த ஏட்டினை தன் சகோதரரிடம் வழங்கினார்கள்.

      பெரிய பாறை ஒன்று சிறிய பாறையின் மீது மோதி நொறுங்கியது!

      ஆம்!

      ஃபாத்திமா (ரலி) அவர்கள் அளித்த அந்தப் புனித வேதத்தை படிக்கலானர்கள்.

     “அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்

      “தாஹா, நீர் துன்பத்திற்குள்ளாக வேண்டும் என்பதற்காக உம்மீது இந்தக் குர்ஆனை நாம் இறக்கியருளவில்லை. இதுவோ அஞ்சுகின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவூட்டியாய்த் திகழ்கின்றது. பூமியையும் உயரமான வானங்களையும் படைத்த இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும் இது! கிருபையுள்ள இறைவன் (பேரண்டத்தின்) ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளான்.”
     
உமர் அவர்கள் இந்த வசனத்தை மட்டும் படித்தார்கள். அவர்களின் உடலில் ஒருவிதமான நடுக்கம் ஏற்பட்டது. பேராற்றல் கொண்ட இறைவனை மறுப்பது, அவனுடன் பிறவற்றை இணை வைப்பது போன்ற தவறான கொள்கைகளும் போக்குகளும் அவர்களை விட்டும் விலகிட ஆரம்பித்தன! அவ்வாறே தொடர்ந்து மேலே படித்துக் கொண்டே சென்றார்கள். இறைவசனங்களின் கம்பீரம், உரை நயம், தெள்ளிய நடை ஆகியன உமர் அவர்களைப் பெரிதும் கவர்ந்தன!
     
“அவன்தான் அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு இல்லை. மிகவும் அழகிய பெயர்கள் அவனுக்கு உண்டு.”

இதைப் படித்ததும் உமர் அவர்களின் மனம் இளகியது. “இது எத்தனை அழகான வார்த்தை! என்று தம்மையும் அறியாமலே உரக்கக் கூறினார்கள்.

உமர் இவ்வாறு கூறியதைக் கேட்ட கப்பாப் (ரலி) அவர்கள் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தார்கள். உமர் அவர்களை நோக்கி மகிழ்ச்சி பொங்கக் கூறினார்கள்:

      “உமரே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனையின் பலனை அல்லாஹ் உமக்கு வழங்க வேண்டுமென நான் அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். இறைவனே, அம்ருப்னு ஹிஷாமையோ, உமர் இப்னு கத்தாபையோ உன் விருப்படி இருவரில் யாரையாவது இஸ்லாத்திற்குக் கொண்டு வா!’ என்று நபியவர்கள் நேற்று பிரார்த்தனை செய்ததை நான் செவியுற்றேன்.”

இந்தக் கட்டத்தில்தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதென உறுதியாய் முடிவு செய்தார்கள் உமர் (ரலி) அவர்கள். “கப்பாபே, முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்று கூறும்! நான் அவர்களிடம் சென்று இஸ்லாத்தில் இணைந்திட வேண்டும் என்று கூறினார்கள்.

      “முஹம்மத் நபியவர்கள் ஸஃபா குன்றின் அருகில் உள்ள அர்க்கம் (ரலி) அவர்களின் வீட்டில் தம் தோழர்கள் சிலருடன் உரையாடிக் கொண்டிருக்கின்றார்கள்” என்று கப்பாப் தெரிவித்தார்கள்.

உமர் அவர்கள் வாளை உறையினுள் போட்டுக் கொண்டு அர்க்கம் அவர்களின் இல்லம் நோக்கி நடந்தார்கள். ‘இன்னும் சிறிது நேரத்தில் அண்ணல் நபியவர்களைக் காணப்போகின்றோம். அவர்களின் கரம் பிடித்து ஈமான் கொள்ளப் போகின்றோம்!’ எனும் உயர்ந்த எண்ணம் அவர்களின் இதயத்தை ஆட்கொண்டிருந்தது! அதை நினைக்கும் போதெல்லாம் அவர்களின் நெஞ்சு வேகமாகத் துடித்தது! ஏனெனில் இப்பொழுது அவர்கள் சென்று கொண்டிருந்தது முன்னைவிடவுமம் துணிவான – மகத்தான ஒரு காரியத்திற்காக......

அவர்களின் நடையில் அமைதியும் கம்பீரமும் இருந்தன. எதிர்காலத்தைப் பற்றிய எண்ண அலைகளில் அவர்களின் சிந்தை மூழ்கியது! தாம் எடுத்த புதிய முடிவைப் பற்றிய –நபியவர்களைச் சந்தித்து புது மார்க்கம் சேரப்போவதைப் பற்றிய இனம் புரியாத அச்சமும் நடுக்கமும் அவர்களை ஆட்கொண்டன!

முன்பு உமர் எந்த மனிதருக்கும் அஞ்சியதில்லை. எவர் முன்னிலையிலும் அவர் நடுங்கியதில்லை. மாறாக, உமரைக் கண்டுதான் அனைவரும் திகிலடைந்தார்கள். அவரின் கடுஞ்சினத்திற்கும், சீற்றத்திற்கும் ஆளானவரின் இதயம் இடி விழுந்து நொருங்கியது போலானது!

அவருடைய சகோதரி ஃபாத்திமா (ரலி) அவர்கள் வெளிப்படுத்திய உறுதியான ஈமானிய நிலைமையும் கொள்கைப் பிடிப்பும்தான் உமரின் உள்ளத்தில் இத்தகைய அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியது! அவர்களின் உறுதியான நம்பிக்கைக்கு எதிரில் அவரது ஆணவம் அடங்கியது! ஆதிக்கப் போக்கு அகன்று முரட்டு சுபாவம் பனித்துளி போன்று முற்றாக மறைந்தது!

உமர் அவர்களை இவ்வாறு மாற்றிய பெருமை ஃபாத்திமா (ரலி) அவர்களையே சாரும். இஸ்லாமியச் சமுதாயம் அவர்களை மிகுந்த கண்ணியத்துடனும் உயர்வுடனும் என்றென்றும் எண்ணிப்பார்க்க கடமைப்பட்டிருகிறது!

நபித்துவம் வழங்கப்பெற்ற 13 வது ஆண்டு, தோழர்கள் அனைவரையும் மதீனா நோக்கி ஹிஜ்ரத் மேற்கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளை பிறப்பித்தபோது ஃபாத்திமா (ரலி) அவர்களும் ஸயீத் இப்னு ஜைத் (ரலி) அவர்களும் உடனே ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனா வந்தார்கள். அங்கே அபூ லுபாபா (ரலி) எனும் அன்ஸாரித் தோழரின் இல்லத்தில் குடியேறினார்கள்.

ஃபாத்திமா பின்த் கத்தாப் (ரலி) அவர்கள் செயலாற்றலும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட பெண்மணியாய் இறுதிவரை திகழ்ந்தார்கள். நற்செயல்களை ஆற்றுவதில் முனைப்புடன் இருந்தார்கள். நன்மை செய்யுமாறு ஏவுதல், தீமையைத் தடுத்தல் போன்ற பணிகளில் முறையாக ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் வாயிலாக சில நபிமொழிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அல்லாஹ் அவர்களைத் திருப்தி கொண்டு, அவர்களின் சேவைகளை ஏற்று, சிறந்த மறுமைப் பேறுகளை வழங்குவானாக! ஆமீன்.
Previous Post Next Post