அரஃபா நாளின் சிறப்பு

1. அல்லாஹ் புகழ்ந்து பேசுகிறான்

அபூஹுரைரா மற்றும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் போன்றோர் அறிவிக்கிறார்கள் :

'நிச்சயமாக அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா அரஃபா தினத்தின் மாலையில் அரஃபாவிற்கு வந்திருக்கக்கூடிய மக்களை குறித்து மலக்குமார்களிடம் புகழ்ந்து பேசுகிறான். "எனது மலக்குமார்களே! எனது அடியார்களை நோக்கி பாருங்கள். அவர்களில் அந்தஸ்த்து உள்ளவர்கள், அந்தஸ்து இல்லாதவர்கள் என அனைவரும் பரட்டை தலையுடையவர்களாகவும், புழுதி படிந்தவர்களாகவும் என்னிடம் வந்துள்ளார்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான் என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள்.

நூல்: (முஸ்னத் அஹ்மத்)

2. நரக விடுதலை

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

'அல்லாஹ் தபாரக வ தஆலா அதிக அதிகமாக  தனது அடியார்களை நரகத்திலிருந்து விடுதலை செய்யக்கூடிய தினம் அரஃபா தினத்தை விட வேறு தினம் இருக்க முடியாது' என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள்.

நூல்: (ஸஹீஹ் முஸ்லிம்)

3. சிறந்த துஆ

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :

'துஆக்களில் மிகவும் சிறந்த துஆ அரஃபா தினத்தில் செய்யப்படக்கூடிய துஆ நானும் எனக்கு முன் வந்த நபிமார்களும் கூறிய கூற்றுகளில் மிகச் சிறந்த கூற்று லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் ஆகும் என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள்.

 நூல்: (திர்மதி முஸ்னத் அஹ்மத்) 
அஷ் ஷெய்க் அல்-அல்பானி ரஹிமஹுல்லாஹ் இதை ஹஸன் என்று கூறியுள்ளார்கள்.

4. அரஃபா தினம் நோன்பு வைப்பதன் சிறப்பு 

[ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள், "அரஃபா தினத்தன்று நோன்பு வைப்பது முன்சென்ற வருடத்திலும் பின் வரக்கூடிய வருடத்திலும் நிகழ்ந்து விடுகின்ற பாவங்களுக்கு பரிகாரமாக இருக்கின்றது" என்று கூறினார்கள். 
நூல்: ஸஹீஹ் முஸ்லிம்]

5.  அரஃபா தினம் - மார்க்கம்  பரிபூரணமாக்கப்பட்ட தினம்

அரஃபா தினம் என்பது இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு தினமாக இருக்கிறது. 

அன்றைய தினத்தில் தான் அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா இஸ்லாமிய மார்க்கத்தை பரிபூரணப் படுத்தி கொடுத்தான்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

'யூதர் ஒருவர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "யா அமீரல் முஃமினீன்! உங்களுடைய புத்தகத்தில் ஒரு வசனம் இருக்கின்றது. இந்த வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கி இருந்தால் அந்த நாளை நாங்கள் பெருநாளாக எடுத்து இருப்போம்" என்று கூறினார்.  அப்பொழுது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "அது எந்த வசனம்?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதன்

(ٱلۡیَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِینَكُمۡ وَأَتۡمَمۡتُ عَلَیۡكُمۡ نِعۡمَتِی وَرَضِیتُ لَكُمُ ٱلۡإِسۡلَـٰمَ دِینࣰا)

இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்.
[சூரா அல் மாயிதா: 3]

என்ற வசனத்தை ஓதிக் காட்டினான்.

அதற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த வசனம் எப்பொழுது ரஸுலுல்லாஹி ﷺ மீது அல்லாஹ் இறக்கி வைத்தான் என்று எனக்குத் தெரியும். நிச்சயமாக இந்த வசனமானது ரஸுலுல்லாஹி ﷺ  அரஃபா தினத்தன்று அரபாவில் நின்று கொண்டு இருந்த பொழுது அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா நபி ﷺ மீது இறக்கி வைத்தான். அந்த அரஃபா தினம் ஜும்ஆ தினமாக இருந்தது" என்று கூறினார்கள்.
நூல்கள்: (ஸஹீஹ் அல்-புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உக்பத் இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸில்,
'நிச்சயமாக அரஃபா தினம் ( ஒன்பதாவது தினம்), யவ்முந் நஹ்ர் (பத்தாது தினம்), அய்யாமுத் தஷ்ரீக் (11, 12, 13 வது தினம்) ஆகிய இந்த அனைத்து தினங்களும் பெருநாள் தினங்களாகும். மேலும் இந்த நாட்களில் உணவுகளை பெற்று சந்தோஷமாக இருக்க கூடிய நாளாகவும் இருக்கிறது என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள்.
நூல்கள்: (ஸுனன் அபுதாவூத், திர்மிதி, நஸாஈ)
அஷ்ஷெய்க் அல்-அல்பானி, அஷ்ஷெய்க் முக்பில் ரஹிமஹுமுல்லாஹ் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.

Previous Post Next Post