உபைய்யு (ரலி)

குர்ஆனிய சமுதாயம் 

அண்ணலார் (ஸல்) அவர்களின் மனதில் இடம் பிடித்தவர்.:

ஒரு தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபைய் (ரலி) விடம் கேட்டார்கள். அபுல் முன்திரே! இறைவேதத்திலுள்ள வசனங்களில் எந்த வசனத்தை நீர் மிகப் பெரிய கம்பீரமான வசனமாகக் கருதுகிறீர்? என்று. அதற்கு உபைய்யு (ரலி) தனக்குத் தெரியாது என்றும் அலலாஹ்வுக்கும் அவன் தூதருக்குமே தெரியும் என்றும் கூறி, தனது பணிவை வெளிப்படுத்தினார்.

உபைய்யு (ரலி) அவர்களுடைய அடக்கத்தையும் பணிவையும் வெளிப்படுத்துகின்ற பதில் இது என்பதைப் புரிந்துகொண்ட நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் மீண்டும் இதே கேள்வியைக் கேட்ட பொழுது, உபைய்யு (ரலி) அவர்கள், ஆயத்துல் குர்ஸி தான் (2:255) மிகப் பெரிய கம்பீரமான வசனம் என்று பதில் கூறினார்.

உடனே அண்ணல் (ஸல்) அவர்கள் உபைய்யு (ரலி) அவர்களுடைய தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு மகிழ்ச்சியோடு அவரை இவ்வாறு வாழ்த்தினார்கள் : லி யஹ்னிகல் இல்மு அபல் முன்திர் (அபுல் முன்திரே அறிவு(லகம்) உன்னை வாழ்த்தட்டும்! (முஸ்லிம்).

திருக்குர்ஆனில் மிக முக்கியமான ஒரு வசனம் எது என்பதை நீரே கண்டு பிடித்து விட்டீர். அத்துடன் முழு ஈடுபாடும் வைத்திருக்கிறீர், குர்ஆனில் முழு விளக்கமும் பெற்றுள்ள உம்முடைய உயர் தகுதியை அறிவுலகம் வாழ்த்தட்டும் என்ற பொருளில் நபிகள் நாயகம் (ஸல்) இதை கூறியிருக்கக் கூடும்.

மற்றொரு தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபைய்யு (ரலி) வைக் கூப்பிட்டு : நான் உம்மீது இந்த மாமறைக் குர்ஆனை ஓதிக்காட்ட வேண்டும் என இறைவனால் ஆணையிடப்பட்டுள்ளேன் என்றார்கள் (புகாரி, முஸ்லிம்)

அவர்கள் எதைக் கூறினாலும் வஹியின் மூலமாகவே கூறுவார்கள். தன்னிஷ்டப்படி எதையும் கூற மாட்டார்கள் என்று உபைய்யு (ரலி) அவர்களுக்கத் தெரியும். ஆகவே நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார், அல்லாஹ்வின் தூதரே! உண்மையில் என் பெயர் எடுத்துச் சொல்லியா அல்லாஹ் தங்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டுள்ளான்? என்று கேட்டார். அதற்க நபியவர்கள், ஆம்! என்றார்கள்.(முஸ்லிம்) உடனே உபைய்யு (ரலி) அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். (புகாரி).

மற்றொரு அறிவிப்பின்படி உமது பெயர் மட்டுமென்ன? உம் குடும்பத்தைப் பற்றியும் கூட என்னிடம் எடுத்துக் கூறப்பட்டதே என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். உடனே, உபைய்யு (ரலி) அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார் என்று வருகின்றது. (அல் இஸாபா 1:19).

அண்ணலார் (ஸல்) அவர்களின் மனதில் இவ்வளவு தூரம்இடம் பிடித்துக் கொண்ட ஒரு நபித்தோழர் உண்மையில் அருள் பெற்றவர் தான்.

அத்துடன் மாமறைக் குர்ஆன்தொடர்பான கலைகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்திருக்கின்றார். இங்கே நாம் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபைய்யு (ரலி) அவர்களிடம் இறைக்கட்டளைப்படி குர்ஆனை ஓதிக் காண்பித்து உபைய்யு (ரலி) நபியவர்களிடமிருந்து வாயோடு வாயாக குர்ஆன் ஓதுவதைக் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தானே தவிர அவர்கள் ஓதிக் காண்பித்ததை உபைய்யு (ரலி) அவர்கள் சரி பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. இவ்வாறு யாரும் புரிந்து கொள்ளக் கூடாது. (ஃபத்ஹுல் பரி, 7:127).

பிறர் நலம் பேணல், இறை பக்தி முதலிய நற்குணங்கள் அவரிடம் அதிகமாகக் காணப்பட்டன. கண்ணியத்திற்குரியவராய் எழைகள் மீது இரக்கம் காட்டுகின்றவராய் தன்னடக்கமுள்ளவராய் வாழ்ந்த உபைய்யு (ரலி) அவர்கள்அல்லாஹ்வுடைய மகத்துவத்தை எண்ணிக் கண்ணீர் வடிப்பதுமுண்டு. இவருக்கு துஃபைல் என்றொரு ஆண்மகன் இருந்திருக்கின்றார். உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 23 ல் உபைய்யு (ரலி) அவர்கள் மரணத்தைத் தழுவினார்கள். இவருடைய மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : முஸ்லிம் சமுதாயத்தின தலைவர் ஒருவர் இறந்து விட்டார்.
Previous Post Next Post